Friday, March 11, 2016

ஆசிரியரின் தலையங்கம் - மார்ச் - 2016

சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சியாச்சின் சிதறல்கள்
MARCH - 2016
                                                          சியாச்சின் சிதறல்கள்

    உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிக நீளமான பனிமலை பிரதேசம் இந்த சியாச்சின். NJ9842, காரகோரம் கனவாய் மற்றும் இந்திரா கால்வாய் என மும்முனை அமைப்பால் சூழப்பட்டுள்ளது இந்த சியாச்சின். இங்கு நூப்ரா மற்றும் ஷையோக் நதிகள் ஓடுகின்றன. ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால்தான் சிந்து நதியே ஓடுகின்றது. அப்படிப்பட்ட சியாச்சின் கடல் மட்டத்திலிருந்து 18000 அடி முதல் 21000 அடிவரை உள்ள உயரத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த ஹெலிபேட் அமைந்துள்ள இடம் எதுவென்றால்? இந்த சியாச்சின் மலையில் 21000 அடி உயரத்தில் இந்தியா அமைத்துள்ள ஹெலிபேட்தான் அது. உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள  போர்களமும் இதுவே.



    சர்வதேச மலையேற்றக் குழுவினர் பலர், சியாச்சின் மலையைத் தொட்டுப்பார்க்க பாகிஸ்தான் அரசிடம் அனுமதி பெறத் தொடங்கின. தனக்கு உரிமையல்லாத இடத்தினை சுற்றுப்பார்க்க பாகிஸ்தானும் அனுமதியளித்து வந்தது. இதனைப் பயன்படுத்தி சியாச்சின் பகுதியினை பாகிஸ்தான் நாளடைவில் ஆக்ரமித்துக்கொண்டது. அமெரிக்காவின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் விரிவுபடுத்தி வெளியிட்டுக்கொண்டது. அதுவரை இந்தியா தூங்கிக்கொண்டிருந்தது. 1984-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதிதான் இந்திய அரசு விழித்துக்கொண்டது. அன்றையதினம் "ஆப்ரேசன் மேகதூத்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி, கலோனல் என்.குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி சியாச்சின் பகுதியிலுள்ள பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி 900 சதுர மைல்கள் முழுதும் மறுபடியும் இந்தியா தன்வசம் மீட்டது. அன்றிலிருந்து அப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதும் ஒரு சிறிய சியாச்சின் பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாடில் உள்ளது.

    1949-ஆம் ஆண்டு கராச்சி உடன்படிக்கை மற்றும் 1972-ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கைப்படி இந்திய-பாகிஸ்தான் அரசுகள் சியாச்சின் பனிமலையில் NJ9842 என்றழைக்கப்படும் போர் நிறுத்த எல்லைக்கோட்டை வரையறுத்தது. தெளிவற்ற இந்த போர் நிறுத்த எல்லைக்கோட்டை பின்னர் இரு நாடுகளும் மதியாது போரிட்டுக்கொண்டு வருகிறோம். சமீபத்தில் 2003-ஆம் ஆண்டில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்டது. அதுமுதல் இன்றுவரை இந்திய தரப்பில் மோதல் காரணமாக ஒரு வீரர்கூட உயிர் இழக்கவில்லை என்பது சிறப்பு.

    சியாச்சின் பகுதி எங்களுடையது என்று பாகிஸ்தான் இன்றுவரை சொல்லிவருகிறது. மீண்டும் சியாச்சினை மீட்க 1990, 1995, 1996 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. சியாச்சின் பகுதிகளில் இருக்கும் வீரர்களின் பாதுகாப்பு பணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7,504.99 கோடி இந்திய ராணுவம் செலவிட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சியாச்சின் வீரர்களுக்காக 6.8 கோடி ரூபாய் இந்தியா செலவழிக்கிறது. ஆனால் இவ்வீரர்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்குக் கூட சம்பளத்தில் ஊக்கத்தொகை கிடையாது எனக் கூறப்படுகின்றது.

