Tuesday, February 11, 2014

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை வாழ்க்கை குறிப்பு

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை வாழ்க்கை குறிப்பு

நினக்கடிமை

கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளால்

வெள்ளைத்தை எல்லாம் மிகவுண்டேன் - உள்ளத்தே

காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குகின்ற

வாணா நினக்கடிமை வாய்த்து

(திருஅருட்பா-3892)

அருட்பணி

திசையெலாம் சென்று திருவருட் பாவை

இசையெலாம் பெய்தே இசைத்திசைத் திருத்த

பசையெலாம் ஆனக் காரணப் பட்டார்

அசைவிலா நெஞ்சும் அசைத்திடும் பணிந்தே

(வான்ஒளி அமுத காவியம்)

எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே

எந்தை நினதருட்புகழை இயம்பிடல் வேண்டும்.                      (திருஅருட்பா)

என்ற வள்ளற்பெருமானின் இலக்கிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ச.மு.கந்தசாமிப்பிள்ளை. 

வள்ளலார் புகழ்பாடும் இந்த உத்தியோகத்தை இவருக்குப் பெருமானே உவந்து கொடுத்தருளினார் என்றால் இவரின் உணர்வினையும், உயர்வினையும் என்னென்று வைப்பது; ஆம்! இவருக்கு வந்த பிணியால் இவருக்கு தந்த பணி இது. 

பிறப்பும் சிறப்பும்:-

கந்தசாமியார் கடலூர் வட்டத்தில் உள்ள 'காரணப்பட்டு' என்னும் கிராமத்தில் 07-09-1838 ஆம் ஆண்டு கருணீகர் குலத்தில் உதித்தார். பிரம கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரம், ஓதிமம் உயர்த்த கோமான் மகிரிக்ஷி கோத்திரம் (ஓதிமம் என்றால் அன்னம்).  இவரின் பாட்டனார் சந்திரசேகர பிள்ளை  பெருஞ்செல்வந்தர். அறுபது காணி நிலத்துக்குச் சொந்தக்காரரும் கூட. கந்தசாமியின் தந்தையார் முத்துசாமி பிள்ளை. இவர் கணக்கு வேலை பார்த்து வந்தார். இவரின் துணைவியார் தயிலம்மாள். 

படிப்பும் பணியும்:- 

இளம் வயதில் இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எண்ணறக் கற்றவர்; எழுத்தற வாசித்தவர். கணக்கு வேலை பார்ப்பதற்கு உரிய படிப்பும் படித்திருந்ததினால் புதுவை மாநிலத்தில் 'பாகூர்' என்னும் ஊரில் கணக்கு வேலை கிடைத்தது. அதனை ஒழுங்குறச் செய்து கொண்டே மேன்மேலும் படித்தார். அதனால் பின்னர் புதுச்சேரியில் உள்ள சாரம் என்னும் பகுதியில் சுங்கச் சாவடியில் வட்டாட்சியர் பணியினை ஏற்றார். பணியினைத் திறம்பட ஆற்றினார்.

மனைவியும், மகளும்:-

மணப்பருவம் வந்துற்றது. இல்லறப்படுத்தி மகிழ்வுற எண்ணினர். தக்கப் பெண் அணங்கினைத் தேடினர். கந்தசாமிக்குச் சீர்காழியிலிருந்து 'தங்கம்' என்ற பெண்ணைப் பார்த்துப் பேசி நல்வாழ்க்கைத் துணைவி ஆக்கினர். அவரும் அம்மையாரோடு இணங்கி நல்லறப்பாங்கில் ஒழுகினார். அதன் பயனாக பெண் மகவு பிறந்தது. 'ஜானகி' என்று பெயர் இட்டுச் செல்லமாக வளர்த்து வந்தார்.

கந்தசாமியார் பெற்ற கல்வியறிவோடு ஞான அறிவும் நிரம்பப் பெற்றவர். சைவ ஆகம சித்தாந்த நூல்களை எல்லாம் முறையாக கற்றவர். சிவபூசை நாள் தவறாமல் நியமப்படி ஒழுகி செய்து வந்தார். செபதபம் செய்தார். 

