Saturday, March 4, 2017

மீத்தேன் தேடும் தேனீக்கள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:


மீத்தேன் தேடும் தேனீக்கள்

சென்ற மாதம் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்து முடிந்து தமிழகம் வேறு போராட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. மாடு பிடிக்கும் போட்டியுடன் ஆட்சி பிடிக்கும் போட்டியும் நடைபெற்று அதில் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் பதவியை பிடித்தார். அ.தி.மு.க.வின் நியமன பொதுச்செயலாளர் திருமதி.சசிக்கலா அவர்களை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உறுதிபடுத்தப்பட்டதால், அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு எடப்பாடி K.பழனிச்சாமியின் அரசு வெற்றிபெற்றது.
                       
                                                             
தமிழகத்தில் ஒரு அரசு ஏற்படவே பல்வேறு போராட்டங்களை அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டிய நிலமையில், ஒரு பக்கம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக மக்கள் போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. (நல்லவேலை நியூட்ரினோ திட்டத்தை மக்கள் மறந்துவிட்டனர்) அந்தப் போராட்டத்தை மிஞ்சும் அளவிற்கு நெடுவாசல் போராட்டம் தீபற்றிக்கொண்டது. தீபற்ற காரணம் எரிவாயு திட்டமாகும். மீத்தேன் என்பது எரிவாயு ஆகும். மாட்டு சாணத்தில் இருந்து கிடைக்கும் எரிவாயுகூட மீத்தேன்தான். இப்படிப்பட்ட மீத்தேன் வாயுவானது இந்திய நிலப்பரப்பில் ஆங்காங்கே பூமியின் அடியில் பாறைப் பரப்பில் காணப்படுகின்றது. இந்த மீத்தேன் வாயுவை எடுத்து மின்சாரம் தயாரிக்கவும் எரிபொருளுக்காகவும் இந்தியா பயன்படுத்தத் தொடங்கினால், நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் எரிவாயு மற்றும் நிலக்கரிச் செலவினை குறைக்கலாம் என்பது மத்திய அரசின் நோக்கமாக இருக்கின்றது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் உட்பட இன்னும் சில மாநிலங்களில் இந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்துகின்றது.

        அதற்காக ஹரியானா மாநிலத்தில் உள்ள கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.,)  என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்கும் உரிமையினை மத்திய அரசு அளித்துள்ளது.
       
        தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள 50 லட்சம் விவசாயிகளை துரத்திவிட்டு, பாகூரிலிருந்து ராஜமன்னார்குடி வரை உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கக்கூடிய திட்டம் இது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் எல்லாம் பாலைவனமாக போய்விடும் என்பதைவிட காணாமல் போய்விடும். எப்படி என்றால் இவர்களது நூறாண்டுத் திட்டத்தில் 35 ஆண்டுகளில் அந்நிலப்பரப்பிற்கு கீழ் உள்ள மீத்தேன் வாயுவினை உறிஞ்சி எடுத்துவிடுவர். அதற்கு முன்னதாக நிலத்தடி நீர் முழுதும் வெளியேற்றிவிடுவர். அடுத்த 65 ஆண்டுகளில் அவர்கள் செய்ய இருப்பதுதான் உண்மையான மறைக்கப்பட்ட திட்டம். அதுதான் அந்நிலத்தில் உள்ள நிலக்கரியினை வெட்டி எடுப்பது. உண்மையில் இது நிலக்கரி எடுக்கும் திட்டம்தான்.

