Friday, March 11, 2016

"கண்மூடி வழக்கம்" - ஜனவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "கண்மூடி வழக்கம்" - ஜனவரி-2016

"JANUARY - 2016

                                                                       மஞ்சள் நீராட்டு
                                                                      (தி.ம.இராமலிங்கம்)

நமது சமுதாயத்தில் பல மூடப்பழக்கங்கள் சடங்குகளாக வழிவழி செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சடங்குகளை எப்படியெல்லாம் நாம் நியாயப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம், உட்கார்ந்து ரூம் போட்டு யோசித்து அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை எல்லாம் வெளியிட்டு, அதனை நாம் முன்னதைக் காட்டிலும் மிகச்சிறப்பாக வெட்கங்கெட்டு செய்து வருகின்றோம். அதில் ஒன்றுதான் இந்த புனித நீராட்டு விழா என்கிற மஞ்சள் நீராட்டு விழாவாகும்.

பெண் மற்றும் ஆண் பால்முதிர்ச்சி அடைவது என்பது இயற்கையாக நிகழுகின்ற ஒரு வளர்ச்சியாகும். இதனை வெளியில் சொல்வதே மானங்கெட்ட செயலாகும். இதனைப்போய் பத்திரிக்கை அடித்து ஊரார், நண்பர்கள், உறவினர்களை அழைத்து விழா கொண்டாடி விருந்து அளிப்பது, பெற்றோர்களுக்கு அசிங்கமாக அல்லவா இருக்க வேண்டும். மறைக்கப்பட வேண்டிய ஒன்றை அப்பட்டமாக வெளிப்படுத்தி அதற்கான நிகழ்ச்சியினை நடத்துவது அசிங்கத்திலும் அசிங்கம்.

தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றத்தை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக்கொண்டு ஆலோசனை பெறலாம். அது தந்தைக்குக்கூட தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணில் இருந்து வெளிப்படும் முதல் தீட்டை (தீட்டு எனச்சொல்வதே தவறு.) பிறர் பார்க்கா வண்ணம் குளியல் அறையில் நீராட்டி ஆடை மாற்றிக்கொண்டால் முடிந்தது அந்நிகழ்வு. அதற்கு மேல் ஒரு தாயானவள், அந்நிகழ்வினைப்பற்றி சிறிது விளக்கம் அளித்து இனிமேல் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென தன்மகளிடம் கூறிவிட்டால் முடிந்தது கதை. ஆனால் இதற்காக நாம் போடும் கூப்பாடு எழுதத் தீராது. சொந்தங்களின் சீர்வரிசை, அதனால் ஏற்படும் உறவினத்துக்குள் ஏற்படும் சச்சறவுகள் என இன்னல்கள் ஏராளம். காசு கொடுத்து சூனியம் வைத்தக் கதைதான் இது.

பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறம்தான் அவளின் இருப்பிடம். அவள் என்னப்பாவம் செய்தாள் எனத் தெரியவில்லை. ஒதுக்குப்புறமாக இருக்கும் அத்தனை நாளும் அவளுக்கென்று உண்ணுவதற்கு தனித் தட்டு, படுக்கத் தனிப்படுக்கை ஆகியவைகளும் வழங்கப்படும். அதனை மற்றவர்கள் யாரும் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும், என்ற கதை வேறு விடுவார்கள். இவை எல்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கம் என்று அந்தப் பெண்களே நினைப்பது இல்லை என்பதுதான் வருத்தத்திற்குறியது.

அந்தப் பெண்ணிற்கு மேற்படி தீட்டை கழித்து புனிதத்தைக் கூட்ட அதற்கு ஒரு புரோகிதர் தேவை. சமஸ்கிருத மந்திரம் ஓத அந்த புரோகிதர் நடத்தி வைக்கும் விழாதான் இந்த மஞ்சள் நீராட்டு விழாவாகும். இவ்விழா, அந்தந்த சாதிக்கேற்ற ஆசாரங்கள்படி நடந்தேறும். இறுதியில் அந்த புரோகிதர், கும்பத்திலிருந்து புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிப்பார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருக்கும் அனைவர் மீதும் தெளிக்க எல்லாம் புனிதமாகி விடுமாம். இதுவரை தீண்டத்தகாதவர்களாக இருந்தவர்கள் இனிமேல் தீண்டத்தக்கவர்களாக மாற்றிவிடும் ஒரு புனித நிகழ்ச்சியே இது.

இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வை தீட்டு என்று ஒதுக்குவதே மிகத்தவறு. இதனை முன்னிட்டு அந்நாட்களில் மகளிர்களை கோவிலுக்குள் செல்லத் தடைவிதிப்பதும் தீது, வீட்டிற்குள் சகஜமாக இருக்க தடைவிதிப்பதும் தீது. இவ்வுலக உயிர்களெல்லாம் அந்தத்தீட்டிலிருந்து பிறந்தவர்கள்தானே. அப்படியானால் அது எவ்வாறு தீட்டு ஆகும். புனிதம் என்று போற்றாவிடினும் அதனை அலட்சியம் செய்துவிடுவதே நல்லது.


இப்படிப்பட்ட விழாக்கள் எல்லாம், நமக்கு தயவை விருத்தி செய்ய தடையாக இருப்பதாக நமது வள்ளற்பெருமான் கூறுவதை நினைவில் நிறுத்துங்கள். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சடங்கிலும் அறிவியல் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதனை நாம் செய்தால் தயவு தடைபடும். தயவு இல்லையென்றால் சன்மார்க்கம் இல்லை. நமக்குத் தீட்டு என்பது வேத சடங்குகள்தான். எனவே சன்மார்க்கிகள் மஞ்சள் நீராட்டு விழாவினை நடத்துதல் கூடாது.

உடனே சன்மார்க்க முறைப்படி நடத்துகிறோம் என்று அனைத்து மூடப்பழக்கங்களையும் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதி நடத்தும் ஒரு புதியக் கலாச்சாரம் தற்போது சன்மார்க்க இல்லங்களில் நடந்தேறி வருவதும் வருந்தத்தக்கது. மூடப்பழக்கம் மண்மூடிப் போகவேண்டுமேயொழிய அது வடிவம் மாறி கொண்டாடப்படுவதும் மூடப்பழக்கமே என்று அறிய வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.