Saturday, February 22, 2014

அணுவும் அசையாது!!

                                அணுவும் அசையாது!!

ஆன்மநேயர்களுக்கு வணக்கம்,

நாமெல்லாம் நமது சுயசிந்தனையுடன் விருப்பத்துடன் ஆசையுடன் ஒரு செயலை செய்துவிட்டு, நம்மால் செய்யப்பட்ட அச்செயல் வெற்றியில் முடிந்தாலும் தோல்வியில் முடிந்தாலும், 'எல்லாம் அவன் செயல்' என கூறும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளோம். முக்கியமாக நாம் செய்தச் செயல் தோல்வியில் முடிந்துவிட்டால், உடனே அப்பழியினை இறைவன் மீது சுமத்தும் பழக்கம் நமக்கு உள்ளது. அது சரிதானா? உண்மையில் இறைவன்தான் அச்செயலைச் செய்ய நம்மைத் தூண்டினானா? என்பதனை சற்று சிந்திப்போம்.

ஒரு செயலை ஒருவன் தனது சுயசிந்தனையுடனும், விருப்பத்துடனும், ஆசையுடனும், சிலரது நிர்பந்தத்தாலும் செய்ய முற்பட்டுச் செய்தால், அச்செயல் ஜீவசெயலே அன்றி அவன் (இறை) செயலாகாது என்பதை அறியவேண்டும்.

இறைசெயல் எவரிடம் வெளிப்படும் என்றால், எவனொருவன் தன்னை முழுமையாக இறைவனிடத்தில் ஒப்படைக்கிறானோ அவனிடத்தில்தான் இறைசெயல் வெளிப்படும். இறைவன் அவனை கருவியாக உபயோகப்படுத்துவார்.

ஆனால், நாமெல்லாம் இறைவனின் செயலைச் செய்யக்கூடிய கருவிகாளாக இருக்கிறோமா? என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பவரிடம் அபேத இயல்பு மேலோங்கியிருக்கும். அவனிடம் பேதம் பார்க்கும் இயல்பு இருக்காது.

இப்படித்தான், இரண்டு புலவர்களுக்குள் இப்பொருள்பற்றி விவாதம் வந்தது. ஒரு வித்வான், 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்று வாதிட்டார்.

மற்றொருவித்வான், அதை மறுத்து எதிர்வாதமாக,

'இந்தச் சீவனால் வருமரு பகையெலா மிவன்செய லென்னாமல்
அந்தத் தேவனால் வருமென்ற மூடர்க ளதோகெதி யடைவார்கள்
இந்தச் சீவனால் வருமறு பகையெலா மிவன் செயலல்லாமல்
அந்தத்தேவனா லன்றெனும் விவேகிகளமலவீ டடைவாரே'
(கைவல்யம்-சந் 59-ம் பாட்டு)

என்னும் கைவல்யத்தில் வரும் பாடலை எடுத்து ஓதினார். அதற்கு விளக்கமும் அளித்தார் அப்புலவர்,

ஒரு அரச மரத்திலே இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒரு பறவை மேல் கிளையிலும், ஒரு பறவை கீழ்கிளையிலும் உள்ளன. கீழ்கிளையில் உள்ள பறவை கிளைக்கு கிளை தாவி அங்கு இருக்கின்ற பழங்களையெல்லாம் விரும்பி உண்ணும். மேல்கிளையில் உள்ள பறவை சாந்தமாக சும்மா அமர்ந்திருந்து கீழ்கிளையிலுள்ள பறவையினை வெறுமனே வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும்.

வேண்டும் வேண்டும் என்று அலைந்துக்கொண்டிருக்கிற கீழ்கிளையில் இருக்கும் பறவைதான் நமது ஜீவன். ஆடாமல் அசையாமல் மேல்கிளையில் இருக்கும் பறவைதான் பரமாத்மா. ஜீவன் அஞ்ஞானத்தால் சுக துக்கங்களை அனுபவிக்கிறான், பரமாத்மா தமது ஞானத்தால் சுகதுக்கங்களை அனுபவிக்காது, அதற்குக் காரணமாயும் இராது. இது முண்டகஉபநிடத்தில் வரும் ஒரு அருமையான உதாரணம்.

யாரொருவர் ஜீவனுடைய செயல்களை கண்டு பிடித்து அதை சரிசெய்ய எண்ணுகிறார்களோ, அவர்களுக்கு தனது அகங்காரம், கோபம், ஆசைகளை ஒழித்து இறையடி சேர வாய்ப்பு இருக்கின்றது.