        தற்போதுள்ள நெய்வேலி நகரை நினைத்துப்பாருங்கள். அவையெல்லாம் அற்புதமான விவசாய நிலங்கள் ஆகும். பணப்பயிர்கள் விளையக்கூடிய நிலங்கள். உலகிலேயே கிடைப்பதற்கு அரிதான செம்மண் பூமிகள். அந்நிலங்கள் எல்லாம் தற்போது நிலக்கரி எடுக்கின்றோம் என்று பள்ளம் தோண்டி பெரும் பள்ளத்தாக்குகளாக உள்ளன. மேலும் மேலும் நெய்வேலியினைச் சுற்றியுள்ள ஊர்கள் எல்லாம் தற்போது காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றது. இன்று நாம் விழிப்புணர்வு பெற்று போராட்டம் செய்வது போல அன்றைய மக்கள் செய்திருந்தால் நெய்வேலி பசுமை நிறைந்த காடாக இன்று இருந்திருக்கும். பல்வேறுபட்ட உயிரினங்கள் மனிதர்களுடன் கூடி உலாவிக்கொண்டிருக்கும். பல்வேறுபட்ட மரங்கள் பசுமையுடன் கிளைத்து செழித்திருக்கும். மனிதர்களுத் தேவையான மழையும், ஆக்சிஜனும் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கும். அந்த மண்ணின் மைந்தர் வள்ளற்பிரான் அன்றைக்கே அம்மக்களுக்கு, “இந்த இடம் ஒரு காலத்தில் பொன்னாலும் வைரத்தாலும் ஜொலிக்கும், எனவே இவ்விடத்தை யாருக்கும் விற்றுவிட்டு வெளியேறிவிடாதீர்கள்” என்று வாய்மொழி உத்தரவிட்டார். வள்ளலார் சொன்னதை யாரும் கேட்கவில்லை. வள்ளலார் அங்கே ஞானசபையினை நிறுவியதால் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இல்லையெனில் இன்றைய வடலூர் என்றோ பாதாள பூமியாகியிருக்கும்.

        சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்களால் காற்று அசுத்தமடைந்து, அதனால் தினமும் நிமிடத்திற்கு 5 நபர்கள் இறந்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்தப்படுகின்றன.

        இவ்வளவு ஆபத்தினை நாம் இப்பூமியை குடைந்து வரவழைக்கத்தான் வேண்டுமா? இயற்கையான விவசாய நிலங்களை காப்பாற்ற போராடுவோம். இந்தியா ஒரு விவசாய நாடு என்பதை நிரூபிப்போம். 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயிறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் மற்றும் விவசாயம் சார்ந்த இதர தொழில்களையும் கணக்கிட்டால் 35 ஆண்டுகளில் 35 லட்சம் கோடி மதிப்புக்கு விவசாய வியாபாரம் நடைபெறும் என கணக்கிட்டுள்ளனர். ஆனால் 35 ஆண்டுகளில் மீத்தேன் எடுப்பதால் அந்நிறுவனத்துக்கு வெறும் 6.25 லட்சம் கோடிதான் வருவாய் கிட்டும். எனவே பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் மீத்தேன் எடுப்பது இலாபநோக்கற்ற திட்டமாகவே உள்ளது.

        அந்தந்த பகுதி விவசாயிகள் எல்லாம் ஒருங்கிணைந்து விவசாயத்தை கூட்டுறவு விவசாயமாக செய்ய வேண்டும். நிலத்தின் பத்திரஙகள் மட்டும் தனித்தனியாக இருப்பதில் தவறில்லை. இப்படித் தனித்தனி உரிமை நிலங்களை ஒன்றிணைத்து 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கு ஒரு கூட்டுறவு விவசாய சங்கம் தோற்றுவித்து அந்நிலங்களில் எல்லாம் பழைய வரப்புகளை நீக்கப்பட்டு, வசதிக்கு ஏற்ப வரப்புகளை புதியதாக தோற்றுவித்து விவசாய சங்கம் மூலம் அங்கு விவசாயம் மேற்கொண்டால், உற்பத்தி செலவுகள் குறையும். வேலை வாய்ப்புகளும், வேலை செய்வோருக்கு மாதாந்திர ஊதியமும், நிரந்தர விவசாயிக்கு ஓய்வூதியமும், காப்பீடுகளும் கிடைக்க இந்த விவசாய கூட்டுறவு சங்கத்தால் முடியும். மேலும் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையினை சங்கமே முடிவு செய்யும் சூழலும் பிறக்கும். இவ்வாறு சிறு சிறு நிலங்கள் எல்லாம் கூட்டுறவு என்ற நோக்கில் பெரும் நிலங்களாக ஆக்கிவிட்டால், தனியார் ரியல் எஸ்டேட் முதற்கொண்டு மத்திய மாநில அரசுகளும் அங்கே மூக்கை நுழைக்க முடியாது என்பது எமது கருத்து.  


        எப்படிப்பார்த்தாலும் இந்த தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எங்கும் இன்னொரு நெய்வேலியினை உருவாக்க நாம் அனுமதி அளித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போம். வாழ்க விவசாயம்… வாழ்க விவசாயி… வாழ்க உலகம்… வாழ்க உயிர                                                                          ---தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.