Wednesday, June 14, 2017

“சத்விசாரம்”

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘மே-2017’ அன்று “சத்விசாரம்” என்ற தலைப்பில் வெளியானது…

அவதாரங்கள் எல்லாம் தத்துவம் சம்பந்தமுடையது  என்றால்...?

கிருஷ்ணன், ராமன் உட்பட பத்து அவதாரங்கள் மற்றும் நாம் எவற்றை எல்லாம் அவதார பிறப்புகள் என்கிறோமோ அவையெல்லாம் மெய்ப்பொருளை விளக்க வந்த கதாபாத்திரங்கள். கதாபாத்திரங்களே உண்மை அல்ல. அந்தந்த கதாபாத்திரங்களைத்தான் நாம் தத்துவம் என்கிறோம். இந்தியாவில் அல்லது உலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் தத்துவ ஞானிகளே. ஒரு சிலரே மெய்ஞ்ஞானிகள் ஆவர். மெய்ஞ்ஞானத்தை விளக்க முற்படும்போது தத்துவங்கள் பிறக்கின்றன. அந்த தத்துவங்களை விளக்க கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றன. அக்கதா பாத்திரங்களின் முக்கியமானவர் அவதாரங்களாக அல்லது கடவுளாகவே பார்க்கப்படுகின்றன.

தத்துவ ஞானிகள் எல்லாம் மெய்ஞ்ஞானத்தை இன்னது என கற்பனை செய்து ஏதேனும் ஒரு மொழி கொண்டு அதனை விளக்கி இதுதான் மெய்ஞ்ஞானத்தின் தத்துவம் என நிறுத்துவர். பிரமம் ஒன்றுதான்ஆனால் அதன் தத்துவம் / விளக்கம் பலவாகி அவைகளெ பல்வேறு மதங்களாக இன்று உலகில் நிறைந்து காணப்படுகின்றன. மொழி தெரிந்தவர்கள் எல்லாம் தமது சிந்தனைகள் மூலம் தத்துவங்களை உருவாக்கிவிட முடியும். எனவே தத்துவங்களுக்கு புறம் என்கின்ற மொழி தேவைப்படுகின்றது.  மெய்ஞ்ஞானத்திற்கு அகம் மட்டுமே பிரதானம். மெய்ஞ்ஞானம் பேசாது,   எழுதாது.   எல்லாம் தமக்குள்ளே கண்டு ஆனந்தத்தை அனுபவிக்கும். மெய்ஞ்ஞானம் மெளனத்தை மட்டுமே வெளிப்படுத்தும்.

வள்ளற்பெருமான் தத்துவஞானியா? அல்லது மெய்ஞ்ஞானியா?

வள்ளற்பெருமான் தத்துவ ஞானியாகவும், மெய்ஞ்ஞானியாகவும் இருப்பதோடு  அவர் சுத்தமெய் ஞானியாகவும் திகழ்கின்றார். இம்மூன்று  நிலைகளையும் இவரில் நாம் காணலாம். இவ்வுலகில்  இம்மூன்று நிலைகளிலும் திகழ்கின்ற ஒரே ஞானி இவர் ஒருவரே.

தாம் கண்ட அனுபவத்தை புறத்தே தருமச்சாலையாகவும், ஞானசபையாகவும், சன்மார்க்க சங்கமாகவும், ஆன்ம கொடியாகவும், வெள்ளாடை மேனியாகவும், திருவருட்பாகவும், உரைநடையாகவும், பேருபதேசமாகவும் வெளிப்படுத்தியவர். இவ்வாறு தமது அனுபவத்தை மக்களுக்கு புறத்தே தெரிவித்ததால் இவர் ஒரு  தத்துவஞானியாக திகழ்கின்றார். தமது மனம் மற்றும் ஜீவ செயல்பாட்டால் தத்துவஞானியானார்.

இதுவரை யார் ஒருவரும் அறிந்திடாத, தெரிவித்திடாத ஒருமைப் பொருளாம் இறைவனை தம்முள்ளே கண்டு பேரானந்தம் கொண்டு அவ்விறைவனுக்கு அருட்பெருஞ்ஜோதிஎன்றும் பெயர் சூட்டியதால் இவர் மெய்ஞ்ஞானியுமாவார். தமது  ஆன்ம செயல்பாட்டால் மெய்ஞ்ஞானியானார்.

இதுவரை யார் ஒருவரும் கண்டிராத முத்தேக சித்தியை கண்டுணர்ந்து, அத்தேக சித்திகள்    மூன்றினையும்  அடைந்து தமது இறைவனின்  செயல்பாட்டால் சுத்தமெய் ஞானியானார்.

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
          தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
          சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
          ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே.                                                                4623

சுத்தமெய் ஞானியான வள்ளற்பெருமான் ஏன் தத்துவஞானி அளவிற்கு தாழ்ந்து வரவேண்டும்?