பண்ணை வேலையில் ஆர்வர்:- 

வழிவழியாக உழவுத்தொழில் செய்துவரும் குடும்பம் என்பதால் அந்த வேலைகளில் ஆர்வம் குன்றாமல் செயற்பட்டார். உரிய காலத்தில் பயிர் செய்து பயன்பெறுவதிலும் கவனம் செலுத்தினார். வருவாய் ஈட்டுவதிலும் மற்றவர்க்குக் கொடுத்து மகிழ்வதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பண்ணையில் வேலை செய்யும் ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டு தாராளமாக உதவி செய்து வந்தார்.

பலரோடு தொடர்பு:-

கல்வியறிவில் சிறந்த சான்றோர்கள் பலரும் அவரை நாடி வந்து பழகினர். அவரும் பலரைநாடிச் சென்று நட்பு கொண்டிருந்தார். உலகியல் வல்லவரோடும், அருளியல் நல்லவரோடும், அவருக்கு இடையறாத தொடர்பு இருந்து கொண்டிருந்தது. அதனால் ஊராரோடும், அடுத்த அயலாரோடும் அவருக்கு நெருக்கமான அன்பும் தொடர்பும் இருந்தது.

மயக்கமும் தயக்கமும்:- 

இவ்வாறு இருக்கும் நாளில் இவருக்கு பித்தம் அதிகரித்துத் தலை சுற்றலும் மெய்ந்நடுக்கமும் ஏற்பட்டது. தலை ஆட்டமும், உடல் ஆட்டமும் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்த வேண்டி விரும்பி நிரம்பப் பொருட் செலவு செய்தார். நரம்பியற் கோளாறு எனக் குறிப்பிட்டனர். அதைச் சரி செய்ய வல்ல மருத்தவர்களை நாடினார். அவர்கள் சொன்ன மருந்துகளை எல்லாம் உண்டார். உடல் மீது தடவச் சொன்ன மருந்துகள் எல்லாவற்றையும் தடவிப் பார்த்தார். 

ஒருவர் அல்லாமல் பலரையும் நாடிப் பார்த்தார். எவராலும் அந்நோயினை நிறுத்த இயலவில்லை. செய்வதறியாமல் திகைத்தார். எதுவும் செய்ய இயலாதொரு தயக்கமும் அவருக்கு ஏற்பட்டது. எண்ணாததெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினார். ஏன் தனக்கு இந்த நிலை என்று விளங்காமல் மயங்கினார்.

நம்பிக்கை மொழிகள்:- 

ஒரு நாள் இவர் வீட்டிற்கு பெரியவர் ஒருவர் வந்தார். இவர் நிலை கண்டு வினவினார். இவர் தமக்குள்ள நோயின் தன்மையை எடுத்துரைத்தார். என்னென்ன செய்தார்? யார் யாரைப் பார்த்தார் என்னென்ன செய்தனர் என்பதனை விளக்கமாக சொன்னார். 

அது கேட்ட அப்பெரியவர், வடலூரில் இராமலிங்க அடிகள் இருப்பது பற்றியும், அவர் பலருக்கு பல்வேறு பரோபகாரங்கள் செய்து கொண்டிருப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். அவர்பால் சென்றால் இவ்வுடல் நடுக்கமும், தலை ஆட்டமும் மாறும்; நிற்கும்; உடன் குணமாகும் எனவும் மொழிந்தார். அம்மொழிகள் அவருக்குப் பசித்தவனுக்குப் பாற்சோறு வாய்த்தது போல் இருந்தது. உடனே அவர்பால் சென்று நலம்பெற எழுந்தார்.

