Monday, February 24, 2014

விட்டோம் இல்லை விரித்தோம்...

                                          விட்டோம் இல்லை விரித்தோம்...

அன்பர்களுக்கு வணக்கம்,

நமது வள்ளற்பெருமான் அவர்கள், 1874ஆம் ஆண்டு புணர்ப்பூசம் அன்று இரவு 12 மணிக்கு (30.01.1874-வெள்ளிக்கிழமை) சித்திவளாக திருவறையினுள் சென்றார். அதுதொடங்கி மீண்டும் அவர் வெளியில் வரவில்லை என்பதோடு வள்ளற்பெருமானின் புற உலக வரலாறு, நம்மை பொறுத்தவரையில் இந்நிகழ்ச்சியுடன் தற்காலிகமாக முடிவடைகிறது, நம்பெருமானாரின் வரலாறு மீண்டும் இம்மண்ணுலகில் எப்போது தொடரும் என பார்ப்போம்...

வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலில், வள்ளற்பெருமானின் இறுதி நடவடிக்கையினை கீழ்கண்டவாறு பதிவுசெய்துள்ளார்கள்,

.... ஒரு நாள் அன்பர்களை நோக்கி

"கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம். நீங்கள் அருள் அடைவதற்கு இந்தத் தீபத்தினைக் கடவுளெனக் கொண்டு ஜீவகாருண்யமுடையராய்ச் சிந்தித்துக்கொண்டிருங்கள். இனி இரண்டரை கடிகைநேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம். நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆஞ்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்."

என்று கட்டளையிட்டுச் சித்தசாந்தம் உண்டாக்கி ஸ்ரீமுக வருடம் தைமாதம் புணர்பூசத்தன்று இரவு 12-மணிக்கு மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக் கொண்டனர்.  (ச.மு.க.வின் பிரபந்ததிரட்டு பக்கம் 58)

மேற்கண்ட பதிவு மிகமுக்கியமானப் பதிவாக சுத்தசன்மார்க்க உலகில் கருதப்படுகிறது. ஏனெனில் வள்ளற்பெருமானின் நேரடி சீடர்களில் ச.மு.க. வைத்தவிர வேறு எவரும் வள்ளற்பெருமானின் இறுதி நடவடிக்கையினை எழுத்து வடிவத்தில் அச்சேற்றவில்லை. அதனால் ச.மு.க. கூறும் மேற்கண்ட பதிவை நாம் அப்படியே உண்மை என எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுதல் கூடாது.

இதனை ஏன் யாம் கூறுகிறோம் எனில், 'கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம்.' என வள்ளலார் கூறவே இல்லை என ஒருசிலர் விவாதிக்கின்றனர். வள்ளலாரின் இறுதிக் கட்டளைகள் யாவும், அவர் கூறியதேயொழிய எழுதியவையல்ல. அப்படியிருக்கும்போது, நம்பெருமானாரின் சீடர் ஒருவர், வள்ளலார் கூறினார் என ஒன்றை எழுத்துவடிவில் வெளியிட்டதை நிராகரிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

நாம் இன்றும் வள்ளற்பெருமானின் சுத்தசன்மார்க்கத்தை தெளிவாக அறியாமல் குழம்புகிறோம். அவருடைய காலத்தில் மக்கள் எப்படி அவருடைய கருத்துகளை ஏற்றிருக்கமுடியும்? அவருடைய சீடர்கள்கூட சுத்தசன்மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நம்பெருமானாரில் நிலை வருத்தப்படத்தக்க வகையில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நம்பெருமானார் இன்னும் பல ஆண்டுகள் இளமையுடன் இம்மண்ணுலக மக்களுடன் வெளிப்படையாக வாழ விரும்பியிருக்கிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் தொடர் முற்றுபெற்று இருக்கும், மேலும் பல புரட்சிபாக்கள் வெளிவந்திருக்கும். ஆனால் இறைவன் கட்டளைப்படி சுத்தசன்மார்க்கத்தை உலகமக்களிடம் வெளிப்படுத்தியும் அதனை ஏற்க ஒருவர்கூட முன்வராமைக்கண்டு மிகவும் துயரதில் இருந்திருக்கவேண்டும். அச்சமயம் இறையாணையானது தற்காலிகமாக அவரை மறைந்திருக்க சொல்லியிருக்கவேண்டும். அவ்வேளையில் அவரது திருவாயிலிருந்து வெளிவந்த ஓர் துயர வார்த்தைதான் 'கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம்.' என்ற திருவார்த்தையாகும்.

