Friday, March 11, 2016

"கண்மூடி வழக்கம்" - மார்ச் -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "கண்மூடி வழக்கம்" - மார்ச் -2016

MARCH - 2016

                                                                  புனித நீராடல்

                                                            (தி.ம.இராமலிங்கம்)

"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
    சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே..." (திருவருட்பா-5566)

நம்மை பிடித்த சமய நெறியும், நம்மை சுற்றிலும் கேட்கும் சாத்திர இரைச்சல்களும், மதப் பற்றுதலும் நம்மை கண்மூடி வழக்கமான பல செய்கைகளை காலந்தோறும் செய்ய பழக்கப்படுத்தியுள்ளன. எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நாமும் அப்பழக்கத்தை செய்வோம் என்கிற கண்மூடிய உந்துதலினால், பலர் தாம் என்ன செய்கிறோம் என்பதனை சற்றும் சிந்திக்காமல் எண்ணற்ற சடங்குகளை செய்து வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் ஆறு, குளம், கடல்களில் புனித நீராடல் என்கிற இந்த கண்மூடி வழக்கமாகும்.

உங்கள் முன்னோர்களுக்கு திதி என்னும் சடங்கை செய்து கொடுக்கிறோம் என்று ஆற்றங்கரையில் அமர்ந்து ஒரு சிலர் அங்குவரும் மக்களிடம் சில சடங்குகளை செய்து வருவர். மக்களும் அதனை நம்பி நமது முன்னோர்கள் மேலோகத்தில் நல்ல முறையில் இருக்க வேண்டும், அவர்களது சாபம் ஏதேனும் இருந்தால் அது நீங்கப்பெற்று நாம் நல்ல முறையில் உலகியல் நடத்த வேண்டுமென்ற பயத்தில் சில சடங்குகளை அந்த சிலரின் மூலம் செய்வர்.

இப்படித்தான் ஒருமுறை காசியில் இந்த சடங்குகள் நடந்துக்கொண்டிருந்ததை கபீர்தாசர் பார்த்தார். அவர் உடனே அங்குச் சென்று என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற கேட்க, அதற்கு அந்த பிராமணர், இவர்களது முன்னோர்கள் மேலோகத்தில் பசியின்றி இருப்பதற்காக படையல் செய்கிறோம். இதற்கு திதி என்று பெயர். என்றார். இங்கு படைத்த படையல் மேலோகத்திற்கு எப்படி சென்று சேரும்? என்றார்.

உடனே அங்குள்ள ஆற்றில் இறங்கி தமது இருகரங்களினால் நீரினை அள்ளி அள்ளி மேலே விசிறி எறிந்தார் கபீர்.

அதனைக்கண்ட அந்த பிராமணர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க,

நான் எனது வயலுக்கு நீர் பாய்ச்சுகிறேன் என்றார் கபீர். 

உங்கள் நிலம் எங்குள்ளது?

இங்கிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது.

அங்குள்ள நிலத்திற்கு நீங்கள் இங்கிருந்து இறைக்கும் நீர் எப்படிச் செல்லும் பெரியவரே? என்றனர் அந்த பிராமணர்.

நீங்கள் படைக்கும் படையல் மேலோகத்தில் உள்ள எங்கள் முன்னோர்களுக்கு செல்லும் என்றால் இந்த நீரும் எனது வயலுக்குச் செல்லும்! என்று பதிலுரைத்தார் கபீர் பெருமானார்.

பதில் ஏதும் கூறமுடியாமல் உடனே அந்த அந்தனர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

கபீர் தாசரின் இந்த நடவடிக்கையில்தான் எவ்வளவு ஆழ்ந்த பொருள் உள்ளது என்பதை அறிய வேண்டும்.

"கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்ய வேண்டாம்" என வள்ளற்பெருமானும் இதனை வலியுறுத்தியுள்ளார்கள். எனவே மக்களாகிய நம்மை ஏமாற்றும் இப்படிப்பட்ட சடங்குகளை விட்டு நாம் உடனே வெளியேற வேண்டும்.

நாம் செய்த அல்லது செய்கின்ற பாவங்களின் அழுக்கு நமது உடலில் படிவதில்லை. அவ்வாறு உடலில் படிந்தால் நாம் இப்படிப்பட்ட புன்னிய நதிகளில் குளிப்பதின் மூலம் அந்த அழுக்கினை நீக்கிவிட முடியும். ஆனால் அவ்வழுக்கு நமது உயிரில் அல்லவா படிகிறது. எத்தனை பிறவிகள் எடுப்பினும் அது நம்முடன் கூட வருகிறதே. எனவே நமது உயிரில் கலந்த அந்த அழுக்கை போக்க வேண்டுமெனில் அதனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடித்தால் இந்த கர்மத்தை லேசில் ஒரே பிறவியில் கடந்துவிடலாம். அதை விடுத்து,

பாவிகளை நமது பிதா இரட்சிப்பார் எனவே மக்களே நீங்கள் இங்கே வாருங்கள். அல்லது இந்த குளத்தில், இந்த ஆற்றில், இந்தக் கடலில் இந்த நாளில் நீராடினால் பாவங்கள் சென்றுவிடும் எனவே நீங்கள் இங்கே வாருங்கள் என்ற மதங்களின் இரைச்சலை காதில் வாங்காதீர்கள்.

