Thursday, April 16, 2020

உலக மக்களுக்கு கொரோனா கூறும் செய்தி என்ன?


உலக மக்களுக்கு கொரோனா கூறும் செய்தி என்ன?
--தி.ம.இராமலிங்கம்.  

அன்புடையீர் வணக்கம்!
இத்தலைமுறை மக்கள் "சுனாமி" என்கின்ற ஆழிப்பேரலையை முதன் முதலாகக் கண்டார்கள். அதற்கு அடுத்ததாக ”உயிரி” தாக்குதல் என்பதை மிகப்பிரமாண்டமாக நாம் முதன் முதலாக பார்க்கின்றோம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் ஒன்றை உடனே பிரேக் போட்டு நிறுத்தினால் என்னவாகும்? வாகனம் விபத்துக்கு உள்ளாகி கவிழும். அதில் உள்ள மக்கள் உயிரிழப்பார்கள். பின்னால் தொடர்ந்து வருகின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நிலை குலையும். சாலை, சக்கரத்தின் உராய்வால் பழுதாகும்.
இப்படி ஒரு நிலையைத்தான் உலகம் தற்போது சந்திக்கின்றது. பொருளாதாரம் என்னும் வாகனம் உடனே நிறுத்தப்பட்டதால் உலகெங்கும் சொல்லொன்னா பாதிப்பு. வேறு வழியில்லை. உலகெங்கும் மயான அமைதி. மனிதன் தன்னுயிரை பாதுகாக்க வீடுகளில் முடங்கினான். மற்ற உயிரினங்கள் எல்லாம் சுதந்தரமாக திரிகின்றன. ஆனால், மனிதன் மட்டும் வீடுகளில் தஞ்சம் அடைந்தான். கண்ணுக்குத்தெரியாத ஓர் அணு உயிரி “கொரோனா” என்னும் பெயரில் மனிதனை மட்டும் கொலை செய்கின்றது.
எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை கண்ட மனிதன் தற்போது தமது கையறு நிலையால் வெட்கப்படுகின்றான். கண்ணுக்குத்தெரியாத ஒரு உயிரியிடம் தோற்றுவிட்டான். தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் தங்களது கடவுள்களை மக்கள் உருவாக்கிக் கொண்டார்கள். மனிதன் தங்களது கடவுள் பெயரால் உயிர்க் கொலைகளை செய்கின்றார்கள். மற்ற உயிர்களை ஈவு, இரக்கமின்றி கொலை செய்து உண்கின்றார்கள். கடவுள் பெயரால் கோயில்களிலும், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரிலும் மற்ற உயிர்களை சிறையில் அடைக்கின்றார்கள், தனிமைப் படுத்துகின்றார்கள். ஆனால், தங்களது உயிருக்கு ஆபத்து என்றதும், தங்களது கடவுள்களை துணைக்கு அழைக்கின்றார்கள், மணி அடிக்கின்றார்கள், கை தட்டுகின்றார்கள், விளக்கேற்றுகின்றார்கள், பிரார்த்தனை செய்கின்றார்கள், ஜெபம் செய்கின்றார்கள், தொழுகின்றார்கள். அப்பப்பா… புலம்பித் தள்ளுகின்றார்கள். மனிதனால் ஒரு உயிர் தனிமைப்படுத்தப்படும் போது, அதன் வலி மனிதனுக்கு உணரவில்லை. இப்போது மனிதன் தனிமைப்படும் போது, அய்யோ… என அலறுகின்றான். ஒரு உயிரை கொலை செய்யும்போது மனிதன் அதன் வலியை உணரவில்லை. ஆனால், இப்போது தான் கொலையுறும்போது, அய்யோ… கொடுமை… என அலறுகின்றான். அப்போதும் மனிதன் திருந்துவதாக இல்லையே. சீனாவில் கொரோனா கொஞ்சம் அமைதி காத்தப்போது மீண்டும் சீன மக்கள் பழையபடி உயிர்களை கொன்று தின்ன ஆரம்பித்துவிட்டார்கள். கொரோனா பார்த்தது… மீண்டும் அங்கு தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே சில முக்கிய மாற்றங்களை உலக நாடுகள் இனி செய்தே ஆகவேண்டும்.
