Thursday, March 10, 2016

இராமலிங்க அந்தாதி - 801-900



அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  

                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

அறியேன் அனாதிநிலை அடைந்து பழம்
பறித்து உண்ணப் பாரேன் - தறித்துசாதி
மதங்களை விட மறந்தேன் ராமலிங்கமே
உதயம் என்றோ எனக்கு.

எனக்கான உலகில் அனாதி அருட்சத்தி
தனக்கான வேலை தான்காட்ட - ஞான
தேகம் எடுத்து தயவாகி ராமலிங்கமே
ஏகமென குறித் தாடுவேன்.

ஆடுகின்ற காற்றிலே அனந்த வண்ணமாய்
ஊடுறுவிய அணுவாய் இருந்து - சூடுடைய
பக்குவ ஆன்மாவாய்ப் பிறந்து ராமலிங்கமே
சக்கரை என சுவைத்தேன்.

சுவையான கலைஏழில் சப்த தாதுக்கள்கூடி
அவையான கருவில் அமர்ந்தேன் - கவை
இடுக்கில் பிறந்து உலகில்வர ராமலிங்கமே
எடுத்து என்னை ஏந்தினான்.

ஏந்திய இப்பிறப்பில் ஆன்ம அறிவுதந்து
மாந்ரீகம் புரிந்து மலர்ந்தாய் - சாந்த
புத்தி கொடுத்து பிள்ளைஎன ராமலிங்கமே
பொத்தி வளர்க்கும் புண்ணியன்.

புண்ணியர் உலகிடை பிறத்தல் அரிதே
எண்ணியே பார் எத்தனைபேர் - கண்
இரண்டால் தேட அகப்படார் ராமலிங்கமே
இரக்கம் இருந்தால் அறிவர்.

அறிவில் ஆன்மமும் அறிவில் மனமும்
குறிப்பது ஆண்பெண் கூறாம் - அறியாது
ரூபபேதம் பார்ப்பது ராகமே ராமலிங்கமே
ஆபத்து அரூபத்தில் இல்லை.

இல்லை என்னாது எல்லோர்க்கும் சாகாக்
கல்வியை அள்ளிக் கொடு - பொல்லாத
வன் நோய்கள் வந்தாலும் ராமலிங்கமே
என்று சொன்னால் ஓடும்.

ஓடுடைய முட்டை உடைத்து உண்பார்
கூடுடைய உயிரைக் குலைத்து - மாடு
ஆடுமீன் தின்பார் இவரை ராமலிங்கமே
காடுடைய மிருகமாய்க் காண்.

காணும் கண்ணிரண்டில் காட்டாத ஒளி
பூணுமுன் தேகத்தை பார்க்கவே - தாணும்
முக் கண்ணால் முயன்றும் ராமலிங்கமே
அக்கண்ணும் காணா தாச்சு.                                    810  

ஆச்சரியம் பாரீர் ஆக்கையை அழிக்காது
மூச்சும் விடாது மரணமில்லா - பேச்சை
உலகில் விதைத்த உத்தமன் ராமலிங்கமே
பலபட வந்தருள்வான் பார்.

பார்க்கவே காத்திருக்கும் பாவைக்கு காலம்
ஓர் கணக்கில்லை ஊழிதோறும் - நேர்க்காண
நான் ஆவலுடன் இருக்கையில் ராமலிங்கமே
வான் முகமாய் வந்தாய்.

வந்துஎன் திரைகள் விலக்கி சிற்சபையும்
சொந்த மாக்கி சுத்தசன்மார்க்க - பந்தம்
கற்பித்து என் கோயிலான ராமலிங்கமே
நற்றுணை யாவதுநின் நாமம்.

நாமம் நவின்றோர்க்கு நற்ப் பயனாய்
ஏமசித்தி வழங்கி ஆள்வாய் - காம
கோபப் பயல்கள் குலைய ராமலிங்கமே
ஆபத்து நீங்க உற்றேன்.

