Friday, March 11, 2016

ஆசிரியரின் தலையங்கம் - பிப்ரவரி- 2016

"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஹைட்ரஜன் குண்டு

FEBRUARY - 2016

                                                               ஹைட்ரஜன் குண்டு

    ஜனவரி-06, 2016 - வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. வழக்கமாக அணு குண்டு என்றால், அது அணுவினை பிளப்பதின் மூலம் உருவாக்கப்படும். ஆனால் இந்த ஹைட்ரஜன் குண்டு என்பது அணுவினை இணைப்பதின் மூலம் வெடிக்க வைப்பதாகும். அணு குண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது இந்த ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா நாகசாகி மீது வீசப்பட்ட குண்டை விட இருபத்தையாயிரம் மடங்கு அதிக வலுக்கொண்டவை இவையென்று கருதப்படுகிறது. வடகொரியா முதன்முதலில் இவ்வகையான வெடிகுண்டினை சோதனை செய்துள்ளது. அவ்வமயம்  வடகொரியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஏற்கனவே பல நாடுகள் இம்மாதிரியான ஹைட்ரஜன் குண்டுகளை சோதனை செய்துள்ளன. நமது இந்தியாவிடமும் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளன. 1998-ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களது ஆட்சியில் நாமும் ஹைட்ரஜன் குண்டுகளை பரிசோதித்து வெற்றி கண்டுள்ளோம். அன்றைய வெற்றியின் போது இந்திய மக்களாகிய நாம் எவ்வாறு மகிழ்ச்சிக் கொண்டோமோ, அவ்வாறே இன்று வடகொரியா மக்களும் தங்களது நாட்டிலும் அப்படிப்பட்ட மிகப்பெரிய அழிவு ஆயுதம் இருப்பதை நினைத்து மகிழ்கின்றனர்.


    ஆனால், இந்தியா உட்பட பல நாடுகள் வடகொரியாவின் இந்த ஆய்வினை எதிர்த்து கவலையும், கண்டனமும் தெரிவித்திருக்கின்றன. இந்த கண்டனம் ஏற்புடையதுதானா? அணு ஆயுதம் கொண்டு ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற ஒரு அரசு நினைக்கும்போது, அதன் எதிரி அரசும் அவ்வாறே தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற அதே வழியினில் முயல்வது இயல்புதானே. வடகொரியாவை கண்டிப்பவர்கள், முதலில் தங்களிடம் உள்ள அணு ஆயுதத்தை முழுதும் அழித்துவிட்டு அதன் பிறகல்லவா கண்டிக்க வேண்டும். அந்த கண்டனம் அல்லவா வலு உள்ளதாக அமையும். அதனை விட்டுவிட்டு குறிப்பிட்ட ஐந்து வல்லரசு நாட்டின் பிடியில் இயங்கும் ஐ.நா. சபை மூலம் வடகொரியாவை தனிமைப்படுத்துவது, அதற்கு பொருளாதாரத் தடை விதிப்பது என்பது அங்குள்ள மக்களையும் மற்ற உயிர்களையும் வதைப்பதற்கு சமம்.

    அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுத்து, எங்கள் மக்களை காப்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை காப்பதற்கான தற்பாதுகாப்பு என்ற காரணத்தை சொல்லி பல்வேறு அணு சோதனைகளை நிகழ்த்துகின்றன. தற்போது வடகொரியா சோதனை செய்துள்ள  ஹைட்ரஜன் வெடிகுண்டை ஒரு முறை வீசினாலே அமெரிக்கா முழுதும் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    இவ்வாறு பல்வேறு நாடுகளை அணுகுண்டு சோதனை செய்யத் தூண்டியது அமெரிக்காதான் என்றால் அதனை மறுப்பார் யாருமில்லை. ஏனெனில் உலகிலேயே முதன் முதலில் அணுகுண்டு சோதனையை செய்தது அமெரிக்காதான். அதேபோல் முதன் முதலில் அணுகுண்டினை வீசி மக்களை அழித்ததும் அமெரிக்காதான். அணு ஆயுதங்கள் மூன்று வகைப்படும். அவை; அணு குண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகள், நியூட்ரான் குண்டுகள் என்பன. உயிரினங்களை மட்டும் கொன்று மற்ற பொருள்களுக்கு எந்த சேதமும் விளைவிக்காதவை நியூட்ரான் குண்டுகள் எனப்படும். இவ்வகை குண்டுகள அமெரிக்கா வைத்துள்ளது. தற்போது உலகில் உள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு இவ்வுலக நிலத்திலும் கடலிலும் காற்றிலும் உள்ள நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தையும் முப்பது முறை முற்றாக அழிப்பதற்குப் போதுமானவை. அதாவது இந்த பூமிபோன்று முப்பது பூமிகளை அழிக்க முடியும்.

