ஆகம விதிப்படி அர்ச்சர்கள்
JANUARY - 2016
ஆகம விதிப்படி அர்ச்சகர்கள்
ஆகமம் என்பது நடைமுறை விதிகள் ஆகும். இந்த நடைமுறை விதிகள் காலத்திற்கு ஏற்ப அடிக்கடி மாறும் இயல்புடையது. வைணவத்தில் இரண்டு ஆகமமும் சைவத்தில் இருபத்தெட்டு ஆகமமும் இருப்பதாக சொல்வர். இந்த ஆகமங்கள் முழுதும் படித்தவர்கள் இன்று யாருமில்லை. அப்படியே இருப்பினும் இந்த ஆகம விதிப்படி எந்த ஒரு அர்ச்சகர்களும் அதில் குறிப்பிட்டுள்ள ஒழுக்கங்களை கடைபிடிப்பதில்லை. எனவே அந்த ஆகம விதிகள் அவ்வப்போது காலத்திற்கு ஏற்ப மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆகம விதிப்படி கோவிலும் அமைக்கப்பட வேண்டும். சிதம்பரம் நடராஜக் கோவிலே ஆகம விதிப்படி அமையப்பெறவில்லை. அப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்ததோ தெரியவில்லை. நீதிமன்றம் எடுத்துக்கொண்ட ஆகமம் எது: எவை? என மக்களுக்கு இதுவரை தெரியவில்லை. தற்போதய நிலையில் தமிழகத்தில் ஆகமவிதிப்படித்தான் தகுதியுள்ள அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் அமலில் உள்ளது. எனவே தற்போதய தீர்ப்பு தி.மு.க. ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த அரசாணையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றே தோன்றுகிறது.
எனினும் தீர்ப்புகள் மாற்றப்படலாம். இன்றைய குற்றவாளி நாளைய நிரபராதி என்பதே நம்முடைய சட்டம் வகுத்துள்ள வழிமுறைகள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் கலங்க வேண்டாம். அர்ச்சகர் என்பது தற்காலத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய ஒரு பதவி. அந்தப் பதவிக்கு படித்துவிட்டு தகுதி பெறுகின்ற எவரும் அந்த வேலையை செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரையாக கிராம நிர்வாகம் செய்து வந்த கணக்குப்பிள்ளை என்கிறவர்கள் கருணீகர் என்ற குலத்தை சார்ந்தவர்களாக இந்தியா முழுதும் இருந்து வந்தனர். இவர்களை மன்னர் ஆட்சி முதற்கொண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இவர்களது பணியினை மதித்து பரம்பரை பணிக்கு உறுதுணையாக இருந்தனர். இவர்களை கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பரம்பரைத் தொழில் தொடரா வண்ணம் சட்டம் இயற்றி தடை செய்தார். அதற்கு பதிலாக புதியதாக கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியை ஏற்படுத்தி, படித்தவர்கள் எவராயினும் இந்தப் பணியை செய்யும் வண்ணம் ஏற்படுத்தி ஒரு நீண்டகால வரலாற்றையே உடைத்தெரிந்தார்.
அதுபோல அர்ச்சகர் என்பதும் ஒரு சமுதாயப் பணிதான். அதனை பரம்பரைத் தொழிலாக இல்லாமல், தகுதியுள்ள எவரும் செய்யும் வண்ணம் வகுக்க வேண்டும் என்பதே சன்மார்க்க விவேக விருத்தியின் எண்ணமாகும்.
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
குடியரசு தினம்
JANUARY - 2016
குடியரசு தினம்
இந்திய மக்களாகிய நம்மை, இந்திய மக்களாகிய நாமே ஆண்டு கொள்ளும் முறைக்கு குடியரசு என கூறுகிறோம். நம்மை நாம் ஆள்வதற்குத்தான் நமக்குள்ளே எவ்வளவு போட்டிகள் நடைபெறுகின்றன. நம்மில் மக்களை மிகத்திறமையாக ஏமாற்றுபவர்கள் யாரோ அவர்களே நம்மை ஆள்கின்றனர். நம்மில் யாரை நம்பி ஆட்சியை கொடுப்பது என்பது மிகப்பெரும் சவாலை குடிமக்களுக்கு ஏற்படுத்துகிறது. அரசியல் வாதிகள் முதலில் தம் குடும்பத்தையே நம்புகின்றனர். அரசு அதிகாரம் நமது குடும்பத்தைவிட்டு வேறு மக்களுக்கு சென்றடையா வண்ணம் குடியாட்சி நடத்தப்படுகிறது.
தனி மனித நம்பகத்தன்மை தற்போது இல்லை. கட்சி, சாதி, குலம், இனம், மொழி, ஊர், மாநிலம், மதம் என்கிற பெரும் வளையத்தைத் தாண்டி ஒருவரின் நம்பிக்கையை பெறுவதற்குள் மூச்சு முட்டுகிறது. மக்கள் தாங்களாகவே ஏதேனும் ஒரு அடிப்படையில் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து பிரிந்து தங்களின் உரிமைகளுக்காக அந்தந்தக்குழு தலைவர்கள் மூலம் அடித்துக்கொண்டு முன்னேறுவதுதான் குடியரசு ஆட்சியா?