கொரோனாவால் உண்டாக்கப்பட வேண்டிய உலகலாவிய மாற்றங்கள்:
1.    இறைவன் மனிதர்களை கால்நடையாகத்தான் படைத்தான். அதனால் அவன் எங்கு பிறந்தானோ, அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவுதான் அவனது எல்லை. சுமாராக இருநூறு கிலோமீட்டர் சுற்றளவு என்றால், அந்த சுற்றுளவை அவன் தனது வாழ்நாளில் கடக்கக்கூடாது. அறிவியல் முன்னேற்றத்தால் வெளி நாடுகளுக்கு செல்ல நேர்ந்தால், ஓரிரு நாட்களில் தன் இருப்பிடம் திரும்பிவிட வேண்டும். நிரந்தரமாக பிறந்த இடத்தை துறத்தல் கூடாது. வேலை கிடைக்கும் இடத்தில் மக்கள் செல்வதை தடுத்து, மக்கள் இருக்குமிடத்தில் வேலை வழங்க அரசு முயல வேண்டும்.
2.    ஐம்பூதங்களும் மனிதன் தனிமைப்படும்போதுதான் மகிழ்கின்றன. மனிதன் உருவாக்கிய எண்ணற்ற தொழிற்சாலைகளால் ஐம்பூதங்களும் மாசடைந்தன. தற்போது அவைகள் தங்களை புதுப்பித்துக்கொண்டன. அதனால் மனிதன் இனி தொழிற்சாலைகளை இயக்காமல் நிரந்தரமாக மூடுதல் வேண்டும். அதற்கேற்ப தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நீர் நிலைகள் அனைத்தும் மிகவும் புனிதமானதாக அறிவிக்க வேண்டும்.  
3.    பிற உயிர்களை கொன்று தின்னும் பழக்கத்தை உலக மக்கள் உடனே விடவேண்டும். மீன்பிடித் தொழில், கோழி முட்டை உற்பத்தி, இறைச்சிக் கடைகள் ஆகியவை உலகில் எங்கும் இயங்கக் கூடாது. தாவர உணவுகளை மட்டுமே மனிதர்கள் உண்ண வேண்டும்.
4.    பிற உயிர்களை சிறை படுத்துதல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்.
5.    பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. அதனை மாபெறும் குற்றமாக அறிவித்து தண்டனை அளிக்க வேண்டும். குப்பைகள் அதற்கான இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை போட்டால் அதனையும் குற்றமாக கருதி தண்டனை அளிக்க வேண்டும்.
6.    புகை பிடித்தல், மது அருந்துதல் அறவே கூடாது. அதன் தயாரிப்புகளை உலகம் நிறுத்த வேண்டும்.
7.    உலகம் முழுதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தக்கூடாது. அவைகளை சுற்றுலா தலமாக மட்டுமே நிர்வகிக்க வேண்டும். புதியதாக எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களும் கட்டக்கூடாது. உலக மக்கள் அவரவர்களது கடவுள் வணக்கங்களை அவரவர்களது வீட்டில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். திருவிழாக்கள், மதத்தின் பெயரால் வரும் பல பண்டிகைகளை பொதுவெளியில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும். கடவுள் இருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்… அவர் யார்? என்பதில் மக்களுக்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதால், உண்மை கடவுள் மக்கள் மத்தியில் வெளிப்படும்வரை, மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லா கடவுள்களுக்கும் பொதுவெளியில் வணங்கத் தடை விதிக்க வேண்டும். கொரோனாவால் தற்போது நடைமுறையில் இருப்பது இதுதானே! எனவே இதனை நிரந்தரமாக்க வேண்டும். உண்மை கடவுளுக்கு, மனித இனம் தெரியப்படுத்தும் செய்தி இதுவாகும். உண்மை கடவுள் வெளிப்படும் நேரம் சமீபத்தில் இருப்பதாக அனைவரும் சொல்வதால், அவர் வெளிப்பட்ட பிறகு, பொதுவெளியில் கடவுள் வழிபாட்டை வைத்துக்கொள்ளலாம். அதுவரை வீட்டில் மட்டுமே கடவுள் வணக்கம் செய்ய வேண்டும்.
