Wednesday, June 14, 2017

பாற்கடலில் பள்ளி கொண்டது


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில்” மே – மாதம் 2017” – ல் வெளியானவை.

பாற்கடலில் பள்ளி கொண்டது

“ஆகாரம் உண்டவுடனே ஜீரணமாய்ப் பால் வண்ணமாக ஆகாரப்பையில் வெண்மை  நிறமாக இருப்பது ‘திருப்பாற்கடல்’ என்றும், அதனடியில் உண்டாகும் பசி தீவிர சத்தியாகிய உஷ்ணம் ‘வடவாமுகாக்கினி’ என்றும், இரண்டிற்கும் மத்தியில் உண்டாகிய சீதளம் ‘விஷ்ணு பள்ளி கொண்டது’ என்றும் சொல்லுவது. திருப்பாற்கடலில் விஷ்ணு பள்ளி கொண்டது இது தான்”.

-      திருவருட்பிரகாச வள்ளலார்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் தமிழகத்திலேயே மிகப்பெரிய கடற்கரையாம் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் அதற்கு அடுத்து மிகப்பெரிய கடற்கரையாம்  கடலூரில் உள்ள வெள்ளி கடற்கரை போன்ற சில கடற்கரைகள் மட்டுமே. மேலே குறிப்பிட்டுள்ள “திருப்பற்கடல்” இவ்வுலகில் எங்கே உள்ளது என நானும் அறியாமல் தேடிய காலமும் உண்டு. ஒருவேளை நமது உலகில் உள்ள கடலின் நடுவேதான் விஷ்ணு படுத்துக்கொண்டிருப்பாரோ என்றெல்லாம் கற்பனையில் எனது மனம் ஈடுபட்டதுண்டு. இதற்கான தேடுதல் திருவருட்பா உரைநடை நூலில்தான் முடிவடைந்தது.


திருப்பாற்கடல் என்பதெல்லாம் ஒரு தத்துவம் என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. தத்துவங்களெல்லாம் புறத்தில் தேடினால் கிடைக்காதன்றோ? அகத்தில்தானே தேடவேண்டும். இந்த திருப்பாற்கடல் அகத்திலே இருப்பதை திருவருட்பாவால் அறிந்துக்கொண்டேன். ஆனாலும் அனுபவமாக அறியாமலிருக்கின்றேன். அந்த அனுபவ ஞானம் கிடைக்கும்போது கிடைக்கட்டும். எப்படியும் இவ்விளக்கம் முடியும் தருவாயில் நமக்கெல்லாம் இவ்வனுபவம் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அந்த தத்துவம் என்ன சொல்கின்றது என்பதை பார்ப்போம்.

நமது உடலில் உள்ளே உள்ள ஒரு உறுப்புதான் இரைப்பை. நாம் ஆகாரம் உண்ட உடனே அந்த உணவு முழுவதும் முதலில் இந்த இரைப்பையில்தான் வந்து தங்குகின்றது. நாம் உண்ணும் உணவு சுமார் மூன்று மணிநேரங்கள் இரைப்பையில் இருக்கும். மேலும் இரைப்பை என்பது எப்போதும் நிற்காமல் இதயம் போன்று சுருங்கியும் விரிந்துக்கொண்டும் இருக்கும். அதனால் நாம் உண்ட உணவு இரைப்பையின் இயக்கத்தால் மத்து கடைவது போன்று கடைந்து கூழாகின்றது. இந்த உணவுக்கூழானது பால் நிறம் போன்று வெண்மையாக இருக்கும். இங்கு ஒரு சந்தேகம் எழுகின்றது. அதாவது நாம் பெரும்பாலும் உண்ணுவது அன்னமாகிய அரிசி சாதமே. சாதம் வெண்மையாக இருந்தாலும் அதனுடன் சாம்பார், ரசம் போன்றவைகளை கலந்து உண்ணும்போதே சாதத்தின் வெண்மை நிறம் மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிடுகின்றதே. பிறகு எப்படி இரைப்பையில் அவ்வுணவு வெண்மையாக இருக்கும் என்பதே.

