Friday, February 7, 2014

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 5



சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 5
               
அன்பர்களுக்கு வணக்கம்!

நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்" என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (சிவவாக்கியம்)

இறைவன் ஜோதிமயமாய் இருப்பதை உணர்ந்தவர்களுள் நமது சிவவாக்கியாரும் ஒருவர். அப்படிப்பட்ட இறைவனான ஜோதி, உள் கலந்து இருப்பதாக இங்கே கூறுகிறார். நான் வேறு நீ வேறு என பிரிக்கமுடியாதவாறு நமக்கு உள்ளே உள்ள நமது ஆன்மாவில் பிரகாசமாய் இருப்பதே அந்த இறைவனான ஜோதி ஆகும். அதனையே ஆன்ம பிரகாசம் என்பது. அதாவது ஆன்மா வேறு பிரகாசம் வேறு எனபிரிக்கமுடியாது இரண்டும் கலந்து இருப்பதாக கூறுகிறார்.

அப்படி உள்ளே கலந்து ஒளிருகின்ற ஜோதியினை அறியாத பாமர மக்கள், அவ்விறைவனை புறத்தில் தேடி தேடி ஏமாற்றமடைகின்றனர். உள்ளத்தில் கலந்தவனை உருவத்தில் தேடுகிறார்கள். அவ்வுருவத்திற்கு மாலைகளையும் அபிஷேகங்களையும் பலவித மந்திரங்களையும் ஓதி இறைவனை தேடுகிறார்கள். கிடைத்தனா இறைவன், இல்லை, எனவே அருகில் உள்ள உருவங்களையும் விட்டு, தூரத்தில் உள்ள உருவத்தைக்காண ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகிறார்கள். தெற்கிலிருந்து வடக்கிற்கும், வடக்கிலிருந்து தெற்கிற்கும் மக்கள் ஓடி ஓடி ஓடி ஒடி, தேடி தேடி தேடி தேடி எங்கேயும் அலங்கார உருவத்தையும் கண்ட கதைகளையும் தவிர வேறெதனையும் கண்டபாடில்லை.

எனினும் ஒருவித மத, சமய, ஆச்சார போதைகளில் சிக்குண்ட பாமரர்கள் அதனையே நாடுகிறார்கள். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' என பாடும் அளவிற்கு பொய்யே மெய்யாய் தோன்றும் அளவிற்கு மேற்கண்ட போதையில் மயங்கி அதனையே நாடி நாடி நாடி நாடி நாட்கள் பல கழிவதைத் தவிர வேறு மலங்கள் எதுவும் கழிவதாக இல்லை.

நமது மலங்கள் கழிய கழிய உட்கலந்த ஜோதி தெரிய ஆரம்பிக்கும். ஆனால் நாம் புறத்தில் வழிபடுகையில் மேலும் மலங்களை கூட்டுகிறோம் என்பதை அறிவதில்லை. சிலர் அறிந்தாலும் அதனை விடுவதாய் இல்லை. நாம் சாவிலும் ஒருவித சுகம் காண்கிறோம், குரங்கு சிரங்கை சொறிந்த கதையாய் நமது வாழ்கையும் ஓடுகிறது. மலங்கள் கூடும்போது நமது உடல் இறுதியில் வாடுகிறது. அதாவது முதுமையடைகிறது. நரையும் திரையும் மூப்பும் நமது உடலுக்கு வாட்டத்தை அளிக்கிறது. புறத்தில் தேடுவதிலும், ஓடுவதிலும், நாடுவதிலும் உள்ள சிரமத்தைவிட, அகத்தே தேடி நாடி ஓடுவது மிக எளிது, காலதாமதமும் ஏற்படாது மிகச்சீக்கிரம் உட்கலந்த ஜோதியினை தரிசித்துவிடலாம். தரிசனம் கிடைக்கையில் நரை திரை மூப்பு அற்ற வாடாமலராய் நமது தேகம் நீடிக்கும். ஆனால் நாம் அகத்தில் உள்ளதை புறத்தில் தேடுவதால் நமது தேகம் வாடி வாடி வாடி வாடி முடிவில் செத்துபோகிறோம். சாகும் நமக்கு ஏன் சாமி? சாவதற்கா சாமி கும்பிடுகிறோம்? ஆம்... நாமெல்லாம் புறத்தில் செய்யும் வழிபாடெல்லாம், பிறகு நமது பிணத்திற்கு செய்வதற்கல்லவா? உண்மையான வழிபாடு நம்மை வாடச்செய்யாது, சாகச்செய்யாது, அதற்குபெயர்தான் மெய், நமது மெய்யிற்கு செய்யப்படும் வழிபாடுதான் மெய்வழிபாடு, மற்றதெல்லாம் பொய் வழிபாடு என்கிறார் சிவவாக்கியார்.

