Friday, March 11, 2016

"கண்மூடி வழக்கம்" - பிப்ரவரி -2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "கண்மூடி வழக்கம்" - பிப்ரவரி -2016

FEBRUARY - 2016

                                                          பிள்ளை விளையாட்டு
                                                              (தி.ம.இராமலிங்கம்)

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்... வள்ளலாரின் முதல் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு கந்தசாமி என்று எழுதுங்கள். சாதிப்பெயர் வேண்டாம்.... அதேபோல் திருவருட்பாவிலும் வள்ளலாரின் தந்தைப்பெயர் இராமையா என்று எழுத வேண்டும்... வள்ளல் பெருமான் சாதி சமய மதங்களை ஒழிக்க வேண்டும் என்கின்றார்... அதைத் தெரிந்து நாம் செயல்பட வேண்டும். வாழ்த்துக்கள்....

மூத்த சன்மார்க்க அன்பர் கதிர்வேலு ஐயாவை வணங்கி, அவரது மேற்காணும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் ஏற்கிறோம். சாதி சமய மதங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் "சன்மார்க்க விவேக விருத்தி" விவேகத்துடனே செயல்படும். நீங்கள் குறிப்பிடும் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை மற்றும் வள்ளற்பெருமானின் தந்தை இராமையாபிள்ளை போன்றோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். மேலும் வள்ளற்பெருமான் வெளிப்பட வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் அன்றைய சமூகத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் தங்களது சாதியப் பெயரினையும் இணைத்தே வழங்கி வந்தனர். இதனை திருவருட்பாவே நன்கு உணர்த்தும்.

வள்ளற்பெருமானின் முதல் சீடர், தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் 1867-ஆம் ஆண்டு திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் அச்சாகியது. அதில் உள்ள முகப்பேட்டில் "திருவருட்பிரகாசவள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கபிள்ளை அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருவருட்பா" என்று தொழுவூரார் அவர்கள், வள்ளற்பெருமானை கேட்காமலேயே இவ்வாறு பதிப்பித்து வெளியிட்டுவிட்டார்கள்.

பின்னர் இதனை அறிந்த வள்ளற்பெருமான் தொழுவூராரைக் கூப்பிட்டு "பிச், ஏன்காணும், திருவருட்பிரகாச வள்ளலாரென்று உம்மை யார் போடச்சொன்னது?" என்று அதட்டினார். அதன் பிறகு வள்ளற்பெருமானே அதற்கு ஒரு விளக்கமும் அளித்தார், "திருவருட்பிரகாச வள்ளல் (பதி) ஆர் என்னும் சிதம்பரம் - இராமலிங்க பிள்ளை" என்று பிரித்து விளக்கினார்.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். 1867-ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்பாவில் முதல் திருமுறையில், முதலில் திருவடிப்புகழ்ச்சி விண்ணப்பக்கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல் அதனைத்தொடர்ந்து நான்காவதாக சிவநேசவெண்பா வருகிறது. இந்த சிவநேசவெண்பாவில் ஐந்தாம் பாடலிலேயே "யிப்பாரிற் சாதியுரு வாக்குந் தளையவிழ்த்துத் தன்மயமாஞ் சோதியுரு வாக்கந் துணை" என்று சாதியினை எதிர்த்துப் பாடிவிட்டார். இப்பதிகத்தை வள்ளற்பெருமான் சுமார் இருபது வயதிற்குள் பாடியிருக்க வேண்டும். அப்படியிருக்க தமது 44-ஆம் வயதில்தான் மேற்கண்ட திருவருட்பா அச்சாகி அதன் முகப்பேட்டில் மேற்காணும் வாசகத்துடன் வள்ளற்பெருமானின் பெயர் இடம்பெறுகிறது.

சாதியினை தமது இளம் வயதிலேயே எதிர்த்த வள்ளற்பெருமான், 1867-ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்பாவில், தமது பெயரைத் தொடர்ந்துவரும் "பிள்ளை" என்கிற சாதியப்பெயரையும் வேலாயுதனார் பெயருக்குப் பின்னால் வரும் "முதலியார்" என்கிற சாதியப்பெயரையும் ஏன் போட்டாய்? என்று தொழுவூராரைக் கேட்கவில்லை. அதனால் வள்ளற்பெருமான் ஒருபுறம் சாதியத்தை எதிர்த்தும் மறுபுறம் தன்னளவில் சாதியத்தை ஆதரித்தார், என்று பொருள் கொள்ளமுடியுமா?

"சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே..." (திருவருட்பா - 3236) என்று வள்ளற்பெருமான் திருஞான சம்பந்தரை போற்றி பாடுகையில் அவரது ஜாதியினையும் போற்றுகிறார். திருஞான சம்பந்தர் பிறந்த கவுணியர் ஜாதியினை "தெய்வ மரபு" என்று போற்றுகிறார். ஒரு புறம் ஜாதியினை வெறுத்தும் மறுபுறம் ஜாதியினை போற்றியும் ஏன் பாடினார் என்று தெளிய வேண்டும். திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாடலில் தம்முடைய பெயரையோ அல்லது தம்முடைய ஜாதியையோ வெளிப்படுத்தி அதன்மூலம் தமது பெருமையினை தாமே வெளிப்படுத்தும் இயல்புடையவர் அவர். அதனை அறிந்த வள்ளற்பெருமான் அவரது வழியிலே அவரைப் புகழ்ந்திருக்கிறார் என்பதனை உணரவேண்டும். இதானால் வள்ளற்பெருமான் ஜாதியினை போற்றுகிறார் என்று சொல்ல முடியாது. இதிலிருந்து வள்ளற்பெருமான் ஜாதியத்தை வெறுத்து பிரச்சாரம் செய்தாலும் மற்றவர்களின் ஜாதிய உரிமைகளையும் ஜாதிய சுதந்தரத்தினையும் அப்படியே ஏற்றுக்கொண்டார் என்பது தெளிவாகிறது.

"தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன்" (5818)

என்று திருவருட்பாவில் ஓரிடத்தில் மட்டும் தம்முடைய சாதியினைப் பற்றி உயர்த்தி போற்றியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

வள்ளற்பெருமான் சென்னை இரத்தின முதலியார் அவர்களுக்கு வரைந்த கடிதத்தில், வரதாசாரிய சுமிகளிடம் "பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம் என்று நான் தெரிவித்ததாகத் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்ததின் மூலம் பார்ப்பன ஜாதியின் உயர்வை தெரிவித்துள்ளார். பார்ப்பனரை பாலுக்கும் மற்ற ஜாதியினரை நீருக்கும் ஒப்பிட்டு, மற்ற ஜாதியினர் எவராயினும் பார்ப்பனரோடு நட்பு வைத்துக்கொண்டால், பாலோடு சேர்ந்த நீரும் எவ்வாறு பாலாகவே மாறிவிடுகிறதோ அவ்வாறு பார்ப்பனரிடம் பிறர் கொண்ட நட்பானது அவர்களை பார்ப்பனராகவே மாற்றிவிடும், என்று ஒரு ஜாதியின் உயர்வினை சொல்வதின் மூலம் ஜாதிக்கென்று ஒரு குணம் இருப்பதை வள்ளற்பெருமான் வெளிப்படுத்துகிறார். ஒருபுறம் ஜாதியினை எதிர்த்தும் மறுபுறம் ஜாதிய குணங்களை ஏன் வள்ளற்பெருமான் கூறவேண்டும்? சிந்தியுங்கள்.  

25-04-1867-ஆம் ஆண்டு சாலைத் தொடக்கவிழா அழைப்பை வள்ளற்பெருமான் சார்பில் வெளியிட்ட மு.அப்பாசாமி செட்டியார் அவர்கள், அவ்வழைப்பிதழின் இறுதியில் தமது கையொப்பத்தில் தம்மை "மு.அப்பாசாமி செட்டி" என்றே குறிப்பிடுகின்றார். எனவே அன்றைய சமரச வேத சன்மார்க்க சங்கத்தார்கள் ஒருபுறம் சாதியத்தை எதிர்த்தும் மறுபுறம் தன்னளவில் சாதியத்தை ஆதரித்தார்களா? என்று கேட்கமுடியுமா?

வள்ளற்பெருமான் தாம் திருக்காப்பிட்டுக்கொள்வதற்கு நான்கு வருடத்திற்கு முன்புவரை சில அன்பர்களுக்கு கடிதம் எழுதினார். அவர் வரைந்த கடிதம் அனைத்திலும், அந்தந்த அன்பர்களின் பெயரினை குறிப்பிடும்பொழுது அவரவர்களின் சாதியினை குறிப்பிட மறக்கவில்லை. இதனை வள்ளற்பெருமானின் கடிதத்தை படித்தால் புரியும். எனவே வள்ளற்பெருமான் ஒருபுறம் சாதியத்தை எதிர்த்தும் மறுபுறம் சாதியப்பெயர்களை தமது கடிதத்தில் எழுதி சாதியத்தை ஆதரித்தார், என்று பொருள் கொள்ள முடியுமா?

வள்ளற்பெருமான் "சிதம்பரம் இராமலிங்கபிள்ளை" என்று கையொப்பம் இட்டுள்ளார். 25-11-1872-ஆம் ஆண்டு சத்திய ஞானசபை விளம்பரத்தை வெளியிட்ட போது அதம் முடிவில் "சிதம்பரம் இராமலிங்கபிள்ளை" என்றே தமது கையொப்பத்தை இட்டுள்ளார். இவைகள் நம்மிடையே உள்ளதை உள்ளவாறு கூறாமல் வள்ளற்பெருமானின் ஆவணங்களும் மண்ணைப்போட்டு மறைக்கப்பட்டுள்ளன. இதை செய்தவனும் ஒரு வல்லவன்தான். எனினும் நாளடைவில் "பிள்ளை" என்பதனை விடுத்தார். வெறும் "சிதம்பரம் இராமலிங்கம்" என்றே தம்மை வெளிக்காட்டினார். தன்னளவில் தன்னுடைய சாதியப்பெயரை அவரே நீக்கி அன்றைய காலகட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தினார். எனினும் அவரோடு பழகியவர்கள் அனைவரும் (கல்பட்டு இராமலிங்கம் ஐயா தவிர)அன்றைக்கு தங்களது சாதியினாலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனவேதான் வள்ளற்பிரானும் அவர்களை அப்படியே சாதியப்பெயரிலேயே அழைத்தார் என்று நாம் கொள்ளவேண்டுமே தவிர வள்ளற்பெருமான் அவற்றை ஆதரித்ததாக சொல்லமுடியாது. திருவருட்பாவின் மூலம் அவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜாதியினை ஒழிக்க பாடுபட்டாரே அன்றி அவர்களது பெயரிலிருந்து ஜாதியை எடுக்க வள்ளற்பெருமான் விரும்பவில்லை. அதுதான் விவேகம்.


