Friday, March 11, 2016

"சமணம்" - பிப்ரவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சமணம்" - பிப்ரவரி-2016

FEBRUARY - 2016


                                                           கற்பக விருட்ச உலகம்!

    ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாதர் இவ்வுலகில் தோன்றிய காலத்தை நாம், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்ப்போம். அப்போது இவ்வுலகம் "போக உலகம்" என்று அறியப்பட்டது. அதாவது கற்பக விருட்ச உலகம் என்று கூறலாம்.

    அன்றைய உலகம் ஒரே குடையின் கீழ் இயங்கியது. இந்தியாவே உலகின் முதல் பேரரசாக இருந்தது. போகஉலகம் என்கின்ற இந்த உலகத்தை,மொத்தம் 32,000 அரசர்கள் ஆட்சி செய்ததாகவும், இவர்களுக்கு எல்லாம் பேரரசராக "ஆதிநாதர்" என்கின்ற "ரிஷபநாதர்" ஆட்சி செலுத்தி வந்துள்ளார். ரிஷபநாதரின் பிறந்த நகரம் "அய்யோத்தி" ஆகும். இவரின் வம்சம் "இஷ்வாகு" என்பதாகும். இவர் தந்தையின் பெயர் நாபிராஜன்.தாயார் பெயர் மருததேவி என்பது ஆகும்.

    இவர் சிறப்பாக ஆட்சி செய்து வந்த போககாலத்தில், மக்கள் அனைவரும் உழைக்க
வேண்டிய அவசியம் இருக்காது. இதற்க்கு காரணம் கற்பகவிருட்சங்களே ஆகும். கற்பக விருட்சமானது மக்களுக்கு தேவையான உணவு, உடை, ஆபரணங்கள், மாட மாளிகைகளை தரும் வல்லமை படைத்தது. இதுதான் போககாலத்தின் அதிசயமாகும். ஒரு காலகட்டத்தில் கற்பக விருட்சங்கள் மறைய தொடங்குகிறது. இதனால் பசி முதலிய உணர்ச்சிகளை மக்கள் உணரத்தொடங்கினார்கள்.

    32000 அரசர்கள் மற்றும் மக்கள் உட்பட அனைவரும் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பேரரசரான ஆதிநாதரிடம் முறையிட்டனர். முக்காலத்தையும் உணர்ந்து கொள்ளும் சக்தி படைத்த ஆதிநாதர் பின்வருமாறு மக்களுக்கு தெரிவித்தார். 
போக உலகத்தின் மக்களே! எதிர் காலத்தில் சில லட்சம் ஆண்டுகளில், கலியுகம் ஆரம்பமாக இருக்கிறது. இதன் அறிகுறியாக இந்த போகவுலகின் கற்பக விருட்சங்கள் மறைய ஆரம்பித்துவிட்டது! ஆதலால்,மக்களாகிய நீங்கள் நான் கூறுகின்ற வழக்கத்தை கடைபிடியுங்கள் என்று கூறி உழைப்பின் முக்கியதுவத்தை உணர்த்தி உலகில் முதன் முதலில், விவசாயத்தை மக்களுக்கு கற்று தருகிறார். கலியுகத்திற்காக விவசாயத்தில் ஒன்பது வகையான தானியங்களை பயிரிடும் யுக்தியையும், பழதோட்டங்கள் அமைக்கும் வழிமுறைகளையும் கற்றுத்தந்த உலகின் முதல் ஞானியும், விஞ்ஞானியும் ஆவார்.
 
    தனது இருமனைவிகளான யஸஸ்வதி,சுனந்தை ஆகியோர்களுக்கு பிறந்த நூறு புதல்வர் மற்றும் இரண்டு புதல்விகளான பிராமி மற்றும் சுந்தரியையும் அழைத்து பின்வரப்போகும் கலியுகத்தின் கொடுமையான காலங்களை பற்றி விவரிக்கின்றார்.

    ஆதிபிரம்மா என்றும் சடைமுடிநாதர் என்றும் போற்றப்படும் ரிஷபநாதர் விஞ்ஞானம், கலை, கல்வி, இசை மற்றும் நாட்டியம் முதல் சிற்பசாஸ்திரம், காமசாஸ்திரம்,
நீதிசாஸ்திரம், தனுர்வேதம், நாட்டியம், நவரத்திங்களின் தன்மைகளையும் தம்முடைய குமாரர்களுக்கு உபதேசித்தார். அது மட்டும் அல்லாது எழுத்து, தொழில், வாணிபம் போன்ற ஆறுவகையான தொழில்முறைகளை கற்றுதந்த உலகின் முதல் ஆசான் ஆவார்.
 
    இதில் தனது மகளான ப்ராமிக்கு அகரம் முதல் அனைத்து எழுத்து இலக்கணங்களை தனது வலது கையால் கற்று தந்தார். அன்று முதல் இன்று வரை எழுத்துக்கள் அனைத்தும் வலதுபுறமாக வளர்ச்சியுற்றது. 

    இன்னொரு மகளான சுந்தரியை அழைத்து இடது கையால் கனித இலக்கணமான பூஜ்ஜியம் முதல் எண்கணித முறைகளை கற்று தருகிறார். இதன் காரணமாக எண்களின் மதிப்பு இடது புறமாக வளர்ந்தது (01,10,100,1000). இவர்களை தான் ஜைனர்கள் ஜினவாணிகளாக விழிபடுகிறார்கள். அதுமட்டும் அல்லாது நாடு, நகரம், கிராமம் என்ற அமைப்புகளை படைக்கிறார். தனது மூத்த மகனான பரதனுக்கு பொருளியல் மற்றும் சிற்பகலையையும், இளைய குமாரனான ரிஷபச்சேனர் என்கிறவருக்கு இசை பயிற்ச்சியை கற்றுத்தருகிறார். மற்றும் ஒரு மகனான அனந்தவிஜயன் என்பவருக்கு கட்டடகலையில் பயிற்ச்சி தருகிறார். இதைத் தான் சமணம் "போகபூமி" என்கின்ற பெயர் மறைந்து "கர்மபூமி" என்கின்ற பெயர் நிலைக்கப்பெற்றது என்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.