தனி மனித நம்பகத்தன்மை மக்களிடம் வரவேண்டும். அப்போதுதான் குடியாட்சி சிறக்கும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை கட்சிகள் கலைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் புதியக் கட்சிகளும் புதிய வேட்பாளர்களும் மட்டுமே தேர்தல் களத்தில் நிற்கும் வகையிலும் அதில் ஐம்பது சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடும் அளிக்கப்பட்டு தேர்தல் நடத்தினால்தான் இந்திய குடியரசு சிறந்து விளங்க முடியும். மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரு அதிகாரி ஒரே இடத்தில் வேலை செய்தால் அங்கு ஊழல் அதிகரிக்கும் என்பதால் அதிகாரிகளை வேறு இடத்தில் மாற்றுகிறது அரசு. அதே போல் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரு கட்சி மீண்டும் தேர்தலில் நின்றால் ஊழல் ஏற்படும் என்பதை சொல்லத்தேவையில்லை. எனவே ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கட்சிகளும் புதிய வேட்பாளர்களுமே களம் இறங்க வேண்டும் என்கிற சட்டத்தை உருவாக்கி அதனை அமலாக்கம் செய்தல் வேண்டும்.
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போதய கட்சிகளும் அதற்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் நமக்கு மன்னராட்சியையே நினைவு படுத்துகின்றன. ஊழலிலும், பகட்டிலும், விளம்பர உத்தியிலும், பணத்திலும், கட்சியிலும், கட்சி சின்னங்களிலும் வல்லவர்கள் மட்டுமே ஆட்சியை பிடிக்கின்றனர். சாமான்ய இந்திய குடிகள் அனைவரும் ஆட்சியில் பங்கேற்கும் வசதியை கொடுக்கும் ஆட்சிதான் உண்மையான குடியரசு ஆட்சி ஆகும். இந்திய மக்கள் அனைவருக்கும் இந்த கனவு விரைவில் நிறைவேற சன்மார்க்க விவேக விருத்தி தமது குடியரசுதின வாழ்த்துக்களை இந்தியர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சிறார் சீர்திருத்தம்
JANUARY - 2016
சிறார் சீர்திருத்தம்
நிர்பயா வழக்கில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவன் 18-வயதிற்கு உட்பட்டவன் என்ற காரணத்தால் மூன்றாண்டு சிறார் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டான். உச்ச நீதி மன்றமும் அவனது விடுதலையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. கொடுங்குற்றம் செய்தவன் தற்போது பெரியவனாகி நமது சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்டான் என்பது வேதனையளிக்கிறது.
சிறார் நீதிச்சட்டத் திருத்தத்தை இவனது விடுதலைக்கு முன்னரே நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேறாமல் பார்த்துக்கொண்டிருந்தது காங்கிரஸ். அக்கொடூரன் விடுதலைக்குப் பின்பு நடந்த நாடாளுமன்ற அலுவலில் மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறிவிட்டது.
அதாவது சிறார்கள் என்றால் 18 வயது என்றிருந்ததை 16 வயது என இரண்டு வருடங்கள் குறைத்து தற்போது இந்த சட்டத்திருத்தம் மசோதாவாக குடியரசுத் தலைவர் கையொப்பத்திற்கு சென்றிருக்கின்றது. அவர் இந்த மசோதாவில் கையொப்பம் இட்டுவிட்டால் இந்த திருத்தம் சட்டமாகிவிடும். இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் யாருக்காக இந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதோ அந்த குற்றவாளி தப்பிவிட்டான். முன் தேதியிட்டு இச்சட்டத்தை அமல் படுத்தவும் முடியாது. நமது நாடாளுமன்றம் செயல்பட்டு என்ன புண்ணியம்? நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தினமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்காகவே நமது இந்திய நாடாளுமன்றம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த சட்டத்திருத்தம் மூலம் இனி ஓட்டுரிமைக்கூட 16-வயதினரிலிருந்து வழங்கப்படலாம். எனினும் சிறார்கள் என்றால் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றே கருதி அதற்கேற்ப மீண்டும் சட்டத்தை திருத்துவதே நல்லது. ஒருவன் அல்லது ஒருவள் பாலியலில் ஈடுபட 12 வயது நிறைந்திருந்தால் போதுமானது என்பதை இயற்கை விதித்திருக்கிறது. நமது வள்ளற்பெருமான் தாம் உருவாக்கிய சத்திய ஞான சபையில் உள்ளே சென்று பூஜை செய்ய 12 வயதிற்கும் கீழ் உள்ள சிறார்களும் 72 வயதிற்கு மேற்பட்ட பெரியோர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளதை இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும். பாலியலில் ஈடுபட முடியாதவர்கள் மட்டுமே சத்திய ஞானசபையில் பூஜை செய்ய வேண்டும் என்பதையே அவர் சுட்டிக் காட்டுகிறார்.
12-வயதிற்கு மேல் ஒருவனுக்கு இந்த உலகம் என்றால் என்ன என்று இயற்கையும் அவனைச் சுற்றி நடக்கின்ற சமுதாய நிகழ்ச்சிகளும், விஞ்ஞான கருவிகளும் மிக வேகமாக சொல்லிக்கொடுத்து விடுகின்றன. தான் ஒரு இளைஞன் இளைஞி என்பதை 13-வயதிலிருந்து யாவரும் உணர்ந்து இயற்கையாகவே அனுபவிப்பர்.
குற்றங்கள் நிகழா வண்ணம் காப்பது பெற்றோர்களின் கடமையாகும். பெற்றோர்கள் சரியாக இருந்தால் சிறார் குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. ஆகவே கூடிய விரைவில் 16-வயது என்பதை 12-வயது என்று திருத்தம் செய்வது நாட்டிற்கு நல்லது என்று சன்மார்க்க விவேக விருத்தி கருதுகிறது.