அடிகளை நோக்கிப் பயணம்:-

தானமும் தர்மமும் தக்கவார்க்குத் தக்கபடி செய்யும் இயற்கைப் பண்புகள் வாய்க்கப் பெற்ற காரணப்பட்டுக் கணக்குப் பிள்ளை வீட்டு மாட்டு வண்டி மேட்டுக்குப்பம் நோக்கிப் பயணப்பட்டது. சோறாக்கும் அரிசி, பருப்பு, புளி, மிளகாய் எல்லாம் வேண்டியவாறு எடுத்துக் கொண்டனர். தருமச்சாலைக்குச் சென்று நின்றது வண்டி. பொருள்களை இறக்கிவிட்டு கருங்குழி வழிபிடித்து மீண்டும் புறப்பட்டது வண்டி.

பெருமான் நோக்கும் பிணியின் போக்கும்:-

அண்டகோடிகளெல்லாம் விரும்பி அருகில் சென்று வணங்கத் தக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராம் வள்ளலைக் கண்டிட்டார். கந்தசாமியார் சிந்தை தெளிந்து கண்ணீர் சிந்திட்டார். கைகள் தலை மீது குவிய கால்கள் தள்ளாட அடியற்ற மரம்போல் வள்ளல் திருவடிகளில் விழுந்து வணங்கினார். அவ்வமயம் காரணப்பட்டாருக்கு வயது 21 ஆகும். வள்ளலாருக்கு வயது 36 ஆகும். அடிகளார் சென்னை வாழ்வை நீத்து, கருங்குழியில் உறையத்துவங்கிய ஓராண்டில் அதாவது 1859-ஆம் ஆண்டில் கருங்குழியில் தமது சற்குருநாதரின் முதல் தரிசனம் கிட்டியது.

காரணப்பட்டார் தாம் பாடிய இயற்கையுண்மை அனந்தக் கண்ணியின் 91-ஆவது கண்ணியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதிலிருந்து இதனை நாம் அறியலாம். கோதல் என்றால் பழுது எனப்பொருள். நோயினால் பழுதடைந்த என்னை 7 X 3 = 21 வயதில் ஆண்டுக்கொண்ட இராமலிங்கரே! என வியக்கின்றார்.


கோதிலெழு மூன்று வயதினி லெனையாட்

கொண்டருள் ராமலிங்கம் (2084)

தமது உடல் குறையினை எடுத்து விளம்பினார். நம்பெருமானாரும் திருநீறு தந்திட்டார். உடம்பெலாம் பூசப்பணித்திட்டார். அவ்வாறே கந்தசாமியார் அத்திருநீற்றை உடம்பெலாம் பூசினார். என்ன வியப்பு! அவருக்கு அல்லல் தந்து வந்த மயக்கம் மாய்ந்தது. உடல் நடுக்கமும் தலை சுற்றலும் ஓடியது 

இத்தகு அருஞ்செயல் புரிந்த பெருங்கருணை நிதியாகிய வள்ளற்பெருமானை வாயார வாழ்த்தி வணங்கி நின்ற கந்தசாமியார், நெஞ்சாரப் புகழ்ந்து விழி நீர் சிந்தினார். அவர் நிலை கண்டு அப்போது நம்பெருமான் 'உமக்குத் தக்க உத்தியோகம் தருவோம்' என்று உரைத்து, உடன் ஊர் திரும்பிச் செல்லவும் என்று உத்தரவு தந்தார்.

வள்ளற்பெருமானின் பாதரட்சை பெறுதல்: 

