Friday, April 24, 2020

மலைகளும் நதிகளும் (Part - 3)


அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
(Part - 3)

தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

 உத்ராகண்ட் 08-09-2019 – ஞாயிற்று கிழமை:

நாம் மீண்டும் நமது பயணத்தின் ஞாயிற்றுக்கிழமையான (08-09-2019) எட்டாந்தேதி பயணக்குறிப்புக்கு வருவோம். இன்று முழுதும் ஹர்துவாரில் சுற்று பயணம் மேற்கொண்டோம்.
 


காலை 7 மணியளவில் நாங்கள் தங்கியிருந்த  டேராவால் பவனிலிருந்து (Derawal Bhawan) நடந்து கங்கை கரையை நோக்கிச் சென்றோம். எங்களுடன் வந்திருந்த சில பெரியோர்கள் அங்கிருந்த பேட்டரி ரிக்சாவில் கங்கை கரை வந்தடைந்தனர். நடந்துச் சென்றாலே 15 நிமிட நேரத்தில் கங்கை கரை சென்றுவிடலாம். அங்கு நாங்கள் எல்லோரும் குளித்தோம். மிக வேகமாக ஓடும் நீரில் படித்துறையிலிருந்தே ஓரமாக நீண்டு கட்டப்பட்டிருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டே குளித்தோம். நீர் சில்லென்று இருந்தது. ஆனால் ஒரே அழுக்காய் காப்பி  (Coffee) நிரக்கலரில் நீர் இருந்தது. இந்து மதத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்ற கங்கை ஆற்றில் இன்றுதான் நான் முதலில் குளித்தேன்.(23-04-2020 இன்றுதான், சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சென்ற இந்த பயணக் குறிப்பை எழுதுவதால், இன்றைய நிலையில் அதே ஹர்துவாரில் கங்கை நதி மிகத் தூய்மையாக வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் ஊரடங்கு உள்ளதால், தொழிற்சாலைகள் ஒருமாத காலமாக இயங்காததால் கங்கை நதி தூய்மையுற்றதாக உள்ளது. அதாவது நான் கங்கை நதியில் குளித்ததால் அந்நதி ஆறு மாதத்தில் சுத்தமாகிவிட்டது எனச் சொல்லலாம்.)   

பிறகு எடுத்துச் சென்ற மாற்று உடைகளை அணிந்துக்கொண்டு டேராவால் பவன் வந்துச் சேர்ந்தோம். காலை சிற்றுண்டியை அங்கு முடித்துக்கொண்டு மேலும் சில இடங்களை ஹர்துவாரில் சுற்றி பார்க்க ஆட்டோவில் (இரண்டு ஆட்டோக்கள் – ஒரு வாகனத்தில் சுமார் 8 நபர்கள் அமரலாம்) கிளம்பினோம்.