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
தைப்பூசம்
JANUARY - 2016
தைப்பூசம்
தம்முடைய லட்சிய கனவான மரணமிலா பெருவாழ்வாழ்கிய பூரணத்துவத்தை நமது வள்ளற்பெருமானுக்கு கொடுத்த புண்ணிய நாள் எதுவென்றால், அது இந்த தைப்பூச நாளே. இதற்காக நமது வள்ளற்பெருமான் தமது பன்னிரண்டு வயதிலிருந்து பிரயாசை எடுத்துக்கொண்டு, அதனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாள் இரவு பன்னிரண்டு மணிக்கு பூரணத்துவம் அடைந்து வெற்றி பெற்றார்.
பூச நட்சத்திரம் என்பது 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவதாக அமைந்த நட்சத்திர மண்டலமாகும். வள்ளற்பெருமானை இந்த நட்சத்திரமே, இப்பூவுலகில் யாரும் இதுவரை எட்டாத இலக்கினை எட்டவைத்தது. மனிதர்களுக்கு பெருவாழ்வினை அளிக்கக் கூடியது இந்த தைப்பூசம் என்பதை உலகிற்கு முதன் முதலில் எடுத்துக்காட்டினார் வள்ளற்பெருமான்.
பூச நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் தை மாதமாகும். பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வழங்கப்படும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய நிகண்டு குறிப்பிடுகின்றது.
தை மாதம் முதல் நாளிலிருந்து வான்வெளியில் சூரியன் தனது பயணத்தை வடகிழக்காக மாற்றிக்கொண்டு மிகப் பிரகாசமாக ஒளிரும். எனவே மாதத்தில் வருகின்ற பூச நட்சத்திரத்தில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழு நிலவும் ஒன்றுக்கொன்று நேராக சந்திக்கும். அன்றைய தினத்தில் "காஸ்மிக் எனர்ஜி" எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இத்தருணத்தில் சூரிய சந்திரருக்கு இடையில் இப்புவியில் நாம், சத்திய ஞான சபையில் திரைகள் அனைத்தும் நீங்கப்பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மிகவும் பிரகாசமாக கண்டுகளிக்கும் வகையில் அறிவியல் பூர்வமாக உருவாக்கி வைத்துள்ளார் நமது வள்ளற்பெருமான்.
தை மாதத்தில் சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில் அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்) வீட்டிலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலை. அப்போது சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. இதனை ஜோதிடக் கலையின் மூலம் அறிந்த நமது சைவ சமயப் பெரியோர்கள், இந்த தைப்பூச நன்னாளை கொண்டாடும் விதமாக பல்வேறுபட்ட கதைகளை உருவாக்கி அதனை புராணங்கள் எனச் சொல்லி அப்புராண நிகழ்ச்சிகளை சைவ சமயக் கோவில்கள் ஆயிரங்கணக்காண ஆண்டுகளுக்கு முன்னிருந்தே கொண்டாடி வருகின்றனர். இதன் முழு உண்மையும் வள்ளற்பெருமான் அவர்களால்தான் இவ்வுலகிற்கு அனுபவ பூர்வமாக உள்ளங்கை நெல்லிக்கணி போல தெரியவந்தது.
இப்படிப்பட்ட தைப்பூசம் அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சித்திவளாகம் சென்று திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்துவிட்டு, காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை வடலூர் சத்திய ஞானசபையில் கண்டு களித்தால் நமது ஆதி வினைகள் எல்லாம் தீரும். நாளடைவில் புறத்தில் கண்ட தரிசனமானது நமது அகத்திலும் தெரியவரும். நமக்கு ஜோதி தரிசனம் என்றைக்கு அகத்தில் தெரியவருகிறதோ அன்றுதான் நமக்கு உண்மையான தைப்பூச நாள்.
நாம் ஒவ்வொருவரும் இந்த பிறவியிலேயே நமது அகத்தில் தைப்பூச தரிசனம் கண்டு களிக்க சன்மார்க்க விவேக விருத்தி வாழ்த்துகிறது.
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி!!
உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை...
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
புத்தாண்டு வாழ்த்துக்கள்
JANUARY - 2016
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுத்த சன்மார்க்க உத்தமர்களுக்கு 2016-ஆம் ஆண்டு எவ்வகையில் பயனுள்ளதாக அமையும் என்பது தெரியவில்லை. சுத்த சன்மார்க்கக் கொள்கை பரப்புதல், அன்னதானம் வழங்குதல், ஜோதி தரிசனம் பார்த்தல், சொற்பொழிவு செய்தல், நூல் எழுதி வெளியிடுதல், சமூக வலைதளங்கள் அமைத்து அதன் மூலம் சுத்த சன்மார்க்கம் பரப்புதல், புதிய சபைகள், சாலைகள் கட்டுதல், திருவருட்பா இசை விழா நடத்துதல், சுத்த சன்மார்க்க சங்கங்கள் துவக்குதல் மற்றும் நடத்துதல், சிலருக்கு குருபூஜை நடத்துதல் இவைகள் போன்ற பணிகள் செய்து வழக்கம்போல் இந்த வருடமும் சென்றுவிடுமோ என்ற அச்சம் மேலிடுகின்றது.
சாதிகளும் மதங்களும் விடுத்த சுத்த சன்மார்க்கர்கள் உருவாக வேண்டும்.