வள்ளற்பெருமானுக்கு நம்மீதும் உலக உயிர்கள் மீதும்  உள்ள கருணையே காரணம். 

“...ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
          யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.” – 5594

தாம் மட்டும் சுத்தமெய்ஞ்ஞானியாகி  மெளனத்தில் ஆழ்ந்துவிட அவர் விரும்பவில்லை. தன்னைப் போல பிறரும் ஆகவேண்டுமென எண்ணியதால் தத்துவஞானியாகவும் தன்னிலை இறங்கினார். தன்னிலையை  தாழ்த்திக்கொண்டதாலே அவருக்கு  வள்ளலார்என்கின்ற சிறப்பும் கிடைத்தது. இச்சிறப்பு அவர் மாணவரால் கிடைத்ததாக இருந்தாலும், அதன் சூட்சுமம் இறையருளால் நடத்தப்பட்டது.

வள்ளற்பெருமான் உருவாக்கிய தத்துவங்களால் என்ன நன்மை  கிடைக்கும்?

இவ்வுலகில் பலரால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு தத்துவங்களும் அதனதன் பயனை கொடுத்தே தீரும். நாம் எந்த    தத்துவத்தை கடைபிடித்து  ஒழுகுகிறோமோ, அத்தத்துவத்தை அருளிய அம்மகானின்  நிலையினை நாமும் அடையலாம்.
         
பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம்.என்று திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 375 உரைப்பதை கவனிக்கவும்.

எனவே வள்ளற்பெருமான் அருளிய சுத்த சன்மார்க்க தத்துவத்தின்படி நாம் அனுஷ்டித்தால் நாமும் முத்தேக சித்தியை அடையலாம்.

சுத்த சன்மார்க்க தத்துவத்தை கடைபிடித்து ஒழுகுவார் யாரேனும் வள்ளற்பெருமானுக்கு அடுத்து முத்தேக சித்தியை அடைந்தனரா?
    
இல்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர். காலமுள்ளபோதே அடைவார்களா? என்பதை உறுதியாக கூறிவிடமுடியாது. காரணம் நாமெல்லாம் வள்ளற்பெருமானின் தத்துவத்தை அக்கு வேறு  ஆணி வேறாக பிரித்து புறத்தே ஆய்ந்துக்கொண்டிருக்கிறோம். தத்துவங்களை புறத்தே ஆய்பவர்கள் எல்லோருமே குருடர்கள்தான். அகத்தே ஆய்பவர்கள் மிகக்குறைவு. அப்படி அகத்தே ஆய்பவர்களும் ஏதோ காரணத்திற்காக இறையருள் கிடைக்காமல் நிற்கின்றார்கள். என்ன காரணம் என்பதை அவரவர்களின் அக ஆய்வினாலே கண்டுபிடித்து தீவிரவாதியாக வேண்டும். அவ்வாறு உருவாகும்  தீவிரவாதியே முத்தேக சித்தியை  அடைய முடியும். புறத்தே ஆய்பவர்களில் எல்லோருமே பெரும்பாலும் தீவிரவாதிகளாக இருக்கின்றார்கள்.    அதனால்     யாருக்கும் பயனேதுமில்லை.

புறத்தே ஆய்பவர்களில் தீவிரவாதிகளா?

ஆம். புறத்தே ஆய்பவர்கள் எல்லோரும் குருடர்கள் என்பதை முன்பே தெரிவித்தேன். அவ்வகையில் நானும் ஒரு குருடன்தான். ஏனெனில் நானும் சுத்த சன்மார்க்க தத்துவத்தை பேசியும், எழுதியும் ஆய்வு செய்பவன்தான். என்னைப்போல்தான் பலரும் இருக்கின்றார்கள்.

ஒரு ஊரில் இரண்டு குருடர்கள் இருந்தார்கள். வள்ளலார் ஒளியைப்பற்றி பேசுவதையும், அதனைக்கொண்டு மக்கள் எல்லோரும் ஒளியைப் பற்றி பேசுவதையும் அறிந்து, அந்த ஒளியைப் பற்றி அறிந்துக்கொள்ள  இரண்டு குருடர்களும் ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களால்தான் ஒளியை பார்க்கவே முடியாதே.  எனவே ஒளியின் தன்மைகள் பற்றி அவர்கள் தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். ஒளியைப் பற்றி ஆயிரங்கணக்கான கவிதை வரிகளை மனப்பாடம் செய்தார்கள். ஒளியைப் பற்றி மேடைகளில் பல மணிநேரம் நுண்மான் நுழைபுலத்துடன் அதாவது அட்டகாசமாக உரையாற்ற அவர்களால் முடிந்தது. அந்த நாட்டிலேயே அவர்களை விஞ்சிய ஒளியறிஞர்கள் எவரும் இல்லை. எனவே, பல்கலைக்கழகம் அவர்களுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்தது. ஆனால் நடைமுறையில் இந்தக் குருடர்களால் பட்டப்பகலில் தங்கள் முன்னால் நிற்கும் எருமை மாட்டைக்கூட பார்க்கமுடியாது.

