Saturday, March 4, 2017

ஊதாரி மைந்தன்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

ஊதாரி மைந்தன்

        அன்றைய சமூகத்தில் பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட வரி வசூல் செய்பவர்களும் கொடிய வியாதிகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் இயேசு அடைக்களம் கொடுத்து அவர்களோடு சாப்பிட்டபோது, தங்களை நல்லவர்களாக நினைத்துக்கொண்ட யூத கோயில் மதகுருக்களும் பரியேசரும், “பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகின்றார்” என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு சொன்ன உவமைக் கதை. (லூக்கா 15:11-32)

ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில்: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்தான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன், உம்முடைய வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். மகனானவன் தகப்பனிடத்தில்: தந்தையே , இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் காலணிகளையும் போடுங்கள். உயர் ரக தானியங்கள் மற்றும் காய்கறிகளைக்கொண்டு சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, இன்பமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் இறந்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் இன்பமாயிருக்க தொடங்கினார்கள்.

 

அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் விருந்து செய்கிறார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பதிலாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் நண்பரோடே நான் இன்மாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு சிறிய விருந்தும் கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக சமைத்து விருந்து கொண்டாடுகிரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடைய தாகயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ இறத்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார்.


கருத்து: ஆயிரம் நல்லவர்கள் நல்வழியில் வாழ்வதை பார்க்கிலும் மனந்திருந்துகின்ற ஒரே கெட்ட மனிதனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார். எவ்வளவு பாவம் செய்து நாம் தவறிப்போனாலும் நாம் பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்பும் போது அவர் நம்மை மன்னித்து ஏற்கின்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.