Friday, March 11, 2016

"சமணம்" - மார்ச் -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சமணம்" - மார்ச் -2016

MARCH - 2016

                                                                   நன்னெறிகள்

    ஒருவனுக்கு எட்டு வகையானவற்றைக் குறித்து நினைக்கும்போது அவனுக்கு மதம் பிடித்துவிடும். அதாவது தன்னுடைய அறிவு, சிறப்பு, குலம், ஜாதி, பலம், வித்தை, தவம், சரீரம் ஆகிய எட்டு வகைகளைப் பற்றி செருக்கு கொள்ளாமல் இருக்க வேண்டும். அவனே நற்காட்சி உடையவன் என்கிறது ஜைனம்.

    ஒருவன் தன்னுடைய சிறப்பினை உலகிற்கு தெரிவிக்கும்போது செருக்கு இல்லாமல் சொல்ல வேண்டும். "நாயினும் இழிந்தேன் ஆயினும் அருளினாயே இறைவா!" என்று இறை அருள் தனக்குக் கிடைத்துவிட்டது என்பதை செருக்கில்லாமல் தன்னை இகழ்ந்துக் கொண்டே தன்னுடைய உயர் நிலையினை தெரிவிப்பது நற்காட்சி உடையவனின் செயலாகும்.

    அதுபோல் மும்மூடங்களையும் ஒருவன் பின்பற்றக்கூடாது. மும்மூலம் என்பது உலகமூடம், தேவமூடம், பாஷண்டிமூடம் ஆகியவையாகும்.

    உலக மூடம்: மலையின் மீதேறி கீழே விழுதல். தீயினுள் பாய்தல், நதி, கடல் இவற்றில் நீராடுதல் ஆகியன நல்வினையைத் தருமென்றும், மோட்சத்திற்குக் காரணமென்றும் நம்புதல் உலக மூடமாகும்.

    மலை மீதேறி அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்தல், அதுபோல் தீமூட்டி அதில் விழுந்து தற்கொலை செய்தல், ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இறந்தால் நேரே சொர்க்கம் செல்லலாம் என்று அந்த இடத்தில் அந்த நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்டு மாய்தல் போன்றவை உலக மூட செயலாகும். அதேபோல் கடல்களில் நீராடுதல், நதிகளில் நீராடுதல், குளம் குட்டைகளில் நீராடுதல் போன்றவை பாவங்களை நீக்கும் என்பதும் உலக மூட செயலாகும்.

    தேவ மூடம்: ஆசை, கோபம் முதலியவற்றைக் கொண்ட தேவதைகளை வணங்குதல் தேவ மூடமாகும்.

    காளி, அங்காள பரமேஸ்வரி, மாரியாத்தாள், திரெளபதி அம்மன் இப்படிப்பட்ட சிறு தெய்வங்களே ஆசை, கோபங்கொண்ட தேவதைகளாகும். இவைகளை வணங்குதல் தேவ மூடச் செயலாகும்.

    பாஷண்டி மூடம்: அருகப்பெருமானால் அருளிச் செய்யப்பட்ட நன்னெறியைக் கைக்கொள்ளாது தீநெறியினைக் கொண்டொழுகும் போலித்துறவிகளை வணங்கி அவர் நல்லன அருளுவாரென நம்புதல்.

    அரன்மனைப் போன்று ஒரு ஆசிரமத்தை உருவாக்கி, உலகப் பணக்காரர்கூட அனுபவிக்க இயலாத சுகங்களை அங்கே இருந்துக்கொண்டு காவி அல்லது வெள்ளாடை உடுத்திக்கொண்டு அனுபவித்துக்கொண்டு மக்களை மதங்கள் வழியே ஏமாற்றி பாவிகளே இங்கு வாருங்கள், நான் உங்கள் பாவங்களை விலக்கி மோட்சம் கொடுக்கிறேன் என்றும் பல அற்புதங்கள் செய்கிறேன் என்றும் கூறுபவர்களை வணங்கி அவர்களை நம்புதல் பஷண்டி மூடச் செயலாகும்.