    தற்போது இந்தியாவைவிட பாகிஸ்தானில் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவில் 80 அணு ஆயுதமும் பாகிஸ்தானில் 90 அணு ஆயுதமும் உள்ளது. சீனாவிடம் 240-ம், ரஷ்யாவிடம் 12,000-ம், அமெரிக்காவில் 9,600-ம், பிரான்சிடம் 300-ம், இங்கிலாந்திடம் 225-ம், இஸ்ரேலிடம் 80 என பல்வேறு உலக நாடுகளிடமும் மொத்தம் 22,600 அணு ஆயுதங்கள் உள்ளன. உலகில், நாம் வசிக்கும் ஆசிய கண்டத்தில் மட்டுமே மிக அதிக அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது ஆசிய மக்களாகிய நமக்கு ஆபத்தா? அல்லது பாதுகாப்பா? என்பது தெரியவில்லை. ஆனால் மூன்றாம் உலகப்போர் என ஒன்று வந்தால் இந்த கேள்விக்கு பதில் அறிய யாரும் இருக்கப்போவதில்லை என்பது உண்மை.

    இம்மாதிரியான எல்லா அச்சுறுதல்களையும் மீறி நமக்கு நம்பிக்கை அளிப்பது "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்ற வள்ளற்பெருமானின் வாக்கே ஆகும். வள்ளற்பெருமானின் வாக்கிற்கு முன் இப்படிப்பட்ட அணு சக்திகள் எல்லாம் உலக உயிர்களை ஒன்றும் செய்துவிட முடியாது. நம்பிக்கையுடன் வாழ்வோம்.... மற்ற உயிர்களையும் வாழ விடுவோம்.... "நம்மில் பகைமை ஒழிந்து எல்லா உயிர்களுடன் இன்புற்று வாழவேண்டும்" என சன்மார்க்க விவேக விருத்தி வாழ்த்துகின்றது.

"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்

FEBRUARY - 2016
                                           ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் என்னும் ஊரின் அருகில் அமைந்துள்ளது ஓமந்தூர் என்னும் கிராமம். இந்த கிராமத்து மண்தான் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை ஈன்றெடுத்தது. 1895-ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி பிறந்தார். தெலுங்கு மொழியைத் தனது தாய்மொழியாகக் கொண்ட ரெட்டியார் வகுப்பைச் சார்ந்தவர். வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டவர். எழுத்தாளராகவும் அடையாளம் காணப்பட்டார். இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுட்திக்கொண்டவர். அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் 23-03-1947 முதல் 06-04-1949 வரை சுதந்தர இந்தியாவின் முதல் முதலமைச்சராக திகழ்ந்தார். இன்றைய சட்டசபைக் கட்டடம் இவருடைய பெயரிலேயே இயங்கி வருகின்றது.

    தமிழக முன்னாள் முதல் முதலமைச்சர் மேதகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருக்கும் வடலூர் பெருவெளிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தன்னை தனது இறுதி நாட்களில் ஒரு சுத்த சன்மார்க்கியாக வெளியுலகிற்கு காட்டிக்கொண்டார். காங்கிரஸ் கட்சியில் ஊழலற்ற அரசியலையும், சுத்த சன்மார்க்க இயக்கத்தில் பொய்களற்ற மேன்மையையும் அடைந்தவர். இந்திய நாடும், காங்கிரஸ் கட்சியும், சென்னை மாகாண மக்களும், சுத்த சன்மார்க்கமும் இவரது புகழினை என்றும் பாடிக்கொண்டே இருக்கும்.

    மேதகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பிறந்த இந்த பிப்ரவரி மாதத்தில், அவரது முக்கிய அரசியல் நடவடிக்கைகளையும், அவருக்கு வள்ளற்பெருமான் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்த நிகழ்ச்சியினையும் நினைவு கூர்வது சாலச் சிறந்தது.

அரசியல் நிகழ்வுகளில் சில:

1. முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள், ஓமந்தூராரை 'சாணை பிடிக்காத வைரம்' என்று போற்றினார். அதாவது எதையும் மறைத்துப் பேசாமல், வெளிப்படையாக பேசக்கூடியவர். பெருந்தன்மை, உண்மை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றுக்கு உரிமையாளர் என்ற பொருள்படி நேரு அவர்கள் புகழ்ந்தார்கள்.

2. பிரகாசத்தை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஓமந்தூராரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று ராஜாஜி அவர்கள் காமராஜரிடம் பரிந்துரைத்து, அதன்படி அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

3. ஓமந்தூரார் காங்கிரஸ் கட்சியில் இருப்பினும், காந்திஜியை ஏற்றுக்கொள்ளாது, சர்தார் வல்லபபாய் படேல் மட்டுமே இந்தியாவில் நாணயமானவர் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார்.

4. மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார்.