மேற்கண்டவாறு பக்தி பரவசத்தில் பாமர மக்கள் செய்யும் அலங்கோலங்கள் எண்ணற்றவை. அவ்வாறு செய்து இப்பூமியில் மாண்டவர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியாகும். மாண்டுக்கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள்.

இப்பாடல் மூலம் சிவவாக்கியார், சிவம் சீவனில் உள்ளது என்பதை கூறவந்தவர், சரியை மார்க்கத்தால் / புறத்தில் உருவ வழிபாட்டு முறையினால் நாம் இறுதியில் இறைவனைக் காணாமல் சாகிறோம். நாம் சாவதற்கு புறவழிபாடு காரணமாகிவிடுகிறது என்பதாக நமக்கு எச்சரிக்கை செய்கிறார். நாம் அபயம் என்று செல்லுகின்ற இடங்கள் நமக்கு அபாயமாக உள்ளது என எச்சரிக்கை விடுக்கிறார்.

இனி, மேற்கண்ட சிவவாக்கியம் வள்ளற்பெருமானின் அருள்வாக்கியத்துடன் எவ்வகையில் இணைகிறது அல்லது மறுக்கிறது என்பதனை பார்ப்போம்.

அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே. (திருஅருட்பா 4683)

வள்ளற்பெருமானும் இறைவனை சோதி என்றும் அருட்பெருஞ்சோதி என்றும் கூறுவார். அந்த சோதியானது தம் உள்ளே உள்ள அருமையான உயிரில் கலந்திருக்கிறான் என்று கூறுவதை காண்கிறோம். எனவே சிவவாக்கியம் கூறுவதுபோன்று ஜோதியானது உள்ளே கலந்திருப்பதை அருள்வாக்கியமும் ஒப்புக்கொள்கிறது.

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து (திருஅருட்பா 5487)

உயிரில் மட்டுமா கலந்திருக்கிறான், இல்லை, வள்ளற்பெருமானாரின் கருணையினாலே அன்பில் கலந்தான், கண்ணில் கலந்தான், கருத்தில் கலந்தான், எண்ணமதில் கலந்தான், பண்ணில் கலந்தான், பாட்டிலும் கலந்தான் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தன்னுள் கலந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை புறத்தில் தேடலாமோ? அவ்வாறு தேடினால் அருட்பெருஞ்ஜோதி அகப்படுமா?

அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே (திருஅருட்பா 5400)

எல்லா உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி (திருஅருட்பா 4556)

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் புறத்தில் அகப்படாது, அகத்தில் மட்டுமே அகப்படும் அகப்பொருளாக அது இருக்கிறது என்பார் வள்ளற்பெருமான். சிவவாக்கியாரும் இறைவன் புறப்பொருள் அல்ல, அகப்பொருளே என தனது பாக்களில் பகிர்வதை பார்க்கும்பொழுது இருவர் தத்துவமும் ஒருங்கே அமைவதை தெளிவாகக் காணலாம்.

புறவழிபாடு என்பது மரணத்தையே நமக்கு பரிசாக அளிக்கும் என்ற சிவவாக்கியாரின் தத்துவத்தையே வள்ளற்பெருமானும் கூறியிருப்பதைக் காணுங்கள்,

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
 சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
 அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே.

எங்கு புறவழிபாடு ஆரம்பமாகிறதோ அங்கு சாதி, மதம், சமய நெறி, சாத்திரம், கோத்திரம் போன்றவை வெளிப்படும். இந்த சாதி, மதங்களெல்லாம் எப்போது தோன்றினவோ அப்போதிலிருந்து அவைகளின் மேல் பற்று வைத்துக்கொண்டு இம்மனித குலம் அதன் பின்னே அலைந்துக்கொண்டிருக்கிறது, அவ்வாறு அலைவது அவனை மரணத்திற்குத்தான் இட்டுச்செல்லும் என வள்ளற்பெருமானும் சிவவாக்கியரின் தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்.

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை. (திருஅருட்பா 5516)

நாம் பின்பற்றும் புறவழிபாட்டை ஆட்டிப்படைப்பது வேதாகமங்கள் என்கிற வேதங்கள் ஆகும். அவ்வேதங்கள்தான் உண்மை என்று நாம் வீணாக வாதம் செய்வதை கண்டிக்கிறார், அந்த வேதாகமங்கள் சூதாகச் சொல்லப்பட்டவை என்கிறார் வள்ளற்பெருமான். சூது என்றால் பணத்தை தீய வழியில் விடுவதும் பெறுவதும் என்று பொருள். ஆகவே வேதாகமங்கள் என்பவை சிலர் தீய வழியில் பணம் ஈட்டுவதற்கும் பலர் பணம் செலவு செய்வதற்கும் சூதாக சொல்லப்பட்டதே அன்றி, அதில் உள்ள பயன் வேறென்ன? என்று வெளிப்படையாகவே வினவுகிறார் வள்ளற்பெருமான்.

