Thursday, March 31, 2016

"சன்மார்க்க விவேக விருத்தி" - ஏப்ரல்-2016

வந்தனம்!

வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்க உண்மைகளை எடுத்தியம்பும் "சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழ் காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை மூலம் வெளியிடப்படுகின்றது. ஏப்ரல்-2016-க்கான மின்னிதழினை அன்பர்கள் கீழே உள்ள இணைப்பிலிருந்து பெற்று படிக்கலாம். நன்றி.

http://www.vallalarspace.com/user/c/V000020561B

or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWMjdJSzEzM2tpdjA/view?usp=sharing

or

https://ta.wikipedia.org/s/4scl

Friday, March 11, 2016

சத்விசாரம் - மார்ச் - 2016

சன்மார்க்க விவேக விருத்தி மின்னிதழில் வெளியான "சத்விசாரம்" - நவம்பர் 2015 - ஆம் மாதம் துவங்கி மார்ச் - 2016 - ஆம் மாதம் வரையில். 

                                                                            சத்விசாரம்

                                                                    (தி.ம.இராமலிங்கம்)



  1. தம் என்பது என்ன?

மனிதனை சிந்திக்க விடாமல், அவனது சிந்தனையை, நம்பிக்கை என்ற ஒரு கட்டுக்குள் பூட்டி வைத்து, அதற்குள் அவனை ஆட்டி வைக்கும் அமைப்பிற்கு மதம் எனப் பெயர்.

  1. மதம் என்பது உண்மையா?

இவ்வுலகில் மதங்கள் பல. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு இறைவன் உண்டு. இப்படி பல இறைவர்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளனர். அவரவர் மதக்கடவுள்கள் அவரவர்களுக்கு உண்மையாக தோன்றும்படி செய்வதே அவரவர் மதத்தின் முக்கிய வேலையாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு மதமானது, மற்ற மதத்தையும், மற்ற மதக்கடவுள்களையும் பொய் என நிரூபித்துக்கொண்டே இருக்கும். ஆக, ஒரு மதம் மற்ற மதத்தால் பொய் என நிரூபிக்கப்படுவதால் அல்லது நம்பப்படுவதால் இவ்வுலகில் உள்ள எல்லா மதமும் எல்லா மதக்கடவுள்களும் பொய் என தீர்வாகின்றது.

  1. மனிதனுக்கு மதம் தேவைதானா?

தேவையில்லை. மன்னராட்சி இவ்வுலகில் நடைபெற்ற காலத்தில் மக்களை ஆள்வதற்காகவே இந்த மதங்கள் உருவாக்கப்பட்டன. இதனை உருவாக்கியக் கூட்டங்களை மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, மதக் கட்டளைகளை இறைவனே வந்து கூறினான் என்றும், இறைவன் என் மூலம் கூறினான் என்றும் கட்டுக்கதைகளைக் கூறி மக்கள் மீது தினித்து நாளடைவில் பொது மக்களை நம்பவைத்து விட்டார்கள். மன்னராட்சி இருந்தவரை மதப்புத்தகம் தான் அரசியல் சட்டமாக இருந்தது. ஆனால் இன்று உலகில் பல நாடுகளில் குடியரசு ஆட்சி / மக்களாட்சி வந்து விட்டது. ஒவ்வொரு குடியரசிற்கும் தனித்தனி அரசியல் சட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன. எனவே பொது மக்களால் உருவாக்கப்பட்ட அரசியல்
2
சட்டங்களே அந்தந்த மக்களை ஆள்வதற்கு ஏற்றதாக இருக்கும்போது மக்கள் இன்னும் ஏன் இந்த மதப்புத்தகத்தை வைத்துக்கொண்டு சண்டை இடுகின்றனர் எனத் தெரியவில்லை.

  1. ஒரு மனிதன் எப்படி சிறப்பாக வாழ்வது என்று மதத்தில்தானே கூறியிருக்கின்றார்கள்?

நான் ஏற்கனவே கூறியது போன்று, மன்னராட்சியில் அந்த ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று, அங்கு ஏற்பட்ட மதமானது தனது புத்தகத்தில் வழிமுறையாக கூறியிருக்கின்றது. தற்காலத்தில் மக்களால் இயற்றப்பட்ட சட்டம்தானே மக்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுகின்றது. அச்சட்டத்தை மீறினால் தண்டனையும் வழங்குகின்றது. மதத்தில் வழங்கப்பட்ட நீதியெல்லாம் மக்களாட்சி சட்டத்தில் அநீதியாக பார்க்கப்படுவது உண்மைதானே. பிறகு எப்படி மதப்புத்தகம் மக்களை வழிநடத்தும். அதை விட்டுவிடுங்கள். நாம் எப்படி சிறப்பாக வாழவேண்டும் என நாம் இயற்றிய சட்டம் கூறும்.   

  1. மதம் தேவையில்லை என்றால் கடவுள் என்ன ஆவார்?

நான் ஏற்கனவே கூறியது போன்று, ஒரு மதத்தில் உள்ள கடவுளை மற்ற மதத்தில் உள்ளவர்கள், அக்கடவுள் இருப்பதாக நம்பவில்லை. எனவே மதக்கடவுள் அனைத்தும் பொய்யே. எப்படி மன்னராட்சி முடிந்தவுடன் அரசர்கள் காணாமல் போனார்களோ, அது போல மதங்கள் கூறும் கடவுளும் காணாமல் போய்விடுவார்கள்.

  1. கடவுள் காணாமல் போவது சாத்தியமா?

சாத்தியம்தான். நேற்று வரை நான் ஒரு மதத்தை பின்பற்றி அது சொன்னக் கடவுளை வணங்கி வந்தேன். ஆனால், இன்று நான் மதம் மாறியதால், எனது புதிய மதம் எந்தக் கடவுளை சொல்கின்றதோ அந்த புதியக் கடவுளை வணங்க முற்படுகின்றேன். எனவே எனது நேற்றய கடவுள் இன்றிலிருந்து எனக்கு காணாமல் போய்விட்டார். ஆகையால் மதக் கடவுள்கள் யாவும் மாற்றத்திற்கு உட்பட்டவர்கள். மாற்றத்திற்கு உட்படும் கடவுள் அனைவரும் ஒருநாள் மக்களிடமிருந்து காணாமல் போய்விடுவர்.

  1. மாற்றத்திற்கு உட்படாத கடவுள் என்பவர் உண்டா? உண்டு என்றால் அவர் யார்? அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்?

