Friday, March 11, 2016

"புத்தம்" - பிப்ரவரி -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "புத்தம்" - பிப்ரவரி -2016

FEBRUARY - 2016

                                                                 ஆன்மீக வாரிசு

ஒரு நாள் போதிதர்மர் தனது முதன்மைச் சீடர்கள் எனக்கருதிய நால்வரை அழைத்தார். எனது ஆன்மீக வாரிசாக உங்கள் நால்வரிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கப்போகின்றேன் என்றார்.

‘நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க இருக்கிறேன்.’

‘கேளுங்கள் குருவே!’

‘நீங்கள் என்னிடமிருந்து இத்தனை வருடங்களாக என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகக் கூறுங்கள்?’ என்றார்.

முதல் மாணவன் தாவ்ஃபூ (Dàofū) கூறினார். ‘புனித நூல்களால் புத்த மதத்தை மட்டுமே அறிய முடியும்; அதனால் நாம் புனித நூல்களை மட்டும் கற்று அத்துடன் கட்டுண்டு விடக்கூடாது. அதேசமயம் இந்நூல்களை விடுத்து எதுவும் செய்யவும் கூடாது.’

‘இதுதான் நீ அறிந்திருக்கிறாய் என்றால், நீ புத்த மதத்தின் தொடக்கத்தை மட்டுமே கற்றுள்ளாய், என் தோலைக்கூட கடக்கவில்லை. இன்னும் நீ கடக்க வேண்டிய பாதை அதிகம்.’

இரண்டாவதாக, தாரணி (Dharani) எனும் பிக்குணி தொடர்ந்தார். ‘தங்களது போதனைகள் எங்களை புத்தரது நிலத்துக்கே அழைத்துச் சென்றது. புத்தரை நேரில் கண்டு அவர் எப்படி விழிப்படைந்தார் என்று படிப்படியாக அவரிடமே கற்றதைப்போல் இருந்தது. அதனை தரிசித்ததே விழிப்படைந்த நிலையை எங்களுக்கு நல்கியது.’

‘நீ பரவாயில்லை, என் தசையை அடைந்துவிட்டாய், அடுத்து?’

‘நீர், நிலம், குளிர், வெப்பம், வானம், பூமி என நாம் பார்ப்பவை அனைத்தும் வெறுமையின் ரூபங்கள். பார்த்தல், தொடுதல், கேட்டல் என நாம் உணர்பவை அனைத்தும் மாயை. உண்மையில் ‘இருப்பு’ என்பதே இல்லை. நீங்கள், நான் என அனைவரும், அனைத்தும் மாயத் தோற்றங்களே, பிம்பங்களே. அழிந்து போகக் கூடியவர்களே’ என்று முடித்தார் மூன்றாம் சீடர் தாவ்யூ (Dàoyù).

‘மிக்க நன்று, நீ என் எலும்புகளை அடைந்துவிட்டாய்!’ என்று கூறி போதிதர்மர் அடுத்து தன் விருப்பத்துக்குரிய சீடன் ஹூய்கீ என்ன கூறப்போகிறான் என்று பார்த்தார்.

ஹூய்கீயிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. எழுந்துநின்றான். கைகூப்பினான். நேரே சென்று போதிதர்மரின் காலில் விழுந்தான். அவ்வளவு தான்.

போதிதர்மர் நெகிழ்ந்தே போனார். ‘நீ என் ஆன்மாவை அடைந்துவிட்டாய், நான் எடுத்துவந்த ஆன்மா தற்போது உன்னிடம்’ என்று கூறி தன் உடைகளையும், பிச்சைப் பாத்திரத்தையும், லங்கவர்த்தன சூத்திரத்தையும் ஹூய்கீயிடம் அளித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

ஹூய்கீயின் இச்செயலுக்கு பொருள் என்ன? போதிதர்மரின் செயலுக்கும் வார்த்தைக்கும் என்ன அர்த்தம்?

ஹூய்கி மட்டுமே புத்தத்தைப் பற்றி அறிந்ததைவிட, தம்முடைய குருவின் கலாச்சாரம் என்ன என்பதனை மிகத்துல்லியமாக அறிந்திருந்தான். மேலும் முன்னவர்கள் மூவரும் கூறிய பதில்களைவிட நான் ஒன்றும் புதியதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்பதனையும் அறிந்திருந்தான். எனவே எதுவும் பேசாது தமது குருவின் காலில் விழுந்து வணங்கினான்.

இதனைக் கண்ட போதிதர்மர், இந்த சீடனுக்கு என்ன தெரிந்திருக்கிறது? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு குருவை தமக்கு சாதகமாக எவ்வாறு மடக்க வேண்டும்! என்று மிக நன்றாகவே தெரிந்திருக்கின்றது. எனவே எனது காலில் விழுந்து வணங்கிய நான்காவது சீடனே எனக்கு அடுத்த ஆன்மீக குரு என்று அறிவித்துவிட்டார்.

இக்கதையின் உண்மை நிலையினை நாம் இன்றைய தமிழக அமைச்சர்களின் செயல்பாட்டிலிருந்தும், சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் செயல்பாட்டிலிருந்தும் அறியமுடிகின்றது அல்லவா?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.