சண்டி தேவி ஆலயம் (Chandi Devi Temple):  சிறிய மலைமீது அமைந்திருக்கின்ற ஆலயம் இது. மான்சா தேவி (Mansa Devi) என்றும் அழைக்கின்றனர். மலை மீது இருக்கும் இந்தக் கோயிலை தரிசிக்க ரோப் கார்
வசதி செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் சென்றுவிடலாம். மலை மீது நடந்துச் செல்ல 45 நிமிடம் பிடிக்கும். இமாலய மலைத் தொடரில் சிவாலிக்
மலைகளில் நீல பர்வத (Neel Parvat) மலையில் அமைந்துள்ளது.  இக்கோயில் 8-ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் அவர்களால் அமைக்கப்பட்டது. 1929-ஆம் ஆண்டு காஷ்மீர மன்னர் (Suchat Singh) சுச்சட் சிங் மன்னரால் கட்டப்பட்டது. நாங்கள் தங்கியிருக்கு டேராவால் பவனிலிருந்து இந்தக் கோயில் செல்ல 4 கிலோ மீட்டர் பயணம். நாங்கள் அந்த கோயில் இருக்கும் அடிவாரத்திற்கு செல்லும்போது எங்களுக்கு முன்னரே வந்திருந்த மக்கள் கூட்டம் ரோப் கார் பயணத்திற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு
காத்திருந்தார்கள். நாங்களும் சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு வழியாக எங்களது முறை வந்தவுடன் நாங்கள் அனைவரும் ரோப் காரில் மலை உச்சிக்குச் சென்றோம். சுவாமியை பார்த்தால் எனக்குப் பிடிக்கவில்லை. பக்திரசம் பொங்கவில்லை… அப்படியொரு தோற்றம்! இயற்கையை பார்த்தாலே இறைவனை தரிசதத்து போல் உள்ளது. அங்குள்ள இயற்கைக்கு முன்னால் இந்த கோயில்கள் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை எனக்கு. கோயில் உள் பிரகாரத்தில் சுற்றிவிட்டு மீண்டும் அதே ரோப் கார் மூலம் கீழறங்கி வந்தோம். அங்கிருந்து வேறிடம் செல்ல உடனே ஆட்டோ கிடைக்கவில்லை. அரை மணி நேரம் மீண்டும் கீழே காத்திருந்தோம். பிறகு பயணிக்கத் தொடங்கினோம். நாங்கள் இப்போது ஒரு ஆசிரமம் நோக்கிப் பயணிக்கின்றோம். இமாயல மலைத்தொடரில் பயணம் செய்யினும் ஒரே வெய்யில் வாட்டி வதைத்தது. கொஞ்சம்கூட காற்றில் குளிர்ச்சி இல்லை. வேர்த்த உடம்புடன் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டோம்.சண்டிதேவி கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே:-
      https://drive.google.com/file/d/1WHSMi_Lgl_CnBvbO7UHwTEolOzFSfux1/view?usp=sharing 
(சண்டி தேவி ரோப் கார் வீடியோ இணைப்பு)

ஸ்ரீ பூர்ணநந்தா ஆசிரமம்:-

श्री पूर्णानंद आश्रम, HARIDWAR4.3
SANYAS ROAD, KANKHAL, SANYAS ROAD, MAYAPUR, HARIDWAR, UTTARAKHAND 249401, INDIA

அடுத்ததாக நாங்கள் சென்றது ஸ்ரீ பூர்ணநந்தா ஆசிரமம் ஆகும். சண்டிதேவி கோயிலிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.   ஹர்துவாரில் சுமார் 300 –க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது5 ஆசிரமங்கள் என கருதப்படுவது, ஜெய்ராம் ஆசிரமம், சப்தரிஷி ஆசிரமம், சோகம் ஆசிரமம், மா ஆனந்தமயி ஆசிரமம், ப்ரேம் நகர் ஆசிரமம் என்ற ஐந்து ஆசிரமங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. எல்லா ஆசிரமங்களிலும் வெளி மாநில பக்தர்கள் தங்கிச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு.   
நாங்கள் சென்ற இந்த ஸ்ரீ பூர்ணாநந்தா ஆசிரமத்தில் அங்கிருந்த அன்பர்கள் ஒரு ருத்ராட்ச மரத்தை சுற்றி காண்பித்தர்கள். பிறகு அங்குள்ள பல்வேறுபட்ட மணிமாலைகள் விற்கும் கடையினுள் சென்று பார்த்தோம். எல்லாம் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தன. எங்களுடன் வந்திருந்த சிலர் சிலதை வாங்கினார்கள். நான் பார்த்து இரசித்துவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்து அங்குள்ள நாற்காலியில் அமர்ந்துவிட்டேன்.

யார் இந்த பூர்ணாநந்தா என்ற எனது கேள்விக்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. அங்கு கேட்டதற்கு, இவர் இராமேஸ்வரத்திலிருந்து இங்கு வந்ததாக சொன்னார்கள். அதற்கு மேல் அவரைப் பற்றின வரலாறு கிடைக்கவில்லை. பிறகு அங்கிருந்து வேறொரு இடம் நோக்கி எங்களது பயணம் தொடங்கியது. இங்கேயே மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. பசி நேரத்தில் வெய்யிலில் எங்களது பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக ஒரு கோயில்..