உற்ற பாவங்கள் உயிர் அழுக்காம்அதை
சற்றே அனுபவித்து போக்குக - மற்றுநீ
கடல்நதி மூழ்க கரையுமோ ராமலிங்கமே
உடல் அழுக்காஅது உணர்.

உணர்ந்து உயிர் உறவாகி உன்னையே
மணந்து கலந்து மலர்ந்தேன் - மறையே
என்னுயிர் இறையே அன்பு ராமலிங்கமே
என்விதி ஓடுமுன் ஆற்றில்.

ஆறுகுளம் மூழ்க ஓடுமே பாவங்களென்று
கூறுகின்ற மதங்களை கூப்பிடு - நாறுகின்ற
நதிகளின் தூய்மை நாட்டிட ராமலிங்கமே
விதியில்லை இவையா கதி.

கதியாம் விதியாம் கர்ம வினையாம்
பதியாம் பக்தியாம் பாராய் - சதியாம்
மதப் பிரச்சார மாயையில் ராமலிங்கமே
நிதமும் சிக்கி நிற்கிறார்.

நிற்பதற்கு அரிதான நின்நிழல் அடியினை
சிற்றம்பல நடுவில் சூட்டினாய் - கற்பகக்
குகைஎன நானதைக் கண்டு ராமலிங்கமே
நகைஎன அணிந்து நடிக்கிறேன்.

நடிக்கும் எழுத்தில் நாயக உன்வடிவினை
வடித்திடக் கண்டு வியந்தேன் - குடிக்கும்
அமுதம் யாவும் ஆருயிரான ராமலிங்கமே
குமுத நிலையாகிக் கலந்தான்.                                 820  

கலக்கும் கல்வியை கற்றிலேன் இன்னும்
மலத்தில் சுழன்று மடிகிறேன் - நலத்தை
நாடி ஓடிலேன் நண்பனாய் ராமலிங்கமே
பாடிய அருட்பாவைப் போற்றிலேன்.

போற்றும் மனிதப் பிறவியை எடுத்திலேன்
கூற்றுடுன் குடிக் கொண்டேன் - சாற்றும்
சாத்திரக் குப்பை சார்ந்தேன் ராமலிங்கமே
பாத்திரம் என்றறியாத பாவியேன்.

பாவி உடம்பு பழுதாகுமோ எல்லோரும்
கூவி அழுதுதூக்கும் கூடாகுமோ - காவிக்
கட்டியக் கூடும் காணாதே ராமலிங்கமே
கூட்டிய முத்தேகக் கூடு.

கூடுவதற்கு நீயில்லை களித்துப் பேசி
ஆடுவதற்கும் மன மில்லை - பாடும்
பாட்டை கேட் பாருமில்லை ராமலிங்கமே
காட்டை நோக்கினும் கதியில்லை.

கதி தருவாயென காரிருளில் கலங்கியே
விதியென இருக்க வந்தேனோ - மதி
ஒன்றிருக்க நான் உன்னை ராமலிங்கமே
என்ற ழைத்து எழுதுவேன்.

எழுத்து எனக்கில்லை எழுது வாருமில்லை
அழுதாலும் ஏனென்பா ரில்லை - பழுத்த
மேனி படுக்கப் பார்க்குதே ராமலிங்கமே
ஏனிந்த வேதனை எனக்கு.

எனக்கென யாருமில்லை அகத்தில் எழும்
மனதினில் நீயுமில்லை மாய - இனத்தில்
உறவுற ஓர் உயர்வில்லை ராமலிங்கமே
இறக்கவும் உரிமை இல்லை.

இல்லை என்பதையே உண்டாக்கி உலகில்
கல்லையே கற்பனைக் கடவுளாக்கி - எல்லை
இல்லாதவன் என்றும் எழுதி ராமலிங்கமே
பொல்லாத வேதம் பாராய்.

