Friday, March 11, 2016

"மாதம் ஒரு மஹான்" - ஜனவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "மாதம் ஒரு மஹான்" - ஜனவரி-2016


JANUARY-2016

                                                                ஐயா வைகுந்தர்


    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாக்குமரி மாவட்டத்தில் சாணார் என்கிற நாடார் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட சமுதாய அநீதிகளிலிருந்து அந்த இனத்தை மீட்டு, அவர்களை மற்ற சமுதாய மக்களைப் போன்று சுய கெளரவத்துடன் வாழ வைத்த மகான்தான் ஐயா வைகுந்தர்.

    திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் மனுதர்ம விதிகளை மிகக் கடுமையாகக் கடைபிடித்து, மக்களை எண்ணற்ற சாதிகளாக பிரித்து வைத்து ஆட்சி செய்தான். அவற்றில் நாடார் சாதியினை கீழ்சாதியாக வைத்து அந்த சமுதாய மக்களை துன்புறுத்திக்கொண்டிருந்தான்.

    பொதுக் கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வசதியான வீடுகளில் வசிக்கவும் கூட இச்சமுதாய மக்களுக்கு உரிமை இல்லை. மேலும் இம்மக்கள் கோவில் உள்ள தெருக்களில் நடக்கக்கூடாது, உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் செல்லக்கூடாது போன்ற மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை திருவிதாங்கூர் சமஸ்தானம் விதித்திருந்தது.

    இம்மக்கள், தங்களின் திருமணங்களில் தாலி கட்டவேண்டுமானால் அரசிற்கு வரி செலுத்த வேண்டும். இவர்கள் பசுக்களை வளர்க்கக்கூட அரசிற்கு வரி கட்ட வேண்டும். மேலும் தாங்கள் உபயோகிக்கும் மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி செலுத்த வேண்டும். பனைத் தொழில் செய்பவர்கள், தங்களின் பனை மரத்திற்கும் வரி செலுத்த வேண்டும். கூலியின்றி இவர்கள் மற்ற சமுதாயத்தினருக்கு வேலை செய்ய வேண்டும். இவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டு, பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடக்கூட தடை விதிக்கப்பட்டது.

    இக்கொடுமையைக் கண்ட ஆங்கிலேயர்கள் கூட "திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை" என்று அவர்களது ஆவணங்களில் எழுதியுள்ளனர். விவேகானந்தர் குமரிக்கு வந்தபொழுது, இக்கொடுமையினைக் கண்டு, "திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இக்கொடுமைகளுக்கெல்லாம் மையப்புள்ளி எதுவென ஆராய்ந்தார் ஐயா வைகுந்தர். அது கோயில்களில் உள்ள கருவைறைகள்தான் என்பதனை கண்டு வெகுண்டார். "கருவறைக்குள் பார்ப்பான் எதற்கு? நாங்களே தமிழில் வழிபடுகிறோம், என தங்களுக்கென தனி வழிபாட்டு முறையை உருவாக்கினார் ஐயா வைகுந்தர். அவரின் வழியைப் பின்பற்றுபவர்களின் தலைமையிடமாக குமரி மாவட்டம் சாமித்தோப்பில் இன்றளவும் அந்த சுத்தத் தமிழ் வழிபாட்டு முறை நடந்து வருகின்றது. தமிழகக் கோயில் கருவறையில் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்பது இன்றளவும் தமிழக மக்களுக்கு கனவாகவே இருந்து வருகையில் அன்றைய காலக் கட்டத்தில் தங்களுக்கென கோயிலை உருவாக்கி அங்கு தமிழை கருவறையில் நுழைத்து புரட்சி செய்த மகான் ஐயா வைகுந்தர். இன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களால் புதியதாக கட்டப்படும் கோயில் கருவறையில்கூட தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்ற சுயமரியாதை தமிழர்களுக்கு இல்லாமல் இருப்பது வெட்கக்கேடு.

    மேலும், கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம் "மார்பில் ஆடையணியுங்கள், கால் முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள், தங்கத்தில் தாலி கட்டுங்கள், இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள், கோயில்களில் நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்" என்று ஐயா வைகுந்தர் தம்மக்களுக்கு கட்டளை இட்டார்.

    இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள். மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள். இவ்வகையில் மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்த்து மன்னரிட்ட சட்டங்களை எல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சிக்கு வித்திட்டார் ஐயா வைகுந்தர்.

    கருவறையில் சென்று நீங்களே வழிபடுங்கள், உங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நீங்களே நடத்திக்கொள்ளுங்கள், தமிழிலேயே வழிபாடு செய்யுங்கள் என்ற ஐயா வைகுந்தரின் புரட்சி கருத்துக்களால் இன்றளவும் அவரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்த மகானால் மனுதர்மம் ஒழிந்தது மனித தர்மம் வளர்ந்தது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.