பூனூல், விபூதி, நாமம், தொப்பி, சிலுவை, காவியாடை, கோவில், தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவைகளை பற்றற விடுவித்து சத்திய ஞானசபைத் தலைவனை பற்றும் மனிதர்களாக சுத்த சன்மார்க்கிகள் உருவாக வேண்டும்.
சமய மத சடங்குகள், சமய மத மூடநம்பிக்கைகள், சிறுதெய்வ வழிபாடு, கோவில்களில் உயிர்பலி கொடுத்தல், கணவனை இழந்த பெண்களிடத்து தாலி அறுத்தல் மற்றும் பூ, பொட்டினை அணிய தடைவிதித்தல், மனைவியை இழந்தவன் மறுமணம் செய்தல், காதுகுத்தும் சடங்கினைச் செய்தல், செத்தாரை எரித்தல், கொலை செய்வது, புலால் உண்ணுவது, சிற்றின்பம் துய்த்தல் போன்ற சுத்த சன்மார்க்கத் தடைகளைத் தாண்டி ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்ற ஒழுங்கினில் ஒழுகும் சுத்த சன்மார்க்கர்கள் உருவாக வேண்டும்.
இல்லறத்தில் இருப்பவர்களைக் காட்டிலும் துறவறம் பூண்டவர்களால் மட்டுமே சுத்த சன்மார்க்கிகளாக மேற்காணும் அடையாளங்களுடன் உருவாக முடியும். எனவே சுத்த சன்மார்க்கத் துறவிகள் உருவாக வேண்டும்.
சுத்த சன்மார்க்கத் துறவிகளால் மட்டுமே மரணமிலா பெருவாழ்வினை அடைய முடியும். இவர்களால் இன்னும் பல வள்ளற்பிரான்கள் இந்த மண்ணில் நடமாட வேண்டும்.
இவைகளை எல்லாம் வழங்கக்கூடியதாக 2016-ஆம் ஆண்டு மலரட்டும். உங்கள் அனைவருக்கும் சன்மார்க்க விவேக விருத்தியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
மகா மந்திர எண்கள்:
JANUARY - 2016
மகா மந்திர எண்கள்:
ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து ஐந்தெழுத்து எனத் தொடங்கி பல எண்களின் மந்திரங்களை நாம் சமய மதங்களில் பார்க்கிறோம். சுத்த சன்மார்க்கத்தில் நாம் பார்ப்பது இவைகளுக்கும் மேற்பட்ட மகா மந்திரமாகும். இம்மாகா மந்திரம் மொத்தம் முப்பத்து மூன்று எழுத்துக்களை கொண்டு விளங்குகின்றது. நம் தெய்வத் தமிழ் மொழியில் அ, இ, உ, எ, ஒ இவ்வைந்தும் உயிர் எழுத்துக்கள். இதேபோல் ஆங்கிலத்திலும் A, E, I, O, U என்பவைதான் வவ்வல்ஸ் என்று கூறுவார்கள். மேலே உள்ள மகாமந்திரத்தில் இவ்வைந்து உயிர் எழுத்துக்களும் இருப்பதை நாம் சிந்தித்து உய்யலாம். எனவே இது உயிருள்ள மந்திரம் எனவும் வழங்கத்தகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இம்மந்திர எழுத்து முப்பத்து மூன்றினையும் எண் வடிவில் வடிக்க முயன்றபோது அரை மணி நேரத்தில் கிடைக்கப் பெற்றதெ இந்த எண் வடிவம். சமய மதங்களில் இப்படிப்பட்ட வடிவினை எந்திரம் என்று குறிப்பார்கள். சுத்த சன்மார்க்கத்தில் அவ்வாறு குறிக்கப்பெறுவது தகாது. ஆகையால் இவ்வடிவம் எந்திரம் இல்லை. எனினும் இதனை மகா மந்திர எண்கள் எனக் கருதலாம்.
"எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி" என்பார் வாசீகர்.
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" - "எண் எழுத்து இகழேல்" என்பார் ஒளவை.
"எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு" என்பார் திருவள்ளுவர்.
எனவே மகா மந்திரத்தை நாம் இனி எண் வடிவிலும் போற்றலாம்.
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
பொங்கலோ பொங்கல்
JANUARY - 2016
பொங்கலோ பொங்கல்
பொங்கல் பண்டிகையை இயற்கை நெறிமுறைகளுக்கு உட்பட்டு பழந்தமிழர்கள் கொண்டாடினர். நிலங்களுக்கு உரிமையாளர்கள் தங்களின் நிலங்களில் அறுவடை முடிந்து பணம் பார்க்கும் நாள் இந்த பொங்கல் பண்டிகை. அதனால் நில உரிமையாளர்கள் தங்களிடம் காலம் முழுவதும் உழைக்கும் உழவர்களின் மகிழ்ச்சிக்காக அன்றையதினம் அவர்களுக்கு புத்தாடைகள், நெல், கரும்பு, பழங்கள், பணம் தேவையான இன்னபிற பொருட்களையும் கொடுத்த உழவர்களை சந்தோசப்படுத்தும் விழாவாக இருந்தது இந்த பொங்கல் திருவிழா.
இவ்விழாவை மத வேறுபாடின்றி இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறுத்துவர்கள் ஆகியோர்களும் தங்களது நிலத்தில் அறுவடை முடிந்தவுடன், அதனைக் கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கலாக கொண்டாடிய காலம் தற்போது இல்லை. காரணம் இப்பொங்கல் விழாவில் இந்து மத சடங்குகள் வந்து தொற்றிக்கொண்டன. சூரிய வழிபாடு, பசு வழிபாடு, சாணப்பிள்ளையார் வழிபாடு போன்ற இன்னபிற சடங்குகள் வந்து இயற்கை விழாவினை இந்துமத விழாவாக செயற்கையாக மாற்றிவிட்டது.