அடுத்ததாக, "நீங்கள் அருள் அடைவதற்கு இந்தத் தீபத்தினைக் கடவுளெனக் கொண்டு ஜீவகாருண்யமுடையராய்ச் சிந்தித்துக்கொண்டிருங்கள்." என்ற வள்ளலாரின் வார்த்தைக்கிணங்க, அவரால் வழிபாடுசெய்யப்பட்டு வந்த தீபம் இன்றும் சித்திவளாகத்தில் அணையாமல் ஓளிர்ந்துவருவதை நாம் காண்கிறோம்.

அடுத்ததாக, "இனி இரண்டரை கடிகைநேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கும் இருப்போம்." என்ற வள்ளலாரின் வார்த்தைக்கு பொருள் என்ன? என்று பார்ப்போம்,

வள்ளலார் நமது கண்களுக்கு தோன்றாமல் இவ்வுலகிலும், விரிந்துக்கொண்டிருக்கின்ற பிரபஞ்சம் முழுதும் இருக்கிறார் என்பதிலும் நமக்கு ஐயமில்லை. ஆனால் அவ்வாறு எதுவரை இருப்பார் எனில், இரண்டரை கடிகைநேரம் மட்டுமே இருப்பார் எனக்கூறியிருக்கிறார்.

வள்ளலார் கூறும் அந்த இரண்டரை கடிகைநேரம் என்பது எவ்வளவு நேரமாக இருக்கும்? காலத்தை கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடிகை+ஆரம் என்ற இருபதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது. இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக்கொண்டிருப்பர். இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் எனப் பெயர் வந்தது. சூரியனின் போக்கைவைத்து நேரம் அறிய இந்தக் கருவி உதவியது. சரி, கடிகை என்பது இன்றுள்ள நேரப்படி எவ்வளவு நேரமாக இருக்கும் என்றால், ஒருகடிகை (ஒருநாழிகை) என்பது 24 நிமிடங்கள் ஆகும். அப்படிப்பார்க்கையில் இரண்டரை கடிகை என்பது 60 நிமிடங்கள் ஆகும். அதாவது ஒருமணிநேரத்தைக் குறிக்கிறது. இங்கு நாழிகை கணக்கையே கடிகைக்கும் கூறுவது பொருந்தாது. நாழிகை வேறு, கடிகை வேறாக இருக்க வேண்டும். இதேபோன்று வள்ளலார் 'இரண்டரை நாழிகை' என்ற நேரத்தை தமது திருவருட்பா பாடலில் (5818) பயன்படுத்தியுள்ளார்கள். அந்த இரண்டரை நாழிகை என்பதுதான் ஒருமணிநேரம் என்பது.

வள்ளலார் தாம்கூறியவாறு திருவறைக்குச்சென்று ஒருமணிநேரத்தில் வெளியில் வந்துவிட்டாரா? என்றால் இல்லை. அப்படியெனில் அவர் கூறிய கடிகை என்பதற்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா? ஒருகடிகை என்பது 60 வருடங்கள் கொண்ட நமது தமிழ் வருடவட்டத்தைக் குறிப்பதாக ஒருசிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்க்கையில் இரண்டரைக்கடிகை என்பது 150 வருடங்களைக் குறித்து நிற்கிறது. வள்ளற்பெருமான் மறைந்த 1874ஆம் ஆண்டிலிருந்து 150 வருடங்களைக் கூட்டினால் 2024ஆம் ஆண்டு உதயமாகிறது. ஆக, தமிழ்வருடவட்டத்தின்படி கணக்கெடுக்கையில், வள்ளலார் 2023ஆம் ஆண்டுவரைதான் நம்முன் தோன்றாமல் இருப்பார்.

அடுத்ததாக, "பின்னர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வருவர். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பலநிகழ்த்துவோம்." என்று கூறியிருக்கின்றார். நாம் தற்போதைக்கு நம்மால் கணக்கிடப்பட்ட 2023 ஆண்டுக்கு பின்னர் அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவார் எனக்கொள்ளலாம். சரி, தற்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இங்கில்லையா? என்ற கேள்வி எழுகிறது. அவர் எங்கிருந்து வருவார்? என்ற கேள்வியும் எழுகிறது. பக்குவமில்லாமல் நாம் இருப்பதால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்முள் இருப்பதை நாமும் அறியமுடியவில்லை, அவரும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை அவ்வளவே. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பக்குமுள்ளோரிடத்தில் அவர்களது அனுபவத்தின்கண் வெளிப்படையாக எழுந்தருள்வார், எங்கும் வெளியிலிருந்து வருபவர் அல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், எனவே பக்குமுள்ளோர்களிடத்து உள்ளிலிருந்துதான் வருவார்.