ஆகவே, நாம் மனிதர்களின் பெயர்களை குறிக்கும்போது, அவரவர்கள் எப்படி தங்களது பெயர்களை குறித்தார்களோ, எப்படி அவர்களை இந்த சமூகம் அடையாளம் கண்டதோ காண்கிறதோ அப்படியே நாமும் அவர்களது பெயர்களை குறிக்கவேண்டும். அதுதான் உண்மையான வரலாறாக இருக்கும். அவர்களுடைய பெயர்களை சீர்திருத்தம் செய்ய நமக்கு என்ன உரிமை இருக்கிறது? "சிதம்பரம் இராமலிங்கம்" என்று வள்ளற்பெருமான் தம்மை இறுதியாக குறித்தப் பிறகு, நாம் இன்று அவரை "சிதம்பரம் இராமலிங்கபிள்ளை" என்று குறித்தால்தான் அது தவறு. ஒருவேளை வள்ளற்பெருமான் இறுதிவரை தம்முடைய பெயரில் "பிள்ளை" என குறிப்பிட்டிருந்தால் அதனையும் நீக்கும் உரிமை நமக்கு இல்லை.

உதாரணமாக நாம் வள்ளற்பெருமானின் வரலாற்றை இன்றைக்கு எழுதும்போது, "வள்ளலார் கடலூர் அப்பாசாமி வீட்டுக்குச் சென்றார்" என்று எழுதுவதைவிட "வள்ளலார் கூடலூர் அப்பாசாமி செட்டியர் இல்லத்திற்கு எழுந்தருளினார்" என்று எழுதுவதே முறையானது, சரியானது. ஏனெனில் "கடலூரை கூடலூர்" என்றும் "அப்பாசாமியை அப்பாசாமி செட்டியார்" என்றும்தான் அன்றைய வரலாறு கூறுகின்றது. அதனை அப்படியே கூறுவதுதான் ஒரு உண்மையான பத்திரிக்கை ஆசிரியரின் கடமை. இதிலெல்லாம் சீர்திருத்தம் இடம் பெறுதல் கூடாது. சீர்திருத்தம் என்று மாற்றினால் அது சிறுபிள்ளைத் தனமாக இருக்கும்.

அதுபோலவே வள்ளற்பெருமானின் தந்தை பெயர் "இராமையாபிள்ளை" அதனை சீர்திருத்துகின்றோம் என்று சொல்லி தற்போது பல நூல்களில் அவருடையப் பெயரை "இராமையா" என்று குறிப்பிடுவதும் தவறு. திரு.இராமையாபிள்ளைக்கு, தாம் ஒரு வள்ளற்பிரானை பெற்றெடுத்துள்ளோம் என்பதே தெரியாது. அவர் ஒரு ஜாதியிலே பிறந்து அதே ஜாதிய ஒழுக்கத்துடன் மறைந்தவர். ஜாதிய மறுப்பைப்பற்றி அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பே இல்லை. அப்படி இருக்க நாம் யார்? அவருடைய பெயரை சீர்திருத்தம் செய்வதற்கு. இது எப்படி இருக்கிறது என்றால், செத்தப் பிணத்திற்கு முடி வெட்டுவது போன்று இருக்கிறது.

மேலும் வள்ளற்பெருமான் பிறந்த ஜாதியை தீவிரமாக வெறுப்பதுபோன்றும் இந்த மனநிலை உள்ளது. ஜாதியற்று வள்ளற்பெருமான் பிறந்துவிட்டாரா? இல்லையே!... எனக்கு வள்ளற்பெருமான் மட்டும் வேண்டும் அவர் பிறந்த ஜாதி முதலில் ஒழியவேண்டும் என்ற மனநிலை ஒருவருக்கு எப்போது வரும் என்றால், சம்பந்தப்பட்டவர், தமது ஜாதியுடன் வள்ளல்பெருமானின் ஜாதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எதிர் ஜாதியானது, வள்ளற்பெருமானே பிறந்த ஜாதியாக இருப்பினும் அந்த ஜாதிமேல் ஓயாத வெறுப்புத் தோன்றும். அதற்குக் காரணம், நம்ம ஜாதியில் அவர் பிறக்காமல் போனாரே? என்ற ஏமாற்றமாகவும் இருக்கலாம். இது சாதாரண மனிதர்களின் இயல்புதான். எனவே சுத்த சன்மார்க்கிகள் முதலில் தங்களது ஜாதியிலிருந்து முழுதும் வெளிவாருங்கள். அப்போதுதான் இந்த நெருடலில் இருந்து தப்பலாம். 