யாரொருவர் செய்வதை எல்லாம் செய்துவிட்டு, அவையெல்லாம் இறைசெயல் என்று சொல்லிக்கொண்டு பழியையும் புகழையும் அவன்மேல் போட்டுக்கொண்டு உள்ளார்களோ, அவர்கள் தங்களைச் சிறிதுக்கூட மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

காம குரோதம் முதலான தீய குணங்களை தன்னுடைய செயல்கள் அல்ல என நினைபவர்கள் மேலும் மேலும் அவற்றை செய்து பெரும்பாவம்  தேடிக்கொள்கிறார்கள். அவை தன்னுடையன என்று அறிபவன் அவற்றால் ஏற்படும் தீய பலன்களுக்கு அஞ்சி அக்குணங்களை ஒழிக்க முயன்று ஞானத்தை பெறுவார்கள், என்பதே இப்பாடலின் பொருளாகும், என அப்புலவர் எதிர்வாதம் வைத்தார்.

'அவனன்றி ஒரு அணுவும் அசையாது' எனக்கூறிய புலவருக்கு, தாம் எந்தக்கதையைக் கூறி விளக்குவது எனத்தெரியவில்லை, ஆனால் அவரது கருத்து நூறு சதவிகதம் உண்மை என அவருக்குப் புரிகிறது. இவை இரண்டு கருத்துகளில் எது சரியானது என அறிய அருகிலுள்ள வள்ளலாரிடம் இருவரும் சென்று முறையிட்டனர்.

அதற்கு நம்பெருமானார், 'உங்களுக்கு சாஸ்திரப்பிரமாணம் மூலம் விளக்கினால் சந்தேகம் தீராது, அதனால் ஒரு கதையின் மூலம் இதனை தீர்க்கிறேன் எனக்கூறி கதையினை ஆரம்பித்தார்,

தெருவோரமாக ஒரு நிர்வான சந்நியாசி நடந்து செல்கின்றான், அப்போது அவனைப்பார்த்த ஒருவன் அச்சந்நியாசியிடம் மரியாதைக்கொண்டு அவனுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்து அவனது பசிக்கு உதவினான்.
அச்சாமியாரைப்பார்த்த இன்னொருவன், பெண்கள் நடமாடும் இத்தெருவில் நிர்வாணமாய்ப் போகின்றானே என்று கோபித்து அவனைக் கல்லால் அடித்தான்.

இந்த இருநிகழ்ச்சியினையும் பார்த்த மூன்றாமவன், அந்த நிர்வாணசாமியாரையும் பழம் கொடுத்தவனையும், கல்லால் அடித்தவனையும் அழைத்துக்கொண்டு நீதிபதியிடம் சென்றான்.

நீதிபதியிடம் சென்று, அந்த நிர்வானச் சாமியாருக்கு இப்புண்ணியவான் பழம் கொடுத்தான், இப்பாவி அவரைக் கல்லால் அடித்தான், என்றான் மூன்றாமவன்.

நீதிபதி நிர்வானச் சாமியாரை நோக்கி, உம்மை யார் அடித்தது? என்று கேட்க, 'வாழைப்பழம் கொடுத்தவன் அடித்தான்' என்று கூறினான்.

அதற்கு நீதிபதி யார் வாழைப்பழம் கொடுத்தது? என்று கேட்க, 'கல்லால் அடித்தவன் வாழைப்பழம் கொடுத்தான்', என்று நிர்வானச் சாமியார் கூறினார்.

அதற்கு நீதிபதி யார் கல்லால் அடித்தது? என்று கேட்க, 'எங்களை உங்களிடம் இட்டுக்கொண்டுவந்தவன் கல்லால் அடித்தான்' என்று கூறினார்.

இதனை கேட்ட நீதிபதி தீர்ப்பு கூறமுடியாமல் மயங்கியப்பின் ஒரு முடிவுக்கு வந்தார், 'இவர் மேலானஞானத்தை உடைய ஞானி' என ஒருவாறு உணர்ந்து, அடித்தவனுக்கு சிறைதண்டனை அளித்தார்.

இக்கதையிலிருந்து நமக்குத் தெரியவரும் கருத்து என்னவெனில், யாரொருவர் தமக்கு துன்பம் விளைவத்தவனையும், இன்பம் விளைவத்தவனையும் வேறுபாடின்றி / அபேதமின்றி காணமுடிகிறதோ அவருக்கே, 'அவனின்றி ஓரணுவும் அசையாது' என்ற மேலான உண்மை பொருந்தும்.

அதுவன்றி தனக்கு நன்மை செய்தவன் இவன், தீமை செய்தவன் இவன் என்று பேதம் பார்க்கும் குணம் உள்ளவர்களுக்கு 'இந்த சீவனால் வரும்...' என்ற பாடலின் பொருள் பொருந்தும், என ஒரு அருமையான தீர்ப்பினை ஒரு கதையின்மூலம், தன்னைநாடி வந்த இரண்டு வித்வான்களுக்கும் சொல்லி முடித்தார் நம்பெருமானார்.