ஒளியைப் பற்றிப் படிப்பறிவைச் சேகரித்ததுடன் அவர்கள் இருவரும் சிந்தித்துப் புதிய புதிய உண்மைகளைக் கண்டறியவும் முற்பட்டார்கள். அதற்காக அருளொளி பேரவைஎன்ற ஒன்றையும் தொடங்கினார்கள். வெளியீடுகள்  குவிந்தன.    ஒளி    பற்றிய      அற்புதமான காவியங்களும்  வியாக்கியானங்களும் வெளிவந்தன. இப்படியே பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தபோது அன்று ஒரு  நாள், அந்த குருடர்கள் இருவருக்குமிடையே ஒளி பற்றிய கருத்து  வேறுபாடு வந்தது. ஒளி என்பது நிறமற்றதுஎன்றான் ஒருவன். இல்லை இல்லை ஒளி என்பது ஒருவித இளஞ்சிவப்பு நிறமுடையதுஎன்றான் மற்றொருவன். ஒளி என்பது சுவையற்றது என்றான் இவன். என்ன முட்டாள் தனமான கருத்து, ஒளி என்பது புளிப்பு இனிப்பும் கலந்த ஒருவகை சுவையுடையதுஎன்றான் மற்றொருவன். அவ்வளவுதான் அருளொளி பேரவைஉடைந்தது.

இந்த இருவரில் யார் சரி என்பதை அறிய அந்நாட்டில் மிகச் சிறந்த ஞானி என்று போற்றப்பட்ட ஒருவரிடம் இருவரின் கட்சிகளும் சென்றன. அவர்களின் வாதங்களுக்கான ஆதாரங்கள் நூறு கழுதைகள் மீது பொதி பொதியாகக் கொண்டுவரப்பட்டன. அந்த ஞானி அவை அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்திவிடும்படிக் கட்டளையிட்டார். இந்த இருவரின் கூற்றுகளுமே அபத்தமானவை, தவறானவை. ஏனெனில் இவர்கள் இருவருக்குமே கண்பார்வை இல்லை. குருடர்கள் ஒளியைப் பற்றிச் சிந்தித்துக் கூறுவதில் அடிப்படையிலேயே அர்த்தம் இல்லை. இவர்கள் உளறி வைத்திருப்பதை எல்லாம் படித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. இவர்கள் கூறும் இதே கருத்துக்களைக் கண்பார்வை உள்ளவன் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கின்றது எனலாம். கண் பார்வை உள்ள ஒருவன் ஒளி என்பது காஃபி க் கொட்டையின் மணமும் கருணைக்கிழங்கின் சுவையும் உடையதுஎன்று சொல்லி அதற்கு ஐம்பது வால்யூம்களில் விளக்க உரை எழுதினாலும்கூட அதைப் படித்துப்பார்ப்பதில் அர்த்தம் உண்டு. ஏனெனில்    அது   ஒளியை   பார்த்தவனின் கருத்து. எனவே அவன் ஏன் அப்படிச் சொல்கின்றான் என்பதை நாம் ஆராய இடம் உண்டு. ஆனால் குருட்டுப் பயல் ஒருவன் “ஒளி என்பது பிரகாசமானது என்று  சொல்வான் ஆகில் அது பொய்தான்என்று அந்த ஞானி தீர்ப்பு வழங்கினார்.

          இக்கதையில் வருகின்ற குருடர்கள் போன்றே நாமெல்லாம் சுத்த சன்மார்க்க தத்துவத்தை பேசிக்கொண்டிருக்கின்றோம். அதில் தீவிரவாதிகளாகவும் உள்ளோம். பல இயக்கங்கள், சங்கங்கள், பேரவைகள் உருவாக்கிக்கொண்டுள்ளோம். நாம் சொல்லும் கருத்தை வேறொருவர் மறுத்தால் அதற்கும் புறத்திலிருந்து எண்ணற்ற ஆதாரங்கள் எடுத்து வீசுகின்றோம். எதிர் கருத்தை  கூறுபவரை வெறுத்து  ஒதுக்கிறோம். இப்படியாகத்தான் நம்மில் பலர் சுத்த சன்மார்க்க தத்துவங்களை எடுத்துச்செல்கிறோம்.  இதனால் யாருக்கும் பயனில்லை.
         
          சுத்த சன்மார்க்க தத்துவத்தை அகத்திலே சென்று ஆய்ந்தால்தான் அதன் முழுப் பயனையும் நாம் பெறமுடியும்.   

                                                            --தி.ம.இராமலிங்கம். – கடலூர்














No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.