5. ஜமீன்தார் வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் இனாம் முறையை ஒழித்தார்.

6. இன்றைய நமது தமிழகக் கனவாக உள்ள பூரண மதுவிலக்கை அன்றைக்கே சென்னை மாகாணம் முழுதும் அமல் படுத்தினார்.

7. 1947-ஆம் ஆண்டு சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் என்பதனை இயற்றி அதனை அமல்படுத்தினார். இதன்படி தாழ்த்தப்பட்டோர், தலித்துகள் இந்து கோயில்களுக்குச் செல்ல உரிமை அளிக்கப்பட்டது.

8. இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் இவரால் கொண்டுவரப்பட்டது.

9. இந்து கோயில்களில் இருந்த தேவதாசி முறையினை முற்றிலும் ஒழிக்க சட்டம் இயற்றி அதனை தவிடுபொடியாக்கினார். இம்முறையை ஒழிக்கக்கூடாது என்று  தேவதாசிகளே அன்றைக்கு சிதம்பரத்தில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. இந்தியாவுடன் இணையாத அன்றைய ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்ததில் இவருடைய பங்களிப்பே காரணமாக இருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்படுகின்றன என்ற செய்தியை சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு எச்சரிக்கையாக தெரிவித்தார். அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் அது இணைக்கப்பட்டது. இதற்காக படேல் அவர்கள் ஓமந்தூராரை வெளிப்படையாகப் பாராட்டினார்.

11. பாரதியார் பாடல்கள் உரிமையினை அவரது தம்பி சின்னசாமி ஐயர் குஜராத் சேட்டு ஒருவருக்கு விற்றுவிட்டார். அதனை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அதிக விலை கொடுத்து சேட்டுவிடமிருந்து வாங்கினார். நாளடைவில் பாரதியாரின் பாடல்களை பொதுவுடமை ஆக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. பல நடைமுறைகளுக்குப் பின்பு ஓமந்தூரார் வேண்டுகோளின்படி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அரசிடமிருந்து பணம் எதுவும் வாங்காமல் அவ்வுரிமையை அரசிற்கு அளித்தார். அதனைத்தொடர்ந்து பாரதியார் பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது.

12. நாளடைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஒரு சிலர் ஓமந்தூரார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழங்க, ஒருவித துறவு மனப்பாண்மையுடன் உடனே ராஜினாமா செய்தார். எனக்கு அடுத்து திரு.குமாரசாமி ராஜா அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு அரசியலில் இருந்தே முற்றிலும் விலகிவிட்டார். ஊழலற்ற ஆட்சி, மதுவில்லா ஆட்சி என்ற இவையிரண்டையும் முழுமையாக உண்மையாக மக்களுக்கு அளித்தவர் இவர்.

13. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஓமந்தூராரின் மனம் ஆன்மிகத்தில் ஈடுபட்டது. தனது ஆன்மிக வழியாக இறுதியில் அவர் தேர்ந்தெடுத்தது வடலூர் பெருவெளியைத்தான். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பல ஆன்மிக நிறுவனங்களை தொடங்கினார்.

14. தமது இறுதி காலத்தை வள்ளற்பெருமானின் திருவடிகளில் சமர்பித்து 25-08-1970 ஆம் ஆண்டு வடலூர் பெருவெளியில் தமது இன்னுயிரை ஈந்தார்.

15. இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

16. ஓமந்தூர் கிராமத்தில் இவரது நினைவாக தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது. 21-02-2013-ஆம் ஆண்டு ஓமந்தூராரின் மணிமண்டபம், முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

ஓமந்தூரார் வடலூர் வர என்ன காரணம்?

    1923- டிசம்பர் மாதம் கல்லிடைக் குறிச்சியில் 'தமிழ் குரு வித்தியாலயா' எனும் பெயரில் கல்விக்கூடம் தொடங்கப்பட்டது. பண்டைய இந்திய கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் நோக்கோடு 'குருகுலம்' என்ற அமைப்பில் தொடங்கப்பட்டது இதுவாகும். வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் (வ.வே.சு.அய்யர்) இக்கல்விக் கூடத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
   
    ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் தமது மகனை, வெள்ளையர் கலாச்சாரம் நுழைய முடியாத குருகுலத்தில் சேர்த்து படிக்கவைக்க வேண்டி கல்லிடைக்குறிச்சியில் சேர்த்தார். ஓமந்தூரார் மகனும் அந்த குருகுலத்தில் படித்தான். ஆறுமாதங்கள் ஓடின. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு தன் வீட்டுக்கு வந்தான்.

    அரசு வேலைகள், கட்சி வேலைகளில் மும்முறமாக இருந்தாலும், ஓமந்தூரார் தமது மகனின் படிப்பைப்பற்றி ஓய்வு நேரத்தில் அவனிடம் விசாரித்தறிந்தார். குருகுல நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான் அவரது மகன்.