இச்சமூகத்தில் வள்ளற்பெருமான் பிறந்த ஜாதி ஒன்றும் ஒரு வலிமையான ஜாதி அமைப்பு கிடையாது. ஊருக்கு ஒரு குடும்பம் இருப்பதே அபூர்வம். அவர்களை ஒருங்கிணைப்பது அதைவிட அபூர்வம். எனவே சுத்த சன்மார்க்கிகள் அந்த ஜாதி மீது போர் தொடுக்காதீர்கள். இவ்வுலகத்தில் பலகோடி ஜாதிகள் இருக்க, அந்த குறிப்பிட்ட  ஜாதிதான் வள்ளற்பெருமானை வருவிக்க உற்றது என்று நட்புடன் பாருங்கள். ஒரு சிலரைத் தவிர, சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? என்றே வள்ளற்பெருமான் பிறந்த அந்த ஜாதியினருக்குத் தெரியாது. சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் ஓங்குவது அவர்களால் அல்ல. அவர்கள் வள்ளற்பெருமானை ஜாதிய ரீதியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது உண்மை. வள்ளற்பெருமான் இவ்வுலகில் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் இப்படிப்பட்டச் செயல்கள் இச்சமூகத்தில் நிகழ்ந்துக்கொண்டுதான் இருந்திருக்கும்.

வள்ளற்பெருமான் எங்கள் ஜாதியில்தான் பிறந்தார் என்று வேறொரு ஜாதிக்காரர்கள் அவரை சொந்தம் கொண்டாடி அவரது வரலாற்றை மாற்றிய நிகழ்ச்சியும் நடந்தேறியது. அப்படிப்பட்ட வரலாற்று பிழைகள் மீண்டும் நடக்காத வண்ணம் தடுத்தது அவரது ஜாதியக் கூட்டம்தான். இப்படி வள்ளற்பிரானின் பிறப்பின் மீதே தாக்குதல் நடத்தினால் அவருடைய ஜாதி மக்கள் வெகுண்டு எழுவது இயல்புதானே. இராமையாபிள்ளை என்பதை இராமையா என்றுதான் கூறிப்பிடப்பட வேண்டும் என்று கட்டளையிட்டால், கட்டளையிடுபவர் அவருடைய ஜாதியில் மிகுந்த பற்றில் இருக்கிறார் என்று பொருளாகிறது. எனவே அவர்களைப் பற்றி கவலைப் படாமல் சுத்த சன்மார்க்கிகள் ஜாதிகள் ஒழிய பாடுபட வேண்டும். சன்மார்க்க விவேக விருத்தியும் பாடுபடும்.

சுத்த சன்மார்க்கத்தின்படி ஜாதியை மறுப்பவர்கள் தற்கால மனிதர்களிடத்தில் அதனை வலியுறுத்த வேண்டும். தாமும் ஜாதிய அடையாளம் இன்றி இருக்க வேண்டும். உண்மையாக உணர்வு பூர்வமாக சுத்த சன்மார்க்கர்கள் ஜாதியற்று வாழ்தல் வேண்டும். எப்படியிருப்பினும் இன்றும் சட்டப்படி ஒவ்வொருவரின் தோள் மீதும் ஜாதி என்ற அரக்கன் ஏறி அமர்ந்துக்கொண்டுதான் இருக்கிறான். என்ன செய்வது, இந்த சமுதாயத்தில் போராட ஜாதியும் தேவையான ஒன்றாக இருப்பது வேதனை யளிக்கிறது. சுத்த சன்மார்க்கர்களே அரசினை ஆளும்போதுதான் சட்டத்தின் பிடியிலிருந்தும் ஜாதியை ஒழிக்கலாம். ஆனால் அந்த காலம் எப்போது வரும்? நிற்க.    

அதுபோலவே வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் ச.மு.க. அவர்கள் (இங்கு ச.மு.க. என்று குறிக்கப்பெறுவதுகூட, அவர் அந்த நூலில் தம்மை அவ்வாறு சுருக்கமாக குறிப்பிட்டுள்ளதால்தான் இங்கு நாமும் அவ்வாறு குறிக்கிறோம்) தாம் 1923-ஆம் ஆண்டு அருளிய "பிரபந்தத்திரட்டு" என்ற நூலில் தம்முடைய பெயரை "திருவருட்பிரகாச வள்ளலாரை உபாஸனாமூர்த்தியாகக் கொண்டொழுகும் காரணப்பட்டு சமரஸபஜனை ச.மு.கந்தசாமிபிள்ளை" என்றே குறிப்பிடுகின்றார். மேலும் 1924-ஆம் ஆண்டு திருவருட்பா ஆறு திருமுறைகளையும் ஒரே நூலாகப் பதிப்பித்து வெளியிடும்போதும் அவருடைய பெயரை "ச.மு.கந்தசாமிபிள்ளை" என்றே குறிப்பிட்டுள்ளார்.

இதனை சுட்டிக்காட்டுவது ஏனெனில், வள்ளற்பெருமானின் தொண்டர் ஒருவர் பெயரில் ஒரு அறக்கட்டளையொ ஒரு நூலையோ உருவாக்கும்போது, அத்தொண்டர் எவ்வாறு தமது பெயரை குறிப்பிட்டுள்ளாரோ, அவ்வாறுதான் ஒரு பத்திரிக்கையானது அவரது பெயரை குறிப்பிட முடியும். நமது குறிக்கோள் சரியானவையாக இருந்தாலும், ஒருவரது பெயரில் ஒட்டியிருக்கும் எதுஒன்றையும், அவரது அனுமதியின்றி வெட்டி எடுப்பது விவேகமாகாது.