பாரெல்லாம் பொய்யே பழக்குவித்து பதியின்
சீரெல்லாம் குலைத்து சாமியென்றார் - ஊரெல்
லாம் அதையேஉண்மை என்றால் ராமலிங்கமே
தாம் உரைத்தது தடைதான்.

தடைசெய்ய அறியேன் தினமும் தனத்துடன்
இடை தழுவலேஇன்ப மென்றிருந்தேன் - சடை
முறுக்கில் சிக்கி முழுகினேன் ராமலிங்கமே
மறுத்தேனுனை நினைக்க மறந்தேன்.                           830

மறப்பின்றி உன்னையே மனமாற நினையேன்
இறப்பின்றி இருக்கும் இடமறியேன் - சிறக்கும்
சுத்த சன்மார்க்க சுகமறியேன் ராமலிங்கமே
சித்தர் மகனென்ற சொல்லறியேன்.

சொல்லும் வகையும் செய்யும் செயலும்
கொல்லா நிலையும் காணேன் - பொல்லா
சமயக் குழியுள் சீரழிந்தேன் ராமலிங்கமே
கமலமென இன்று கண்டேன்.

கண்ணிரு மணியாகக் கருமுலை ஒன்றையே
எண்ணி மகிழ்ந்திருந்த அவலன் - வண்ணச்
சேலை கட்டியோர்பின் சென்றேன் ராமலிங்கமே
ஓலை வருமே என்றறியேன்.

அறிந்தும் குற்றமே அடுக்கடுக்காய் செய்கிறேன்
குறிக்குழியுள் விழுந்து களித்தேன் - வெறியாய்
பெண்பேய்ப் பிடித்தப் பித்தன் ராமலிங்கமே
உண்மைத் தெரிந்தும் அழிந்தேனே.

ழியும் உடலையே அழிக்காம லிருக்கும்
வழிமுறை ஏதும் விழையேன் - இழிந்த
மதாச் சாரத்தில் மயங்கினேன் ராமலிங்கமே
சிதாகாச மென சிந்தித்திலேன்.

சிந்தனை இன்றி சிற்சபை இடத்தே
மந்தனாய் நானும் முயல - எந்தை
இருக்கு மிடம் அறிந்து ராமலிங்கமே
உருகு மிடம் அறிந்தேன்.

அறிந்தத் தத்துவ அறிவெல்லாங் கடந்துமே
லேறியும் காருண்யம் இல்லாயே - பறித்தப்
பழமென கீழேவிழப் பார்க்க ராமலிங்கமே
வழக்கைத் தீர்த்து வைத்தான்.

வைத்தியம் பார்த்தே வையத்தில் நலிந்த
பைத்தியமாய் இற்று போனேன் - கைத்
திறமின்றி நோயைத் தழுவி ராமலிங்கமே
அறமின்றி வாழ்ந்தேன் அந்தோ.

அந்தோ என்செய்வேன் ஆருயிர் சென்றால்
எந்தை அரசை நினைப்பனோ - சந்தைப்
படிப்பால் மறப்பனோ புகழ்ந்து ராமலிங்கமே
அடிஎன கட்டி அணைப்பனோ.

அணைக்க அறியேன் அடிக்கவும் அறியேன்
புணையவும் அறியாத பாழும் - பணை
மரமாய் இருக்கும் மடையேன் ராமலிங்கமே
நரகமும் என்னை நாடாது.                                     840

நாடாத செயலெல்லாம் நாடினேனே யாரும்
கூடாத அணுவினுள் கூடினேனே - பாடாத
பாட் டெல்லாம் பாடினேனே ராமலிங்கமே
காட்டாத காட்சியும் கண்டேன்.

கண்டது நித்தியமே காணாத சத்தியமே
எண்ணாத மந்திரமே ஏட்டில் - பண்ணாத
எழுத்துருவே சாகாத எங்கள் ராமலிங்கமே
பழுக்காத சுவைமிகுப் பழம்.