தமிழர்கள் தொன்றுதொட்டு நிகழ்த்திவருகின்ற காளையடக்கும் விழாவினை, தமிழர்களின் வீர விளையாட்டு என்று மார்தட்டிக்கொண்டு சொல்லித் திரிகிறோம். அரசு இவ்விளையாட்டுக்குத் தடை விதிப்பினும், அத்தடையினை உடைக்க முயல்கிறோம். நாம் நமது வீரத்தை, நமது புலன் ஐந்தையும் அடக்குவதில் காட்டவேண்டும். அதுதான் வீரம். காளைகளின் சக்திக்கு முன்னால் நாம் எம்மாத்திரம்! நம்மால் அதனை தனித்து அடக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் காளை மாடுகள் செய்யும் வேலைகளை மனிதனே செய்து முடிக்கலமே!! எனவே வீரம் என்பதை ஐம்புலன்களை அடக்குவதில் நமது இளைஞர்கள் காட்ட வேண்டும். தமிழர்களின் பழமையான வீர விழா என்பதால் அதனை இன்றும் நாம் கண்ணை மூடிக்கொண்டு கொண்டாடுவதில் அர்த்தமில்லை. மாற்றம் முன்னேற்றம் என்று பேசுகிறோம். ஆனால் செயலில் ஒன்றுமில்லை.
இந்நிலையில் மதக்கட்டுப்பாடுகளை விட்டு, கடந்த நிலையில் இருக்கும், நில சொந்தக்காரர்கள் மற்றும் உழவர்களாக இருக்கும் சுத்த சன்மார்க்கிகள் இவ்விழாவினைக் கொண்டாடலாமா? என்றால்...
கொண்டாடலாம். மேலே குறிப்பிட்டதுபோல ஆதித்தமிழன் இவ்விழாவினை எவ்வாறு கொண்டாடினோ அவ்வாறு கொண்டாடலாம். எவ்வித சடங்குகளுக்கும் இடம் தராமல், பயிறு அறுவடைகளினால் கிடைத்த மகிழ்ச்சியை, அந்த மகிழ்ச்சியை கொடுத்த இயற்கைக்கும் மனித உழைப்பாளிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்து, சில உதவிகளை உழைக்கும் மக்களுக்கு செய்து இயற்கையாக தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தலாம். தங்களுடைய காளை மாட்டிற்கு வேலை ஏதும் கொடுக்காமல் ஒரு மாதம் விடுமுறை அளியுங்கள். தங்களுடைய பசு மாட்டிலிருந்து பாலை கறக்காமல் ஒரு வாரமேனும் அதனுடையப் பாலை அதன் கன்றுக்கு முழுவதுமாக அருந்த விடுங்கள். இதுவே கால்நடைகளுக்கு நாம் செய்யும் நன்றி. இதை விடுத்து அவைகளை குளிப்பாட்டி, பூவிட்டு, பொட்டிட்டு, வண்ணங்கள் அடித்து கற்பூர ஆரத்தி எடுப்பது மடமை.
உழவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம், பண தானம் முதலியவைகள் கொடுத்து சுத்த சன்மார்க்கிகள் தங்களது பொங்கல் திருநாளை கொண்டாடலாம். விளை நிலங்கள் சூழ்ந்த கிராமங்களே சொர்க்கம், கிராமங்களைச் சூழ்ந்த மனிதர்களே தேவர்கள். எவ்வுயிர்களையும் கொலை செய்யாமல், அவைகளை இம்சை செய்யாமல், எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே இந்த பொங்கல் திருவிழா. அவ்வாறே நடப்போம். விவசாயிகளுக்கும் உழவர்களுக்கும் சுத்த சன்மார்க்க விவேக விருத்தி தமது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
2015-ஆம் ஆண்டில் சுத்த சன்மார்க்க நிகழ்வுகள்
JANUARY - 2016
2015-ஆம் ஆண்டில் சுத்த சன்மார்க்க நிகழ்வுகள்
சுத்த சன்மார்க்கப் பாதைக்கு 2016-ஆம் ஆண்டு எவ்வகையில் அமையும்? வள்ளற்பெருமான் உருவாக்கிய சுத்த சன்மார்க்கப் பாதையில் செல்கின்ற உத்தமர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு எவ்வகையில் பயனுள்ளதாக அமைந்தது? என்று பார்க்கும் பொழுது சில முக்கிய சுத்த சன்மார்க்க நிகழ்ச்சிகளின் நினைவுகள் நமது மனதைவிட்டு என்றும் நீங்காது. உலக அளவில் எண்ணற்ற சுத்த சன்மார்க்க நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பினும், சமூக வலைத்தளங்களிலும் முக்கியமாக www.vallalarspace.com என்ற இணையத்தில் பதியப்பட்ட நிகழ்வுகளில் இருந்தும் சில முக்கிய செய்திகளை மட்டும் நாம் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
ஜனவரி-2015
1. வள்ளலார் நிறுவிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" தமது 150-ஆம் ஆண்டு விழாவினை 2015-ஆம் ஆண்டில் உலகம் முழுதும் கொண்டாடியது.
2. 04-01-2015 - சென்னை அம்பத்தூர் சன்மார்க்க சங்கத்தின் 27-ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது.