    காலையில் நான்கு மணிக்கு எழுப்பிவிடுவார்கள். கை கால் முகம் கழுவி பல் விளக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உடற்பயிற்சி நடக்கும். உடற்பயிற்சி முடிந்ததும் மலங்கழிக்க செல்ல வேண்டும். செல்லும்போது மண்வெட்டியுடன் போய் ஒரு குழி வெட்டி அதில் மலங்கழித்த பின் மண்ணைப்போட்டு மூடிவிட வேண்டும்.

    குளித்து முடித்த பின் காலை 7.30 மணிக்கு ஒரு பெரிய கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும் கூட வேண்டும். பார்ப்பன மாணவர்கள் ஒரு பக்கத்திலும் மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கத்திலும் நிற்பார்கள். தெய்வ வழிபாடு நடக்கும். வ.வே.சு. ஐயர் பல பெரியோர்களின் வரலாறுகளைக் கூறுவார். புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் மாணவர்களுக்கு காலை உணவாக கஞ்சி வழங்கப்படும்.

    உழவு வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை ஆகியவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பிரித்துவிடப்படுவார்கள். நெல் பயிரிடப்பட்டிருந்தது. காய்கறிகள், பழ மரங்கள் வளர்க்கப்பட்டன. இவற்றில் எல்லாம் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

    பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டும் வேலை நடக்கும். இதில் மாணவர்கள் கொத்தனார்களுக்கு செங்கல் எடுத்துப் போதல், சாந்து குழைத்தல் போன்ற வேலைகள் செய்வார்கள். மற்ற ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் போலவே வரலாறு, சமூகநலம், பூகோளம், விஞ்ஞானம் எல்லாப் பாடங்களும் சொல்லித் தரப்பட்டன. தமிழும் சமஸ்கிருதமும் இந்தியும் கற்றுத்தரப்பட்டன. பயிற்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது.

    இந்த விவரங்களை எல்லாம் கேட்டு ஓமந்தூர் ரெட்டியார் மகிழ்ச்சியடைந்தார். பிள்ளைகள் வேற்றுமையன்றி எல்லா வேலைகளையும் செய்வது எளிமையான வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்று மகிழ்ந்தார்.

    ஆங்கிலம் பயிற்று மொழி என்று மகன் சொன்னபோது தேசிய உணர்வுள்ள ரெட்டியார் துடித்துப்போனார். ஆனால் கால நிலையை யொட்டி வேறு அரசு பள்ளி மாணவர்களோடு போட்டி வரும் போது சரிசமமாக நிற்க உதவியாயிருக்கும் என்று தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டார். இந்தி தேசிய மொழி, சமஸ்கிருதம் இலக்கிய மொழி ஆகவே இம்மொழிகள் தேவைதான் என்று எண்ணினார். இந்தப்படிப்புகளில் பாரத கலாச்சாரம் எங்கேயிருக்கின்றது. மற்ற பள்ளிக்கூடங்கள் போலத்தானே இருக்கின்றது என்று எண்ணங்கொண்டார்.

    சாப்பாடு நன்றாய் இருக்கிறதா? என்று தந்தையார் கேட்க, மகன், பழகிக்கொண்டு விட்டேன் என்று சொன்னான்.

    பள்ளிக்கூடம் எப்போது திறக்கிறார்கள்? என்று தந்தையார் கேட்ட போது, நயினா, நான் அங்கே போகவில்லை; வேறு பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன் என்றான்.

    எல்லாம் நன்றாகத்தானே சொன்னான். ஏன் போக மாட்டேன் என்கிறான். தாய்ப்பாசமா? வீட்டு நினைப்பா? என்று எண்ணினார் ரெட்டியார்.

    என்னடா செப்புறே? என்று கேட்டார்.

    எங்களையெல்லாம் கேவலாமா நடத்துறாங்க நயினா! என்றான் பையன்.

    உழவு வேலை செய்கிறது கேவலமா? கட்டட வேலை செய்வது கேவலமா? எல்லாத் தொழிலும் கற்றுக்கொள்ள வேண்டும்! தொழிலில் வேற்றுமை பார்க்கக்கூடாது என்றார் ரெட்டியார்.

    அதைச்சொல்லவில்லை நயினா? நாங்கள் எல்லாம் சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க. அவங்களுக்குச் சோமவாரம் சுக்கிரவாரம் கார்த்திகை இப்படிபட்ட நாட்களிலே வடை பாயாசத்தோடு சாப்பாடு. எங்களுக்கெல்லாம் எப்போதும்போல ஒரே மாதிரி சோறும் சாம்பாரும்தான்.

    ஒருநாள் தண்ணீர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்க பானையாம். நான் தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார், பாதித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார். தீட்டுன்னா என்ன நயினா? என்று கேட்டான் பையான்.
   
    பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா? எங்களோட தோட்ட வேலைக்கெல்லாம் அவங்க வர்றதில்லை. சமையல் வேலையிலே மட்டும் தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்க வேலை. ஒரு நாள் நானும் சமையல் கத்துக்கட்டுமா? என்று கேட்டேன். சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் ஐயர் என்னை முறைத்துப் பார்த்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை நயினா.

    அடிபட்ட அன்னிக்கே வீட்டுக்கு வந்துவிடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்.

    இவற்றைக் கேட்க கேட்க ஒரு மகனின் தந்தையாகவும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ஒரு நபராகவும் இருந்த ரெட்டியாருக்கு உதடுகள் துடித்தன. கண்கள் சிவப்பேறின. நெஞ்சு குமுறியது. தான் ஏதோ பாவம் செய்துவிட்டது போன்ற உணர்வு அவரை வாட்டியது. காந்தியடிகளின் அஹிம்சை இயக்கத்தில் பெற்ற பயிற்சியானது அவரை அடக்கியது. இரவு முழுதும் தூக்கம் இல்லை.

    மறுநாள் காலையில் மகனை அழைத்தார்.

    நீ ஈரோட்டுக்குப் போ. பள்ளிக்கூடத்தில் நடந்த அட்டூழியங்களை இராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு, என்று அனுப்பி வைத்தார்.

    புதிதாக ஒரு சிறுவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு, பெரியார், அவனை நீ யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.

    நான் ஓமந்தூர் ரெட்டியாரின் கொடுக்கு என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் பையன்.

    என்ன செய்தி? என்று கேட்டார் பெரியார்.

    முதல் நாள் தன் தந்தையிடம் சொன்ன செய்திகளையெல்லாம் பையன் பெரியாரிடம் சொல்லி முடித்தான்.

    தனித்தனியாக சாப்பாடு, தனித்தனி தண்ணீர்ப் பானை, சாதி வேற்றுமை, உயர்வு தாழ்வு இவைகளை கேட்ட பெரியாருக்கு சினம் பொங்கியது.

    அந்தப் பார்ப்பனரை மிக உயர்ந்தவர் என்று நம்பினோமே. நல்ல தேசபக்தர் என்று மதிப்புக் கொடுத்தோமே. தமிழர்கள் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தோமே!

    இதைச் சும்மா விடக்கூடாது என்று கொதித்தெழுந்தார் பெரியார். ஓமந்தூராரும் இப்பிரச்சனையை உடனடியாக காங்கிரஸ் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். குருகுலம் ஒன்றும் வ.வே.சு. அய்யரின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல. காங்கிரஸ் நிதியிலிருந்தும் பொதுமக்களின் உதவியாலும் நடத்தப் பெறும் குருகுலத்தில் இப்படி சாதிய வேற்றுமைகள் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று ஈ.வெ.ரா. அவர்கள் முழக்கமிட்டார்.

    இந்த சம்பவம் ஓமந்தூராரின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணியது. ஆன்மிகம் என்றால் சாதி, மதம், வேதங்கள் இவைகள் மட்டும்தானா? கடவுளை வணங்க சாதி, மதக் கட்டுப்பாடுகள் தேவைதானா? இவைகளன்றி ஒரு ஆன்மிகக் கடவுளை மனிதன் காணமாட்டானா? என்றெல்லாம் அவரது மனம் ஒரு பொது நோக்கை நோக்கி முன்னேறியது.

    அந்நிலையில் அவரது கண்களில் தென்பட்டது வடலூர் சத்திய ஞான சபை. சபையில் உள்ள இறைவனுக்கு சாதி, மத, வேதக் கட்டுப்பாடுகள் சடங்குகள் எதுவும் கிடையாது என்பதனால் அவருக்கு வள்ளற்பெருமான் மீதும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீதும் பற்றுதல் ஏற்படத் தொடங்கியது. அந்த பற்றுதலாலே தமது கடமைகளை முடித்தப்பிறகு இறுதி நாட்களில் ஓமந்தூரார் வடலூர் வந்து உறையத்தொடங்கி, அங்கே பல சன்மார்க்க நிறுவனங்களைத் தொடங்கி, அங்கேயே தமது இறுதி நாளையும் முடித்துக்கொண்டார்.

    அவர் பிறந்த பிப்ரவரி ஒன்றாம் தேதியைனை தமிழக அரசு "உத்தமர் ஓமந்தூரார் தினம்" என்று அறிவிக்க வேண்டும். மேதகு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் 121-ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்களை சுத்த சன்மார்க்கிகளின் சார்பில், சன்மார்க்க விவேக விருத்தி, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

    எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
    தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
    சிந்தைமிக விழைந்த தாலே. (திருவருட்பா-5297)

FEBRUARY - 2016
                                                                    பதன்கோட்

    பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி பிறந்தநாள் மற்றும் அவரது பேத்திக்கு திருமணமும் அன்று நடைபெற்றது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நமது பாரத பிரதமரை பாகிஸ்தான் வரும்படி நவாஸ் ஷெரீஃப் அழைக்கவே அதனை ஏற்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் உடனே பாகிஸ்தான் சென்று அவரை வாழ்த்தியதோடு மட்டுமின்றி அவரது பேத்தியின் திருமண விழாவிலும் கலந்துக்கொண்டு இந்தியா திரும்பினார்.