பழந்தின்று கொட்டையைப் பாசத்துடன் தந்து
நிழல்நான் என்று நிற்கதியாய்விட்டு - பழனி
ஆண்டி கோவணத்தையும் உருவி ராமலிங்கமே
பாண்டி யாடுவாள் பெண்.

பெண்ணன்றி உலகினில் பேய் என்பதில்லை
கண்ணன்றி காட்சி களுமில்லை - எண்கள்
அன்றி மாமாயையு மில்லை ராமலிங்கமே
உன்னை யன்றி உண்மையில்லை.

உண்மை சுகமென உறவுக் கிளியென
தண்ணீர் நானெனத் தருவாள் - எண்ணி
குடிக்க தாகம் குறையாதே ராமலிங்கமே
மடிக்கு உலகம் மடியும்.

மடிசுவைத்தக் காலம் மறுபடியும் வந்தால்
அடிபிடித்து விடும் அவலமும்வரும் - தடி
குனிந்து நிற்கக் கற்றால் ராமலிங்கமே
மனிதன் என மீளலாம்.

மீளுதல் எங்ஙனமோ மீன்விழிப் பாவையவள்
ஆளுகையில் அடிமை என்றானேன் - நாளும்
அவள் பேச்சுக்கு ஆடிக்கொண்டு ராமலிங்கமே
தவநெறி விட்டுத் தவறினேன்.

தவறென்று அறியேன் தாய்ச்சொல்லைத் தட்டி
அவள் பின்னெ அலைந்தேன் - சவலைநெஞ்
சத்தால் குடித்து சீரழிந்தேன் ராமலிங்கமே
சத்தியப் பாதை சாரேன்.

சார்உலக வாதனை சீரழிக்கும் சோதனை
யார் உரைக்கும் போதனைஇது - ஓர்
சுத்த சன்மார்க்கரின் சாதனை ராமலிங்கமே
நித்திய கால நாதன்.

நாதநிலைக்கு மேல் நாயகி அவளிருக்க
போதநிலைப் பெற்று புணர்ந்தேன் - பாத
நிலை இரண்டும் நடனமாட ராமலிங்கமே
கலை எல்லாம் கற்றேன்.                                      850

கற்றறியாதான் சொல் கேட்டு நடந்தால்
சிற்றறி வாளனும் சீஎன்பான் - பெற்ற
மதக் கல்வியை மதியாதே ராமலிங்கமே
சத மாக்குவது சாகாக்கல்வி.

சாகாது இருந்தென்ன சிற்சபை கண்டென்ன
போகாப் புனலென்ன புரியாது - வேகாக்
காலென்ன காலன் கணக்கென்ன ராமலிங்கமே
பாலென்று கள்ளைப் புகழ்ந்தேன்.

புகழாய் வாழ்ந்தென்ன பொன்நகை பெற்றென்ன
இகத்திலே ஓர்நாள் இறப்பும்வருமே - அகத்தில்
அன்பு ஓங்கி அன்புமயமானால் ராமலிங்கமே
உன்நிலைப் பெற்று உயரலாம்.

உயர பறக்கலாம் உண்மைத் தெளியலாம்
தயவு நிலை தான்பெறலாம் - பயமின்றி
அண்டம் கடந்து ஆளலாம் ராமலிங்கமே
பிண்டத் துள் புகுந்தால்.

புகுந்துப் பார்க்கையில் புறமும் அகமும்
பகுத்துச் சொல்லப் படியாதே - லகுவாய்
இரண்டும் ஒன்றி இருக்குமே ராமலிங்கமே
இரக்கமும் உயிரும் ஒன்று.

ஒன்றினும் ஒன்றிது இரண்டற்ற ஒன்றிது
சன்மார்க்க சங்க ஜோதியது - தன்னிலும்
ஒன்றியது ஒரே ஒருமையது ராமலிங்கமே 
உன்னிலும் என்னிலும் உள்ளது.