இப்படிப்பட்ட மூன்று மூடச்செயல்களை கடைபிடிக்காமல் இருப்பவன் ஜைனன். மேலும் திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோபபோக பரிமாண விரதம் என்ற மூன்று குணவிரதங்களும், தேசவிரதம், சாமாயிக விரதம், போசத உபவாசவிரதம், வையாவிருத்தியம் என்ற நான்கு சிட்சா விரதங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

1. திசை விரதம்: இதைத் தசை வரையறை என்றும் கூறலாம். பத்துத் திக்குகளிலும் இவ்வளவு தூரத்திற்கு மேல் இறக்கும் வரையில் செல்வதில்லை என எல்லை வரையறை செய்து கொண்டு ஒழுகுதல்.

2. அனர்த்த தண்ட விரதம்: இவ்விரதம் ஐந்து வகைப்படும்,

    தீயசிந்தை: பிறருக்கு கெடுதலை விளைவிக்க வேண்டுமென்று சிந்தனை செய்தல்.

    தீயன உரைத்தல்: கொலைக்குக் காரணமான உரைகளை உரைத்தல்.

    பயனில செய்தல்: யாதொரு பயனையும் தராத செயல்களைச் செய்தல், பயன் ஒன்றுமில்லாது மரத்தை வெட்டுவது, செடியை சிதைப்பது, மொட்டுக்களை கிள்ளி எறிவது, நிலத்தைக் கிளறுவது, நெருப்பை எரிப்பது போன்றவை.

    வதையோம்புதல்: பிறவற்றின் கொலை அல்லது வதைக்குக் காரணமான சாதனங்களை (மண்வெட்டி, அரிவாள், கத்தி, துப்பாக்கி, நெருப்பு, சீப்பு, ஈர்க்கொல்லி முதலிய கொலையாதுங்கள்) அளித்தல் வதை ஓம்புதலாகும்.

    தீச்சாத்திரம் தீண்டல்: தீவினைகள் வந்தடைவதற்கு ஏதுவாக நூல்களைப் படித்தல், கேட்டல், சிந்தித்தல் முதலியன தீச்சாத்திரம் தீண்டலாகும். இவ்வாறு ஐந்து வகையான பொருளற்ற செயல்களை விடுதல் அனர்ந்த தண்ட விரமாகும்.

3. போகோபபோக பரிமாண விரதம்: இது உத்ர குணத்தின் மூன்றாவது வகையாகும். ஒருமுறை மட்டும் உபயோகப்படும் உணவு, சந்தனம், தாம்பூலம் முதலியன போகப் பொருள் எனப்படும். பலமுறை உபயோகிக்கப்படும் ஆபரணம், கட்டில், ஆடை முதலானவை உபயோகப் பொருள்கள் ஆகும். இந்த இரு வகையான பொருட்களையும் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே நுகர வேண்டும் என வரையறை செய்து கொள்வது போக உபயோக பரிணாம விரதத்தின் நோக்கமாகும்.

    சிட்சா விரதங்கள் நான்கு;

1. தேசவிரதம்: ஓரிடத்திற்கு வெளியே செல்வதில்லை என வரையறுத்தல்.
2. சமாயிக விரதம்: மனம், மொழி, மெய் இவற்றால் வரும் வினைகளைத் தடுத்து நிறுத்த ஆன்ம சிந்தனை செய்தல்.
3. தொடர் உண்ணாவிரத நோன்பு: குறிப்பிட்ட நாட்களில் உண்ணாமல் இருப்பது.
4. அதிதிசம்விபாகம்: நல்லுணவு, மருந்து, அடைக்கலம், கல்வி ஆகிய நான்கினையும் தூயோர்களுக்கு கொடையாக அளித்தல்.

2 comments:

  1. Your article about Samanam is good.
    The principles of Samanam (Jainism) are highly acceptable one.

    ReplyDelete
    Replies
    1. You are very correct Sir..., Thank you for your feedback.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.