Tuesday, March 7, 2017

சன்மார்க்க போலிகள்


சன்மார்க்க போலிகள்
                     (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கமலம் மலரும் என்று
        காரிருளில் தவம் செய்ய
சமயம் வந்துதித்த போது
        சாக்காடு நோக்கிப் போவீரே
நமக்கென்று தனித்த வழி
        நாடாது உலகரைப் போல
சமயச் சிக்கலில் சுழன்று
        சன்மார்க்கம் பேசும் மூடரே.

சாதனம் எல்லாம் விடுத்து
        சாதித்த பெரியார் யாரே
நாதமும் கடந்து நாயக
        நடனம் கண்டவர் யாரே
பூதமும் ஒளியாக்கி உலகில்
        பெருவாழ்வு வாழ்பவர் யாரே
ஆதவன் அழியினும் தம்ஆக்கை
        அழியா அருட்பிரகாச வள்ளலாரே.

மதச் சின்னங்கள் அணிந்துபிற
        மனிதரைப் போல் நாளொரு
விதமாய் கடவுள் கதைப்பேசி
        வீண் சடங்குகளும் செய்து
இதமாய் அகவலும் ஓதினோம்
        என்று பகட்டாய்ப் பேசி
சதகோடி முறை சன்மார்க்க
        சங்கம் செல்வான் வீணனே.


பிறர் பொருளை அபகரித்து
        பழிக்கும் செயலும் செய்து
உறவாகப் பேசி நல்லோரின்
        உதிரம் உறிஞ்சிப் பெற்ற
இறவாதப் பாவப் பொருளால்
        அன்ன தானமென சன்மார்க்க
அறம்பேசி நாளும் வழங்கும்
        அசிங்கம் நடக்குது நாட்டிலே.

அம்மன் துணை எனநடுவிருக்க
        அருட்பெருஞ் ஜோதி மந்திரமும்
சம்மதிக்க அடிச்சாச்சு பத்திரிக்கை
        சன்மார்க்க திருமணம் என
சும்மா அகவலோதி தாலிகட்டும்
        சடங்குச் சகதியில் நடந்தாச்சு
அம்மா பசிக்குது என்போரிருக்க
        ஆடம்பர விருந்தும் அளித்தீரே.
  
வாரந்தோறும் சங்கத்திலே அகவல்
        வாய்க்கிழியப் படித்து அன்பின்
ஈரநெஞ்ச மாயுருகி சொற்பொழுவு
        மாற்றி வறுமை யுடையோர்க்கு
ஓரமாய் அன்னதான மளித்துக்கூடி
        அகமகிழ்ந்த சங்கத் தலைவர்
வீரமாய் தம்பெயரனுக்கு காதுகுத்தும்
        விழா அழைப்பிதழை கொடுத்தாரே.
  
ஆடுமாடு உண்போரும் வருகின்றார்
        ஆசையாய் மாதப்பூசம் காணவே
ஓடுஓடு என்றுகூவி விரட்டவும்
        ஊமைக்கு வாய்மொழி இல்லையே
ஈடுகட்டி வருகின்றார் அந்தோ
        ஈரம் ஒன்றும் இல்லையே
காடுசென்று சேர்ந்தாரை எரித்துக்
        கொலை செயல் செய்கின்றாரே.

திருவருட்பா பாடியே பலர்
        திவசமும் செய்கின்றார் அந்தோ
ஒருதெய்வம் என்பார் வீட்டில்
        உள்ள தெய்வம் நூறன்றோ
இருமணம் செய்வார் கணவன்
        இறந்ததும் தாலியும் அறுப்பார்
குருவென வள்ளலாரைக் கொண்டு
        குற்ற மெல்லாம் செய்வாரே.

சித்தனைக் கண்டு வரவே
        சித்தி வளாகம் செல்வார்
மொத்தையாய் நீறு அணிந்து
        மெய்ம்மையை மறந்து திரிவார்
மொத்தமாய் மூடசமய வழக்கம்
        மிக்கவே இருக்குது இங்கே
சத்தான மார்க்கம் கண்டசுத்த
        சன்மார்க்கனின் இடம் பாரீரே.
  
சன்மார்க்கம் நலம் பெறவே
        சான்ற வடலூர் வெளியையோர்
துன்மார்க்க நலத் துறையினர்
        தன் மார்க்கமாய் ஆளுகின்றார்
வன்மார்க்க மெல்லாம் ஒழிக்க
        வந்தாரை நீறிட்டு வரைந்து
நன்மார்க்கம் என்றே துணிந்து
        நாட்டுகின்றீர் பித் துலகீரே!

                                  --தி.ம.இராமலிங்கம்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.