3. 06-01-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
4. 06-01-2015 - வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் அருளிய "பிரபந்தத்திரட்டு" என்ற நூலினை மேலழிஞ்சிப்பட்டு திரு.அ.திருநாவுக்கரசு ஐயா அவர்கள் மறுபதிப்பித்து, ச.மு.க. அறக்கட்டளை மூலம் வடலூர் கருணீகர் இல்லத்தில் வெளியிடப்பட்டது.
5. 31-01-2015, 01,02 & 03-02-2015 - சன்மார்க்க சங்கத்தின் 150-ஆம் நூற்றாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் சன்மார்க்க எழுச்சி மாநாடு நடைபெற்றது.
பிப்ரவரி-2015
1. 03-02-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
2. 03-02-2015 - 1932-ஆம் ஆண்டு திருவருட்பா நூலை சென்னை திரு.அருட் வெங்கட் ஐயா அவர்கள் மறுமதிப்பு செய்து மலிவு விலையில் வெளியிட்டார்.
3. 05-02-2015 - மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
4. 08-02-2015 - மத்திய மாநில அரசுகளின் மேலான கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மதுரை கருணை சபை சாலை அறக்கட்டளை சார்பில் காரைக்காலில் தொடர் முழக்கம் எழுப்பப்பட்டது.
5. 15-02-2015 - வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கம்-பெங்களூர், தமது 71-ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடியது.
6. 22.02.2015 - சுத்த சன்மார்க்க பெருநெறி பயிற்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.
மார்ச்-2015
1. 02-03-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
2. 28-03-2015 - திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த புலவர் திரு.மணிவாசகன் எழுதிய திருவருட்பா அனைத்துப்பாடல்களுக்கும் உண்டான எளிய உரை நூல் சென்னை ராயப்பேடையில் வெளியிடப்பட்டது.
3. 29-03-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
4. 29-03-2015 - இலங்கை சத்திய ஞான கோட்டத்தில் தருமச்சலை திறப்புவிழா நடைபெற்றது.
5. 30-03-2015 - பழைய பூட்டுக்கு புதிய சாவி என்னும் புத்தக வெளியீட்டு விழா திருவண்ணாமலை சன்மார்க்க சங்கத்தில் திரு பாபு சாது தலைமையில் நடைபெற்றது.
ஏப்ரல்-2015
1. 14-04-2015 - 1885-ஆம் ஆண்டு திருவருட்பிரகாச வள்ளலார் முன்னிலையில் வெளியிடப்பட்ட, தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பித்த திருவருட்பா நூலின் மறு பதிப்பினை சென்னை திரு.அருட் வெங்கட் ஐயா அவர்கள் மலிவு விலையில் வெளியிட்டார்கள்.
2. 14-04-2015 - தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் சன்மார்க்க அன்பர்களால் விரிவான அன்னதான விழா நடைபெற்றது.
3. 14-04-2015 - திருச்சி திருவானைக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது.
4. 14-04-2015 - விழுப்புரம் மாவட்ட சன்மார்க்க சங்கங்கங்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
5. 19-04-2015 - மதுரை பங்கஜம் காலனியில் உள்ள சன்மார்க்க சங்கத்தில் ஜீவகாருண்யம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
6. 21-04-2015 - அருட்பெருஞ்ஜோதி அகவல் 143-ஆம் ஆண்டின் துவக்க விழா (அருட்பெருஞ்ஜோதி அகவல் திருநாள் - சித்திரை 8-ஆம் நாள்) மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திருமாளிகையில் நடைபெற்றது.
7. 24-04-2015 - அரியலூர் மாவட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் சுத்த சன்மார்க்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.
8. 25-04-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
9. 25-04-2015 - பரமக்குடி தாலுக்கா பெரியபிச்சைப்பிள்ளையேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சன்மார்க்க தருமச்சாலையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. அதன் நிறுவனர் சாது முத்துக்குமார் (80) ஏழை எளியவர்களுக்கு ஆடை தானம் செய்தார்.
மே-2015
1. 03-05-2015 - பழனி-குருகுலம் சபா கல்ச்சுரல் ட்ரஸ்ட், சென்னை-சங்கீத் சாகர் கல்ச்சுரல் ட்ரஸ்ட் மற்றும் சென்னை-வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் மூலம் திருவருட்பா இசை நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றது.
2. 03-05-2015 - மதுரை திருப்பரங்குன்றத்தில் திருவருட்பா பஞ்சரத்ன கீர்த்தனை இன்னிசை விழா நடைபெற்றது.
3. 16-05-2015 - விருத்தாசலம் வள்ளலார் குடில் - 18-ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சன்மார்க்கக் கருத்தரங்கம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
4. 23-05-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
5. 23 & 24-05-2015 - அன்று வடலூர் ஓ.பி.ஆர். வள்ளலார் குருகுல வளாகத்தில், படப்பை திரு.இரா.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தலைமையில் சுத்த சன்மார்க்க மாநில முதல் மாநாடு நடைபெற்றது.
6. 24-05-2015 - மதுரை கருணை சபை-சாலை அறக்கட்டளை சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சில சன்மார்க்க கோரிக்கைகளை, அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொடர் முழக்கம் செய்தனர்.
7. 24 & 25-05-2015 - வடலூரில் உள்ள தூத்துக்குடி சன்மார்க்க சங்கத்தில் ஒன்பதாம் ஆண்டு தயவு இறையியல் உண்மை சித்தி விழா நடைபெற்றது.