    நமது உடலில் சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாகப் பட்டால் கடும் குளிரால் உறைந்து உடல் ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அளவிற்கு குளிர்நிறைந்தப் பகுதி அது. மைனஸ் 50 டிகிரி வரையிலான குளிர் இருக்கும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 சாதனங்கள் உட்பட 50 சாதனங்களை பாதுகாப்பு உடைகளாக நமது வீரர்கள் அணிவது அவசியம். கழிவறை செல்லும் போது தேவையான இடத்தில் மட்டும் கழற்றும் வசதி இந்த ஆடையில் இருக்கும். கீழ்ப்பகுதி முகாம்களில் உள்ள 'ஹீட்டர் பங்கர்' என்ற இடத்திற்கு வந்த பிறகே குளிப்பதற்கு இந்த ஆடைகளை கழற்ற வேண்டும். இங்குள்ள வீரர்களுக்கு அதிக பசி இருக்காது. என்றாலும் சாக்லேட், ஹெல்த் ட்ரிங்க்ஸ் போன்ற அதிக கலோரிகள் கொண்டவற்றை உணவாக உட்கொள்வார்கள்.



    ஆக்சிஜம் இப்பகுதியில் மிகக் குறைவாகவே கிடைக்கும். இதனால் இங்குள்ள வீரர்களுக்கு தலை வலி, ரத்தக் கொதிப்பு, மூச்சுத் திணறல், கடும் இருமல், சளி ஆகியவை ஏற்படும். மூளை, குடல், தொண்டை, கை, கால்கள் போன்ற உடலின் பல பகுதிகளில் ரத்தம் கட்டுதலும் ஏற்படும். சிலருக்கு நினைவு இழப்பு ஏற்படும். இதனால் சியாச்சினில் பணியாற்றிவிட்டு திரும்பும் வீரர்களுக்கு சக இராணுவ வீரர்களிடையே மரியாதையும், சாதனையாளர்களாக அவர்களை நோக்கும் கெளரவமும் கிட்டும். இங்கு பணியாற்ற யாரும் கட்டாயப் படுத்தப் படுவதில்லை. உடல் தகுதியில் அடிப்படையில் அவர்களின் விருப்பத்திற்கிணங்க சில பயிற்சிக்கு பின்பு அவர்கள சியாச்சின் அனுப்பி வைப்பார்கள்.

    இவர்கள் படிப்படியாக ஒவ்வொரு முகாமிலும் தங்கி படிப்படியாக அதற்கும் மேலே உள்ள முகாமிற்கு அனுப்பப்படுவர். உடல் ஒத்துவரவில்லை எனில் அந்த குறிப்பிட்ட முகாமோடு திருப்பி அனுப்பப்படுவர். இப்படியாக படிப்படியாக சியாச்சின் எல்லையை அடையவே இவர்களுக்கு ஐந்து மாதம் பிடிக்கும். பிறகு அங்கு ஐந்து மாதம் மட்டுமே ஒருவர் பணியாற்ற முடியும். அதற்கு மேல் பணியாற்றினால் உயிர் வாழ்வது கடினம். அங்குள்ள குளிரினால் இவர்களுக்கு ஒருநாள்கூட நிம்மதியான தூக்கம் கிடைக்காது. சியாச்சின் உச்சியில் உள்ள முகாம்களுக்கு நேரடியாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் வீரர்களால் மற்றவர்களைப்போல பணியாற்ற முடியாது. அவ்வாறு நேரடியாக இறங்கிய அதிகாரிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

    சியாச்சின் மலையில் கீழ் மட்டத்திலுள்ள முகாமினை முதன்முதலில் வந்து பார்வையிட்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். அதன் பிறகு தற்போதய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் சென்ற தீபாவளி அன்று சென்று வீரர்களுக்கு இனிப்பு கொடுத்துவிட்டு வந்தார். மறைந்த நமது அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே இந்த முகாமிற்கு சென்று பார்த்துவிட்டுவந்த ஒரே குடியரசுத் தலைவர் ஆவார்.

    பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இவ்விடத்தில் மிக பயங்கராக அவ்வப்போது பனிச்சரிவும் ஏற்படும். இப்படிப்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி 1984-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 869 இந்திய வீரர்கள் இறந்துள்ளனர். இப்படியான பனிச்சரிவுதான் கடந்த பிப்ரவரி மாதம் 03-ஆம் தேதி ஏற்பட்டது. அதில் சிக்கி மெட்ராஸ் ரெஜிமென்ட்-ஐ சேர்ந்த 9 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு இராணுவ இளநிலை அதிகாரியுமாக மொத்தம் 10 நபர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    19000 அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய இவர்களை மீட்க பல டன் எடையுள்ள கான்கிரீட்டை விட பலமுள்ள பனிப்பாறைகளை உடைத்துத் தோண்டி உடல்களைத் தேடினர். அனைவரும் சடலமாக மீட்டெடுக்கப்பட்டனர். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகும் கர்னாடக மாநிலத்தைச் சார்ந்த ஹனுமந்தப்பா என்ற இராணுவ வீரர் மட்டும் உயிருடன் சுமார் 25 அடிக்குக் கீழே பனிப்புதையலில் இருந்து மீட்கப்பட்டார். மருத்துவ உலகில் இது ஒரு பேரதிசமாக பார்க்கப்பட்டது. எனினும் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது ஆன்மாவும் நம்மைவிட்டு விடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் துக்காம்பாறையைச் சேர்ந்த எம்.ஏழுமலை, தேனி மாவட்டம் குமணன்தொழுவைச் சேர்ந்த எஸ்.குமரன், மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய நான்கு தமிழக வீரர்களும் பலியானோர்களில் அடக்கம். இவர்கள் பத்து வீரர்கள் இல்லாமல் 2016-ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு வீரர்கள் இறந்துள்ளனர். ஆக இதுவரை 883 வீரர்கள் சியாச்சின் பனிமலையில் வீர மரணம் அடைந்துள்ளனர். 

    பாகிஸ்தான் தரப்பிலும் உயிர்சேதம் ஏற்படாமல் இல்லை. மிக அதிகபட்சமாக 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பாகிஸ்தானிய வீரர்கள் 140 பேர் உயிரிழந்தனர்.

    இவ்வாறு சியாச்சின் பகுதியில் மனித உடல்கள் சிதறுவதை இன்னும் எத்தனை காலம்தான் இந்த உலகம் அனுமதிப்பது? மனிதர்களே செல்லமுடியாத அந்த பனிப்படர்ந்த இடத்தால் யாருக்கு என்ன இலாபம்? எனவே இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் போடுவதை விடுத்து, சியாச்சின் என்கிற அவ்விடம் முழுதும் நம் இருவருக்கும் பொதுவான இடம் என்று ஒப்பந்தம் போட்டு ஒரு முடிவிற்கு வரவேண்டும். இரு நாட்டின் ஒப்புதலின்றி அங்கு பிற நாட்டினரை போக விடக்கூடாது. இரு நாட்டினரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் போகக்கூடாது. வருடத்திற்கு ஒருமுறை இரண்டு நாட்டு இராணுவமும் சியாச்சின் சென்று அவரவர்கள் எல்லை சுத்தமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்துவிட்டு திரும்ப வந்துவிட வேண்டும். சியாச்சின் பகுதியில் பாயும் ஆறுகளின் நீர் வளத்தினை எப்போதும் போல இன்று இருப்பதுபோலவே தொடர வேண்டும். இவ்வொப்பந்தத்தை நம் இரு நாடுகளில் யாரேனும் ஒருவர் மீறினாலும் மீண்டும் பழைய நிலைப்படி பழைய எல்லையை அவரவர்கள் எடுத்துக்கொண்டு, பழையபடி எல்லையை காப்பதில் இருவரும் ஈடுபடலாம், என்று பொது ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் அடிகோல வேண்டும்.

    இந்த ஒப்பந்தத்தினால் இரு நாட்டு இராணுவ வீரர்களின் உயிர்கள் காக்கப்படும். மேலும் இரு நாட்டு பொருளாதாரமும் வலுப்படும். இன்றைய நாகரிக உலகில் இந்த பொது ஒப்பந்தம் கூட நம்மால் போடமுடியாது, மனித குலத்திற்குத் தேவைப்படாத ஒரு இடத்திற்காக இரு நாட்டினரும் அடித்துக்கொள்வது வெட்கப்படத்தக்கதாகும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளற்பெருமானும் இதற்கான செயலில் ஈடுபட்டு மனித குலத்தை ஒற்றுமையுடன் வாழவைக்க வேண்டும், என்று இந்த நேரத்தில் சன்மார்க்க விவேக விருத்தி விண்ணப்பிக்கின்றது. சியாச்சின் சிதறல்களில் பலியான இரு நாட்டு இராணுவ வீரர்கள் அனைவருக்கும் அவர்களைச் சார்ந்த இனிய குடும்பங்களுக்கும் நாம் செய்யப்போகும் இந்த பொது ஒப்பந்தமே இனிய செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.