பெருமானாரின் பெருமைகள் தன்னளவிலும் உலகலவிலும் பரவுவதை உணர்ந்த காரணப்பட்டார், சித்திவளாகத்திற்குச் சென்று வள்ளற்பெருமானிடம், தாம் சந்தன மரத்தால் செய்து எடுத்துச்சென்ற பாதரட்சையை அணியச்செய்து அழகுபார்த்தார். சிலவருடங்கள் அதனை நம் பெருமானார் அணிந்திருந்தார். பிறகு காரணப்பட்டார், அந்தப் பாதரட்சையை அடியேனுக்கு வழங்கவேண்டும் என வள்ளற்பெருமானிடம் பிராத்தனை செய்தார். அடிகளாரும் அவரது மனநிலை அறிந்து அதற்குச் சம்மதித்தார். மேலும், வெளியீடு கண்டிருந்த திருவருட்பா நான்கு திருமுறைகள் படி ஒன்றினைத் தந்தருளினார். அந்தப் பாதக்குறட்டினைக் காரணப்பட்டில் உள்ள தமது வீட்டிற்கு எடுத்துவந்து அதனைத் தினமும் பூசைசெய்து வழிபட்டுவந்தார். ச.மு.. அவர்களின் நிழற்படத்தில் வலது கையில் அருட்பிரகாசர் அளித்த திருவருட்பாவினைத் தனது மார்போடு அனைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அருட்பிரகாசர் அற்புத அந்தாதியில் 58-ஆம் செய்யுளில் வள்ளலாரின் பாதரட்சையினைப் பற்றி இந்நூலாசிரியரின் விளக்கம் கீழ்வருமாறு உள்ளது.

மிதித்திடும் பாதரட் சைக்குட் பொதிந்த விதிமதிக்குட்

கதித்திடும் லிங்கம் புடமின்றித் தீயினிற் கட்டியதேல்

மதித்திடும் பேர்களெங் குள்ளார்நின் றேக மகத்துவத்தைத்

துதித்திடும் பேயேன் பிணிதீர்த் தருள்மிகு தூயவனே. (1613)

வள்ளலார் அணிந்திருக்கும் பாதரட்சைகளை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொருவர் எடுத்துக்கொண்டு போய்ப் போற்றி, அதில் லிங்கத்தை வைத்துக்கட்டி வைப்பார்கள். சில நாள் கழித்து எடுத்துப்பார்த்தால் லிங்கம் கட்டியிருக்கும், எடுத்து நெருப்பிட்டால் உருகிப் புகைந்து போகாது. இதனால், சுத்ததேகம் பெற்றதன் இலக்கணம் புலனாகின்றது.

துறவும் உறவும்:-

கந்தசாமியார் உளம் மகிழ்ந்து ஊர் திரும்பினார். ஆனால், அங்குச் சென்ற அவர் உளம் திரும்பவில்லை. அதிவருட்பா சிந்தை கவர்ந்தது. ஓத ஓத உள்ளம் குழைந்தது. வள்ளற் பெருமான் முன் இருந்து பாடுவதைப் போல் உணர்வு இருந்தது. நாட்டமெல்லாம் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை முன் நின்றது. வள்ளல்பால் சென்றது. இவர் எண்ணமெல்லாம் பெருமானையே வலம் வந்து கொண்டிருந்தது.

எனவே, இவர் துறவு பூண்டு குடும்பத்தை விட்டு நீங்கி மேட்டுக்குப்பத்திற்கு வரத்துணிந்தார். இது பற்றி குடும்பத்தில் தெரிவித்தார். குடும்பத்தார் பெரிதும் கலங்கினர். இவர் செல்வதற்கு முன்னர் குடும்பத்தினர் மேட்டுக்குப்பம் சென்றனர். வள்ளற்பெருமானிடம் கந்தசாமியார் நிலை குறித்து முறையிட்டனர்.

பெருமான் 'உலகம் பிரமிக்கத் துறவு பூண வேணாங்காணும்; அருந்தல், பொருந்தல் முதலிய ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளாகிய இல்லறத்தார் எல்லாம், அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளுக்கு நூற்றுக்கு நூறு பங்கு முழுவதும் உரியவர் ஆவார்கள் இது பொய்யன்று,' என்று கூறியருளிக் குடும்பத்தில் சேர்ந்து வாழவழிகாட்டினார். பெருமான் வாக்கினைத் தலைமேற்கொண்டு சென்றிட்டார் கந்தசாமியார். அவ்வாரே காரணப்பட்டுக்குச் சென்று குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். பெருமான் நினைவாகவே இருந்து வந்தார். இவர் உள்ளமாகிய இரும்பு பெருமானாகிய காந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. சில நாட்கள் சென்ற பின் இவரின் துணைவியார் தங்கம் உயிர் நீத்தார்.