நம்பெருமானாரின் இந்த அரிய தீர்ப்பு வழங்கும் நிகழ்ச்சியினை முதன்முதலில் இவ்வுலகிற்கு வெளியிட்ட நூல், காரணப்பட்டு ச.மு.க.வின் 'பிரபந்தத்திரட்டு' ஆகும். வள்ளலாரின் அணுக்கத்தொண்டரான காரணப்பட்டார் இல்லை எனில் இந்த அரிய நிகழ்ச்சிகளெலாம் நமக்கு கிடைத்திருக்காது.

'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் செந்தில் நடித்த வாழைப்பழ கதையினை இங்கு நினைத்துப்பார்க்கத் தோன்றுகிறது. தான் வாங்கிய இரண்டு பழத்தில் ஒருபழத்தை உண்டுவிட்டு, ஒரு பழத்தை எடுத்துவந்து கவுண்டமணியிடம் கொடுக்க, எங்கே இன்னொரு பழம்? என்று கவுண்டமணி கேட்க, இன்னொரு பழந்தாங்க இது, என்று ஒருபழத்தைக்காட்டி, இரண்டு பழமும் இதுதான் என்று அபேதமின்றி கூறுவார் செந்தில். ஆகையால் அவரை ஞானி என்று கூறிவிடமுடியாது. சில நேரங்களில் அபேதக் கருத்துகளை மக்களை ஏமாற்றும் போலிசாமியார்கள், அரசியல்வாதிகள் கூறுவார்கள், அதனைக்கண்டு நாம் ஏமாந்துவிடக்கூடாது. தனது ஆத்மாவையே உணராதவன், மற்றவர்களையெல்லாம் ஆத்மாக்களே! என்று அழைப்பதும், என் உயிருனும் மேலான, இரத்தத்தின் இரதங்கள் போன்ற அபேதக் கருத்துகள் இப்படிப்பட்ட ஏமாற்றும் வித்தைகள் என அறியவேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி




(பிரபந்தத்திரட்டு - இராமலிங்க சுவாமிகள் சரித்திரக்குறிப்புகள் - பக்கம் 360, 361)
ஒருநாள் கூடலூர் (கடலூர்) அப்பாசாமிச்செட்டியார் வீட்டுத்திண்ணையில் வித்வான்கள் பலர்கூடியிருந்தனர். ஒருவித்வான் 'அவனன்றி யோரணுவும் அசையாது' என்றனர். மற்றொரு வித்வான் கைவல்யத்தில் வந்துள்ள 'இந்தச்சீவனால் வரும்...' என்னும் பாட்டை எடுத்தோதினர். ஒருமணிநேரம் வாதம் நிகழ்ந்தும் தீர்மானம் ஏற்படவில்லை. வீட்டினுள்ளிருந்த பிள்ளைப்பெருமானைக்கேட்க உட்சென்றனர். வள்ளலார் வித்வான்களை நோக்கி 'ஏன்காணும் வாதம் வந்துவிட்டதோ?' என்று கூறி, உட்காரவைத்துப் பின்வருமாறு விளக்கினார்.

'சாஸ்திரப்பிரமாணம் சொன்னால் உங்களுக்குச் சந்தேகம் நிவர்த்தியாகாது. ஒரு கதை சொல்லுகிறேன் கேளும். தெருவில் நிர்வாண சந்நியாசி ஒருவர்போக, ஒருவன் அவர்க்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்தான். இன்னொருவன் ஸ்தீகள் இருக்கும் தெருவில் நிர்வாணமாய்ப் போகிறானென்று கோபித்துக் கல்லால் அடித்தான். மற்றொருவன் இவ்விருவரையும் சாமியாரையும் அழைத்துக்கொண்டு நியாயாதிபதியிடம் சென்றான். சென்று நீதிபதியிடம் இருவரையும் காட்டி 'இந்தப் புண்யவான் பழம் கொடுத்தான். இந்தப்பாவி கல்லால் அடித்தான்' என்றான். நீதிபதி சாமியாரை 'உம்மை யார் அடித்தது' என்று கேட்க, சாமியார் 'வாழைப்பழம் கொடுத்தவன் அடித்தான்' என்று கூறினார். நீதிபதி 'யார் வாழைப்பழம் கொடுத்தது' என்று வினவ, சாமியார் 'கல்லாலடித்தவன் வாழைப்பழங்கொடுத்தான்' என்று விடையளித்தனர். நீதிபதி 'கல்லாலடித்தவன் யார்' என்று கேட்க, சந்நியாசி 'இட்டுக் கொண்டு வந்தவன் கல்லால் அடித்தான்' என்று விடை தந்தனர், வாக்குமூலம் எழுதத் தெரியாது மயங்கி நீதிபதி 'இவர் மேற்படியுள்ளவர்' என ஒருவாறுணர்ந்து அடித்தவனைச் சிரை செய்தார். ஆகையால் இத்தகையார் யாரோ அவர்களுக்கு 'அவனனின்றி ஓரணுவும் அசையாது' என்பது பொருந்தும். அதுவன்றி, பழம் கொடுத்தவன் இவன், கல்லாலடித்தவன் இவன் என்று பேதங் கொண்டவர் யாரோ அவர்க்கு 'இந்த சீவனால் வரும்...' என்னும் பாட்டு பொருந்தும்.' அப்பால் வித்வான்கள் உண்மை தெளிந்து சமாதானமாயினர்.

