சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்
யாழ் நகரில்,
சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை
ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில் சமூகம் என்ற
பெயரில், அரசு சார்பான தமிழர்களின் குழு ஒன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிலை கட்டுவதற்கு
ஆளுநர் சம்மதித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை
புலிகள் ஆண்ட காலத்தில் கட்டிய சிலைகளை எல்லாம் உடைத்து நொறுக்கிய, மாவீரர் துயிலும்
இல்லங்களை கூட தரைமட்டமாக்கிய, சிங்கள இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், ஆறுமுக
நாவலருக்கு சிலை வைக்க முன் வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது. தென்னிலங்கையில் சிங்கள-பௌத்த
அடிப்படைவாத சக்திகளை தூண்டி விடுவது போன்று, வட இலங்கையில் சைவ-வேளாள மேலாதிக்க சக்திகளை
வளர்த்து விடும் நோக்கம், இதில் அடங்கி இருக்கலாம். சிங்கள-தமிழ் வெள்ளாள சாதி ஒற்றுமை
நீண்ட கால நோக்கில், பேரினவாத அரசுக்கு நன்மை பயக்கும்.
ஒரு சைவ மத
அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க அரசியலை தோற்றுவித்த பிதாமகன்
ஆக, சாதியவாதிகளால் போற்றப் படுகின்றார். சைவத்தையும், தமிழையும் வளர்த்ததோடு நில்லாது,
சாதியத்தையும் உயர்த்திப் பிடித்த ஆறுமுக நாவலர்; சைவத் தமிழர்களின் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு
எதிராக, கடுமையாக போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது காலத்தில் வாழ்ந்த சிங்கள-
பௌத்த அடிப்படைவாதியான அநகாரிக தர்மபால, இன்றைய பொதுபல சேனா வகையறாக்களும், இந்தப்
புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்.
யாழ் நகரில்,
அரசு நிதியில் நாவலருக்கு சிலை அமைப்பதற்கு, "தமிழ் இன உணர்வாளர்",
"தமிழ் தேசியவாதி" என்று அழைத்துக் கொள்ளும் யாரும், இன்று வரையில் எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லை. இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில், தமிழ் தேசிய ஆர்வலர்கள் கள்ள
மௌனம் சாதிக்கின்றனர். இதிலிருந்தே, வலதுசாரி தமிழ்க் குறுந் தேசியவாதிகளின், உயர்
சாதிப் பற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நான் அப்போது,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். யாழ் சைவ
சித்தாந்தக் கழகம், அரச பாடத் திட்டத்திற்குள் அடங்காமல், தனியாக ஒரு சைவ சமய பொதுப்
பரீட்சை நடத்தி வந்தது. அந்தப் பரீட்சையில் போட்டியிட்டு தேறி, சான்றிதழ் பெற்றுக்
கொண்டேன். பரீட்சைக்கு தயார் படுத்துவதற்காக, ஆறுமுக நாவலர் எழுதிய "சைவ சமயம்
வினா- விடை" படிக்கத் தந்தார்கள். அந்த நூலில் ஓரிடத்தில் இருந்த நாவலரின் பதில்
எனது கண்களுக்கு சாதிவெறி கொண்டதாக தென்பட்டது. அது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம்
இருக்கிறது.

ஆறுமுக நாவலர்
எழுதிய சைவ வினா விடை நூலில் இருந்து ஒரு பகுதியை கீழே தருகிறேன். நாவலர் ஒரு தமிழ்
தேசியவாதியா அல்லது சாதியவாதியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்:
//சண்டாளருடைய
நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும்,
நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை
மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங்
காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே
ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//
//தீண்டலினாலே
எவ்வெப்பொழுது குற்றமில்லை?
சிவதரிசனத்திலும்,
திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி
பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.//
(ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை 2)
----
Kalaiyarasan – The Netherland
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.