உண்டு. அவர்தான் "இயற்கை". இந்த இயற்கை - விளக்கமாகவும், இந்த இயற்கை - உண்மையாகவும், இந்த இயற்கை - இன்பமாகவும் மக்களுக்கு என்றும் காட்சி அளித்துக்கொண்டும், காட்சிக்கு அப்பார்பட்டு ஒரு முடிவில்லா இராஜ்ஜியத்தில் நம்மை ஆண்டும் வருகிறார். இந்த இயற்கைக்கு "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்" என வள்ளலார் பெயர் வைத்துள்ளார். இவரை எந்தவொரு மதமும் உருவாக்கவில்லை. மதங்கள் உருவாகும் முன்பும், மதங்கள் அழிந்தப் பின்பும் என்றும் நிலைத்து இருப்பவர் இவரே. அதாவது மனிதர்கள் இந்த பூமியில் தோன்றுவதற்கு முன்பும், மனிதர்கள் இந்த பூமியில் அழிந்ததற்கு பின்பும், ஏன் இந்த பூமி உருவாகும் முன்பும், இந்த பூமி அழிந்ததற்குப் பின்பும் என்றும் நிலைத்து இருப்பவர் இவர் ஒருவரே. எனவே இவர் எந்த மதத்திற்குள்ளும் அகப்படமாட்டார். எனவே இவர் மாற்றத்திற்கு உட்படவும் மாட்டார்.

3
  1. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

ஏற்றுக்கொள்வார்கள். ஒரு கதை சொல்கின்றேன் கேளும். சொர்க்கத்தில் ஆண்டவன் ஒரு ஊர்வலம் நடத்த விரும்பினான். அதற்காக பூலோகத்தில் உள்ள மக்களை எல்லாம் அங்கு வர அழைப்பு விடுத்தான். இதனை ஏற்று பூலோகத்தில் உள்ள மக்கள் எல்லாம் சொர்க்கத்திற்கு சென்றார்கள். மாநாட்டு ஊர்வலம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. இயேசுவை பின்தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். அல்லாவை பின்தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். சிவனைத் தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். புத்தரைத் தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். இப்படியே ஒவ்வொரு கடவுளை தொடர்ந்து மக்கள் கூட்டம் சென்றுக்கொண்டிருந்தது. இறுதியில் ஒருவர் மட்டும் தனியே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற ஒரு தொலைக்காட்சி நிருபர் நீங்கள்
மட்டும் ஏன் தனியாக நடந்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார், நான்தானப்பா உண்மையான கடவுள்.

இந்தக் கதை உணர்த்துவது என்ன வென்றால், உண்மை என்றுமே தனியாகத்தான் இருக்கும். அது மக்களை கூட்டி அரசியல் நடத்த தேவையில்லை. அதற்கு என்று புராணங்கள் தேவையில்லை, அதற்கு என்று மதம் தேவையில்லை, அதற்கு என்று மதப்புத்தகம் தேவையில்லை. அதற்கு என்று மக்கள் தேவையில்லை. அதற்கு தேவை என்பதே இல்லை. நமக்குத் தேவை என்றால் நாம் அவனை அணுகுவோம். நமக்கும் தேவையில்லை என்றால் அவனை விட்டுவிடுவோம், ஒன்றும் பாதகம் இல்லை. இயற்கை உண்மை - என்றும் அதன் இன்பத்தை எங்கும் விளக்கமாக செய்துக்கொண்டே இருக்கும்.

  1. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விட்டுவிட்டால் நமக்கு ஒன்றும் பாதகம் இல்லை. சரி, அவனை அணுகுவதால் என்ன சாதகம் கிட்டும்?

நாம் பெற்ற இந்த உடம்பை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காது, இயற்கையைப் போன்று மரணமிலா பெருவாழ்வு வாழும் சாதகம் கிட்டும். இச்சாதகத்தைப் பெற்றவர் திருவருட்பிரகாச வள்ளலார். சுத்த சன்மார்க்கம் என்ற ஊடகத்தின் மூலம் இவர் இந்த சாதகத்தைப் பெற்றார்.

  1. சுத்த சன்மார்க்கம் என்பதும் ஒரு மதம் தானே?

இல்லை. நான் ஏற்கனவே கூறியிருக்கின்றேன். மதம் என்பது இயற்கைக்கு கிடையாது. சுத்த சன்மார்க்கம் என்றால் "தூய்மையான சத்துள்ள இடத்திற்கு செல்லும் வழி" எனச்சொல்லலாம்.

  1. சுத்த சன்மார்க்க வழியில் எப்படி செல்வது?

இவ்வழியில் ஜோதி வழிபாடு என்பது அகத்திற்கும், ஜீவகாருண்ய வழிபாடு என்பது புறத்திற்கும், கடவுள் வழிபாடாக இருக்கும்.  ஆன்ம நேயம், தயவு, கொலை புலை
4
தவிர்த்தல், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், நித்திய கரும விதி, பேருபதேசம், மஹாமந்திரம், தருமச்சாலை, சன்மார்க்க சங்கம், ஞான சபை போன்றவைகளை பின்தொடர்ந்து செல்லக்கூடியதாக இவ்வழி இருக்கும். இவ்வழியின் முடிவில் சித்திவளாகத்தை (மரணமிலா பெருவாழ்வை) நாம் அடையலாம்.

  1. மதத்திற்கும் ஒழுக்கமுடைமைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

மக்கள் சிறப்பாக வாழ மதப்புத்தகத்தை விட்டுவிட்டு சட்டப்புத்தகத்தை பின்தொடர்ந்தாலும், புலால் உண்பதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆகையால் மக்கள் புலால் உண்ணலாமா? என்ற கேள்வி வரும். சட்டப்படி புலால் உண்ணலாம். சில மத ஒழுக்கத்தின் படி புலால் உண்ணுதல் பாவம் என்றும், சில மத ஒழுக்கத்தின் படி புலால் உண்பது பாவமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே இந்த ஒழுக்கங்கள் என்பன மதத்திற்கு மதம் முற்றிலும் மாறுபடுகின்றன. எனவே
மதங்களில் கூறப்பட்ட ஒழுக்கங்களைப் பின்பற்றினால் இறைவனை அடைய முடியாது. ஏனெனில் அங்கு இறைவனே பொய்யாக சித்தரிக்கப்பட்டிருக்கும்போது பொய்யை அடைய ஒழுக்கம் வேறு தேவையா? அங்கு ஒழுக்கக்கேடுகள்தான் நிறைந்திருக்கும். சில சிறப்பான ஒழுக்கங்கள் தெரிந்தோ தெரியாமலோ சில மதங்களில் கூறப்பட்டுள்ளன. அவை நன்றாக பயனளிக்கக்கூடியதாக இருந்தாலும் அதனுடன் தீயஒழுக்கங்களும் கூடி குலாவுகின்றன. நல்லொழுக்கத்தை மட்டுமே கொண்ட மதம், இந்த மதம் என்று சொல்ல எதுவும் இப்பூமியில் இல்லை. எனவே மதங்களில் பேசப்படும் ஒழுக்கங்கள் நம்மை இறைநிலைக்கு இட்டுச்செல்லாது. அவை ஜோடிக்கப்பட்ட ஒழுக்கங்கள். அந்தந்த வட்டார வழக்கங்களை மறுத்தோ அல்லது ஏற்றோ ஒழுக்கங்களாக சொல்லப்பட்டிருக்குமே அன்றி ஒரு பொது ஒழுக்கத்தை மதங்களில் காணமுடியாது. எனவே மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சம்மந்தம் இல்லை.