இந்நிலையில் சாதி மதங்களை கடுமையாக கண்டித்து அதனை பொய் என்று இவ்வுலகிற்கு மிகவும் வெளிப்படையாக அறிவித்தவர் வள்ளற்பெருமான். அதன் பிறகு பெரியார் அவர்கள் வள்ளற்பெருமானைத் தொடர்ந்து மிகத்தீவிரமாக இப்பிரச்சாரத்தை கையில் எடுத்தார். அதனால் தமிழகத்தில் இன்று பெரும்பாலும் சாதியப்பெயர்களை தங்களது பெயர்களுக்குப்பின்னால் இணைப்பதை தமிழர்கள் விட்டுவிட்டனர். இது வள்ளற்பெருமானுக்கும் பெரியாருக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

வள்ளற்பெருமான் ஜாதியத்துடன் மதங்களும் ஒழிய வேண்டும் என்றார். அதனால் இவ்வுலகில் உள்ள கோயில்களையும், தேவாலயங்களையும், பள்ளி வாசல்களையும் மற்ற வழிபாட்டுத் தளங்களையும் இடித்துவிடுங்கள் அல்லது பூட்டு போடுங்கள் என்று அரசுக்கு எதிராக சுத்த சன்மார்க்கிகள் கோரிக்கை விடுத்து சாலை மறியல் செய்ய முடியுமா? அல்லது நம்மால் அதனை இடித்துவிட முடியுமா? அது விவேகமா?

சுத்த சன்மார்க்கிகள் ஜாதியினையும் மதத்தையும் எதிர்த்து, பிரச்சாரங்கள் மூலமும் பத்திரிக்கைகள் புத்தகங்கள் மூலமும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி உலகர்களை அவர்களாகவே திருந்த வாய்ப்புகளை ஏற்படுத்தலாமே தவிர மக்களின் சாதிய உரிமைகளிலும் மத உரிமைகளிலும் அவர்களது சுதந்தரத்தில் நேரடியாக தலையிடக்கூடாது எனபதனையே வள்ளற்பெருமானின் ஜாதி, மத ஒழிப்புப் போராட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது. நாமும் வள்ளற்பெருமான் சென்ற வழியில் சென்றுதான் இப்படிப்பட்ட மாயையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். அதை விடுத்து வள்ளற்பெருமான் பிறந்த ஜாதியின் மீதே தாக்குதல் நடத்துவது மிகத்தவறு. 

சன்மார்க்க விவேக விருத்தியின் முகப்பேட்டில் ஒருபுறம் வள்ளற்பெருமானும் மறுபுறம் ச.மு.கந்தசாமிபிள்ளை படமும் இருக்கும். அதில் வள்ளற்பெருமானின் நெற்றியில் திருநீறு இருக்காது. ஏனெனில் அவரது சுத்த சன்மார்க்கம் சமயங்களைக் கடந்தது என்று அவரே ஒப்புதல் அளித்ததால் அவ்வாறு இடம்பெற செய்துள்ளோம். ஆனால் ச.மு.க. படத்தைப் பாருங்கள்... அவரது நெற்றி முழுதும் திருநீறும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் இருக்கும். வள்ளற்பெருமான் சமயத்தை வெறுத்ததால் அவருடைய சீடரும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ச.மு.க. அவர்கள் வள்ளற்பெருமானிடம் பழகினாலும் தான் ஒரு சிவனடியாராகவே இருந்து தமது காலத்தை நிறைவு செய்தார். இவ்வாறுதான் வள்ளற்பெருமானின் முதல் சீடரான தொழுவூர் வேலாயுத முதலியாரும், கல்பட்டு இராமலிங்க ஐயாவும் இறுதிவரை சிவனடியாராகவே தமது தோற்றத்தை காண்பித்துக்கொண்டார்கள். எனவே அவர்களின் தோற்றம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறுதான் அவரை நாம் இங்கும் எங்கும் இன்றும் என்றும் வெளிகாட்ட வேண்டும். தோற்றத்திலும் சீர்திருத்தம் என்று நாம் மூக்கை நுழைத்தல் விவேகமாகாது.