அவ்வாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நமது உள்ளங்களிலெல்லாம் வந்தவுடன் வள்ளற்பெருமானும் தாம் 1874ஆம் ஆண்டு மறைந்தபோது எவ்வாறு இருந்தாரோ அதே தேகத்துடன் உருவுடன் வயதுடன் 2023ஆம் ஆண்டிற்குப்பிறகு நமது கண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றி சித்துகள் பல நிகழ்த்துவார். கடிகை என்பதற்கு நாம் கணக்கெடுத்தது சரி என்றால், அதற்கு இன்னும் 10 வருடங்கள்தான் நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் நாம் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். வள்ளற்பெருமானை நேரில் பார்க்கும் பாக்கியம், இதனைபடிக்கும் பலருக்கு கிடைக்கப்போகிறது. 

அடுத்ததாக, "நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆஞ்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார்." இந்த நிகழ்ச்சியினை பலரும் பலவிதமாக எவ்வித ஆதாரமும் இன்றி மனம்போனவாறு எழுதியுள்ளனர். அதாவது வள்ளலார் அறைக்கதவை உள்ளே தாளிட்டுக்கொண்டார்கள் என்று ஒருசிலரும், மற்றும் சிலர் கதவை வெளியே திருக்காப்பிட்டுக்கொள்ளும்படி அடிகள் சொன்னார்கள். அதன்படி வெளியே நின்ற சீடர்கள் கதவைத் தாளிட்டு பூட்டிவிட்டார்கள் என்று எழுதியுள்ளனர். இவற்றில் எது உண்மை என்று வரையறுப்பது சாத்தியமன்று.

சிலர் மூன்று தினங்கள்வரை கதவு சாத்தப்பட்டு இருந்ததேயல்லாமல், திருக்காப்பு இடப்படவில்லை என்று எழுதியுள்ளனர். அடிகள் திருக்காப்பிட்டுக் கொள்ளக் கட்டளையிட்டபின். வெளியே இருந்த சீடர்கள் அதன்படி செய்யவில்லை என்றும், முற்றும் மூடாமல் இருந்த கதவு இடுக்கு வழியே வெளியே இருந்த சீடர்கள் சில சமயம் கவனித்தார்கள் என்றும் அப்போது அடிகளின் உடல் தோன்றியும் தோன்றாமலும் இருந்தது என்றும், சிலசமயம் குறுகிக் காணப்பட்டது என்றும் அதன் பின்னர் அடிகளின் ஆணைக்கு அஞ்சி 04.02.1874இல் வெளியே திருக்காப்பிட்டுப் பூட்டிவிட்டனர் என்றும் எழுதியுள்ளார்கள்.

இப்படி அடிகள் மறைந்தது குறித்தும் திருமாளிகைக் கதவு திறக்கப்பட்டது குறித்தும், அறைக்குள் சென்றதும் அடிகள் தாமே கதவைச்சாத்தி உள்ளே தாளிட்டுக் கொண்டாரா அல்லது வெளியே தாளிட்டுக் கொள்ளும்படி சீடர்களுக்குக் கட்டளை இட்டாரா என்பது குறித்தும், தத்தம் மனம் போனவாறு எழுதியிருக்கிறார்கள்.

அடிகளின் நேர் சீடரான காரணப்பட்டக் கந்தசாமிப்பிள்ளை அவர்கள், தாம் வெளியிட்ட திருவருட்பாப் பதிப்பில் அடிகள் தாமே உள்ளே கதவைத்தாளிட்டுக் கொண்டார்கள் என்று எழுதியிருக்கின்றார். (இராமலிங்க சுவாமிகள் சரித்திரச்சுருக்கம் பக்கம் 63). மாவட்ட கலெக்டர் சார்டின்ஸ் ஐ.சி.எஸ். தாம் விசாரனை நடத்தி எழுதியுள்ள குறிப்புகளில் உள்ளே சென்று அறைக்கதவை அடிகளே தாளிட்டுக்கொண்டார் என்று எழுதியுள்ளார். இந்த இருகுறிப்புகளும் நேரடித் தொடர்புள்ள குறிப்புகளாய் இருப்பதால் இவை பொய்யாய் இருக்காது என்று நம்பலாம்.

அன்பர்களே! நாம் நமது கற்பனைக்கு ஏற்றவாறு வள்ளலாரின் வரலாற்றை கூறாமல், நம்பெருமானாரின் சீடர்கள் என்ன குறித்துள்ளனரோ அதனையே நாம் ஆதாரமாக வைத்துக்கொண்டு நமது சந்ததிகளுக்கு அதனை கூறவிழைவோம். "கடையை விரித்தோம். கொள்வார் இல்லை. கட்டிவிட்டோம்" என்ற வாக்கியத்தில் இறுதி வாக்கியத்திலிருந்து இறுதி சொற்களை எடுத்து கோற்றால் வருவது, "விட்டோம் இல்லை விரித்தோம்" என்ற மிக அழகான பொருள் பொதிந்த சொற்றொடர் வருவதைக் கவனியுங்கள். எனவே நாம் ஐயாவின் கடையினை விடாமல் இவ்வுலகில் விரிப்போம்...

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.