8.    உலகில் உள்ள அனைத்து வாகனங்களும் மின்சார சக்தியால் மட்டுமே இயங்கும்படி வடிவமைக்க வேண்டும். காற்று மாசு அறவே கூடாது.
9.    நாட்டு மக்களை காக்க வேண்டும் என, ஒவ்வொரு நாடும் இராணுவத்திற்கே தங்களது மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றார்கள். இதனை தடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டு எல்லையும் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லையை மதித்து நடக்க வேண்டும். அது தொடர்பாக போர் ஏற்படக்கூடாது. மாறாக ஐ.நா. சொல்லும் தீர்ப்பை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இராணுவம் இருக்கவே கூடாது. மக்களது வரிப்பணத்தை மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே உலக நாடுகள் செலவழிக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் கூட, அமெரிக்கா இந்தியாவிற்கு 1000 கோடிக்கு இராணுவ பொம்மைகளை விற்கப்போகின்றதாம். இந்தியாவில் மக்கள் உணவிற்கு அல்லல் படுகின்றார்கள். இருக்க இடம் இல்லாமல் தெருவில் வசிக்கின்றார்கள். இந்நிலையில் இந்திய மக்களின் வரிப்பணம் 1000 கோடி ருபாய் அமெரிக்காவிற்கு செல்ல இருப்பது நியாயம் இல்லை. அதேபோல் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்தது வருத்தமளிக்கின்றது. எனவே இராணுவமில்லா நாடுகள் அமைய உலக நாடுகள் ஐ.நா.வின் மூலம் விடை காண வேண்டும். கொரோனா தாக்குதலால், இனி இராணுவத்திற்கு வேலையில்லாது உயிரி தொழில்நுட்பத்தை எல்லா நாடுகளும் கையாளும் என தெரியவருகின்றது. அதுபற்றி விரிவாக வேறு கட்டுரையில் காண்போம்.    
10.  உலகம் முழுதும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முதல் 15 நாட்கள் தொடர்ந்து மக்கள் தனித்திருக்க வேண்டும். தற்போது உள்ளது போல ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். 15-நாட்களுக்கு மட்டும் கொரோனா வந்து செல்வதும் நல்லதுதான்.
11. எந்த ஒரு நோய்களுக்கும் இயற்கை வைத்தியங்களான, சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய வைத்தியத்தையே உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும். இந்தத் துறையில் ஆய்வகங்கள் ஏற்படுத்தி புதிய ஊட்டச்சத்து உணவினை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஊட்டச்சத்து இல்லாததுதான் கொரோனா மற்றும் எந்த நோய்க்கும் முதல் காரணம். ஊட்டச்சத்து உள்ளவர்களை எந்த கொரோனாவும் ஒன்றும் செய்ய முடியாது.  அதனை நாம் பாரம்பரிய இயற்கை வைத்தியத்திலேயே அளித்து எந்த ஒரு கொடூர நோயினையும் குணமாக்க முடியும். மாறாக  மருந்து என்கின்ற வேதியியல் ஆங்கில மருந்தால் மக்களுக்கு எந்த நோயும் தீர வாய்ப்பில்லை. ஒரு நோய் தீர்ப்பது போன்று மறு நோயை உண்டு பண்ணுவதுதான் ஆங்கில மருந்தின் எதார்த்தமாக இருக்கின்றது. மேலும் உலக நாடுகள் மக்களின் நோய்களை முன்னிறுத்தி, மருந்து தயாரிக்கின்றோம் என மக்களது பணத்தை கொள்ளையடிக்கின்றார்கள். மருந்து தயாரிக்க பல தொழிற்சாலைகள் ஏற்படுத்தி உலகை மாசுபடுத்துகின்றார்கள். ஊழல் நிறைந்த