    இவ்வாறு திடீர் பயணம் செய்து இந்திய - பாகிஸ்தான் உறவை மேம்படுத்திய விதத்தை நாம் பாராட்டியே ஆகவேண்டும். நமது பாரத பிரதமர் கையாண்ட இந்த அதிரடி உத்தியை உலக நாடுகள் வரவேற்கவே செய்தன. ஆனால் நமது நாட்டில் காங்கிரஸ் கட்சியானது வெளிப்படையாக தமது எதிர்ப்பினை தெரிவித்தது. அவ்வாறே இந்திய பாகிஸ்தான் நட்பு மேம்படுவதை விரும்பாத பாகிஸ்தான் இராணுவம், தமது எதிர்ப்பினை பதன்கோட் தாக்குதல் மூலம் நிறைவேற்றியது.

    இந்தியாவின் வடமேற்கு மாநிலமும், பாகிஸ்தான் நாட்டின் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் மாநிலமுமான பஞ்சாப் மாநிலத்தில் பதன்கோட் என்னும் ஊரில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு நமது நாட்டின் பாதுகாப்பிற்கான போர் விமானங்களும், பல்வேறு பாதுகாப்பு அறைகலன்களும் உள்ளன. இவ்விடத்தை சுற்றிலும் காடுகளால் சூழப்பட்ட இயற்கை கொஞ்சும் இடமாக இவ்விடம் அமைந்துள்ளது.

    02-01-2016- அன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இந்திய இராணுவ சீருடைகளை அணிந்துக்கொண்டு பதன்கோட் விமானத்தளத்தை தகர்க்கும் எண்ணத்துடன் புகுந்துள்ளனர். இத்தீவிரவாதிகளை இனம் கண்டு சுட்டு வீழ்த்துவதற்கு நமது இராணுவத்திற்கு நான்கு நாட்கள் பிடித்தன. இறுதியில் தீவிரவாதிகள் ஆறு பேரும், இந்திய இராணுவத்தினர் ஏழு பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவருமாக எட்டு நபர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் பற்றி நேரடியாகத் தெரிந்துக்கொள்ள நரேந்திர மோதி அவர்கள் பதன்கோட் சென்று அங்கு நடந்தனவற்றை கேட்டு தெரிந்துக்கொண்டார். விமானப்படைத் தளத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் புக விடாமல் தடுத்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியதற்காக, நமது பாரத பிரதமர் இராணுவத்தை பாராட்டினார். இறந்த இராணுவ வீரர்களுக்கு இரங்கலும் தெரிவித்தார். அதன் பின் இந்திய பாகிஸ்தான் அமைதி பேச்சு வார்த்தை நின்று போனது.

    பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்தது. பயங்கரவாதிகளைவிட நமது தரப்பில் இருவர் அதிகமாக உயிரிழந்து இருப்பது, இந்திய மக்களை வருத்தமுற செய்திருக்கின்றது. இதற்கு காரணம் என்ன? பதன்கோட் பகுதியை நமது இராணுவத்தினர் தகுந்த முறையில் பாதுகாக்க தவறிவிட்டனர். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு, தடை செய்யப்பட்டுள்ள அந்த விமானப்படை வளாகத்திற்குள் உள்ளூர் வாசிகளை மாடு மேய்க்க அனுமதி வழங்குகின்றனர் என்ற செய்தி மிகவும் வெட்கக்கேடானது. அரசும் அலட்சியமாக இருந்துள்ளது.

    இந்நிலையில் பஞ்சாப் மாநில போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். இதனால் இந்திய அதிகாரிகளின் உதவியால்தான் பயங்கரவாதிகள் நமது நாட்டிற்குள் நுழைந்திருப்பார்களோ என்ற சந்தேகமும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

