Saturday, March 25, 2017

உள்ளம் நிறைதல்


அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி


உள்ளம் நிறைதல்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
----தி.ம.இராமலிங்கம்----

சன்மார்க்க உலகம் நடக்குது
        சங்கட மெல்லாம் ஓடிஒளியுது
நன்மக்கள் கூட்டம் பெருகுது
        நலிந்த மூடமதம் ஒழியுது
என்மகளிர் கூட்டம் வருகுது
        எங்கும் சமத்துவம் பெருகுது
அன்றைய பெண்ணடிமைத் தனம்
        இன்றில்லை என முழங்குதே.

சிற்சபை நடுவை நினைத்து
        சிலுக்கும் உடலை அணைத்து
கற்பூர விளக்கின் சுடரில்
        குளிர் காய்ந்து இருக்க
கற்கண்டு தேனும் அமுதும்
        குண்டலி பாலும் அருந்தஎன்
பொற்சபை முழுதும் மினுக்க
        பொன்னுடம்பு நான் பெற்றேனே.

கருதும் மதம் ஒழிந்து
        கதவு திறந்து பார்க்க
உருவம் அருவம் என்று
        உள்ளது ஏது மில்லை
ஒருமை இருமை என்று
        உணரும் பொருளு மில்லை
அருமை அவன் நிலையை
        அருளும் சொல்லு மில்லையே.

கடவுள் நிலையறியவே எனக்கு
        களிக்கும் வகை அறிவித்து
கடத்தும் வழியறியவே எனக்கு
        கூடும் இன்பம் அளித்து
இடர்வினை அழியவே எனக்கு  
        இறவா நிலையும் கொடுத்து
விடமெலாம் எடுத்தே எனக்கு
        .வாழ்வென வந்த வள்ளலே.

இதுவென்றும் அதுவென்றும் கூறிய
        அத்தனையும் ஆழ்ந்து பார்க்கில்
மதுகுடித்து உளறினாற் போல்
        மயக்கத்தில் உரைத்த தன்றோ
பொதுவி லிருக்கும் புண்ணியனை
        புகழ்ந்து தள்ளிய புலவரெலாம்
எதுவென யாரும் அறியாமலே
        ஏற்றிப் பாடினார் உலகிலே.

உள்ளம் என்னும் சாதனம்
        உருகி உயிரில் கரைய
வெள்ளம் என உயிரும்
        விரைந்து இறையைச் சூழ
கள்ளம் எல்லாம் கடந்து
        கருணைக் கடல் பொங்க
வள்ளல் எனை அணைய
        வானென எங்கு மானேனே.

மழைநீர் தொட்ட பயிராய்
        மனம் குளிர்ந்து நின்றேன்
பிழை பொறுத்த மன்னரிடம்
        பற்று வைத்தவன் போலானேன்
பழையன நினைத்து மகிழும்
        புதுப் பணக்காரனின் அயரா
உழைப்பின் உயர்வென என்றுமென்
        உள்ளத்தில் உயர்ந்த ஒளியே.     
       
என்னையும் பொருளெனக் கொண்டு
        என்னுள்ளே உயிராய் அமர்ந்த
சன்மார்க்க பதியே செங்கமலச்
        சுடரே சுடரில் விளங்குமறிவே
அன்பரென எனை ஆக்குமோர்
        அருள் மருந்தேஎன நினைக்க
என்கண்களில் பெருகும் அமுதே
        எல்லாம் செய்யவல்ல தேவே.

பொறிகளின் உணர்வை எல்லாம்
        பறித்து மனமெனும் குரங்கு
அறிவினையும் தடுத்து பேரின்ப
        ஆன்ம இன்பத்தைக் கொடுத்து
குறித்த திருச்சபைதனில் எனை
        குடியிருத்தி கொண்டாடி யென்
மறிகடல் இறப்பொழித்த சன்மார்க்க
        மணியே சித்தி வளாகமே.

தூக்கமும் விழிப்பும் நீக்கியே
        தினம் இறந்து பிறக்கின்ற
ஊக்கத்தைக் கெடுத்த மருந்தே
        உறவெனும் சுத்த சன்மார்க்க
தாக்கத்தை கொடுத்த விருந்தே
        தயவிலா இச்சிறி யேனுக்கும்
நோக்கத்தை சொல்லிய அமுதே
        நீடுவாழ்வளித்த வெண் நிலவே.

2 comments:

  1. https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvrcTBIofmd4VPjmKZSVFgIr-

    https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvrfubYn4ntnjuj2sXERUoMTT

    ReplyDelete
    Replies
    1. வீடியோ இணைப்புகளுக்கு நன்றி

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.