  1. இந்த மதங்கள், இந்த மனித இனத்திற்கு செய்துள்ள மிகப்பெரிய நன்மை என்ன? மிகப்பெரிய கேடு என்ன?

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று மக்களுக்கு சொன்னது மிகப்பெரிய நன்மை. அந்த இறைவன் இவன்தான் என்று மக்களை நம்பவைத்தது மிகப்பெரிய கேடு.

  1. எல்லா மதங்களும் அல்லது ஒழுக்கங்களும் ஏன் காமத்திற்கு எதிராக உள்ளன?

மதங்களும் ஒழுக்கங்களும் வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே காட்டில் அலைந்து திரிந்த மனிதன், ஒரு காட்டு விலங்கைப்போலவே பிறந்த மேனியாய் இருந்தான். யார் யாரை வேண்டுமானாலும் காமுறலாம். தன்னுடைய அன்னையையோ அல்லது சகோதரியையோ அல்லது அயல் பெண்ணையோ சேர்ந்தாலும் ஒரே சுகம்தான் இந்த காமம் கொடுக்கும். அப்படித்தான் இவள் நமது அன்னை, இவள் நமது சகோதரி என்று தெரியாமல் எல்லோரிடமும் ஒருவன் காமுறும் ஒரு வாழ்க்கைதான் அன்று அந்தக்காட்டில் நமது இனம் செய்துக்கொண்டிருந்தது. என்று, இவள் என்னைப்பெற்ற அன்னை, இவள் என்னுடன் பிறந்த சகோதரி என்ற எண்ணம் அவர்களுக்குள் வந்ததோ அன்றே இன்பமுறும் உடல் உறுப்புகளை பிறர் காணா வண்ணம் மறைக்கத் தொடங்கினார்கள். அது யாருக்கும் பொதுவான உறுப்பல்ல. சேரும் இருவர் மட்டுமே
5

பார்க்கக்கூடிய உறுப்பு என்று தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டனர். காட்டு விலங்கிலிருந்து மனிதன் உருவாவதற்கு இந்த மறைப்பே முதல் படியாகும். அந்த மறைப்பே இன்று கற்பு என்று பேசப்படுகின்றது. இந்த காமத்தை கட்டுப்படுத்தியதால்தான் காட்டு விலங்கிலிருந்து மனிதன் தனியே இனங்காணப்பட்டான். அவனது சிந்தனைகள் அதிலிருந்துதான் வளரத்தொடங்கியது. முதலில் தாய்வழி சமூகம் உருவாகியது. இச்சமூகத்தில் தனது தந்தை யார் என்பது தனது தாய்க்கே தெரியாது இருந்தது. தனது தாய் மட்டுமே இனங்காட்டப்பட்டாள்.

சமூகத்தில் தனி மனிதனுக்கென சொத்துக்கள் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு அவனுடைய வாரிசு மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை துளிர்த்தது. இதுவரை தாய், சகோதரி தவிர்த்து மற்றவர்களை எல்லாம் காமுற்ற மனிதன் இந்த புதிய சிந்தனையால், தனக்கென்று ஒருவள் மட்டுமே போதும். அவள் மூலம் உருவாகும் குழந்தைகள் எனது வாரிசாக எனது சொத்தை நிர்வகிக்கட்டும் என தீர்மானித்து, தனது காம எண்ணத்தை ஒருவளோடு மட்டும் வைத்துக்கொண்டான். அவள் பெயர் மனைவி என்றாகியது. திருமண பந்தம்
தோன்றியது. இதிலிருந்து தந்தைவழி சமூகம் உருவாகியது. தனக்கு இவன்தான் தந்தை, இவள்தான் தாய் என ஒரு வரையறை ஏற்பட்டது.

இக்காலகட்டத்தில் உருவாகிய மதங்களும் அம்மதங்களில் கூறப்பட்ட ஒழுக்கங்களும் காமத்தை இன்னும் சற்று உற்று நோக்கியது. இந்த காமத்தை முற்றிலும் ஒடுக்கினால் என்ன? சிலர் ஒடுக்கினார்கள், அதன் விளைவாக மனித இனத்தில் சித்தர்களும் முனிவர்களும் ஏற்பட்டனர். இவர்களுக்கு ஒரு சில சித்துக்களும் இதன் மூலமாக கிடைத்தன. எனவே இறைசக்தி கிடைக்க காமம் தடையாக உள்ளது என ஒருவாறு தெரிந்துக்கொண்டனர். இதிலிருந்து இல்லறம் துறவறம் என்ற பிரிவு ஏற்பட்டது. துறவறத்தார்கள் இல்லறத்தாருக்கு காமம் பற்றிய சில கட்டுப்பாடுகளை ஒழுக்கங்களாக தெரிவித்தனர். ஒருவனுக்கு ஒருத்தி, மாதம் இரண்டு முறை களவின்பம், நாற்பது வயதிற்கு மேல் இல்லறத்தில் துறவறம் மேற்கொள்ளுதல் வேண்டும், பெண்கள் ஆடைகளால் தனது உடலை முழுவதும் மூடியே வெளியில் போகவேண்டும், கணவன் இறந்தால் தீக்குளிக்க வேண்டும், பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது, செய்யலாம், இப்படி காமத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு மதமும் பல கட்டுப்பாடுகளை விதித்தன. இறுதியில் இன்று இக்கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களை அடிமையாக்கின. ஆண் ஆதிக்க சமுதாயம் அனைத்து மதங்களிலும் அறமாக / ஒழுக்கமாக ஏற்கப்பட்டன.