8. 25-05-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய தருமச்சாலையில், தருமச்சாலை துவக்க நாள்விழா நடைபெற்றது.
9. 25-05-2015 - 1008 அருட்பா அமுதம் என்கிற நூலை மேட்டுக்குப்பத்தில் திரு.அருட் வெங்கட் ஐயா அவர்கள் வெளியிட்டார்.
10. 25,26 & 27-05-2015 - வடலூரில் திருவருட்பா இசைவிழா நடைபெற்றது.
11. 31-05-2015 - கள்ளக்குறிச்சி வட்டம் நல்லசேவிபுரம் கிராமத்தில் உள்ள சன்மார்க்க சங்கத்தின் 50-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
ஜூன்-2015
1. 11 & 12-06-2015 - வள்ளற்பெருமானின் தாய் சின்னம்மையார் தருமச்சாலை மற்றும் ஞான சபையின் முதலாம் ஆண்டுவிழா சின்னகாவனத்தில் நடைபெற்றது.
2. 19-06-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
3. 28-06-2015 - பெரம்பூர் அருள்ஜோதி அன்ன ஆலயம் மற்றும் பாரதிநகர் வள்ளலார் இளஞர் பேரவை சார்பாக வியாசர்பாடி-சென்னையில் சன்மார்க்க விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.
ஜூலை-2015
1. 16-07-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
2. 26-07-2015 - பெரம்பூர் அருள்ஜோதி அன்ன ஆலயம் சார்பாக வள்ளலார் நகர், தங்கசாலை தெருவில் சன்மார்க்க விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.
3. 26-07-2015 - மேட்டுக்குப்பம் வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் மற்றும் அனைத்து சோழமண்டல சன்மார்க்க சங்கங்களில் சார்பில் ராஜமன்னார்குடியில் சோழமண்டல வள்ளலார் எழுச்சி மாநாடு நடைபெற்றது.
ஆகஸ்ட்-2015
1. 09-08-2015 - திருவண்ணாமலை - அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக் கட்டளையானது அருள் பூரண சித்தி யோகம் நிகழ்ச்சியினை மதுரையில் நடத்தியது.
2. 13-08-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
3. 13-08-2015 - வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சில கோரிக்கைகளை முன்னிட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வடலூரில் அனைத்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
4. 14-08-2015 - விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நடத்திய சன்மார்க்க விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி மற்றும் தெருமுனைப்பிரச்சாரம்.
செப்டம்பர்-2015
1. 09-09-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
2. 09-09-2015 - வள்ளலார் சன்மார்க்க இயக்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு ஒளிநெறி பெருவிழா மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது.
3. 12-09-2015 - திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் (1974) எழுதி வெளியிட்ட அருட்பெருஞ்ஜோதி அகவலின் மறுபதிப்பினை திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தின் தலைவர் மேடா திரு நித்தியானந்தம் அவர்கள் வெளியிட்டார்கள். அவ்வமயம் அருள்ஜோதி தொலைக்காட்சி நிலையத்தார் திரு.செல்வபூபதி அவர்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடையாக திரு.மேடா நித்தியானந்தம் அவர்கள் வழங்கினார்கள்.
4. 13-09-2015 - அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கை பற்றி திரு.குப்புசாமி ஐயா, விக்ரம் ஐயா மற்றும் டாக்டர் சண்முகமூர்த்தி ஐயா அவர்களின் பேச்சுகள், அங்கு மிகுந்த தாக்கத்தை உண்டுபண்ணியது.
5. 25-09-2015 - தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி விளக்கச் சொற்பொழிவு நடைபெற்றது.
6. 30-09-2015 to 06-10-2015 - இலங்கை நாட்டில் சாவகச்சேரியில் அமைந்துள்ள சத்திய ஞானக்கோட்டமானது உலக சகோதரத்துவ நாள் விழாவினை நடத்தியது. இதன் நிறுவனர் திரு.கேதீஸ்வரன் மற்றும் அவரது மனைவியார் திருமதி விஜயலஷ்மி தலைமை தாங்கினர்.
அக்டோபர்-2015
1. 04-10-2015 - வள்ளல் பெருமானாரின் வருவிக்கவுற்ற நாள் விழா மியான்மர் நாட்டில் யாங்கோன் நகரத்தில் நடைபெற்றது.
2. 04-10-2015 - இராமலிங்கப்பெருமானார் ஜோதி வழிபாட்டு குழுவினர் சார்பாக, சிங்கப்பூர் கேலாங் சிவன் கோவிலில் வள்ளலாரின் 193-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. 05-10-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வள்ளலார் வருவிக்கவுற்றநாள் விழா திருமருதூரில் கொண்டாடப்பட்டது.
4. 05-10-2015 - காரணப்பட்டு ச.மு.க. அவர்க அருளிய திருவருட்பிரகாச வள்ளலாரின் சரித்திரக் குறிப்பினை, வண்ணப்படங்களுடன் விளக்கும் பொருட்டு "திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாறும் - உபதேசங்களும் என்னும் நூலினை மலிவு விலையில் சென்னை திரு.அருட் வெங்கட் ஐயா அவர்கள் வெளியிட்டார்கள்.
5. 05-10-2015- வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் - திரு.க.கண்ணதாசன் ஐயா தலைமையில் வடலூரில் பெருநிலைப்பெருவிழா மாநாடு நடைபெற்றது.