    இன்றைய பாரத பிரதமர் பெயர் நரேந்திர மோதி. இப்பெயரில் "மோதி" என்பது அவரது ஜாதியப்பெயர். அதனை குறிப்பிடக்கூடாது என்று அவருடய பெயரை நரேந்திரன் என்று குறிப்பிடுவது விவேகமா? முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயர் அடல் பிகாரி வாஜபாயி. இப்பெயரில் "வாஜபாயி" என்பது அவரது ஜாதியின் பெயர். அதனை நீக்கி அடல் பிகாரி என்று மட்டும் குறிப்பிடுவது விவேகமா? அந்தந்த நபர்களே அதனை நீக்குவதுதான் உண்மையில் ஜாதிய ஒழிப்பு. அதற்குண்டான விழிப்புணர்வை சுத்த சன்மார்க்கிகள் ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து, வள்ளற்பெருமான் சொல்லிவிட்டார் என்று அவர்களுடைய பெயர்களில் உள்ள சுதந்தரத்தில் நாம் மூக்கை நுழைத்து மோதியையும் வாஜபாயையும் நீக்கிவிட்டு நாம் அவர்களின் பெயர்களை குறிப்பிடுவதால் ஜாதி ஒழிந்துவிடாது. அது அவர்களின் உரிமையை வலிய பறிக்கும் செயலாகும். 'மோதி' என்றும் 'வாஜபாயி' என்றும் குறித்தால்தான் எங்களுடைய பெயருக்கு மரியாதை என்று அவர்கள் நினைக்கும்போது அந்த மரியாதையை நாமும் கொடுத்தே ஆகவேண்டும். அதுதான் விவேகம். அதே நேரத்தில் அது உண்மையில் மரியாதை இல்லை, அது ஒரு சீர்கேடு என்பதனையும் ஒரு புறம் புரியவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதே சுத்த சன்மார்க்க செயலாகும். இவ்வாறுதான் வள்ளற்பெருமான் தமது சுத்த சன்மார்க்கத்தை நடத்த வேண்டும் என்று அன்றைக்கும் இன்றைக்கும் நடத்திக்கொண்டு வருகிறார் என்பதனை உணருங்கள்.

    ஆகவே, உள்ளதை உள்ளபடி உண்மையினை எடுத்தியம்புவதில் சன்மார்க்க விவேக விருத்தி ஒருபோதும் பின்வாங்காது. ஒருவருடைய உண்மைநிலை எவ்வாறு உள்ளதோ அதனை அப்படியே எடுத்துக்கொள்ளும்போதுதான் அங்கே சத்தியம் ஓங்குகிறது. பொய்மையாய் ஒருவரின் நிலையினை வெளிப்படுத்தும் நோக்கம் தவறானது என்பதனை சுத்த சன்மார்க்கிகளுக்கு இந்த சன்மார்க்க விவேக விருத்தி இத்தருணத்தில் எடுத்தியம்ப கடமைபட்டுள்ளது.

    ஒருவர் மதங்களை கடந்து மதமற்ற நிலையில் செல்வது சுலபம். ஆனால் மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவாகிய ஜாதியை விடுத்து ஒருவர் செல்லமுடியுமா? நமது சட்டங்கள் ஒருவரின் மதமாற்றத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் ஜாதி மாற்றத்தை அங்கீகரிக்கவில்லை. அது குற்றம் என்கிறது. எனக்கு என்னுடைய ஜாதி பிடிக்கவில்லை அதனால் நான் இன்றிலிருந்து இன்ன ஜாதிக்காரனாக இவ்வுலகில் வாழ விரும்புகிறேன் என்று ஒருவனால் சொல்ல முடியுமா? முடியாது. ஒருவன் மதங்களை மாற்றிக்கொண்டாலும் அவன் அந்த புதிய மதத்தில் அவனுடைய பழைய ஜாதியை வைத்தே அடையாளம் காணப்படுகிறான். ஆகையால் மதமாற்றங்களை ஆதரிக்கும் அரசு ஜாதி மாற்றத்திற்கும் ஆதரவளிக்கும் காலம் முதலில் வர வேண்டும். அப்போதுதான் ஜாதிய பற்று ஒருவரிடமிருந்து அகலத்தொடங்கும். அதன்பிறகு ஜாதிகள் பொய் என்று அறியமுடியும். அதன்பிறகுதான் மதங்களைப்போன்று ஜாதிகளையும் இல்லை என்று சொல்லக்கூடிய சமுதயாக் கூட்டங்கள் உருவாகும்.

    சாதியை விட்டு வெளியேற வேண்டும் என்று சன்மார்க்கிகள் உட்பட பல பொதுமக்கள் இன்றைக்கு விரும்புகின்றனர். அதற்காக "தாம் எதைச் செய்தால் சாதியை விட்டு வெளியேறியதாகப் பொருள்?" என்று தங்களைத்தாங்களே கேள்வி கேட்கின்றனர். வெளி உலகத்திற்காக தங்களுடைய பெயரிலிருந்து சாதிய அடையாளங்களை நீக்குவது இதில் முதல் படி. ஆனால் அந்த முறையால் ஜாதியை ஒழித்துவிட முடியுமா?

    இவ்வாறு தங்களது பெயர்களில் ஜாதியினை விடுத்து வெற்றி பெற்ற சன்மார்க்கிகளும் பொதுமக்களும் தங்கள் பிள்ளைகளின் திருமணங்களில் பெண் எடுக்கவோ, பெண்ணைக் கொடுக்கவோ தங்கள் ஜாதியினருக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர் என்பது உண்மை. எனவே இவர்களைப் போன்றவர்கள் ஜாதியை விடுவதில் முதல் படியில் வெற்றியடைந்தாலும் திருமண உறவை உண்டாக்கும் இரண்டாவது படியில் தோல்வி அடைகின்றனர்.

    எனினும் இவர்களில் சிலர் வள்ளற்பெருமான் ஏற்படுத்திய "அகவினம்" இருந்தால் போதும் எச்சாதியாக இருப்பினும் கவலையில்லை என்று அவர்களுடன் திருமண உறவினை ஏற்படுத்த முனைந்து அவ்வாறே செய்து ஓரளவு ஜாதியத்தை ஒழிப்பதில் முன்னேறுகின்றனர். ஆனால் இவர்களும் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அக்குழந்தையின் தந்தை எந்த ஜாதியோ அந்த ஜாதியின் அடையாளத்தையே அக்குழந்தைக்கும் ஏற்படுத்திவிடுகின்றனர். ஆகையால் இவர்களும் தங்களது ஜாதிய ஒழிப்பில், குழந்தைகளை அடையாளப்படுத்தும் மூன்றாவது படியில் தோல்வி அடைகின்றனர்.