உள்ளது அறிந்தும் ஊமையாய் இருந்தேன்
கள்வன் களவாட காடடைந்தேன் - துள்ளும்
இளமை முதுமை அடைந்து ராமலிங்கமே
வளமை இன்றி வீழ்ந்தேன்.

வீழ மாட்டேன் வளமை காண்பேன்
தாழ மாட்டேன் தயவால் - ஆழச்
சென்று தேக சித்தியை ராமலிங்கமே
வென்றது போல் வெல்வேன்.

வெல்லலாம் வெண் வானெங்கும் காற்றாய்ச்
செல்லலாம் அணுவின் சக்தியைச் - சொல்லி
அதனுள் பற்பல அண்டங்களை ராமலிங்கமே
விதவித மாய்செய்து வியக்கலாம்.

வியக்க ஒன்றும் வணங்க ஒன்றும்
இயக்க ஒன்று மில்லை - மயக்கம்
தெளிந்தால் முத் தேக ராமலிங்கமே
வெளியாய் தெரிய வரும்.                                     860

வரும் நாளெல்லாம் வள்ளல் வடலூர்
தருமச் சாலையில் தோன்றி - பொருள்
கொடுப்பார் வந்து காணீர் ராமலிங்கமே
எடுத்த முடிவுதா னிது.

இதுவே அதுவாகி அதுவே எல்லாமாகி
சதுரப் பேரருள் சகலமும் - மதுரக்கவி
படிப்போர்க்கு ஈவான் பார் ராமலிங்கமே
அடிமுடி இதுவென அருள்.

அருள்பெறவே துரும்பில் ஓர் துரும்பாகி
இருளில் தேடியலைந்து இறந்தேன் - திரு
முகங் கண்டு மலர்ந்தேன் ராமலிங்கமே
அகத்தில் இருக்க இறவேன்.

இறக்கும் தொழிலை இனிநான் செய்யேன்
உறக்கமும் மயக்கமும் ஓடின - பறந்து
செல்கிறேன் நானே செல்ல ராமலிங்கமே
எல்லையற்ற வெளி ஆனான்.

ஆனாலும் வடலூர் எல்லைக்கு வந்தால்
நானாக நானில்லா நொடியாகி - தானாக
இறைசக்தி கூடி இயக்குதே ராமலிங்கமே
மறையுதே உலக மாயை.

மாயையில் மயங்கி மாபாவி நிலையாகி
சாயையே சத்தியமென சார்ந்து - காயை
கனியென சுவைத்த காலை ராமலிங்கமே
தனித்து என்னை தடுத்தான்.

தடுத்த அக்கணம் தலைமீது அடிவைத்து
எடுக்காது என்னுள்ளே ஆழ்ந்து - நடுவுள்
நடனமும் காட்டி நீடுவாழ ராமலிங்கமே
இடமும் தந்தான் இங்கு.

இங்கே இன்பமேவி என்போல் யாவரும்
தங்கத் தேகத்தை தான்பெற்று - அங்கம்
அழிவின்றி என்று மிருக்க ராமலிங்கமே
வழி என்று விழித்திரு.

விழித் திருந்து வள்ளல் வரும்பாதையை
அழிக்காமல் தயவு உள்ளத்தால் - எழில்
குலுங்க விளக்கேற்றி காண ராமலிங்கமே
வலுவாய் வர வணங்கு.

வணங்கி நீஎதனை வேண்டினும் அன்றே
பணமழை பொழியப் பார்ப்பாய் - குணத்
தோடு அன்ன தானமுமிட்டு ராமலிங்கமே
கூடும் குடும்பம் காண்.                                        870

காணாதக் காட்சிகள் காணும் நேரமிது
வீணாக அலைந்து வாடாதீர் - ஆணா
பெண்ணா என்று பாராது ராமலிங்கமே
கண்ணாகப் பார்க்க கல்.