    இந்த தாக்குதலை பொறுத்த மட்டில் நாம் பாகிஸ்தானையோ, இந்திய அதிகாரிகள் சிலரையோ குற்றம் சொல்லுவதைவிட இந்திய அரசின் பாதுகாப்பு குளறுபடியே இதற்கு முழுமுதல் காரணம் என்பதில் ஐயமில்லை. எனவே போர்த்தளவாடங்களை காப்பதில் இராணுவமும் அரசும் இணைந்து நூறு சதவிகித பாதுகாப்பு அம்சங்களை குறை ஏதும் இல்லாமல் நடைமுறை படுத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு பிறகு பொதுமக்கள் யாரும் இராணுவ சீருடையினை அணியக்கூடாது என்று இராணுவம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அரசு செய்த இந்த தவறினால் தங்கள் இன்னுயிரை இழந்த நமது இராணுவ வீரர்களுக்கு சன்மார்க்க விவேக விருத்தி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தியாவின் பாதுகாப்பற்ற நிலமையினை இந்த உலகிற்கும் இந்திய அரசிற்கும் தெரிவித்த உயிரிழந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் நன்றி கலந்த கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

1. லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார்:

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார். வெடிகுண்டு அகற்றும் பிரிவில் பணியாற்றி வந்தார். கிரானைட் குண்டு ஒன்றை செயலிழக்க செய்ய முயன்றபோது அது வெடித்ததில் நிரஞ்சன் வீர மரணம் அடைந்தார்.

2. குருசேவக் சிங்:

பாதுகாப்பு கமாண்டோ, குருசேவக் சிங், முதல்கட்ட துப்பாக்கி சூட்டின்போது உயிரிழந்தார். குண்டடி பட்ட நிலையிலும், மீண்டும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டபடி தீரத்தோடு முன்னேறியுள்ளார் குருசேவக்சிங். மருத்துவர்கள் அவரை நெருங்குவதற்குள்ளாக வீர மரணம் அடைந்தார். இவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலா நகரை சேர்ந்தவர். இரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

3. பட்டே சிங்:

வீரமரணம் அடைந்த, 51 வயதான பாதுகாப்பு படை சுபேதாரான, பட்டே சிங் சூட்டிங்கில் சாம்பியன். 2 வருடங்கள் முன்புதான் பதன்கோட்டில் அவருக்கு பணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு, டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில், துப்பாக்கி சுடுதலில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர், பட்டேசிங். பஞ்சாப்பின், குருதாஸ்பூரை சேர்ந்தவர்.

4. குல்வந்த் சிங்:

வீரமரணம் அடைந்த, ஹவில்தார் வீரரான குல்வந்த் சிங், குருதாஸ்பூரை சேர்ந்தவராகும்.

5. ஜகதீ்ஷ் சந்த்:

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 10 நாட்கள் விடுமுறையில் கிராமத்திற்கு சென்றிருந்த அவர் ஒன்றாந் தேதிதான் பணிக்கு திரும்பியுள்ளார். திருமணமான அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சனிக்கிழமை காலை ஜகதீஷ் உள்பட சில ஜவான்கள் சமையல் அறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். சமையல் அறையில் வெளிச்சம் தெரிவதை பார்த்த தீவிரவாதிகள் அந்த பக்கம் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது ஜகதீஷ் வெளியே ஓடி வந்து வெறுங்கையுடன் தீவிரவாதிகளை துரத்திச் சென்றுள்ளார். அதில் ஒரு தீவிரவாதியை பிடித்து அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து அவரை ஜகதீஷ் சுட்டுக் கொன்றுள்ளார். இதை பார்த்த பிற தீவிரவாதிகள் ஜகதீஷை சுட்டுக் கொன்றனர்.

6. சஞ்சிவ் குமார்:

வீரமரணம் அடைந்த மற்றொருவர் சஞ்சிவ் குமார்.

"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
மதுவின் மடியில்...
FEBRUARY - 2016
                                                                      மதுவின் மடியில்...

    தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் பொருட்டு காந்தியவாதி திரு.குமரிஅனந்தன் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து குமரி வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்படி என்ன விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு தேவைப்படுகிறது?

    தமிழகத்தில் வசிக்கும் மக்களில் 45 சதவிகித மக்கள் மது அருந்தும் தீய பழக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். மது அருந்தும் பழக்கம் வாழ்க்கையில் பலருக்கு தேனீர் அருந்துவதைப் போல மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. மதுவினால் நமது குடும்பம், நமது சமுதாயம், நமது நாடு, நமது உலகம் பாழடைவதை தமிழக மக்கள் உணரவில்லை. தமிழகத்தில்தான் திருவள்ளுவர், ஒளவையார், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், வள்ளலார் போன்ற அறவாதிகள் பிறந்து மக்களை நேர்படுத்தினர். குஜராத் மாநிலத்தில் காந்தி மகானைத்தவிர குறிப்பிடத்தக்க மகான்கள் யாரும் தோன்றவில்லை. அந்த வகையில் குஜராத்தியர்களை விட தமிழர்கள் அருளாளர்களால் எல்லா வகையிலும் விழிப்புணர்வை பெற்றிருக்கின்றார்கள்.