உணவுகள் எந்த நிறத்தில் நாம் எடுத்துக்கொண்டாலும், நமது இரைப்பையில் அவ்வுணவை செரிக்க வைக்க சில அமிலங்கள் சுரந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த அமிலங்கள் நாம் உண்ட உணவில் சேர்ந்து கூழாக்கப்படும்போது வெண்மைநிறமாக மாறிவிடுகின்றன. அப்படி மாறிய வெண்மையான உணவுக்கூழானது பால்போன்ற வண்ணத்தில் இருப்பதால் அதனை “பால்” என்றே பெயர் வைத்தாயிற்று. நமது உடலை வளர்க்கின்ற அவ்வுணவுக்கூழுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் “திரு” என்கின்ற அடைமொழியையும் கொடுத்தாயிற்று. பிறகு அந்த இரைப்பையானது சதாகாலம் சுருங்கியும் விரிந்தும் இயங்கிக்கொண்டிருப்பதால், அதற்குள் இருக்கும் அந்த வெண்மையான உணவுக்கூழானது முன்னும் பின்னும் அசைந்தாடுவது கடல் அலை போன்று இருப்பதால் அக்கூழினை “கடல்” என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.  இப்போது “திருப்பாற்கடல்” என்பது என்ன என்று நமக்கு நன்கு விளங்குகின்றது அல்லவா.

அடுத்ததாக நாம் பார்க்கப்போவது “வடவாமுகாக்கினி”:

வடவாமுகாக்கினி என்பது நெருப்பைக் குறிக்கும். இந்து மதத்தில் வடவாமுகாக்கினி என்பது எல்லோராலும் நம்பப்படுகின்ற “ஊழித் தீ” ஆகும். இந்த ஊழித் தீயானது ஒரு பெண் குதிரை உருவத்தில் கடலுக்கு அடியில் இருப்பதாகவும், இவ்வுலக முடிவின்போது அந்த குதிரை வடிவ தீயானது கடலிலிருந்து வெளியில் வந்து இவ்வுலகத்தை தீயால் எரித்துவிடும் என நம்பப்படுகின்றது.

இதுபற்றிய பல புராணக் கதைகள் உண்டு. வடலை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில்  இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை பிதுர்கள் கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது என்பது அபிதான சிந்தாமணி  தரும் தகவல்.

சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை  அடக்க காலில் விட்டனன் என்பது  விரத சூடாமணி தரும் தகவல்.

கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி அதனை உறிஞ்சி வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையில் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். பகபாமுகாக்னி என்பது பெண் குதிரைத்  தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ  உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர். இது  பதிற்றுப்பத்து கூறும் தகவல்.


பல வட இந்தியர்கள் தங்களது பெயருக்கு பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் சயன முகக்
காற்றுப் புலரும்படி முதல் வீசும் கறைக்க்களத்தன்
நீற்றுச் சிவந்து எழும் கார் ஆழித் தீச்சுடும்; நீள் கழலின்
ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே.

என்று  திருவரங்கத்து மாலை  பாடுகின்றது. இதில் வருகின்ற “ஆழித் தீச்சுடும்” என்பது இந்த வடவாமுகாக்கினியை குறிக்கும்.

ஊழித்தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடவாமுகாக்கினி என்னும் வடவைத்  தீயைத்தான்.

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்
உடலில் ஒளிந்த சிவம் ஒளி  செய்வது  எக்காலம்.

என பத்திரகிரியாரும் இந்த ஊழித் தீயை உவமையாகக் கொள்கின்றார். இப்படி எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு உளறியதெல்லாம் உண்மையில் என்ன? என்பதை திருவருட்பா எடுத்துரைப்பதை இனிக்காண்போம்.