    ஆக, நாம் எதனைச் செய்தால் இந்த ஜாதிய அரக்கனை வெல்ல முடியும்? எனில், வள்ளற்பெருமான் வகுத்த விதியினை செயல்படுத்த வேண்டும். எங்கள் ஜாதியில் இதுதான் பழக்கம், எனவே நாங்கள் இவ்வாறுதான் செய்வோம், என்று நாம் செய்கின்ற நடைமுறை வழக்கங்கள் என்கிற ஜாதிய ஆசாரங்களை முற்றிலும் பற்றற கைவிட வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் நம்மால் முடியாததும் அல்ல. குழந்தை பிறந்ததும் அதற்கு பெயர் சூட்டும்பொழுதே அந்தப் பெயரில் தந்தை எம்மதமோ அந்த மதத்தின் சார்பு பெயர் அக்குழந்தைக்கு இடுவார்கள். ஆகையால் ஒரு குழந்தை பிறந்தபோதே அக்குழந்தை ஜாதிய மத ரீதியாக பின்னப்படுகின்றது. எனவே ஜாதி மதம் இல்லாத சன்மார்க்க பெயர்கள் எவை என ஆய்ந்து ஒரு பொதுப்பெயரினை குழந்தைகளுக்கு இடுதல் வேண்டும். அக்குழந்தை காலத்தால் முதிர்ச்சியடைந்து இறந்த பின்பு அவரை தீமூட்டி எரித்து அவருக்கு கொடுக்கப்படும் திதி முதலிய சடங்குகள் செய்வித்து அவருடைய மனைவிக்கு தாலி அறுத்தல் முதலிய சடங்குகள் வரை தவிர்த்தாக வேண்டும். இதுதான் ஜாதியத்தை ஒழிப்பதில் முதல் படிநிலை. இதனை நடைமுறை செய்பவன் ஜாதிய ஒழிப்பில் முதல் படியினை வெற்றி பெறுகிறான்.

    குழந்தைப் பிறப்பை சட்டப்படி ஆவணப்படுத்துகையில், இக்குழந்தைக்கு "ஜாதியும் மதமும் இல்லை" என்று பதிந்து சட்டப்படி அதனை ஒழிக்க முன்வருதல் வேண்டும். இதனால் அக்குழந்தை தமது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களில் சிக்க வேண்டிவரும். தாம் படிப்பதிலும் படித்துவிட்டு அரசு வேலை பெற முயற்சி செய்கையிலும் அவன் பின்னடைவை அடைய நேரிடும். ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையின் முன் இவைகளும் துச்சமே. இதனை ஒரு தந்தையானவன் தம் குழந்தைக்கு செய்ய முன்வருதல் வேண்டும். அவ்வாறு முன்வந்து செய்யும் பட்சத்தில் ஜாதிய ஒழிப்பில் அவன் இரண்டாவது படிநிலையில் வெற்றி பெறுகிறான்.

    ஜாதிய ஒழிப்பில் மேற்காணும் முதல் இரண்டும் வெற்றி பெற்றுவிட்டால், ஒருவனுடைய பெயரில் உள்ள ஜாதி அடையாளம் நூறு சதவிகிதம் உண்மையிலேயே தன்னால் கழன்று சென்றுவிடும். திருமண உறவுகள் எல்லாம் நூறு சதவிகதம் அகஇனத்தாருக்குள் உண்மை விளங்கும்படி நடந்தேறும். இவ்வாறு ஜாதிகள் ஒழிக்கப்பட்டு உண்மை விளங்கும் இடத்தில்தான் இறையருள் விளையாடும் / வெளிப்படும். ஆகவே ஜாதியை ஒழிக்க உண்மையிலே விரும்பும் சுத்த சன்மார்க்கிகளும் பொதுமக்களும் கீழ்காணும் மூன்று படிநிலையை செயல்படுத்துங்கள்,

1. ஜாதிய ஆசாரங்களை விடுங்கள்.
2. தங்கள் குழந்தைக்கு "ஜாதியும் மதமும் இல்லை" என சட்டப்படி பதியுங்கள்.
3. திருமண உறவுகளை "அகஇனத்தில்" உருவாக்குங்கள்.

ஜாதிய ஒழிப்பிற்கு இவை மூன்றும் இல்லாமல் புறத்தில் நாம் செய்கிற அனைத்தும் வேடமிடுவதற்கு சமம். அவை சூது விளையாட்டு, அவை பிள்ளை விளையாட்டு. மேற்காணும் மூன்று படிகளையும் செயல்படுத்துபவர்களே சன்மார்க்கிகள். இம்மூன்று படிகளையும் கடந்த துறவிகளே சுத்த சன்மார்க்கிகள். 

