Saturday, March 4, 2017

ஜால வித்தை

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

ஜால வித்தை


மறந்திடாது ஆதிவாரம் தன்னை ஓர்
        மைந்தனே கல்லெலியின் வளைதான் ஒக்கே
வளைநோக்கி ஆதிநாளிரவு தன்னில்
        மைந்தனே அவ்விடத்தில் சென்றே நீதான்
வளைதேடி தீபத்தை ஏற்றி வைத்து மறைந்து
        வாயிலே கவ்விக் கொண்டோடும் போது
வளைமூடி அடைத்திருந்த கற்கள் எல்லாம்
        மைந்தனே மேலோடிப் போமே.

போமென்ற கல்லெலிதான் வெளியில் வந்து
        புகழ் பெரிய வேரதனைக் கக்கி வைக்கும்
ஆமென்ற இரை தேடி மேயப் போகும்
        அச்சமயம் தீபத்தை வெளியில் விட்டு
தாமென்ற வகைஎடுத்து சாம்பிராணியின்
        தனித் தூபம் காட்டி வேரதனைக் கொண்டு
காமென்ற தாள் பூட்டும் கதவின் முன்னே
        காட்டினால் தான் திறக்கும் புதுமைதானே.

வீட்டு எலி, வயல் எலி, வெள்ளெலி, பெருச்சாளி, சுண்டெலி, கல்லெலி என எலிகளில் பல வகை உண்டு. போகர் பெருமான் எழுதிய மேற்கண்ட பாடலில் கல்லெலியினை குறிப்பிட்டுள்ளார். இவை பெரும்பாலும் வயல் வரப்புகளில் வளை அமைத்து இருக்கும். இவை தங்கள் வளைகளில் வாசலை சிறு கற்களைக் கொண்டு மூடி இருக்கும். அதனால் இந்த எலிகளை கல்லெலி என்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை இரவில், கல்லெலியின் வளையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் அருகில் ஒரு தீபத்தை ஏற்றி மறைத்து வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். வளைக்குள் இருந்து இரை தேடி வெளியே கிளம்பும் கல்லெலியானது தன் வாயில் ஒரு மூலிகை வேரினை கவ்விக்கொண்டு கிளம்பும். வளையின் வாயிலை எலி நெருங்கியதும் அடைத்துவைக்கப்பட்டிருந்த கற்கள் எல்லாம் உருண்டோடி வளையின் வாசல் திறந்து கொள்ளும்.

        வெளியில் வந்த கல்லெலி தன் வாயில் இருக்கும் மூலிகை வேரைக் கக்கிவிட்டு இரைதேடிப் போய்விடும். இந்த சமயத்தில் தீப ஒளியின் துணைகொண்டு அந்த வேரைக் கண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வேருக்கு சாம்பிராணித் தூபம் போட்டு பூட்டியிருக்கும் கதவின் முன்னே காட்டிட பூட்டியக் கதவு தானாக திறந்து கொள்ளும்.


ஆச்சரியமான ஜாலம்தானே! இதனைப் பயன்படுத்தி தவறான வழியில் சென்றிட்டால் நான் பொறுப்பல்ல. காவல் துறை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. நாங்கள் அங்கே செல்லும் போதும் ஒரு மூலிகை வேரினை எடுத்துச்சென்று விடுவோம்… என்றால் இனி உங்கள் விருப்பம்…

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.