அன்பனப்பாசாமி கிடங்குவீட்டுத்திண்ணை
 அமர்ந்திருந்த சங்கத்தோர்
"அவனன்றியிந்தச்சீவ" னெனுமிருகட்சி
 அடைந்துநுஞ் சமுகத்தோர்
    அல்லினிற்சொல்லிக் கொள்ளவதற்கோர்கதை
    ஆகநும்பருவத் துக்கருள்வோமதை
    அறிந்தடங்கிச்சம்மதங் கொள்வீரென்னும்
    ஆன்றமொழிப்படி யிருந்திடமன்னும்
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா - ஸ்ரீராமலிங்கையா
கருணைசெய்ய வெமக்கிங்காரையா   
 (பிரபந்தத்திரட்டு-இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - 102)
 

தெருவிற்செல்லுநிர் வாணசந்நியாசியைச்
 சீலனொருவ னேர்கண்டு
சீப்புவாழைப்பழங் கொடுக்கவாங்கித்
 தின்றுபோகப் பிரியங்கொண்டு
    கீரறியாத்துட்டன் கல்லினாலடிக்கச்
    சிரத்திற்பட வேறொருவன்துடிக்கத்
    தீயனைமற்றோனைச் சாமியையுஞ்சேர்த்துச்
    சென்றுநீதிதலத் தரசனைப்பார்த்துக்
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா - ஸ்ரீராமலிங்கையா
கருணைசெய்ய வெமக்கிங்காரையா
 (பிரபந்தத்திரட்டு-இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - 103)
இந்தச்சந்நியாசி வீதியினிற்போய்க்கொண்
 டிருக்கவிவன் வாழைக்கனியை
ஈந்தனனிப்பாவி தலையிற்கல்லாலடித்
 திரத்தம்வரு வித்ததுனியை
    என்கண்ணாற்கண்டு சகிக்காமலேயுன்ற
    னெழிற்சமுகம்வந்து விண்ணப்பித்தேனென்ற
    இக்கொடுமொழியைக் கேட்டுமுன்தோன்று
    மெருவைக்கண்டுள்ளம் பதைத்தஞ்ஞான்று
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா - ஸ்ரீராமலிங்கையா
கருணைசெய்ய வெமக்கிங்காரையா
 (பிரபந்தத்திரட்டு-இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - 104)
கனம்பெறுமந்நிர் வாணியைநோக்கிக்
 கல்லாலடித் தாராரென்ன
கனிகொடுத்தவ ரென்றிடக்கேட்டுக்
 கனிதந்தா ரெவரென்ன
    கண்டழைத்து வந்தவனெனப்புகன்ற
    கணக்கறிந்தவர் பேதமகன்ற
    காட்சியரென்றந்தத் தீயனைச்சித்துக்
    கருத்தடங்கிட வெம்மையிரசித்துக்
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா - ஸ்ரீராமலிங்கையா
கருணைசெய்ய வெமக்கிங்காரையா
 (பிரபந்தத்திரட்டு-இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - 105)
ஆதலினா "லவனன்றி" யெனுந்தாயு
 மானவராப்த மொழியை
அநுபவித்தவச் சந்நியாசிமூவரும்
 அவனேயென்ற ரவ்வழியை
    அறியாப்பேதவாதி கட்குமும்மனித
    ராகமுத்தொழிற்குத் தோன்றிடும்புனித
    அருத்த "மிந்தச்சீவ" னென்றகவிக்கென்னும்
    அருங்கதையருளச் சம்மதிக்கமன்னும்
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா - ஸ்ரீராமலிங்கையா
கருணைசெய்ய வெமக்கிங்காரையா
 (பிரபந்தத்திரட்டு-இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - 106)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.