Tuesday, February 18, 2014

வள்ளலார் கூறிய கதை

வள்ளலார் கூறிய கதை


தெருவின்மண் கட்டிவிண்டாற் றேர்ந்ததயை யுள்ளோ
ருருகுவா ரென்றுரைத்த வுண்மைக் - குருபரனே
வுன்னிடத்தி லில்லையென்பே னுன்னியழு துங்கருணை
யென்னிடத்தி லின்மையினா லே.  


(ச.மு.க.பிரபந்தத்திரட்டு - குருநேச வெண்பா - 52)


அன்பர்களே! வள்ளலாரின் கருணையினை கூறுபவர்கள் யாவரும், அவர் பாடிய 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற பாடலையே எடுத்துக்காட்டுவர். ஆனால் நம்பெருமானார் உயிரற்றப் பொருள் ஒன்று, தன்வடிவத்தை அது இழக்க நேரிட்டதைக் கண்டாலே துடித்துவிடும் மனம் படைத்தவர் என்பதனை, நம்பெருமானாரின் அணுக்கத்தொண்டர் ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய 'பிரபந்தத்திரட்டு' நூலில் பாடியுள்ளார்.

ஜீவகாருண்யத்தின் உண்மை நிலையினை ஒரு கதையின் வாயிலாக நம்பெருமானார் குறிப்பால் தமது அருகிலுள்ள சில மாணாக்கர்களுக்கு விளக்கியருளினார், என்ற வரலாற்றை ச.மு.க.வின் பிரபந்தத்திரட்டு வெளிகாட்டுகிறது.

இரண்டு பெரியவர்கள் ஒருவீதியில் நடந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவரின் கால்பட்டு வீதியில் இருந்த சிறிய மண்கட்டி சிதைந்துவிடுகிறது. அதனைப் பார்த்த மற்றொருவர் மூர்ச்சையாயினர்.

இக்கதையில், உயிரற்ற ஒருசிறிய மண்கட்டி, மனிதனின் காலடிப்பட்டு தன்து உருவத்தை இழக்கிறது. அந்த உருவம் சிதைந்ததையே தாங்கிக்கொள்ளமுடியாத கருணை பண்புடையதுதான், ஜீவகாருண்யத்தின் உண்மைநிலை என நம்பெருமானார் விளக்குகிறார்.

இதனையே நம்பெருமானார் தமது அகவலில், 'எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி' என்பார்.

இதனையே ச.மு.க. அவர்கள் தமது பிரபந்தத்திரட்டில் 'உன்னியழுதுங் கருணை' என பாடுகிறார். இந்த உன்னியழுதுங்கருணை தமக்கு இல்லையே என ச.மு.க. அவர்கள் தன்னை குறைபடுத்திக்கொள்கிறார்கள். அக்குறையாகப்பட்டது தமது குருவினையே குறைசொல்ல வைக்கிறது. உன்னியழுதுங்கருணை வள்ளலாரிடம் இல்லை என தமது குறையினால் ச.மு.க. அவர்கள் பாடுகிறார்.

அப்படிப்பட்ட கருணை, இவ்வுலகில் பிறந்த ஒருவருக்கு இருந்திருக்குமா? என்று நாமும் ஐயப்படுகிறோமல்லவா? அதுபோல ச.மு.க. அவர்கள் தமது குருவையே ஐயப்படுகிறார். ஏன் ஐயம் வந்தது எனில், அந்தக்கருணையானது என்னிடத்தில் இல்லை, அதனால் ஐயம் வந்ததாக ச.மு.க. கூறுகிறார்.

நாம் எப்படியோ அப்படித்தான் இவ்வுலகமும் நமக்குத் தோன்றும் என்பது நியதி. ஆகையால் நமது அறிவினைக்கொண்டு, அன்பினைக்கொண்டு நாம் வள்ளற்பெருமானை எடைபோடுவது கூடாது என்பதனை சொல்லாமல் சொல்லுகிறது ச.மு.க.வின் இப்பாடல்.

உன்னியழுதுங்கருணையே ஜீவகாருண்யத்தின் உண்மைநிலையாய் இருப்பதாக ச.மு.க.வின் பிரபந்தத்திரட்டு எடுத்து இயம்புவது நமக்கெல்லாம் வியப்பாகவும், திகைப்பாகவும் உள்ளது. உன்னியழுதுங்கருணை நமக்கெல்லாம் வாய்க்க நாமும் அருட்பெருஞ்ஜோதியினை வேண்டுவோம்.

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.