இந்த அலோபதி முறையை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். மக்கள் இவ்விஷயத்தில் விழிப்புணர்வு அடைய வேண்டும். தங்களது அரசு அலோபதியை தேர்ந்தெடுத்தால், அவ்வரசு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றது என்று உணர வேண்டும். தற்போது தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகில் பெரும் ஊழல் நடைபெற்று வருகின்றது. இந்நிலை மாற வேண்டும். மக்கள்தான் மாற்ற வேண்டும். புரட்சி வெடிக்க வேண்டும். ஜனநாயக அரசு, மக்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். சுகாதார விஷயத்தில் அரசு சொல்வதை மக்கள் கேட்டால்.. மக்கள் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் இருப்பர். நமது அரசர்கள் மட்டும் செல்வந்தர்களாக ஆகிவிடுவர். எனவே மக்கள்தான் திருந்த வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தற்போது இந்திய உச்சநீதி மன்றமும் பாரம்பரிய வைத்தியத்திற்கு தடைவிதித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. பாரம்பரிய வைத்திய சாலைகள் பெருக வேண்டும். பாரம்பரிய வைத்திய ஆராய்ச்சிகள் பெருக வேண்டும். மருத்துவமனைகள் இல்லாத நாடு, நாட்டு மருந்தகங்கள் மட்டுமே உள்ள நாடு, மெடிக்கல் இல்லா நாடு உருவாக மக்களிடம் விழிப்புத் தேவை, புரட்சி தேவை.
12. உலகில் மக்கள் எந்த ஒரு தொழிலை மேற்கொண்டாலும், அத்தொழில் பிற உயிர்களை சிறிதும் பாதிக்காதவண்ணம் உள்ளதா? எனவும், உலகில் உள்ள ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, மண், ஆகாயம் இவைகளை பாதிக்காத வண்ணம் உள்ளதா? எனவும் ஆராய்ந்து அத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். மனிதன் உட்பட மற்ற உயிர்களுக்கும் பாதிப்பு உண்டானாலும், ஐம்பூதங்களுக்கு மனித செயல்களால் பாதிப்பு உண்டானாலும் கொரோனா போன்ற உயிர்கொல்லி உயிரிகள் வந்தே தீரும். மனித உயிர்களும் மனிதன் அல்லாத பிற உயிர்களும் ஐம்பூதங்களும்தான் நமக்குக் கடவுள். இவைகளுக்கு துன்பம் விளைவித்துவிட்டு, நாங்கள் எங்களது கடவுளை பூஜை செய்கின்றோம், ஜெபிக்கின்றோம், தொழுகின்றோம் என்பதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு.
அன்பு மக்களே… நாம் இதுவரை கொரோனா பாதிப்பால், உலகளவில் தேவையான மாற்றங்களை பற்றி படித்தோம். உலகம் என்பது நம்மில் இருந்துதான் துவங்குகின்றது. எனவே முதலில் நாம் திருந்துவோம். உலகம் தன்னால் திருந்தும். மனிதனிடத்தில் பெரும் மாற்றங்களை இறைவன் எதிர்பார்க்கின்றான் என்பதை நாம் கொரோனா மூலம் அறிய வேண்டும். கொரோனாவால் உயிர் இழந்த, உயிர் இழக்க உள்ள உலக மக்களுக்கு இறைவன் தனது அருளால் மன்னிப்பைக் கொடுத்து, மறு பிறவியும் மனிதப் பிறவியாகவே கொடுத்து அருள வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல உண்மையிடம் வேண்டுதல் வைக்கின்றேன்.
--தி.ம.இராமலிங்கம்.        
For e-book link
https://drive.google.com/file/d/1gYOBnooezOr9IfmLJgG2uuvicVUBIvol/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.