Saturday, October 7, 2023

எங்கும் அமைதி நிலவட்டும்

 எங்கும் அமைதி நிலவட்டும்



உலக நாட்டுத் தலைவர்கள் கொல்லாமையை கடைபிடிக்கவேண்டும். ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை உலகம் அடைதல் வேண்டும்.

ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் பலத்த போர் துவங்கியுள்ளது வருந்ததக்கது. நமது இந்தியா இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அதுபோல் ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மற்ற உலக நாடுகளும் இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டு அப்பாவி மக்களை அழிக்க யுத்தம் வரப்போகின்றது உறுதியாவதுபோல் உள்ளது.
எருசலேம் 5000 வருடங்கள் பழமையான நகராகும். பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்தாகும். (Jerusalem - World Heritage). இங்கு அர்மீனியக் குடியிருப்புகள், கிறித்துவக் குடியிருப்புகள், யூதக் குடியிருப்புகள் மற்றும் இஸ்லாமியக் குடியிருப்புகள் என நான்கு குடியிருப்புகள் உள்ளன. மத்திய ஆசியாவில் உள்ள இசுரேல் நாட்டில் உள்ள நகரந்தான் இந்த எருசலேம் ஆகும். உலகின் சர்ச்சை நிறைந்த இடமாக எருசலேம் உள்ளது. காரணம் பாலத்தீன நாடும் எருசலேம் தங்களுடையது என தனது இறையான்மையை அங்குச் செலுத்துகின்றது.
விவிலியம் பழைய ஏற்பாட்டின்படி எருசலேம் நகரை கி.மு.1000 ஆம் ஆண்டளவில் யூதர்கள் தங்களது தலைநகராக ஆக்கினார்கள். தாவீது மன்னரின் மகன் சாலமோன் எருசலேமில் புகழ்வாய்ந்த கோவிலைக் கட்டினார். அதனால் யூதர்களுக்கு இன்றும் எருசலேம் புனித நகரமாக உள்ளது.
விவிலியம் புதிய ஏற்பாட்டின்படி இயேசு சுமார் கி.பி.30-ஆம் ஆண்டு எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையுண்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையை கான்ஸ்டண்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென் என்பவர் கி.பி.300 ஆம் ஆண்டளவில் எருசலேமில் கண்டெடுத்தார். எருசலேம் தேவாலயத்தில்தான் இயேசு இறந்தார், மீண்டும் உயிர் பெற்றார் என்று கிறுஸ்துவர்கள் நம்புவதால், இன்றும் எருசலேம் கிறுத்துவர்களுக்கு புனித இடமாக உள்ளது.
கி.பி.610-இல் இஸ்லாமியர்கள் எருசலேமை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். கி.பி.620-இல் முகமது நபி எருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் மேற்கொண்டு திரும்பினார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். எனவே மெக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இசுலாமியர் எருசலேமைத் தங்கள் புனித நகரமாக கருதுகின்றனர்.
இவ்வாறு இஸ்லாம், கிறுத்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனிதத்தலமாக ஜெருசலேம் விளங்கி வருகின்றது.எனவே இவர்களில் யார் ஜெருசலேத்தை கைப்பற்றுவது என்பதில், இன்றைக்கும் போர் மேகம் சூழ்ந்த இடமாக இது இருக்கின்றது.
படத்தில் உள்ள கட்டடம் தற்போது இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக, மசூதி என்கின்ற பெயரில் உள்ளது. ஆனால் இவர்கள் ஆளுகைக்கு முன்னர் இக்கட்டடம் கிறுத்துவர்களின் தேவாலயமாக இருந்தது.
எண்கோண கட்டட அமைப்பில் அமைந்த இந்த கட்டடம் ஏறக்குறைய நமது வள்ளற்பெருமான் கட்டிய ஞான சபையை ஒத்து இருப்பதாக உள்ளது. வள்ளற்பெருமானின் வருவிக்கவுற்ற நாள், அதாவது 200-ம் ஆண்டு முடிந்து இரண்டாம் நாளில் இஸ்ரேலில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளதைப் பார்க்கையில், வள்ளலார் ஏதோ ஒரு விடயத்தை உலக மக்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றார் எனத் தோன்றுகின்றது.
மக்கள் - மதம், நிலம், இனம் போன்ற அடைப்படையில் தங்களுக்குள் குழுக்களாக பிரிந்திருந்தாலும், தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாகினும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுதல் அறிவுடைய மக்களுக்கு ஏதுவாகும். அதற்கு ஐ.நா. சபை குறுக்கிட்டு உடனே அங்கு அமைதி நிலவ வழிவகை செய்ய வேண்டும். எங்கும் அமைதி நிலவட்டும்.

T.M.RAMALINGAM
9445545475
vallalarmail@gmail.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.