Sunday, October 22, 2023

அருட்பெருஞ்ஜோதி அகவல் - உரை

அருட்பெருஞ்ஜோதி அகவல் - உரை 


பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி                  - 132

‘அம்’ என்ற அசை சேர்ந்து ‘பவன்’ என்ற சொல் ‘பவனம்’ என்றாயிற்று. இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் இல்லத்தின் பெயர் ‘ஆனந்த பவன்’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு ‘பவன்’ என்ற சொல் விசாலமான வீடு  மற்றும் கடைகளுக்கு வழங்கப்படும் பெயராக உள்ளது.

அண்டப் பரப்பு என்பதை நாம் எவ்வாறு புரிந்துக்கொள்ள முடியும்? பூமியின் பரப்பளவு 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீட்டர் (51,00,66,000 K.M.) என கண்டுபிடித்தாயிற்று. நமது சூரியனின் பரப்பளவு (51,00,66,000 X 11,990 = 611569,13,40,000 K.M.) நமது பூமியைவிட 11,990 மடங்கு பெரியது. அதாவது 6 இலட்சத்து 11 ஆயிரத்து 569 கோடியே 13 இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது சூரியன்.

இவ்வாறு நாம் முதலில் நமது (ஒரு மனிதனின்) பரப்பளவு எவ்வளவு? எனப் பார்ப்போம். ஒருவனின் கை சாண் அளவில் அவனது உடல் 8 சாண் அளவு கொண்டு இருக்கும். அதுபோல ஒருவனின் கால் பாத அளவில் அவனது உடல் 6 மடங்கு இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ஒருவனுக்கு இந்த பூமியில் 8 அடிதான் சொந்தம் எனவும் 6 அடிதான் சொந்தம் எனவும் பல தமிழ்ப் பாடல்களை நாம் கேட்டிருப்போம். ஒரு மனிதனை படுக்க வைத்தால், அவனது பரப்பளவு 180 செ.மீ. அதாவது 6 அடி எனலாம். ஒரு கிலோ மீட்டர் 3280 அடி என்றால், 547 மனிதர்களை ஒரு கிலோ மீட்டரில் அடக்கி விடலாம். ஒரு மனிதனை நிற்க வைத்தால், ஒரு கிலோ மீட்டரில் 3280 மனிதர்களை நிற்க வைக்க முடியும். இப்பூமியில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒரே இடத்தில் நிற்க வைத்தால், இப்பூமி பந்தின் பரப்பளவில் 0.0000251% இடம் போதுமானது. இப்பூமியில் உள்ள ஒட்டு மொத்த மனிதர்களின் பரப்பளவும், இப்பூமியின் பரப்பளவை ஒப்பிடும்போது எவ்வளவு மிகச்சிறிய அளவீட்டைக் கொண்டுள்ளான் என்பது புரியவருகின்றது. இதில் ஒரு மனிதனின் பரப்பளவைக் கொண்டு இப்பூமியின் பரப்பளவை ஒப்பிடும்போது, ஒரு மனிதன் என்பவன் ஒரு அணு அளவு எனக் கொள்ளலாம். இந்த மனித அணுவை சூரியனின் பரப்பளவில் ஒப்பிடும்போது, மனிதன் என்கின்ற அணுவை 11,990-ஆக உடைத்து அதில் ஒரு பகுதி என, மனித அணு இன்னும் மிகச் சிறிய அணுவாக மாறும். இவ்வாறு நமது மனித பரப்பளவைக் கொண்டு நாம் வசிக்கும் பூமி, நம்மை ஆளும் சூரியன், சூரிய குடும்பங்கள் என அளந்துக் கொண்டே சென்றால், மேற்கண்ட கணக்கின்படி ஒரு மனிதன் என்கின்ற அணுவானது ஒன்றுமில்லாத நிலைக்குச் சென்றுவிடும்.

அண்டம் என்பது நமது சூரியக் குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் அடங்கியது அண்டம் எனக் கொள்ளலாம். இவ்வண்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கோள்கள், மற்றும் விண்மீன்கள் (சூரியன்கள்) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள தூரத்தைக் கணக்கிட நாம் ’ஒளியாண்டு’ என்கின்ற அலகினை உபயோகிக்கின்றோம். ஒளியானது ஒரு ஆண்டில் எவ்வளவு தூரம் கடக்கின்றது என்பதைக் கொண்டு ஒளியாண்டு கணக்கிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு ஒளியாண்டு என்பது (9,46,080,00,00,000) 9 இலட்சத்து 46 ஆயிரத்து 80 கோடி கிலோ மீட்டர் கொண்டதாக உள்ளது. 