சென்ற மாதம் 22-ஆம் தேதி நமது தலைநகர் டில்லியில் குடிநீர் பற்றாக்குறையால் அன்றைய தினம் பள்ளிகளுக்கே விடுமுறை அளித்தது அம்மாநில அரசு. அந்த அளவிற்கு சொட்டு நீருக்காக தவம் கிடக்கிறார்கள் மக்கள். ஆனால் அதே நாளில் தமிழகத்தில் கும்பகோணத்தில் நாம் என்ன செய்தோம்? அந்த மாவட்டத்திற்கு நாமும் விடுமுறை அளித்தோம். எதற்காக? நீரில் மூழ்கி நமது பாவங்களை தீர்ப்பதற்காக! தீர்ந்ததா பாவங்கள்? தீர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஒரு புறம் சொட்டு நீருக்காக ஏங்குகிறோம். மறுபுறம் அந்த நீரின் மகத்துவம் தெரியாமல் அதனை ஒரு வார காலம் பூமியிலிருந்து இறைத்து குளத்தில் நிரப்பிக்கொண்டே இருந்தோம். எத்தனை கோடி லிட்டர் குடிநீர் இந்த மூட சடங்கிற்காக செலவானதோ தெரியவில்லை. அந்த புனிதக் குளத்தில் இயற்கையாகவே நீர் இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நீர் இல்லா குளத்தில் செயற்கையாக நீரினை நிரப்பிக்கொண்டு இந்த புனித நீராடல் சடங்கினால் நாம் பெற்ற பயன் என்ன என்று யாரேனும் சொல்ல முடியுமா?

கும்பகோணம் மகாமக புணித நீராட்டு முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அந்த புணித நீரினை பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு அதிர்ச்சியூட்டியது. அந்த புண்ணிய நீரில் மலக்கழிவு 28 சதவிகிதம், மூத்திரக் கழிவு 40 சதவிகிதம் கலந்து படுபயங்கரமான மாசுக்கு உட்பட்டிருந்தது அந்த புணித நீர். அங்கு காவலுக்கு ஈடுபட்டிருந்த 25000 காவல் பணியாளர்களுக்கு உடல் நலம் பாதித்திருந்தது. தொண்டை கரகரப்பு, தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் அவர்களுக்குத் தொற்றியுள்ளன கண்டுபிடிக்கப்பட்டது.

பாவங்கள் செய்து சட்டப்படி தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நமது நண்பர்களை எல்லாம் இந்தக் குளத்திற்கு கூட்டிச்சென்று அவர்களை புனித நீராட்டி இருந்தால் அவர்களது பாவச்செயல்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டிருக்குமா? நமது சடங்கின்படி மன்னிக்கப்பட வேண்டும். ஆகையால் அவர்களை எல்லாம் கூட்டிவந்து, குளிப்பாட்டி, பாவங்களைப் போக்கி அவர்களை விடுதலை செய்ய சொல்லுமா இந்த மதங்கள். அப்படி ஏன் சொல்லவில்லை. அப்படியென்றால் இந்த சடங்கின் உண்மை என்ன?      

உற்ற பாவங்கள் உயிர் அழுக்காம்அதை
சற்றே அனுபவித்து போக்குக - மற்றுநீ
கடல்நதி மூழ்க கரையுமோ ராமலிங்கமே
உடல் அழுக்காஅது உணர்.    815

ஆறுகுளம் மூழ்க ஓடுமே பாவங்களென்று
கூறுகின்ற மதங்களை கூப்பிடு - நாறுகின்ற
நதிகளின் தூய்மை நாட்டிட ராமலிங்கமே
விதியில்லை இவையா கதி.
                (இராமலிங்க அந்தாதி-815,817)

இவ்வுலகம் நான்கில் மூன்று பகுதி நீர் நிரம்பியது. இருந்தாலும் வானிலிருந்து மழை பெய்கிறது. அது போலவே நமது உடலும் நான்கில் மூன்று பகுதி நீர் நிரம்பியது. இருந்தாலும் நமது வானிலிருந்து மழை பெய்யவேண்டும். அந்த மழைதான் புனித நீர். அந்த நீரினால்தான் நமது பாவங்கள் தீர்க்கப்படும். அதுதான் உண்மையில் புனித நீராடல்.  

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
        நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
    நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்
        கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து...   (திருவருட்பா-5576)

நமது கண்களின் வழியே ஊற்றெழும் கண்ணீரால் உடம்பு நனைதல்தான் உண்மையான புனித நீராடல் என்பதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து, மக்களாகிய உங்களுக்கு உரைக்கிறது இந்த சன்மார்க்க விவேக விருத்தி. பாவம் செய்யாமல் இருப்பதே பாவ நீக்கத்திற்கு முதல் படி. "என்ன பாவம் செய்தேனோ?" என்கிற வள்ளற்பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் பட்டியலிட்ட பாவ வகைகளை உணர்ந்து நாம் அவ்வகையான பாவங்களைச் செய்யாமல் இருப்போம். எனவே வம்மின் உலகீர்... சத்திய உலகைப் படைப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.