 தக்சேஸ்வரா மகாதேவ் கோயில் (Daksheswara Mahadev Temple):-
பூர்ணாநந்தா ஆசிரமத்திலிருந்து தக்சேஸ்வரா மகாதேவ் கோயிலுக்குச் சென்றோம். ஆசிரமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுதான். இக்கோயிலின் பின்னணியில் தட்ச மகாராசாவின் கதை பின்னப்பட்டுள்ளது.
தாட்சாயிணி என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென சிவகமாபுராணம் கூறுகின்றது. பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரஜாபதி தட்சனுக்கும், முதல் மனிதர்களான சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளின் மகளான பிரசூதி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாக கருதப்படுகிறார்.           
சிவபெருமானிடம் இருந்த வன்மம் காரணமாக பிரஜாபதி தட்சன் சதி சிவபெருமான் திருமணத்திற்குப் பிறகு பெரும் யாகமொன்றினை நடத்துகிறார். அந்த யாகத்திற்கு சிவபெருமானுக்கு தாட்சாயிணிக்கும் அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார். தந்தையின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக தட்சனின் யாகத்திற்கு வந்த தாட்சாயிணி அவமானங்களை சந்திக்கின்றார். அத்துடன் தன்னுடைய கணவரான சிவபெருமானை தட்சன் அவமதித்தை தொடர்ந்து அந்த யாகத்தில் விழுந்து மறிக்கின்றார். அதனையறிந்த சிவபெருமான் வீரபத்திரனை தோற்றுவத்து தட்சனை கொல்லும் படி உத்தரவிடுகிறார். தாட்சாயிணியின் உடலை எடுத்துக் கொண்டு நிலையின்றி சிவபெருமான் அலைவதைக் கண்ட திருமால் தாட்சாயிணியின் உடலை சக்கராயுதத்தினால் தகர்க்கின்றார். அதனால் தாட்சாயிணியின் உடல்கள் பல பகுதிகளாக சிதருண்டு பூலோகத்தில் பல இடங்களில் விழுகின்றது. இவ்வாறு விழுந்த இடங்களை சிவபெருமான் சக்தி பீடங்களாக மாற்றி மக்களின் வழிபாட்டிற்கும், அந்த இடங்களுக்கு காவலாகவும் பைரவர்களை தோற்றுவிக்கின்றார்.
உலகம் பராசக்தியால் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயினியாக பிறந்தார்.

தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன்மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.
இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.
இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர்,காளி,வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.

இதுவரை கதை படித்தீர்கள். இந்த கதையின் மூலம் தெரியவருவதுஎன்ன வென்றால்? நமது கடவுளைவிட மனிதனே பரவாயில்லை எனத் தோன்றுகின்றது. மருமகன் எழுந்து நின்று நம்மை வாருங்கள் மாமா… என அழைக்காததால் ஏற்பட்ட போர்தான் இது. எனவே மனிதர்களாகிய நாம் மருமகன் மாமனார் சண்டையில் இது போன்று நடந்துக்கொள்ளாமல் வாழ வேண்டும் என்று இந்த ஆண்டவன் கதை சொல்கின்றது.
இதன் காரணமாக எழுந்த அந்தக் கோயிலை நாங்கள் சுற்றி பார்த்தோம். மூல லிங்கம் மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு அய்யர்கள் அதனை பூஜை செய்துக்கொண்டே இருந்தனர். அதனை கண்டுவிட்டு 3 மணியளவில் அங்கிருந்து கிளம்பி எங்களது இருப்பிடத்திற்கு சென்றுவிட்டோம். இந்த கோயிலிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவுதான். 15 நிமிடத்தில் டேராவால் பவனுக்குச் சென்றுவிட்டோம். மதிய
உணவு அருமையாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு எல்லோரும் அவரவ
ர்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தோம். பிறகு மீண்டும் இரவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு உறங்கினோம். இது எங்களது மூன்றாம் நாள் இரவு ஆகும். நாளை எங்குச் செல்வது என இன்றிரவு எனக்குத் தெரியவில்லை. விடிந்தால் பார்ப்போம்…   


தொடரும்…

1 comment:

  1. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.