காமத்தை அடிப்படையாகக் கொண்டு சில மதங்களில் கடவுள்கள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சில மத புராணங்களில் வரும் கடவுளர்களே இந்த காமத்தை அடக்க முடியாமல் குற்றம் புரிந்து ஒருவர் மனைவியை மற்றொருவர் பலாத்காரம் செய்வது, ஒருவரின் மனைவி மற்ற ஆடவரை விரும்பிச் சேர்வது இவைப்போன்ற காமக் கதைகள் எல்லாம் சில மத புராணங்களில் நாம் கண்டு களிக்கலாம். காமத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வுருவகக் கடவுளும், காமக் கதைகளும் புராணங்களில் கூறப்பட்டன என்று சொல்வாரும் உளர். எனவே, காமம் என்பது சிற்றின்பம், இறை இன்பமே பேரின்பம் என்று மதங்கள் பேச ஆரம்பித்தன. காமத்திற்கு எதிராக நடைபோட்டதால்தான், காட்டு விலங்கினங்களாக இருந்த நாம் இன்று ஒரு நாட்டு மனித சமூகமாக உலாவர முடிகின்றது, என்றால் அது மிகை இல்லை. எனவே மதங்களும் ஒழுக்கங்களும் காமத்திற்கு எதிராக
இருப்பதில் தவறில்லை. அதே நேரம் பெண்களின் சுதந்தரமும் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

  1. சுத்த சன்மார்க்கப் பாதைக்கும் காமம் எதிரியா?

ஆம். எதிரிதான்.

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளையவர்கள் தனது இல்லறத்தை விட்டு துறவு பூண்டு வள்ளலாரிடமே வந்து பணிசெய்யலாம் என விழைந்தபோது, வள்ளலார், "'உலகம் பிரமிக்கத் துறவு பூண வேணாங்காணும்; அருந்தல், பொருந்தல் முதலிய ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளாகிய இல்லறத்தார் எல்லாம், அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளுக்கு நூற்றுக்கு நூறு பங்கு முழுவதும் உரியவர் ஆவார்கள் இது பொய்யன்று,' என்று கூறியருளிக் குடும்பத்தில் சேர்ந்து வாழவழிகாட்டினார். இதிலிருந்து இல்லறத்தார்கள் அனைத்தையும் விட்டு துறவறம் மேற்கொள்ள வேண்டாம் என்று சுத்த சன்மார்க்கம் போதிக்கின்றது.

மற்றொரு சமயம், "பரம சிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம்." என்று இரத்தின முதலியாருக்கு வள்ளலார் தனது கடித்தத்தில் எழுதி, அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதின்மூலம், வள்ளலார் திருமண பந்தத்திற்கு தடை செய்யவில்லை.

ஆனால், தனது வாழ்க்கையில் தனது திருமணத்தை அவர் வெறுக்கவே செய்தார். இறையருளால் தனக்கு திருமணம் நடைபெற்றாலும், இல்லறத்தில் ஒரு துறவு வாழ்க்கையைத்தான் அவர் மேற்கொண்டார். இதிலிருந்து இறை நிலையடைய காமத்தை எதிர்த்தாக வேண்டும் என்று தெரிகின்றது.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாக வள்ளலார் இந்தக் காமத்தை குறிப்பிடுவதை பாருங்கள், "காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவர்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்" என்று கட்டளை இடுகின்றார். கடவுளைக் காண விரும்பினால் ஆகாரத்தில்கூட இச்சை செல்லக்கூடாது என்று சொல்லும் வள்ளலார் காமத்தை எந்த அளவிற்கு வெறுத்திருப்பார் என்பதை கவனிக்க வேண்டும்.

"சுத்த சன்மார்க்க லட்சிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு கனவில்கூட பெண்ணாசை கூடாது" என்று வேறோரிடத்தில் கூறுகிறார் வள்ளலார்.

"ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக முடையவனுக்குக் கோசத்தடிப்புண்டாகாது" என்றும், அதிதீவிர பக்குவியாய் கடவுளிடத்தில் லட்சியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிகலாபாசம் நேரிடாது, தேகம் நீடிக்கும்" என்றும் காமத்தை உடைத்தெறியச் சொல்கின்றார் வள்ளலார்.

ஆனால் காமத்தை அழிப்பது நமது முயற்சியால் மட்டும் நடைபெறக்கூடிய ஒன்றல்ல. அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளும் கைகூட வேண்டும். சுத்த சன்மார்க்க தீவிரனுக்கு மட்டுமே காமம் எதிராக வேண்டுமே ஒழிய சாதாரண மனிதர்களுக்கு காமம் முறைபடுத்த வேண்டும் என்பதெ சுத்த சன்மார்க்கம் சொல்கின்றது.

7

  1. நாம் இயல்பாக இருந்துக்கொண்டே மிகச்சுலபமாக மெய்ஞானம் அடைவது சாத்தியமா?

சாத்தியம்தான். யார் ஒருவர் முற்பிறவிகளில் எல்லாம் மிகக் கடினப்பட்டு மெய்ஞானம் அடையும் முயற்சியில் தோல்வியுற்றார்களோ அவர்களுக்கு இப்பிறப்பில் மிகச்சுலபமாக மெய்ஞானம் கிடைத்துவிடும். தாயுமானவர் தனது அடுத்தப் பிறவியில் இவ்வாறுதான் உடனே மெய்ஞானம் கிடைக்கப்பெற்று இரண்டறக் கலப்பார் என்கிறார் வள்ளலார். எனவே நீங்கள் சென்ற பிறவியில் தாயுமானவரைப்போன்று இருந்திருந்தால் இந்தப்பிறவியில் உடனே இயல்பாக இருந்துக்கொண்டே மிகச்சுலபமாக மெய்ஞானம் கிடைக்கப்பெறுவீர்கள்.

  1. அப்படியானால், மெய்ஞானம் அடைய மிகக் கடினப்பட வேண்டும் என்கிறீர்களா?

அப்படியில்லை. இங்கு ஒருவருக்கு கடினம் என்பது மற்றொருவருக்கு சுலபமாக இருக்கும். எனவே இவை அவரவர் மனதை பொறுத்தது. எல்லாவற்றிற்கும் அடிப்படை நமது மனமே. எனவே இந்த மனத்தை அடக்கிவிட்டால், பிறகு ஒரு ரோஜா மொட்டானது எப்படி மிக இயல்பாக மலர்ந்து வாசம் வீசுகிறதோ அவ்வாறு அவை மிகச் சுலபாக நமக்கு அமையும்.

ஆனால் மன அடக்கம் என்பதே மிகக் கடினம். ஒரு முறை இரண்டு பிராமணர்கள் வள்ளலாரிடம் வந்து, "ரஸம் கட்டமுடியாது மனங்கட்டலாம்" என்றனர். உடனே வள்ளலார் "மனம் அடக்கமுடியாது ரஸத்தைக் கட்டலாம்" என்று கட்டிக்காட்டினார்.