6. 06-10-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
7. 11 to 18-10-2015 - மலேசிய நாட்டில் வள்ளற்பெருமானின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை விளக்கும் வகையில் மதுரை திரு.பாண்டுரங்கன் ஐயா அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
8. 16 to 18-10-2015 - திருவண்ணாமலை சாது ஜானகிராமன் ஐயா அவர்கள் தலைமையில் மலேசியாவில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தியான முகாம் நடைபெற்றது.
9. 24-10-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் வள்ளற்பெருமான் கொடிகட்டிக்கொண்டு பேருபதேசம் செய்த நாள் கொண்டாடப்பட்டது.
10. 25-10-2015 - சிங்கப்பூர் நாட்டில் வள்ளலார் சன்மார்க்க சத்சங்க சங்கமம் நடைபெற்றது.
நவம்பர்-2015
1. 03-11-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
2. 08-11-2015 - கருங்குழி திருவருட்பிரகாச வள்ளலார் வளாகத்தில் சத்விசார அரங்கில் வள்ளலார் அருளிய வாழ்வியல் பற்றிய சத்விசாரம் நிகழ்த்தப்பட்டது.
3. 15-11-2015 - சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணியில் உள்ள வள்ளலார் சபையில் மாதப்பூச விழா நடைபெற்றது.
டிசம்பர்-2015
1. 24, 25 & 26-12-2015 - அன்று அண்ணாமலை பல்கலைக்கழக யோகக் கல்வி மையமும் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் முதல் ஆசிய வள்ளலார் கருத்தரங்கம் நடைபெற்றது.
2. 25 to 29-12-2015 - இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் மற்றும் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் இணைந்து, ஆனந்த் சந்திரசேகர் அரங்கம்-மேற்கு மாம்பலம், சென்னையில் 11-ஆம் ஆண்டு டிசம்பர் இசை விழா நடைபெற்றது.
3. 27-12-2015 - வள்ளலார் தெய்வ நிலையத்தாரால் வடலூர் சத்திய ஞான சபையில் மாதப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற கோடானகோடி சுத்த சன்மார்க்க நிகழ்வுகளுக்கிடையே மிகவும் அமைதியாக புரட்சி செய்து மின்னூல் வடிவிலும் MP3 வடிவிலும் திருவருட்பா மற்றும் அதனைச்சார்ந்த நூல்களைகளையும் கருத்துக்களையும் ஒவ்வொரு வீட்டின் கணிணியிலும் கையடக்க தொலைப்பேசிகளிலும் கொண்டு சென்ற பெங்களூரைச் சேர்ந்த வள்ளலார் குரூப்ஸ் திரு.இரா.பாபு ஐயா மற்றும் திரு. ஆனந்த பாரதி ஐயா மற்றும் குழுவினரையும் நாம் மறக்க முடியாது.
2015-ஆம் ஆண்டு சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்புவதில் கீழ்காணும் மாதாந்திர சிற்றிதழ்களின் பங்கும் அளப்பரிது,
1. அருட்சுடர் - நிறுவுனர்: துறவி கந்தசாமி, வடலூர்
2. வள்ளலார் சன்மார்க்க ஞானமுரசு - நிறுவுனர்: திரு பாபு சாது, திருவண்ணாமலை
3. வள்ளலார் கண்ட சாகாக்கலை - நிறுவுனர்: முனைவர்.க.நாராயணன் ஐயா, புதுச்சேரி
4. தயவுக்கதிர் - நிறுவுனர்: தயவுத்திரு.விஜயராமன் ஐயா, திருப்பரங்குன்றம்
5. சன்மார்க்க நேசன் - நிறுவுனர்: திரு.கேதீஸ்வரன் ஐயா, இலங்கை
6. வாழையடி வாழை - நிறுவுனர்: திரு.சிவப்பிரகாச சுவாமிகள், மேட்டுக்குப்பம்
7. தீபம் அறக்கட்டளை மாத இதழ் - வேளச்சேரி, சென்னை.
மேலும் 2015-ஆம் ஆண்டில் சுத்த சன்மார்க்கப் பணிகளை செய்த உலக உத்தமர்கள் அனைவர்களுக்கும் சன்மார்க்க விவேக விருத்தி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
2015-ஆம் ஆண்டு சுத்த சன்மார்க்கப் பணிகளை மிகச்சிறப்பாக செய்தமைக்காக ச.மு.க. அறக்கட்டளை நிறுவுனர் திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் இரு உத்தமர்களை தேர்வு செய்துள்ளார். அவர்களுக்கு 2015-ஆம் ஆண்டிற்கான ச.மு.க. விருதினை சன்மார்க்க விவேக விருத்தி வழங்கி மகிழ்கிறது.
உத்தமர். படைப்பை திரு.இரா.பாலகிருஷ்ணன்
உத்தமர். அருள் M.A.வெங்கட், சென்னை.
சுவாமி சரவணானந்தா எழுதிய அகவலுக்கு உரை எங்கு கிடைக்கும் என்பதை முழு முகவரியுடன் தெரிவிக்கவும்
ReplyDeleteஐயா வணக்கம்,
Deleteதயவுத்திரு.மேடா நித்தியானந்தம், ஸ்ரீவாசவி தங்க மாளிகை, வரதராஜ் வளாகம், எண்.07, மெயின் ரோடு, திண்டுக்கல் - 624001. தொடர்பு எண் 9894765247 / 9944432375
மற்றும் தொடர்பு எண்ணில் தொடர்புகொண்டால் வடலூரிலும் கிடைக்கும்.