எண்ணாத மந்திரமே எழுதாத மறையே (திருஅருட்பா 4144)

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவர் நமது எண்ணங்களுக்கு அகப்படாத மந்திரமாகவும், இதுவரை எவரும் எழுதாத மறையாகவும் / வேதமாகவும் இருப்பதாக கூறுவார் வள்ளற்பெருமான்.

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள், வாடுதல் என்பது வருத்தம், துயரம் எனப்பொருள்படும். இப்படி மக்கள் இறைவனை வெளிஉலகில் தேடி ஓடி ஓடி நாடி நாடி ஒன்றுக்கும் பலன்காணாது இறுதியில் வருத்தத்துடனும் துயரத்துடனும் நரை திரை மூப்பு கண்டு மரணமுறுகிறார்கள் என்பது சிவவாக்கியம்.

இதனையே அருள்வாக்கியமும், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்கிறது. இங்கு பயிர் என்பது மனிதரையே குறிக்கிறது. மனிதன் நரை திரை மூப்புடன் துயருறுவதைப் பார்த்தபோதெல்லாம் வள்ளற்பெருமான் துயருறுகிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்! நரை திரை மூப்பிலிருந்து மீண்ட வள்ளற்பெருமானும் வாடுகிறார்! எதற்காக வாடுகிறார்? அவரது பெருங்கருணையினால் அவருக்கு வாட்டம் வருகிறது! அந்த வாட்டம் என்னும் கருணை அவரை ஏறாநிலைமிசை ஏற்றிவிடுகிறது. ஆனால் நமக்கு வந்த வாட்டம் மரணத்தில் தள்ளிவிடுகிறது. நமது வாட்டத்தை நீக்க வேண்டுமானால், நாமும் வள்ளற்பெருமான் போன்று சுத்த சன்மார்க்கத்தை சாரவேண்டும் என்பதே வள்ளற்பெருமானின் தத்துவமாகும்.

வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஜோதி (அகவல்)

நடுநாடி நடுநாடி நடமாடு பதியை
நடராஜ நடராஜ நடராஜ நிதியே

நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே

நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே (5155)

நமது அகத்தில் மணிமன்றம் என்கிற புருவமத்தியில் நமது பக்தி என்கிற சிந்தனையினை செலுத்தினால் நமது வாடுதல் என்கிற நரை திரை மூப்பு இவைகள் நீங்கப்பெறும், நமது மணிமன்றத்தில்தான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆடுகிறான்.

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
 நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்குலம் என்றும்
 வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் (5572)

இப்படியான உண்மையினை அறியாமல் நாம் புறத்தில் கண்டதையெல்லாம் கடவுள் எனக்கருதி அதனை பல பூசைகள் செய்து ஆசார விகற்பங்களால் விகாரப்பட்டு, என்குலம் உயர்ந்தது, உன்குலம் தாழ்ந்தது என சண்டையிடுவது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் நற்குலம் என்பது, நரை திரை மூப்பை காணாத குலமே உயர்ந்த குலமாகும். என்குலமும், உன்குலமும் இதுவரை மாண்டுக்கொண்டேதான் உள்ளது, இதில் உயர்வு தாழ்வு ஏது? என்கிறார் வள்ளற்பெருமான்.

ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
 ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
 மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
 கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
 எத்துணை கொள்கின்றீர் பித்துல் கீரே. (5558)


எனவே நம் உலகத்தில் உள்ள நன்மை தீமைகளை ஆய்ந்து அதில் சோதியினை மட்டுமே தேர்வு செய்து இறவாமை மற்றும் பிறவாமையினை நாம் பெறுதல் வேண்டும் என்பது வள்ளற்பெருமானின் முடிந்த முடிபாக உள்ளது. சிவவாக்கியமும் அருள்வாக்கியமும், இங்கு ஒன்றான உட்கலந்த சோதியினை தமது அகத்தில் நாடச்சொல்வதால் இரண்டு தத்துவங்களும் இணைந்து நடைபோடுகிறது.

3 comments:

  1. தனித்தந்தை என்றால் யார்

    ReplyDelete
  2. சிறந்த விளக்கம். மக்கள் அறியாமையிருநது விடுப்பட.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.