எனவே மனதை அடக்குவது மிகக் கடினம் என்பதை வள்ளற்பிரானே ஒப்புக்கொள்கிறார். அவர் அடைந்த மரணமிலாப் பெருவாழ்வினை அவ்வளவு சுலபமாக அவர் அடைந்துவிட்டாரா? என்ன? கிடையாது. தன்னுடைய பன்னிரண்டு வயதிலிருந்து அவர் பாடுபட்டு கஷ்டப்பட்டப்பிறகே அதற்கான கூலியாக இறையருள் பெற்று சுகமடைந்தார்.

பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையுமே
      படியில் பட்ட பாட்டை நினைக்கையில் மலையும் கரையுமே
துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற்றே
      துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற்றே. (5041)

என்று மலையும் கரையக்கூடிய வகையில் இருந்தது அவர் பட்டப்பாடு. அப்படி என்ன பட்டுவிட்டார்? அவருக்கு பிள்ளையா குட்டியா? குடும்பமா? ஒன்றுமில்லை. ஆனால், அன்றைய சமுதாயத்தையும் சமய மதங்களையும் எதிர்த்து போராடிக்கொண்டே தன்னளவில் மனதை அடக்கி, எல்லா உயிர்களையும் தன்னுயிராய் பாவித்து, தனது பெண், பொன், மண் இச்சையை ஒழித்து, தனது உயிர், உடல், பொருள் என்கிற மூன்றையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு, மனிதர்களின் பசியை ஆற்றுவித்து, மூன்று வித ஒழுக்கங்களையும் கடைபிடித்து முடிவில் மெய்ப்பொருளை அடைந்து அப்பொருளாகவே மாறி மூன்று தேகங்களையும் அடைந்தார்.

அவர் அடைந்த முத்தேகத்தின் இயல்பை ஒப்பிடும்போது, மேலே அவர் பட்டப்பாடுகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதை பிற்பாடு வள்ளற்பிரானே ஒப்புக்கொண்டு பாடியிருப்பதை நாம் பார்க்கிறோம்,

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை. (5624)

எனவே மனம் அடங்கினார்க்குள்ளே எல்லாம் அடங்கும். வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களும் மெய்ஞானம் அடையும் பொருட்டு, தமது குருநாதரிடம் தஞ்சம் அடைந்து, தமது உடல், உயிர், பொருள் மூன்றினையும் வள்ளலின் பாத மலரடியில் ஒப்படைத்துப் பாடுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்,

            அபயநின் சந்நிதிக்கே யாவிமுதன் மூன்று
            முபயநின் பாதமல ருக்கே - சுபநிறையுஞ்
            சிற்பதனே ராமலிங்க தேசிகனே நின்னுடைய
            நற்பதமிந் நாளடைத நன்று.             (பிரபந்தத்திரட்டு-571)

18. அப்படியானால், மனம் அடங்க நாம் என்ன செய்ய வேண்டும்?

வேதம் ஆகமம் முதலிய நூல்கள் யாவும் பதி, பசு, பாசம் ஆகிய மூன்றினை பற்றி விளக்கும். இந்த விளக்கங்கள் யாவும் நமது மனத்தை அடக்கும் வழி என்பார் வள்ளற்பெருமான். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-384) ாம் இதனைக்கொண்டு நமது மனத்தை அடக்குகிறோமா? என்றால் இல்லை. இதனையே உண்மை என நம்பி புற வழிபாடு செய்ய ஆரம்பித்துவிட்டோம். மனம் இதனால் மேலும் ஆபாசப்பட்டு துன்பத்தில் நம்மை இட்டுச் செல்வதை நாம் அறியோம். எனவே நாம் இந்நூல்களை மனம் அடங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போதய நிலையில் வேதம் ஆகமங்களால் மனத்தை அடக்க முடியாத சூழ்நிலையில் தான் நமது சமுதாயம் உள்ளது. எனவே மனமடங்க நாம் வள்ளற்பிரான் வகுத்த மற்றொரு மார்க்கமான கரண ஒழுக்கத்தை பின்பற்றுவதே சரியானதாக இருக்கும்.

கரண ஒழுக்கமாவது: உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளல்; சிற்சபையின்கண் மனஞ் செல்லுவது தவிர, வேறு எந்தவகை ஆபாசத்திலும் செல்லாமல் அதை இழுத்து மேற்குறித்த இடத்தில், அதாவது, கடவுளிடத்தில் நிறுத்துவது; பிறர்குற்றம் விசாரியாது இருத்தல்; தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களா லுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாக நிற்றல்; பிறர்மேல் கோபியா திருத்தல்; தனது சத்துருக்களாகிய தத்துவங்கள் - அரிஷ்டவர்க்கங்கள் - மேல் கோபித்தல்; அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலிய இவற்றையே கரண ஒழுக்க மென்பர்.


னவே நாம் மேற்கண்டவாறு கரண ஒழுக்கத்தை கடைபிடித்தால் மனம் அடங்கிவிடும்.

மனம்எனுமோர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
      மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
      இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலை ஆனாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
      சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
      ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே. (4835)

இந்த உலகம் சிரிக்க மனதை அடக்க வேண்டும் என்கிறார் வள்ளற்பிரான். மனதை அடக்கினால் இந்த உலகம் ஏன் சிரிக்க வேண்டும்? இவ்வுலக மாந்தர்கள் எல்லாம் மனம் போகும் வழியில்தான் நடை பயில்கின்றனர். அந்த அளவிற்கு மனம் தான் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக உள்ளது. அந்த அற்புத சக்தியை, அடக்கி அதனை அற்ப சக்தியாக மாற்றிவிட்டால், அந்த அற்ப மனதைக் கண்டு, ஃபூ... இவ்வளவுதான உனது சக்தி என்று இவ்வுலகர் அந்த அற்ப மனதின் உண்மையினை உணர்ந்து சிரிப்பர். எனவே வள்ளலார் முன் அந்த மனம் அற்பமாக மாறியது. எனவே நாம் எல்லாம் இங்கு அந்த அற்ப மனதைக் கண்டு சிரிப்பது நலமே.

இந்த மனம், வள்ளல் முன் எவ்வாறு இருக்கிறதாம்? ஒரு நுனிப்புல்லின் நுனியில் உள்ள பனித்துளியாக இருக்கிறதாம். மேலும் இம்மனம் அவருள்ளே ஆடாத ஒரு சித்திரம்போல் உள்ளதாம். இச்சித்திரம் சிறிது அசைந்தால் கூட சிதைத்துவிடுவேன் என்று அந்த மனத்தை எச்சரித்து வைத்திருக்கின்றார்.

இவ்வாறு நாமும் நமது மனத்தை வைத்துக்கொள்வதில் முழுமுனைப்பாக ஈடுபட வேண்டும். வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களும் இந்த மனத்தை அடக்க அவரது சற்குரு வள்ளற்பெருமானிடமே வேண்டுவது போல நாமும் வேண்டுவோம்.

