Friday, March 11, 2016

"புத்தம்" - மார்ச் -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "புத்தம்" - மார்ச் -2016
MARCH - 2016

                              புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லையா?

புத்தர் ஒருபோதும் கடவுளைப் பற்றி நேரடியாக விவாதித்ததில்லை. தன் சீடர்களுடனும் அதுபற்றிக் கலந்துகொண்டதாகக் குறிப்புமில்லை. இறைவன் இருக்கிறார் என்றும் அவர் கூறியதில்லை. இல்லை என்றும் சொன்னதில்லை. கடவுள் விஷயத்தில் புத்தர் நடுநிலைமை காத்துள்ளார் என்பது மட்டும் புலனாகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் ‘புத்த மதம் கடவுள் விமரிசனமற்ற மதம்’ . ‘இருந்தால் நல்லா இருக்கும்’ என்று கூறும் அக்னாஸ்டிக் வகையறா.

ஓஷோ ரஜ்னீஷ் போன்ற பல பௌத்தர்கள் மறைமுகமாகக் கடவுளை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆக, இன்றுவரை புத்தமதத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்கிற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் இல்லை.

சித்தார்தர் புத்தராகி விழிப்பு நிலை அடைந்த பிறகு (புத்தர் என்பதற்கு ‘விழிப்படைந்தவர்’ என்று பொருள்.) தேடலின் முடிவில் தான் கண்டடைந்த உண்மைகளை ஒரு சூத்திர வடிவில் அறிவித்தார்.

1. இது இருந்தால் அதுவும் இருக்கும்.
2. இதனுடைய எழுச்சியினால் அதுவும் எழும்.
3. இது இல்லை என்றால் அதுவும் இல்லை.
4. எனவே, இதை நிறுத்தினால் அதுவும் தானாக நின்றுவிடும்.

அது எது? இது எது?

இது=ஆசை; அது=துன்பம்.

புத்தர் சொல்ல வருவது என்னவென்றால்,

1. துன்பம் இருக்கும் இடத்தில் ஆசையும் இருக்கும்.
2. ஏனென்றால் துன்பம் எழக் காரணம் ஆசை.
3. ஆகவே, ஆசை இல்லையேல் துன்பம் இல்லை.
4. எனவே, ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பமும் நின்றுவிடும்.

இவையே புத்தர் கண்ட நான்கு பேருண்மைகள்.

நாம் இந்த சூத்திரத்தை இப்படியும் பயன்படுத்த முடியும்,

இது=பிறவி; அது=மரணம்
இது=காதல்; அது=அன்பு
இது=மனிதன்; அது=கடவுள்
இது=பகல்; அது=இரவு
இது=இன்பம்; அது=துன்பம்
இது=ஆண்; அது=பெண்
இது=நல்லது; அது=கெட்டது
இது=கல்வி; அது=அறிவு
இது=மதம்; அது=சாதி
இது=கோயில்; அது=மூடநம்பிக்கை
இது=உலகம்; அது=மாயை
இது=அடி; அது=முடி


இதுபோல நாம் பல இரட்டைப் பண்புகளை வைத்து புத்தர் கூறிய சூத்திரத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த உலகம் ஒரு மாயை என்பது நமக்கு மிக நன்றாகவே புலப்படும். அப்படியே கடவுளும் ஒரு மாயையே என்ற முடிவுக்கு நம்மை அழைத்து சென்றுவிடும். ஏனென்றால் அறியபடுபவனான மனிதன் இல்லை என்றால் கடவுள் என்பவர் இருந்தும் பயனில்லை அல்லவா. யாரும் அறியாமல் கடவுள் இருந்து யாருக்கு என்ன லாபம்? 

எனவே மனிதனே கடவுள், கடவுளே மனிதன் என்ற இரட்டைப் பண்பு நம்மை கடவுளிடம் இணைக்கிறது. மனிதன் இல்லை என்றால் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்றால் மனிதன் இல்லை. ஆகவே நாமெல்லாம் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வேண்டும் என்பதை புத்தரின் சூத்திரம் மறைமுகமாக நமக்கு எடுத்துரைப்பதால் நாம் இச்சூத்திரத்தின் படி சில "இது"க்களை விட வேண்டும், சில "இது"க்களை பெற வேண்டும் என்பது தெளிவு. "அது" வேண்டுமென்றால் "இது"வும் வேண்டும். "அது" வேண்டாமென்றால் "இது"க்களை விட்டுவிடவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.