Friday, March 11, 2016

"கிறுஸ்துவம்" - மார்ச் -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "கிறுஸ்துவம்" - மார்ச் -2016

                                               MARCH -2016

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல்-23

அன்பர்களே! இவ்வுலகில் சாகாதவன் யாரேனும் இருக்க முடியுமா? பிறந்த  அனைவரும் ஒரு நாள் சாகப்போகின்றார்கள். அப்படி என்றால் சாகப்போகும் நாமெல்லாம் துன்மார்க்கிகள் தானா?

ஆம்... மேற்காணும் ஆண்டவரின் வசனம் அப்படித்தானே சொல்கிறது. நான் பிறந்ததில் இருந்து இது வரை காவல் நிலையத்திற்குச் சென்றதில்லை, வழக்காடு மன்றத்திற்கும் சென்றதில்லை, எந்த ஒரு வம்பிற்கும் செல்வதில்லை, யாரையும் ஏமாற்றியதில்லை, லஞ்சம் வாங்கியதில்லை, கொலை செய்ததில்லை, புலால் உண்பதில்லை, பொய் சொன்னதில்லை, பெண், பொன், மண் மீது ஆசை வைத்ததில்லை, மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை, பிற உயிர்களுக்கு தீங்கு செய்ததில்லை, பொய் சொன்னதில்லை, மதம், சமயம், சாதிகளிலே பற்று உடையவனில்லை, அரசியல் சுத்தமாக எனக்குத் தெரியாது இப்படி எந்த பாவ காரியமும் நான் செய்யாமல் இருப்பினும் நான் சாகத்தான் வேண்டுமா? மற்றவர்கள் அனைவரும் எனது செய்கையினால் என்னை மிக நல்லவன் என்றே புகழ்கிறார்கள், எனினும் நான் ஒரு நாள் இறக்கத்தான் போகிறேனா?, அப்படி இறந்தால் நானும் மற்றவர்களைப் போல துன்மார்க்கி தானா?

அய்யோ!!... ஆண்டவரே நான் மற்றவர்களைப் போன்று துன்மார்க்கி அல்லவே... எனினும் நான் ஏன் அவர்கள் அடையும் அந்த மரணத்தை அடைய வேண்டும்? இந்த வழிகளை விட்டு வேறு எந்த வழியில் சென்றால் நான் பிழைக்க முடியும்? மேற்கண்ட வழியல்லாது வேறு எவ்வழியில் நான் உங்களுக்குப் பிரியமாக நடந்துக்கொள்வது?   

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல்-32

எனதருமை மனிதா! உனது மனதை திருப்பு. அப்போதுதான் நீ மரணத்திலிருந்து பிழைக்க முடியும். மேற்காணும் நற்செய்கையின் மூலம் நீ பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. ஆனாலும் இன்னும் பாதிக்கிணற்றின் அளவினை நீ தாண்டினால்தான் பிழைக்க முடியும். அதற்கு நீ உனது மனதை சுத்த சன்மார்க்கப் பாதையில் திருப்ப வேண்டும். ஆண்டவராகிய கர்த்தராகிய நான் தற்போது மரணமில்லா பெருவாழ்வினை இவ்வுலகிற்கு சிதம்பரம் இராமலிங்கம் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளேன் என்பதை நீ இன்னுமா அறிந்திருக்கவில்லை. எனது தூதர் இயேசு பெருமான் மூலம் நான் சொன்ன இதே கருத்தை அதற்கு முந்தைய காலகட்டத்திலே தமிழகத்தில் திருவள்ளுவ பெருமான் மூலமும் சாகாக்கல்வியை கோடிட்டுக் காட்டியுள்ளேன். எனவே வழி இருக்கிறது. நீ மனந்திருந்த வேண்டும் அவ்வளவே.

இவ்வழியின் மூலம்தான் நீ சாகாக்கல்வியை பயில முடியும். பயிற்சியின் முடிவில் நீ மூன்று வகை தேகங்களையும் பெற்றுக்கொண்டு என்னைப்போலவே சாகாமல் இருக்க முடியும். மதம், சமயம், சாதி ஆகியவைகள் இதற்கு முக்கியத் தடையாக இருக்கின்றன. ஆனால் நீ இதனை முன்னரே கடந்துவிட்ட படியால் உனக்கு சாகாக்கல்வி நிச்சயம் கைகூடும். முயற்சி செய். உன்னருகில் நான் இருக்கிறேன். என்னால் உனக்கு நன்மை கிடைப்பது உண்மை. சாகாதவனே சன்மார்க்கி. மற்ற யாவருமே துன்மார்க்கிகள்தான்.

சாகாக்கல்வியில் முக்கியமாக நீ கற்க இருப்பது ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் இவற்றுடன் கூடிய ஒருமை, அதனால் வரக்கூடிய தயவு. அவ்வளவுதான் நீ இன்னும் கடக்கூடிய பாதிக்கிணற்றின் தூரம். கர்த்தர் என்ற பெயர் கொண்ட நான் ஆண்டவனா அல்லது ஆண்டவன் என்று மற்ற பெயர்களைக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆண்டவர்களா? என்று பேதம் பார்ப்பதை விட்டுவிடு. நீயே ஆண்டவன் என்று அனுபவிக்க வைப்பது சுத்த சன்மார்க்கம். ஆம்... சாகாக்கல்வி பயில இப்போதே மனந்திரும்புங்கள். சாவை நான் விரும்புவதில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.