            மனமென்சொற் கேட்கின் மகத்தாம்பே றெல்லா
            முனதருளா லிக்கணமே யுண்டா - மினமென்ன
            வித்தா ரணியிலெனக் கெந்தா யிராமலிங்க
            சித்தா மனமயலைத் தீர்.              (பிரபந்தத்திரட்டு-456)

            மனமான பாவியென் வசமாக நானுனது
                        வசமாக நிற்கவறியேன்
                  மாறியொரு வேறுவழி போகவழி யின்றியம்
                        மாயைக்கு ளடிமையாகி
            வனவேட ரைவர்பின் சென்று வாணாளெலா
                        மறலிநாளாக நின்றேன்
                  வலியவினையே செய்த கொடியனென் றென்னைவிதி
                        வழியிலேவிடி லெளியனேன்
            கனமான நினதுபய மலரடி நிழற்கண்
                        கலந்தாடி நிற்பதென்றோ
                  கலையளந் தறியாத மேனிலை கடந்தமெய்க்
                        காட்சியே கருணைநிறைவே
            சினமாதி காமமய லற்றவருளத் திமலர்
                        சிற்சொருப மானபரமே
                  திருவருட் புரவாச மருவு முத்தமர்நேச
                        திருவருட் பிரகாசனே.     (பிரபந்தத்திரட்டு-2414)

ந்த அடங்கா மனத்தினால்தான் நமக்கு மறணமும் அதனைத் தொடர்ந்து மறுபிறவியும் வருவதை காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தமது பிரபந்தத்திரட்டு நூலில் மிக அற்புதமாக கூறியிருப்பதை சற்றே நினைவு கூர்ந்து அதனை அடக்க கரண ஒழுக்கத்தை நாம் மேற்கொள்வோம்.

            எத்தனைப் பிறவிக ளெடுக்கவைத் தும்பிரம
                        னின்னுஞ் சலிக்கவில்லை
                  இறப்புத் தொழிற்பல விசைத்து மவ்வியமனுக்
                        கென்பா லிரக்கமில்லை
            நித்தமும் விடாதனுப விக்கவரு முன்செய்த
                        நீள்வினை யொழிந்ததில்லை
                  நெஞ்சமெண் பதுகோடி நிதநினைக் குந்தொழிலை
                        நிமிடமு மறக்கவில்லை
            சித்தமொடு புத்தியுஞ் சிந்தனை விசாரணைச்
                        சிறிதுங் குறைந்ததில்லை
                  சிறியனே னென்செய்வே னிவ்வகைத் துன்பெலாந்
                        தீர்ந்திடச் செய்தருளுவாய்
            சித்தர்முத் தர்கள்பத்தர் நற்றவர் பெரும்புலவர்
                        சேர்வடற் சிற்சபையில்வாழ்
                  திருவருட் புரவாச மருவு முத்தமர்நேச
                        திருவருட் பிரகாசனே.           (ிரபந்தத்திரட்டு-2398)

19. மனமும் அறிவும் ஒன்றுதானா? அல்லது வெவ்வேறனதா?

      மனம் வேறு. அறிவு வேறு. பொதுவாக மனம் சொல்கின்ற செயல்களை அறிவு ஏற்று அதனை செயல்படுத்தும். நமது பிண்டத்தில் உள்ள புறப்புறமாகிய இந்திரியங்கள் மூலம் அறிவானது மனம் சொன்ன கட்டளையை நிறைவேற்றும். மனம் தம்முடைய ஆசையினை நமது உடம்பிலுள்ள இந்திரியங்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளும். ஆனால் அந்த மனத்தால் நேரடியாக இந்திரியங்களை தமது இச்சைப்படி செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்திரியங்கள் அறிவு சொல்வதைத்தான் கேட்கும். ஆகவே மனம் எப்போதும் அறிவின் துணையினை நாடியே இருக்க வேண்டும். மனம் இயக்கத்தில் இருந்து அறிவு இயங்கவில்லையெனில் இந்திரியங்கள் இயங்காது நின்றுவிடும். இதனையே மூளைச்சாவு என்பார்கள். இதனையே ஆன்மிகத்தில் ஜீவ சமாதி நிலை என்கிறோம். இவ்வகை சமாதி பழக்கம் கூடாது என்கிறார் வள்ளற்பெருமான்.

      மனம் - உலகியல் கவர்ச்சியினை காண விரும்புகின்றது. அதற்காக அது தமது புறத்தில் உள்ள கண் என்னும் இந்திரிய உறுப்பினை அறிவின் துணை கொண்டு பயன்படுத்திக்கொள்கிறது.

      மனம் - உலகியல் சப்தங்களை கேட்க விரும்புகின்றது. அதற்காக அது தமது புறத்தில் உள்ள காது என்னும் இந்திரிய உறுப்பினை அறிவின் துணை கொண்டு பயன்படுத்திக்கொள்கிறது.

      மனம் - உலகியல் விடயங்களைப் பேச விரும்புகின்றது. அதற்காக அது தமது புறத்தில் உள்ள வாய் என்னும் இந்திரிய உறுப்பினை அறிவின் துணை கொண்டு பயன்படுத்திக்கொள்கிறது.

      மனம் - உலகியல் சுவைகளை அனுபவிக்க விரும்புகின்றது. அதற்காக அது தமது புறத்தில் உள்ள நாக்கு என்னும் இந்திரிய உறுப்பினை அறிவின் துணை கொண்டு பயன்படுத்திக்கொள்கிறது.

      மனம் - உலகியல் மணங்களை நுகர விரும்புகின்றது. அதற்காக அது தமது புறத்தில் உள்ள மூக்கு என்னும் இந்திரிய உறுப்பினை அறிவின் துணை கொண்டு பயன்படுத்திக்கொள்கிறது.

      மனம் - உலகியலில் தம்மை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றது. அதனால் அது தமது புறத்தில் உள்ள முகத்தினையும் உடலினையும் அறிவின் துணை கொண்டு அழகு படுத்திக்கொள்கின்றது.

      மனம் - சிற்றின்பத்தை விரும்புகின்றது. அதனால் அது அறிவினைக் கொண்டு எதிர் பாலின உதவியுடன் அதனை நிறைவேற்றிக்கொள்கின்றது.

      எனவே மனமும் அறிவும் வெவ்வேறு நிலைகளாய் இருந்து ஒன்றினைந்து நமது புலன்களை தம் ஆசைகளுக்கிணங்க பல்வேறு வகையில் ஆட்டிவைக்கின்றது.

20. மனம் - பேரின்பத்தை விரும்பாதா?