சுத்த சன்மார்க்க சங்கக் கூட்டங்களில் பேசுவதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும், கெளரவிப்பதற்கும், தலைமை இடத்தை வகிப்பதற்கும் இந்த மூன்று படிகளை தங்கள் உலகியல் வாழ்க்கையில் செயல்படுத்தும் உண்மையாளர்களுக்கே முழு தகுதி உள்ளது. மற்றபடி உலகியல் கல்வி கற்று அதனால் உலகியல் பதவியும், உலகியல் பொருளும், உலகியல் புகழும் உடையவர்கள் எல்லாம் சுத்த சன்மார்க்க சங்கக் கூட்டங்களில் திருவருட்பாவின் கருத்துக்களை கூறி பிரச்சாரம் செய்யினும் அவர்கள் சன்மார்க்கத்திற்கு தகுதியற்றவர்களே. இந்த பத்தியினை படிக்கும்போது இப்போது இந்த தருணம் யாருக்கு கோபம் வருகிறதோ, அவர் சுத்த சன்மார்க்க பாதைக்கு விரைவில் திரும்பிவிடுவார்கள் என்று வள்ளற்பெருமான் சொல்லுகின்றார்.    
   
    "சன்மார்க்க விவேக விருத்தி" ஒருவருடைய பெயரில் உள்ள ஜாதியினை ஒழிக்க விரும்பவில்லை. ஒவ்வொருவருடைய மனத்தில் உள்ள ஜாதியினை ஒழிக்கவே பாடுபடும். மனம் திருந்தியவுடன் அவர்கள் பெயரை அவர்களாகவே திருத்திக்கொள்வார்கள். அந்த திருத்தத்தைத்தான் சுத்த சன்மார்க்கம் செய்ய வேண்டும். மற்றபடி ஒருவருடையபெயரில் ஜாதி இருக்கின்றதே? அதனை எப்படி நாம் எழுதுவது? என்று அதனை மறைத்து பொய்மையாக அவருடைய பெயரை வெளிப்படுத்துவது என்பது நமது அறியாமையையும் அசத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது. வள்ளற்பெருமானைப் போல் வெளிப்படையாக, எதிலும் உண்மையாக இருப்போம். ஒருவருடைய பெயர், அவரால் எப்படி எழுதப்படுகின்றதோ எழுதப்பட்டதோ அதனை அப்படியே நாமும் குறிப்பிடுவோம். உண்மைக்கு மாறாக ஒன்றை மறைத்து எழுதுவது குற்றம் என்பாதால், உயர்திரு.கதிர்வேல் ஐயா அவர்களின் வேண்டுகோளை இந்த சன்மார்க்க விவேக விருத்தி ஏற்றுக்கொள்ள மறுத்து அவரிடம் மன்னிப்பைக் கோருகிறது.

ஜாதி என்கிற மூட கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக வேண்டுமென்பது சுத்த சன்மார்க்க காலத்தின் கட்டாயம். அது நிகழ்ந்தே தீரும். வள்ளற்பெருமானின் கனவான ஜாதியற்ற சமூகத்தை விரைவில் நாம் காணப்போகிறோம். அக்காலம் வரும்வரை அந்த கண்மூடி வழக்கத்தை நாம் விவேகத்துடன் எதிர்க்க வேண்டும்.  ஜாதிகளை ஒழிக்கிறேன் என்று, அன்று வள்ளற்பெருமான் விவேகமற்று நடந்திருந்தால் அவருக்கு ஒரு மாணவர்கூட கிடைத்திருக்க மாட்டார்கள். சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி நாம் இன்று பேசிக்கொண்டிருக்க மாட்டோம். ஜாதிகள் என்பது மக்களின் உணர்ச்சியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனை வெளியேற்ற அவர்களது உணர்ச்சியைத் தூண்டாமல் விவேகத்துடன் செயல்படும் கடமை ஒவ்வொரு சன்மார்க்கிகளுக்கும் உண்டு. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி ஜாதியத்தை வெளியேற்றும் வழி ஈ.வெ.ரா. பெரியார் கண்ட வழி. அவ்வழியைப் பின்பற்றும் மக்களில் ஜாதிய அடையாளங்கள் புறத்தில் மட்டும் இல்லாமல் இருப்பினும் அகத்தில் இருக்கும் அந்த பதிவிறக்கம் அப்படியே உயிருடன் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதற்கு வெளிப்படையான ஆதாரம் அவர் கொள்கையினை பின்பற்றும் அரசியல் கட்சிகளை கூறலாம். எனவே நமக்கு உணர்ச்சியினைத் தூண்டும் புரட்சி தேவையில்லை. அன்பு வழியில் அமைதியாக மேற்கண்ட மூன்று படிகளை நடைமுறைபடுத்த மக்களை தூண்டுவதால் மட்டுமே மக்களின் அகத்தில் உள்ள ஜாதியினை வெளியே தூக்கி எறியமுடியும். அதுதான் சன்மார்க்க விவேகம். அந்த சன்மார்க்க விவேகத்தை விருத்தி செய்வோம் வாருங்கள். 
         
மேற்குறித்த கருத்துக்களில் பிழை இருப்பின் அதனைக் கண்டித்தோ அல்லது ஆதரித்தோ உங்களது எண்ணங்களை www.vallalarlive@live.com என்ற மின்னஞ்சலில் அன்பர்கள் தெரியப்படுத்தலாம். நன்றி. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.