இந்த அண்டத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே  உள்ள பரப்பளவு 8.3 ஒளியாண்டு வினாடிகள் ஆகும். அதாவது 0.00001574 ஒளியாண்டு தூரமாகும். சூரியனுக்கும் நமது சூரிய குடும்பத்தில் இறுதியாக உள்ள ப்ளூட்டோ கோளுக்கும் (கோள் என்ற வரையறையிலிருந்து அறிவியலாளர்கள் தற்போது ப்ளூட்டாவை நீக்கியுள்ளார்கள்) இடையில் உள்ள பரப்பளவு அதிகபட்சமாக 6 ஒளியாண்டு மணி நேரங்கள் ஆகும். (6 ஒளியாண்டு அல்ல. 6 Light Hours). ஆறு மணி நேரத்தில் சூரிய ஒளை ப்ளூட்டோவை சென்றடைந்துவிடும்.  

எண்ணற்ற விண்மீன் பேரடைகள் (Galaxy) தன்னகத்தே கொண்டது அண்டம் (Universe) ஆகும். நமது சூரிய குடும்பம் ஒரு விண்மீன் பேரடையில்தான் அடங்கியுள்ளது. இவ்வாறு எண்ணற்ற சூரிய குடும்பங்கள் கொண்டது ஒரு விண்மீன் பேரடை எனலாம். நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சூரியன் 4.3 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. நமது பேரடையின் மையமானது, நமது சூரியனிடமிருந்து 27,700 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. நமது பேரடையின் பரப்பளவு எவ்வளவு பெரியது என கற்பனை செய்து கொள்ளுங்கள். 

நமக்கு அடுத்து அருகில் உள்ள விண்மீன் பேரடை 29 லட்சம் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நம்மால் பார்க்க முடிந்த அளவிற்கு நமக்கு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் பேரடை 15 கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதற்கு அப்பால் எத்தனை விண்மீன் பேரடைகள் உள்ளனவோ? தெரியாது. நமது சூரிய ஒளி நமது விண்மீன் பேரடையின் மையத்தை அடைவதற்குள் (27,700 ஒளியாண்டு) சூரிய குடும்பமே அழிந்துவிடும். அப்படியென்றால் அண்டத்தின் பரப்பளவை நாம் கணக்கிடத்தான் முடியுமோ? 

இதில் என்ன வேடிக்கை என்றால், அண்டம் என்பது ஒன்றுதான் என கொள்ளக்கூடாது. இவ்வாறு பல அண்டங்கள் உள்ளன. ‘அண்ட கோடிகள்’ எனச் சொல்வார் வள்ளலார். இவ்வாறு பல கோடி அண்டங்களின் பரப்பளவை நாம் வரையறுக்க முடியாது. ஆனால் வள்ளற்பெருமான் அண்ட கோடிகளையெல்லாம் அரை நொடியில் பார்த்து வரையறுத்துக்கொண்டே இருக்கின்றார். ஆனால் வரையறை முடிவதாகத் தெரியவில்லை. எனவேதான் ‘அண்ட பரப்பு’ எனப்பாடுகின்றார். பரப்புதல் என்றால் விரித்தல் எனப் பொருள்படும். கொள்கையை பரப்புதல், கடை பரப்புதல் (கடை விரித்தல்) எனச் சொல்கின்றோம் அல்லவா. இவ்வாறு எண்ணற்ற கோடி அண்டங்களும் தன்னை பரப்பிக்கொண்டே சென்றுக்கொண்டிருக்கின்றன. விரிவடையும் அண்டங்களுக்கு தேவையான இடங்களையும் (வெளி) இறைவன் அளித்துக்கொண்டே இருக்கின்றான். வெளிக்குள் வெளி, வெளிக்குள் வெளி என பரப்பிக்கொண்டே செல்கின்றது. 

மனிதனின் பரப்பளவோடு நாம், ஒரு மிகச்சிறிய கோள்களின் அல்லது சூரியனின் பரப்பளவோடு ஒப்பிட்டுக்கொண்டே சென்றால் எவ்வாறு மனித பரப்பளவு ஒன்றுமில்லாத்தன்மையை அடைகின்றது என்று பார்த்தோம். நாம் இப்போது மனிதன் இருக்கும் இடத்தில் இறைவனை வைத்து ஒப்பிடும்போது, எவ்வாறு இந்த அண்டம் பரவுகின்றதோ (விரிகின்றதோ) அது போல் இறைவனின் பரப்பளவும் பரந்துக்கொண்டே விரிந்துக்கொண்டே எல்லாமாகி விளங்கி நிற்பதைக் காணலாம். இவ்வாறு இங்கே மனிதனின் சிறுமையும் இறைவனின் பெருமையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எதற்கும் அடங்காமல் இருக்கும் ’பரப்பும்’ செயலை வள்ளற்பெருமான் ஆண் தன்மையுடன் (அவன்) ஒப்பிடுகின்றார். எங்குமாய் விளங்கும் அண்ட பரப்புகள் அனைத்தும் தனது அகண்ட பவனத்தில் (வீட்டில்) அடக்கி, அவனுக்கு அவனே நிகராக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com

https://www.blogger.com/blog/post/edit/6869766267563420144/1390809461187316825

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.