       மனம் - மாயையின் சம்பந்தம் உடையது. பொறி புலன்களை ஆதாரமாகக் கொண்டது. பேரின்பம் என்ற ஒன்று இருப்பதை தான் அறியாது நிற்பது மனம். அதனால் மனத்தினால் இறைவனையும் அறிய முடியாது.

21. மனம் உருகி, கண்களில் நீர் பெருகி பக்தி செய்தல் என்கிறார்களே?

      மனம் தனது இந்திரிய இச்சைகளை விடுத்து சுத்தமாக இருக்கும்போது மனம் உருகுதல் நடைபெற்று அதன் அடையாளமாக கண்களில் நீர் பெருகிவழியும். இந்த அனுபவத்தை பக்தி என்பர். பக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவனின் அருள் நிறைந்திருக்கின்றது என்பதனை உணர்தலே ஆகும். மனமானது யாதொரு அசைவும் இன்றி சுத்தமாக இருக்கையில் நெகிழ்வு தன்மையினை அடையும். அந்த நெகிழ்வு தன்மையால், எவ்வுயிரிலும் இறைவன் நீக்கமற விளங்குவதை உணரும் தகுதி அந்த மனதிற்கு ஏற்படும். அந்தத் தகுதியே ஈசுர பக்தி எனப்படும்.

      காணப்பா கோவிலென்றுந் தீர்த்தமென்றுங்
            காசினியிற் செம்பால் விக்கிரகமென்றும்
      பேணப்பா உலகத்தோர் தங்களைத்தான்
            பேய்போல திரிந்தலையப் படைத்தாரீசன்
      நாணப்பா தேவதையைப் பணிந்திட்டாலும்
            நதிகளெல்லாந் தேடிப்போய் முழுகினாலும்
      ஊணப்பா உள்வீட்டுக் குள்ளிருக்கும்
            ஒளியுள்ள வத்துவைத்தா னறிந்துகாணே.

பக்தியுடையவர்கள் ஊணுடம்பிலுள்ள உயிர்களில் இறைவன் நிறைந்திருப்பதை அறிவார்களே  அன்றி கோவில்களிலும் தேவாலயங்களிலும் பள்ளிவாசல்களிலும் அறியார்கள். ஆகவே இங்கே மனம் என்பது உயிர்கள் மீது பக்தி கொள்கிறது. மனத்தினால் ஆண்டவன் மீது பக்தி செலுத்த முடியாது. ஏனெனில் மனத்தினால் உயிர்களை அறிவது போல் இறைவனை அறிய முடியாது. எனவே மனத்தினால் பக்தியைத்தான் செலுத்த இயலும். அன்பினை செலுத்த முடியாது. இறைவனை அடையவும் அறியவும் அன்புதான் வேண்டும்.

22. மனதினால் அன்பு செலுத்த முடியாதெனில் வேறு எதனால் அன்பு செலுத்த இயலும்?

       ஆன்மாவினால் மட்டுமே அன்பு செலுத்த இயலும். அதுவும் அந்த அன்பானது இறைவனிடம் மட்டுமே செலுத்துவதாக உள்ளது. மனம் - அறிவுடன் செயல்படுவதை 'மன அறிவு' என்கிறோம். ஆன்மா - அறிவுடன் செயல்படுவதை 'ஆன்ம அறிவு' என்கிறோம். மன அறிவினால் இந்திரியங்கள் செயல்படுவதை நாம் மேலே கண்டோம். 'சுத்த மன அறிவால்' பக்தி நிலை அடைவதையும் நாம் கண்டோம்.

      ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம உருக்கம் என்பதே அன்பாகும். நாம் ஒருவருக்கு கடிதம் எழுதும்போது, 'அன்புள்ள நண்பர்..." என்று தொடங்கி எழுதுவோம். இங்கு அன்புள்ள என்றால் என்னிடம் அன்பாகவோ அல்லது உங்களிடம் அன்பாகவோ இருப்பதாக பொருள் கொள்ளுதல் கூடாது. அன்பு என்றாலே அது இறைவனிடம் மட்டுமே செலுத்தத்தக்க ஒன்றாக உள்ளதால், "இறைவனிடம் அன்புள்ள நண்பர்..." என்றுதான் அதற்கு பொருள். அப்படி இறைவனிடம் அன்பு செலுத்துவதற்கு ஆன்மாவால் மட்டுமே முடியும். அந்த அன்புதான் ஆன்ம நெகிழ்ச்சியாகவும், ஆன்ம உருக்கமாகவும் வெளிப்படும்.

      இவ்வாறு நமது ஆன்மாவானது நமது அறிவுடன் கூடி, ஆன்ம அறிவாக விளங்கி கடவுளை அடைகிறது. ஞானிகளுக்கு 'சுத்த மன அறிவும்', 'ஆன்ம அறிவும்' ஒருங்கே செயல்பட்டுக்கொண்டே இருக்கும். 'மன அறிவு' அவர்களிடம் முற்றிலும் செயல்படாது. ஆடாதீர், சற்றும் அசையாதீர், வேறொன்றை நாடாதீர், பொய்யுலகை நம்பாதீர் என்று அவர்கள் தமது மனதிற்கு கட்டளையிட்டு அதனை என்றும் அசையா நிலையில் வைத்திருப்பர். மனதின் அசைவுதான் பிறப்பு இறப்பிற்கு காரணம் என்ற இரகசியத்தை ஞானிகள் வெளிப்படுத்தினார்கள்.

      சுத்த மன அறிவினால் உண்டாகும் பக்தியால்தான் ஜீவகாருண்யம் உண்டாகின்றது. இந்த சுத்த மன அறிவு பெண்களிடத்தும், இறைவனைக் காணக்கூடிய ஆன்ம அறிவு ஆண்களிடத்தும் விளங்குகின்றது. எனவே ஒருவன் இறைவனை அடைய பெண் தன்மையும் தேவைப்படுகின்றது. ஆண் தன்மையும் தேவைப்படுகின்றது. இந்த உண்மையினை வெளி உலகிற்கு எடுத்து இயம்பியவர் வள்ளற்பெருமான். காடுகளில் கடுந்தவம் புரிந்து கடின சித்தர்களாய் இருப்பவர்கள் எல்லாம் மேற்சொன்ன பெண் தன்மையினை விடுத்து ஆண் தன்மையுடன் நடந்துக்கொண்டதால் அவர்களால் இறைவனை அடைய முடியாமல் இறந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அவரவர்களின் கடினத்தன்மைக்கிணங்க அடுத்தப் பிறவியில் அவர்கள் மனிதனாகக்கூட பிறக்க முடியாமல் காட்டு விலங்கினங்களாக பிறந்திருப்பதாக திருவருட்பா கூறுகின்றது.