வடலூரில் தங்கல்:-

அவர் மனம் எல்லாம் வல்ல வள்ளற் பெருமானுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பியது. அதனால், வீட்டாரிடம் சொல்லிக் கொண்டு அவர் தம் ஒரே மகள் ஜானகியை உடன் அழைத்துக் கொண்டு வடலூர் வந்து சேர்ந்தார். ஒரு குடில் அமைத்துக் கொண்டு அதில் தங்கினார். சங்கப்பணிகளிலும், சாலைப்பணிகளிலும் அன்பர்களோடு சேர்ந்து ஈடுபட்டார். மேட்டுக்குப்பத்தில் பெருமானைக் கண்டு வணங்கி வழிபட்டு நியமங்களைக் கடைபிடித்தார்.

திருவடிப் புகழ்ச்சி:-

அன்று சித்திவளாகத்தில் வழிபாடு நடந்தது. பெருமான் முன்னிலையில் அன்பர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். கந்தசாமியார் இசையோடு திருவடிப்புகழ்ச்சியைப் பாடினார். வள்ளற் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டு ஒழுகியதால் நெகிழ்ச்சியோடு அப்பாடல் ஒலித்தது. இசையறிவு தனக்கு மிகுதியும் உள்ளது என்னும் கருத்தும் அவருள் பதிந்திருந்தது. அதனை உணர்ந்த வள்ளல் அத்திருவடிப் புகழ்ச்சியைப் பல இசைகளில் பாடிக்காட்டி மகிழ்வித்தார். அது கண்டு திகைத்தார் கந்தசாமியார், இப்படியெல்லாம் பாடமுடியுமா? என்று வியந்தார்.

சன்மார்க்கத்தில் இசைக்கருவிகள்:-

இசைஞானம் மற்றவர்களை விடக்கூடுதலாகவே கந்தசாமியாரிடம் இருந்தது. அருட்பாவைப் பாடப்பாட அது மிகுந்தது. பல இராகங்களில் பல உருப்படிகளில் அது வெளிப்பட்டது. பாட்டுக்கு ஏற்றபடி கருவிகள் கொண்டு பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்பினார். நண்பர்கள் துணை கொண்டு பலகருவிகளை இசைத்துக்கொண்டு பாடவும் முனைந்தார். அதுகண்டு வள்ளற்பெருமான் கந்தசாமியாரைத் தன் முன்னிலைக்கு அழைத்தார். 'மனங்கசிந்துருகவே பாடல் பாடவேண்டும். இசைக்கருவிகள் கொண்டு பாடுவதால் மனம் உருகாது, உணர்ச்சி பெருகாது, சன்மார்க்கத்திற்கு இசைக்கருவிகள் தேவையில்லை. இசைக்கருவிகள் இல்லாமலே மனம் உருகபாடி வழிபடுங்கள்' என்று விளக்கியருளினார். எந்தெந்தப்பாடல்களை எப்படி எப்படிப் பாடவேண்டும் என்றும் சொன்னார்.

இறைவனின் நிறைபுகழையும் நம்குறை இழிவினையும் வகைப்படுத்தித் தெளிவாக பாட வேண்டும் என்பதையும் உணர்த்திட்டார்.

சமரச பஜனை:-

சமய மதங்களுக்கிடையே சமரசம் காண்பதே சன்மார்க்கம். எனவே வழிபாடும் சமரசமாகவே இருக்க வேண்டும் அல்லவா? கந்தசாமியார் சமரச பஜனை பாடவே விரும்பினார். பொது நோக்கம் அப்பொழுதுதான் உண்டாகும். எல்லோரும் விரும்புகின்ற பாடலையே பாடினார். அதற்குச் சமரச பஜனை என்று பெயரிட்டார், அன்பர்கள் பலரையும் அச்சமரச பஜனை வழிபாட்டில் ஈடுபடுமாறு அழைத்தார். உணர்ச்சி பொங்கப்பாடிப் பரவினார். பாடுகையில் அவரும் உருகினார். பிறரையும் உருகச் செய்தார்.