கல்லாதன எல்லாங் கற்று உலகில்
சொல்லா ததைச் சொல்ல - எல்லா
உடலும் சாகா திருக்க ராமலிங்கமே
நட மாடுவேன் நாளும்.

நாளும் உனையே நினைத்து தேகம்
நீளும் மந்திரம் நானுரைக்க - மாளும்
யாக்கையை ஞான மாக்கி ராமலிங்கமே
சாக்காடு அறச் செய்தான்.

செய்த தவத்தால் சுழலும் காலின்றி
உய்யும் நடைபயின் றிருக்க - எய்த
அம்பென என துயிரில் ராமலிங்கமே
கும்மென வந்து கூடினான்.

கூடியபோது ஆடியக் கூத்தினை நான்
பாடியே சொல்வேன் பாராய் - நாடியும்
நடிக்க எலும்பும் நொடிக்க ராமலிங்கமே
வடிந் ததுவே வானமுதம்.

வானமுதோ சுவை வாழைக் கனியோ
தேனமுதோ உன் தயவெனும் - பாம்
குடித்து இன்பக் கிளர்ச்சியில் ராமலிங்கமே
அடியெனத் தனித் திருந்தேன்.

இருக்கும் நிலையை இல்லாத தாக்கி
உருக்கி உடலுடன் உயிரையும் - பருகி
நீஎன்பதை இனி நானாக்கிய ராமலிங்கமே
தீஎன்பதில் ஒளி தானானேன்.

ஆனேன்று ஆடப்பா ஆட்டம் அருள்
ஊனேன்று ஓடப்பா ஓட்டம் - நானே
முத்தேக னென முழங்கு ராமலிங்கமே
எத்தேகமும் நான் ஆனேன்.

ஆனதும் ஆவதும் அவன் அருளாலே
தானது வானதுமவன் தயவாலே - கானல்
நீரிலும் தாகம் நீக்குவான் ராமலிங்கமே
ஈரில்லா பதமே அவன்.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது
எவன் வரினும் என்னுயிர் - கவராது
தயவாகி அவன் தாளை ராமலிங்கமே 
பயம் ஒழியப் பற்றினேன்.                                     880

பற்றிய உடலினை பற்றற விடுத்துமதை
கூற்றம் பற்ற கூறிடுவேனோ - ஏற்றம்
பெற்று ஏறிடப் பார்த்தால் ராமலிங்கமே
காற்றும் அங்கில்லைக் காண்.

காண்பனோ காலம் கடந்த மெளனராஜ்யம்
ஆண்டு பஞ்சலீலை எய்வனோ - மாண்டு
மறுபடி பிறக்க முயல்வனோ ராமலிங்கமே
உறுவது எதுவோ அறிந்திலேன்.

அறியாத பருவத்தில் அழியாத பாவத்தை
வெறியோடு செய்து வருந்தினேன் - அறி
வாக என்னையே வளர்த்திட ராமலிங்கமே
ஆகம மென ஏந்தினேன்.

ஏந்தியத் திருக்கையில் ஏகமாய் அமர்ந்து
வேந்தனாய் ஆள வரமளித்தாய் - சாந்த
உலகும் சன்மார்க்க அழகும் ராமலிங்கமே
கலந்து ஆட்சியைக் கூட்டினான்.

கூட்டிலே குடிவந்து குத்தாட்டம் போட்டு
காட்டிலே படுக்க கண்மூடினேனே - ஏட்டிலே
படித்த இறவாநிலை படிப்பை ராமலிங்கமே
வடித் தெடுக்க விரும்பிலேன்.

விரும்பியப் பெண்களை வன்மனதால் வருடி
அருவாய் கற்பழித்து அழித்தேன் - குருவாய்
நடித்து உலகசுகமும் நாடினேன் ராமலிங்கமே
இடிவீழினும் மனம் மடிஏவும்.