      சுத்த மன அறிவால் உண்டான பக்தியால் ஜீவகாருண்யம் உண்டாகும். ஜீவகாருண்யத்தால் அருள் உண்டாகும். அருளால் அன்பு உண்டாகும். அருளும் அன்பும் ஆன்ம அறிவினால் உண்டாகும்.

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையா லடைவதரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தாலல்லது வேறுவகையால் வாராது. ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில்: கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னியவுயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம். இதுதான் றையின்பம் பெறுவதற்கு
முதற் படியாயிருக்கின்றது.

 

 23. ஆன்ம அறிவு செயல்படுவதை நமது இந்திரியங்கள் அறியுமா?

அறியும்.

மன அறிவினால் பக்தி உண்டாகும். ஆன்ம அறிவினால் அன்பு உண்டாகும். ஆன்ம நிலையானது அன்பின் வழியாக உள்ளது. அதனுடைய இயற்கை குணம் அன்பு என்கிற தயவு.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
                         (திருக்குறள்-80)

உயிர் நிலையானது அன்பின் வழிபட்டது என்று வள்ளுவபெருமானும் கூற கேட்கிறோம். அப்படிப்பட்ட அன்பினை / ஆன்ம அறிவினை நாம் செயல்படுத்தாவிட்டால், நமது உடம்பானது தோல் என்ற உறையினால் மூடப்பட்ட எலும்பினால் ஆன பிணக்கூடாகவே காட்சிதரும் என்கிறார் வள்ளுவபெருமான்.

இந்த பிணக்கூடான இந்திரியங்கள் மன அறிவின்பால் சிக்கி பல்வேறு இன்னல்களையும் இன்பங்களையும் துய்க்கின்றன. சித்தம், மனம், ஆங்காரம், புத்தி என்கிற அந்தகரண சுத்தியினால் நமது மன அறிவினை பக்தி நிலைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். இந்த பக்தியினால் நமக்கு அருள் உண்டாகும். இந்த அருளை பெற்றால்தான் நாம் ஆன்ம அறிவிற்கு அதாவது அன்பின் வழிக்கு செல்ல முடியும்.

அவ்வாறு நமது உயிரானது அன்பின் வழிக்கு சென்றுவிட்டால், அந்நிலையில் நமது உடம்பானது "அன்புதோல் போர்த்த உடம்பாக" மாறிவிடும். இதனையே நமது வள்ளற்பெருமான் முத்தேக சித்தி என்பார். அன்பு தோல் போர்த்திய உடம்பிற்கு மரணம் என்பதே இல்லை. இறுதியாகத் தனக்கென்று ஒரு நித்திய தேகத்தை எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். இத்தேகத்துடனே என்றும் உயிர்ப்புடன் இருப்பார்கள். இனி வேறு ஒரு தேகம் இவர்களுக்கு கிடையாது. இத்தேகத்தைவிட்டு இவர்களது உயிரும் தனித்து இருக்காது.  புறத்தில் கண்களுக்குக் காட்சிதரும் இவர்களது உடம்பு மற்றவர்கள் காணா வண்ணம் மறைவுபடும். அவர்கள் நினைத்த நேரத்தில் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும்.  அப்படிப்பட்ட மரணமில்லா நிலையில் உள்ள அந்த உடம்பில் ஆன்ம அறிவானது செயல்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்களது உடம்பில் உள்ள இந்திரியங்கள் எந்தவித விஷயங்களையும் பற்றாது. எனினும் அவர்கள், அவர்களது அன்பினால் ஒன்றை நினைக்கும்போது அதனை அவர்களது இந்திரியங்கள் உடனே அவர்கள் நினைத்ததை செய்து முடிக்கும்.   
மற்ற நேரங்களில் "சும்மா இருக்கும் சுகம்" என்ற தத்துவத்தில் அவர்களது ஆன்ம அறிவு செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

அவர்களது கண்கள் இருந்த இடத்திலிருந்தே அண்டத்தையும் பார்க்கும் பிண்டத்தையும் பார்க்கும். அண்டங்களில் பிண்டங்களில் எவ்விடத்திலிருந்து யார் பேசினாலும் அவர்களது காதுகள் இருந்த இடத்திலிருந்தே அதனை கேட்கும். எவ்விடத்திலிருக்கும் சுவைகளையும் அவர்களது நா, இருந்த இடத்திலிருந்தே சுவைத்து அறியும். எவ்விடத்திலிருக்கின்ற பரிசங்களையும் அவர்களது உடம்பு இருந்த இடத்திலிருந்தே தொட்டு அறியும். எவ்விடத்திலிருக்கின்ற வாசனைகளையும் அவர்களது நாசி இருந்த இடத்திலிருந்தே முகந்தறியும். எவ்விடத்திலிருக்கின்றவர்களுக்கும் அவர்களது கைகள் இருந்த இடத்திலிருந்தே கொடுக்கும். எவ்விடத்திலும் அவர்களது கால்கள் இருந்த இடத்திலிருந்தே நடக்கும். அவர்களது வாக்கு, எவ்விடத்திலிருக்கிற எவ்வெவர்களோடும் இருந்த இடத்திலிருந்தே பாசும். மற்ற இந்திரியங்களும் இருந்த இடத்திலிருந்தே எவ்விடத்தும் ஆனந்தத்தில் கூடும்.

எனவே ஆன்ம அறிவு செயல்படுவதை இந்திரியங்கள் அறியும்.

24. மரணமில்லா பெருவாழ்வு கிடைத்த வள்ளற்பெருமானுக்கு இந்திரியங்கள் உண்டா?

மரணமில்லா பெருவாழ்வு என்பதே நமது இந்திரிய தேகத்தை அழிக்காமல் வைப்பதுதானே. அப்படியிருக்க இந்திரியங்கள் இல்லாத தேகங்கள் கிடையாது. வள்ளற்பெருமான் காற்றோடு கரைந்துவிட்டார், நெருப்போடு ஜோதியாக மாறிவிட்டார், வானோடு அல்லது இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார் என்று நாம் சொல்வதில் உண்மையில்லை. "இராமலிங்கம்" என்று பெயர் பெற்ற அந்தத் திருத்தேகத்தை விட்டு அவரால் இனி எங்கும் தனித்து செல்லமுடியாது. அதாவது அவரது உடலைவிட்டு அவரது உயிர் மட்டும் தனித்து செல்ல முடியாது. அவரது உடலோடு அவரது உயிர் இரண்டற கலந்துவிட்டது. அதுதான் மரணமில்லா பெருவாழ்வு. ஆகவே வள்ளற்பெருமான் அவரது இந்திரியங்களோடுதான் என்றும் இருக்கிறார்.

                                     (தொடரும்...)