Friday, March 11, 2016

"மாதம் ஒரு மஹான்" - மார்ச்-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "மாதம் ஒரு மஹான்" - மார்ச்-2016
March -2016

                                                        மருதநல்லூர் சுவாமிகள்



    நாம பஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதநல்லூர் சுவாமிகள். சீதா கல்யாணம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கி, மருதநல்லூர் பாணி என்று போற்றப்படும் அளவிற்கு அதை மக்களிடையே பரப்பியவர். இவர் 1777-ஆம் பிறந்தார்.

    வேதத்துடன் ராமகாவியத்தையும் திரும்பத் திரும்பச் சொல்லி மனதில் பதிய வைத்துக்கொண்டார். இதனால், தன்னையே ஸ்ரீராமனாக பாவித்துக் கொண்டார். பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தைக்கு சிராத்தம் முதலான வைதிக காரியங்களில் அவருக்கு உதவி வந்தார். ஒரு நாள் பக்கத்து ஊருக்கு சிராத்தம் செய்ய சென்றபோது, ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது. சிராத்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரைப் பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்தபோது, நீங்கள் இன்று வெகு நன்றாக சிராத்தம் செய்து வைத்தீர்கள் என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை நினைத்து திகைத்து நின்று விட்டார். இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக்கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது, கூட்டம் பெருகியது.

    இது இவரது ஜப வாழ்க்கைக்கு இறையூராக அமைந்தது. எனவே, தம் சொத்துகளை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு ராமஜபம் செய்யும் ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திராவுக்கு வந்துவிட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ஸ்ரீராமன் பெயரைச் சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த பக்தி முனைப்பைக் கண்டதும், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து புதிதாக நாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார். அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, 'உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய்? உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய்', என்றார். உடனே, சுவாகிகள் மருதநல்லூர் திரும்பி விட்டார். ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்வாசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஓர் அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

    போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்ற போது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஒன்பது நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். பத்தாவது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்ம கர்ஜனையாக 'ராம் ராம்' என்ற நாமம் காதில் கேட்டது, அந்த இடமே மகான் ஜீவசமாதி அடைந்த இடம் என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் அங்கே ஒரு பிருந்தாவனம் அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்ற, 'உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார்' என்று சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார்.

    மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். 1871-ஆம் ஆண்டு ராம நவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்ததியில் இறைவனுடன் ஐக்கியமானார். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.