மடிதழுவும் மனதிற்கு மணமில்லா வாழ்வா
படித்தறியாத பாவிக்கு பதவியா - விடியல்
காணாத கண்ணிற்கு கடவுளா ராமலிங்கமே
வீணான எனக்கு வடலூரா.

வடலூர் அழைத்தாலும் வராது பெண்கள்
உடல்மீது போகுதே எண்ணம் - சடமாகிப்
போனாலும் காமசுகம் பார்க்க ராமலிங்கமே
மானாய் ஓடும் மனம்.

மனதிற்கு உண்டோ மன்மதப் பூட்டு
தனத்திற்கு உண்டோ தாலாட்டு - என
நினைத்தை செய்ய நாட ராமலிங்கமே
எனை வெறுப்பது ஏன்.

ஏனென்ற கேள்வியால் ஏமாற்றும் உன்னிடம்
நானென்ன சொல்வேன் நயவஞ்சகா - தான்
என்னும் மனஅறிவை எறிய ராமலிங்கமே
அன்று சொன்னதை அறி.                                      890

அறிவால் பாசத்தால் அடிமுடித் தேடினும்
பொறியில் அகப்படான் பரமன் - எறிந்து
ஆன்ம தயவால் அருள்பெற ராமலிங்கமே
வான் பொருளாய் வருவான்.

வருவதும் போவதும் வான் பொருளாவதும்
குருவருளாலே என்று கூறு - இருவரும்
ஒருவராகி ஓங்கிய ஒளியால் ராமலிங்கமே
அருட்பெருஞ் ஜோதி யானான்.

ஆனா ஆவன்னா இனாகானா காவன்னா
தானா கூடனா தயவுதானடா - வானாய்
நெருப்பு மண்காற்று நீராய் ராமலிங்கமே
உருவாய் இருப்பது உண்மை.

உண்மை ஒன்றென உணர்ந்திருப் பார்க்கு
தண்ணீர் போல தானிருப்பான் - எண்ணி
கலங்கு கின்றோர் கண்ணில் ராமலிங்கமே
உலகெலாம் காட்டி ஆடுவான்.

ஆடுகின்ற அடிக்கே அடியனாகி உனைப்
பாடுகின்ற வாய்க்கு பலியாகி - கூடுகின்ற
இன்பத்தில் நான் இல்லாதாகி ராமலிங்கமே
அன்பாகி நானும் அவனானேன்.

அவர் வருவாரென்று ஆருயிர் விளக்கை
எவரும் பார்க்க ஏற்றினேன் - கவர்ந்தக்
கள்வன் தொட்டு களிப்பூட்ட ராமலிங்கமே
பள்ளியறை எங்கும் பிரகாசம்.

பிரகாச பேரொளியே பிறர்காணா நீஒளியே
இரவுவானில் முழுநில வொளியே - இரக்க
மார்க்க ஒலியே முழங்கிய ராமலிங்கமே
பார்க்க நானும் பிரம்மம்.

பிரமமே பிறர்பசிப் போக்கியப் புனிதமே
இரண்டில்லா ஓர் ஒருமையே - மரண
மில்லாத தோர் இயற்கை ராமலிங்கமே
எல்லா உயிர்க்கும் இன்பம்.

இன்பத்துள் இன்பம் அவ்வின்பம் உலக
அன்பர்களுக்கே என்று முரிது - என்மார்க்க
பேரின்பம் இறவாப் புகழென்ற ராமலிங்கமே
யாரினும் முதல் என்றானான்.

என்று உன்திருவடி ஏந்தும் தலையாவேன்
என்று உன்திருவரு ளாகி - அன்பனாவேன்
என்று இறவாகதி அடைந்து ராமலிங்கமே
என்று நானு மாவேன்.                                        900



(இராமலிங்க அந்தாதி - தொடரும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.