வழிபாட்டுப் பொறுப்பு:-

பெருமான் திருக்காப்பிட்டுக் கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, அன்பர்களையெல்லாம் அழைத்தார். சாலைப் பொறுப்பை கல்பட்டு ஐயா பார்த்துக்கொள்ள வேண்டும். சங்கப்பொறுப்புகளைத் தொழுவூரார் பார்த்துக்கொள்ள வேண்டும், ஞானசபை வழிபாட்டுப் பொறுப்பைக் காரணப்பட்டார் பார்த்துக்கொள்ளவேண்டும், சித்திவளாகம் விளக்குப் பார்க்கும் பொறுப்பை சேலத்து ஞானாம்பாள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டருளினார்.

காரணப்பட்டாருக்கு வழங்கிய பொறுப்பை மிகஒழுங்காக நடத்தி வந்தார். ஞானசபை வழிபாடு இவரது மேற்பார்வையில் நடைபெற்றாலும் சபாபதி குருக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அங்கு விக்கிரக வழிபாடு நுழைந்தது. இதனையே, தம் குருநாதரிடம் சற்குரு வெண்பா அந்தாதியில் புலம்புகிறார்.

சாற்றுங்கூ டாவொழுக்கஞ் சந்நிதியில் வந்துசெய்வோர்

போற்றும் பணியும் பொருந்துமோ வேற்றூனைத்

தின்போருஞ் சிற்சபைக்குட் செல்லுவதோ சற்குருவே

யென்போருக் கென்சொல்லு வேன். (962)

சாலை வழிபட்டை வள்ளற்பெருமான் கட்டளையிட்டவாறு வழிபாட்டை தொடர்ந்தார், சாலையில் செய்யும் வழிபாடு எப்படி செய்வது, வலம் வருங்கால் எங்கெங்கு நின்று என்னென்னப் பாடல்கள் பாடவேண்டும், என்றெல்லாம் வகுத்துக் கொண்டு அன்பர்களோடு சேர்ந்து சமரச பஜனையாக அவ்வழிபாட்டை நடத்தி வந்தார்.

தமிழகப் பயணம்:-

வள்ளற் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்து அருளினார். இவரோ தமிழகம் முழுவதும் சன்மார்க்க சங்கங்களை அன்பர்கள் மூலம் பல ஊர்களிலும் நிறுவினார். கொடியேற்றிவைத்து கொள்கைகளை விளக்கினார். ஒவ்வோர் ஊரிலும் சமரச பஜனை செய்தார். தன் மகள் ஜானகியையும் பஜனைக் குழுவில் இருந்து கொண்டு பாடச் செய்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் சன்மார்க்க சங்கங்கள் தோன்றின. ஜோதி வழிபாடுகள் தோன்றின. அன்னதான அமைப்புகள் தோன்றின. வடலூரோடு அனைவரும் தொடர்பு கொண்டுஇருக்கவும் செய்தனர். சாலைக்குப் பொருள்கள் கொண்டுவந்து தந்தனர். ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்பட்டது.

கண்நோய் நீக்கமும் பிரபந்தங்கள் பாட உத்தரவும்:-

காரணப்பட்டு கந்தசாமிப்பிள்ளை கண்வலியால் துன்பப்பட்டார். வடலூர் செல்லும்படி கனவில் வள்ளல் உத்தரவிட்டார். அங்ஙனமே செல்ல இரஸ்தாளி வாழைப்பழம் கண்ணுக்கு கட்டும்படி ஓர் அன்பர் கூறினார், அங்ஙனமே செய்ய கண்நோய் அகன்றது. திருக்கோயிலூரில் கந்தசாமியார் தங்கியிருந்தபோது கனவில் வள்ளற் பெருமான் தோன்றி அந்தாதி, நாமாவளி, கண்ணி முதலிய பிரபந்தங்கள் பாடும் படியும் உத்தரவாகியது.