திருப்பாற்கடலான நாம் உண்ட உணவானது இரைப்பையில் மூன்று மணி நேரம் தங்கியிருக்கும் என்பதை நாம் முன்பே கண்டோம். மூன்று மணி நேரங்களுக்குள் அந்த திருப்பாற்கடலான உணவுக்கூழானது சிறிது சிறிதாக இரைப்பையில் அடியில் உள்ள சிறு குழாய் மூலம் வெளித்தள்ளிக்கொண்டே இருக்கும். இப்படி முழுதும் வெளித்தள்ளியவுடன் அங்கு சுரந்துக்கொண்டிருக்கும் அமிலங்களால் “பசி” என்கின்ற உணர்வானது இரைப்பையின் அடியிலிருந்து மிக வேகமாக எழும். இவ்வாறு எழுகின்ற பசி என்கின்ற உணர்வானது வந்தவுடன், நாம் வயிறு எரிகின்றது என்போம். ஆம்… அந்த பசி என்கின்ற உணர்வானது நம்மை சுடுகின்ற வலியினையே கொடுக்கும். அதிக வெப்பமுடையது பசி. எனவே அந்த பசியினை தீ என்கின்றோம். அந்தத் தீயானது திருப்பாற்கடலான உணவுக்கூழ் இரைப்பையில் இருக்கும் வரை தம்மை வெளிக்காட்டாது அடியில் மறைந்துக்கொண்டிருக்கும். அதாவது திருப்பாற்கடலுக்கு அடியில் மறைந்துக்கொண்டிருக்கும். நமது உடம்பில் அந்தப் “பசி” மறைந்திருக்கும் இரைப்பையின் அடிப்பகுதியானது வடக்கு திசையில் உள்ளது. அவ்வாறு வடக்கு திசையில் அமுங்கி இருக்கின்ற அக்னிக்கு பெயரே “வடவாமுகாக்கினி” என்று பெயர் வந்தது.

இப்போது நாம் பார்க்கவிருப்பது “விஷ்ணு”: புறத்திலே படம் வரைந்து வைத்துக்கொண்டும், சிலை வடித்து வைத்துக்கொண்டும், கதை எழுதி படித்துக்கொண்டும், இவற்றை வணங்கிக்கொண்டும் இருக்கும் இந்த ‘விஷ்ணு” என்பதும் ஒரு தத்துவமே ஆகும். நமது உடம்பில் எங்கெல்லாம் சீதள வஸ்துக்கள் இருக்கின்றனவோ அவை எல்லாம் “விஷ்ணு” என்கின்ற தத்துவமாகும். சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.

தீவிர பசியிருக்கும்போது நாம் உணவு உட்கொள்ளும்போது நாம் இந்த குளிர்ச்சியினை நன்கு அனுபவிக்க முடியும். எவ்வாறு பசி என்கின்ற வெப்பத்தை அனுபவித்தோமோ அவ்வாறே பசி தீரும்போது குளிர்ச்சி என்கின்ற ஆனந்தத்தை அனுபவிக்கலாம். பசி தீரும்போது…. அப்பாடா…. இப்போதான் உயிரே வந்தது! என்போமல்லவா… அதுதான் நாம் அனுபவித்த குளிர்ச்சியாகும். இந்த குளிர்ச்சியானது எங்கிருந்து வந்தது என்றால், நமது இரைப்பையில் பசி என்கின்ற வெப்பம் உருவான அடிப்பகுதிக்கும் திருப்பாற்கடலான உணவுக்கூழுக்கும் இடையில் இருந்து வந்தது. அதாவது உணவுக்கூழானது இரைப்பையின் அடிப்பகுதியை சென்றடைந்தவுடன் வெப்பமான பசி அனைந்துவிடுவதே குளிர்ச்சி என்கின்ற உணர்வாகும்.


இப்படிப்பட்ட குளிர்ந்த சீதளத்தையே நாம் “விஷ்ணு” என்று கூறுகின்றோம். இதுதான் விஷ்ணுவின் தத்துவமாகும். இரைப்பையில் விஷ்ணு தத்துவமானது நமக்கு ஆனந்தத்தை கொடுப்பதால் அதனை இறைவன் என கற்பனையாக உருவகப்படுத்தி புறத்திலே வணங்கிக்கொண்டுள்ளோம். இப்போதுதான் நாம் திருப்பாற்கடலிலே பள்ளி கொண்ட விஷ்ணுவை உண்மையிலே உணர்கிறோம் அல்லவா. இந்த குளிர்ச்சியான உணர்வை நாம், நம்முடன் வாழுகின்ற பிற எல்லா உயிர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையில் விஷ்ணு வழிபாடு. அதுதான் ஜீவகாருண்யம். இதனை விடுத்து அவ்வுணர்வை சிலையாக்கி அதனையே விஷ்ணு என்று புறத்தே கோவில் கட்டி வழிபடுவது அறியாமையிலும் அறியாமை.  

-      தி.ம.இராமலிங்கம்.
-      கடலூர்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.