    குஜராத்தியர்கள் மதுவை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுப்பதின் மூலம் அம்மாநிலத்தில் பிறந்த காந்தி மகானுக்கு மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் நாம் நமது தமிழகத்தில் பல மகான்கள் பிறந்தும், அவர்களது வழியில் நடைபோடாமல் இன்னும் மது என்னும் அரக்கியின் மடியில் வடியும் சீழினை குடித்துக்கொண்டு மயங்கிக் கிடக்கிறோம். அதற்கு நமது அரசும், நம்மை மது குடிக்க வைக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறது.

    மக்களாகிய நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும். வருகின்ற தேர்தலில் மதுவிலக்கினை நூறு சதவிகிதம் உடனே அமல் செய்யும் கட்சிக்கு நமது ஓட்டுக்களை இடவேண்டும் என்று தமிழர்களான நம்மை விழிப்புணர்வு ஊட்டிக்கொண்டு தமிழகம் முழுதும் நடைபயணம் சென்ற திரு.குமரிஅனந்தன் ஐயா அவர்கள் நீடு வாழ்வைப் பெற வேண்டும் என்று சன்மார்க்க விவேக விருத்தி வாழ்த்துகின்றது.  

"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
காதலர் தினம் நமதே.
FEBRUARY - 2016
                                                     காதலர் தினம் நமதே.

    உலக காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும். ஆண் தன்மையானது பெண் தன்மையாலும், பெண் தன்மையானது ஆண் தன்மையாலும் ஈர்க்கப்படும் போது அங்கு காதல் பிறக்கின்றது. காதல் என்ற சொல் மிகவும் சுத்தமான அப்பழுக்கற்ற அன்பினை குறிக்கும். அன்பு என்பது இறைவன் பால் செலுத்துவதே அன்றி மனிதர்களுக்குள் ஆண் பெண்ணிடத்தும், பெண் ஆண்ணிடத்தும் காட்டும் பாசம் அன்று. அப்படிப்பட்ட பாசம் காமம் ஆகும். அது மாயை சம்பந்தம் உடையது.

    அப்படி என்றால், உண்மையில் காதலர் தினம் என்பதை எவ்வாறு கொண்டாட வேண்டும்? எனில், நாம் ஒரு ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும், நம்மை நாம் ஒரு பெண்ணாகக் கருதி இறைவனை ஆணாகக் கருதி அவரிடத்தில் காதல் கொள்ளவேண்டும். அதுவே அன்பு. அப்படிப்பட்ட தூய அன்பினை நம் காதலரான ஆண்டவரிடத்தில் செலுத்துவதே காதல். இதனை நினைவு படுத்தும் தினம்தான் நமது காதலர் தினம். இந்த காதலர் தினத்தில் நாம், நம் இறைவனான காதலரிடம் பூரண சரணாகதி அடைவோம்.


    தமிழ் இலக்கியத்தில் இப்படிப்பட்ட தெய்வீகக் காதலை பலர் பாடியிருக்கின்றார்கள். பாடியதோடு மட்டுமின்றி தமது காதலரோடு கூடியும் இருக்கின்றார்கள். அரங்கனோடு உருகிக் கலந்த ஆண்டாளின் காதல், கண்ணனே என் கணவன் என்று ஆடிப்பாடி அவரோடு கலந்த மிஹிரா பாயின் காதல் (மீரா பாய்), இன்னும் பல ஆழ்வார்கள் நாயன்மார்களின் காதல் எல்லாம் மிக அற்புதமானது. அவர்களெல்லாம் தமது நேசத்தையும் பாசத்தையும் அன்பினையும் தமது தெய்வத்திடம் காதலாக வெளிப்படுத்தி தங்களது காதலர் தினத்தை கொண்டாடி இருக்கின்றார்கள்.

    நமது வள்ளற்பெருமானுக்கு காதலர் தினம் ஜனவரி 30-ஆம் தேதியாகும். வள்ளற்பெருமான் தன் காதலருக்காக எழுதிய கவிதைகள் ஏராளம். காதல் கடிதமும் எழுதியிருக்கின்றார். இறைவனுக்கு கடிதம் எழுதி காதல் புரிந்த ஒரே அருளாளர் வள்ளற்பெருமான் மட்டுமே.

"உன் பேரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ."

"உன்னை நினைந்து நினைந்து
உன்னை உணர்ந்து உணர்ந்து
என்மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
என் உடம்பு நனைந்து நனைந்து...."

    வள்ளற்பெருமான் அருளிய இந்த கவிதைகளில்தான் எவ்வளவு காதல் ரசங்கள் வெளிப்படுகின்றன!! "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி..." என்று தமது வைர வரிகளால் காதலின் மேன்மையினை சொன்னவர் திருஞானசம்பந்தர். அப்பப்பா.... காதலர் தினத்தின் அருமையை காதலர்களே அறிவர். இறைவனை காதல் செய்யும் அனைவருக்கும் சன்மார்க்க விவேக விருத்தியின் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.