நடந்தவண்ணம் உரைத்தல் பதிப்பித்து வெளியீடு

ஆலப்பாக்கம் நாயணாரெட்டியார் எழுதிய நடந்தவண்ணம் உரைத்தல்என்னும் நூலினை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் 1893-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

வரலாற்று நிகழ்வுகளைத் திரட்டுதல்:-

தொழுவூரார், கல்பட்டு ஐயா, முதலிய பெருமான் மாணவர்களிடமும் நெருங்கிப் பழகிய புலவர்கள், சான்றோர்கள், அன்பர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் வள்ளற்பெருமான் பற்றிய நிகழ்வுகளை, செய்திகளைக் குறித்து அறிந்து ஆராய்ந்தார், குறித்துக்கொண்டார்.

சரித்திரக் கீர்த்தனை:-

தமக்குத் தெரிந்த பிறரால் தெரிந்து கொண்ட நிகழ்வுகளையெல்லாம் தொகுத்தார். அதனைக் கீர்த்தனைகளாகப் பாடினார். 'ஸ்ரீமத் திருவருட்பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரக் கீர்த்தனை' என்று பெயரிட்டார். இதில் 285 கண்ணிகள் உள்ளன. இது ஒரு புதிய முயற்சி. இத்தகு இசைப்பாடல்கள் இதுகாறும் தமிழில் எழுதப்பெறவில்லை. இவர்தான் முதன் முதலில் எழுதி ஊர்கள் தோறும் இசையோடு பாடி அன்பர்களுக்குப் பெருமான் வரலாற்றினை வழங்கினார்.

சற்குரு வெண்பா அந்தாதி:-

தொடர்ந்து 1008 வெண்பாக்கள் பாடி வாழ்த்தும் பாடியுள்ளார். இதற்கு முன் நீண்ட அந்தாதி நூல் தமிழில் இதுகாறும் உண்டாகவில்லை. இவர்தான் முதலில் பாடியுள்ளார்.

பிரபந்தத்திரட்டு நூல் வெளியீடு:

மேலும், குருநேச வெண்பா – 221 நேரிசை வெண்பாக்கள், கொலை மறுத்தல் – 65 நேரிசை வெண்பாக்கள், அருட்பிரகாசர் அற்புதவந்தாதி – 104 கட்டளை கலித்துறைகள், வடற்சிற்சபை மாலை – 29 கட்டளைக் கலித்துறைகள், அருட்பிரகாசர் அற்புத மாலை – 32 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள், திருவருட்பிரகாசர் வருகை பல்லவி நன்னிமித்தம் பராவல் 96 கண்ணிகள், அருட்பிரகாச வள்ளலார் விபூதிபிரசாத மகிமை – 43 கலிவிருத்தங்கள், கிளிக்கண்ணிகள் – 65 கண்ணிகள், இயற்கை உண்மை – 224 கண்ணிகள், புலம்பற்கண்ணி – 266 கண்ணிகள் போன்ற 24 நூல்கள் பாடி மகிழ்ந்துள்ளார். 24 நூல்கள் அடங்கிய இப்பிரபந்தத்திரட்டில் மொத்தம் 3507 பாடல்கள் உள்ளன. இந்நூல், சென்னை சமரசஞான சங்கத் தலைவர் ஸ்ரீ சண்முகாநந்த சுவாமிகளால் பார்வையிடப் பெற்று, புதுக்கோட்டையைச் சேர்ந்த இராமச்சந்திரபுரம் ஸ்ரீமான் தீ.நா.முத்தையா செட்டியார் அவர்களால் அச்சிற் பதிக்கப்பெற்று 1923-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார்.

ச.மு.க. அவர்கள் தமது குருவின் பெயரான இராமலிங்கம் என்ற திருப்பெயரினை 878 முறை தாம் இயற்றிய பிரபந்தத் திரட்டில் கையாண்டுள்ளார்கள்.

தமிழ்ப் புலவர்களின் வரலாற்றினைத் தொகுத்து வெளிவந்த தமிழ்ப் புலவர் வரிசை என்ற நூலை (பகுதி-5) இயற்றிய ஆசிரியர் திரு.சு.அ.இராமசாமிப் புலவர் அவர்கள், ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் பற்றிய பதிவுகளைத் தமிழ்ப்புலவர் வரிசையில் 27-ஆவது புலவராகத் தம் நூலில் மூன்று பக்கங்களில் சுருங்கக் கூறியுள்ளார்கள்.

மேலும், Digital Bibliography for Tamil Diaspora – List of Tamil Books in National Bibliography of India Literature என்ற மின்னனு பதிவுத்தளத்தில் 464 –ஆம் எண்ணில் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் இயற்றிய பிரபந்தத்திரட்டு நூல் பதியப்பட்டுள்ளது.

திருவருட்பா பதிப்பித்து வெளியீடு:-

அருட்பாக்களை அழகுறபாடி ஆழங்கால் கண்டவர் அதனால், பதிப்பித்து வெளியிட விரும்பினார். ஆறு திருமுறைகளையும், உரைநடைகளையும், ஒரே நூலாக ஆக்கி அச்சிட்டார். தீ.நா.முத்தையா செட்டியாரின் பேருதவியால் 1924 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  இந்நூல்கள் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார்.

மஹா மந்திரம்:

முதன் முதலில் வள்ளற்பெருமானின் மஹா மந்திரமான “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்கின்ற மஹா வாக்கியங்களை தனது மேற்காணும் திருவருட்பா பதிப்பில்தான் அச்சிட்டு வெளியிட்டார். மேலும் சன்மார்க்கக் கொடியின் விளக்கங்களை முதன் முதலில் வெளியிட்டவரும் ச.மு.க. அவர்கள் தான். 1924-ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த திருவருட்பாவால்தான் சன்மார்க்கிகளுக்கும் உலகியலர்களுக்கும் மஹா மந்திரமும், சன்மார்க்கக் கொடி விளக்கவும் தெரியவந்தது என்பது ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களின் தனிச் சிறப்பு.  

நிறைவு:-

இளம் வயதிலேயே பெருமானாரால் ஆட்கொள்ளப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் திருவருட்பாத் தேனின்பத்தை துய்த்து அதனை பலருக்கும் ஊட்டி உவகையுறச் செய்தவர், ஒருநாள் அங்குள்ளோரைக் கூப்பிட்டு நான் இராமலிங்க சுவாமிகளின் திருவடிகளைச் சேரப்போகிறேன் என்றார். படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று உரத்த குரலில் உள்ளாழ்ந்து சொன்னார். மகாமந்திரம் முழங்க                02-12-1924 ஆம் ஆண்டு வள்ளல் மலரடியில் மலர்ந்தார். இவரது ஆக்கையினை வடலூர் சங்கமும், மற்ற உயர்சன்மார்க்க அன்பர்களும் தங்களது ஊரில் அடக்கம் செய்ய முன்வந்து வேண்டிநின்றனர். ஆனால் திருவருள் அதற்கு சம்மதிக்காததால், காரணப்பட்டுவாழ் மக்களும், உறவினர்களும் அவர் பிறந்த ஊரிலேயே அடக்கம் செய்ய காரியப்பட்டனர். காரணப்பட்டில் இவரது நினைவிடம் இன்றும் அணையாத்தீபத்துடன் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் என்ற பெயரில் ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது.

 



நன்றி: வள்ளலார் இளைஞர் மன்றம் - "சன்மார்க்கக் குரவர் நால்வர்" என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்டு, சற்று மாறுதலுடன் ஏழாம் திருமுறை ”பிரபந்தத்திரட்டு” நூலில் வெளிவந்தது.




1 comment:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.