Friday, March 11, 2016

"கிறுஸ்துவம்" - ஜனவரி-2016

சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "கிறுஸ்துவம்" - ஜனவரி-2016

JANUARY -2016

                                                                    சுத்த ஆவி

கிறுத்து பிறந்து 2015 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தற்போது 2016-ஆம் ஆண்டில் நம்மை எல்லாம் கடத்திக்கொண்டு வந்துவிட்டது, இந்த காலம் என்ற காலச்சக்கரம். நம்மை பொறுத்தவரை கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கானது நல்லதொரு பாடத்தை கற்பித்துவிட்டு சென்றிருக்கின்றது.

வள்ளற்பெருமான் சென்னையினை குறிப்பிடுகையில், "தருமமிகு சென்னை" என்று குறிப்பிடுவார். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தை நாம் அன்னியர்களின் ஆட்சியாக நாம் பார்த்தாலும், அன்றைக்கு சென்னை என்பது தருமத்தில் சிறந்து இருந்தது என்று வள்ளலாரின் வாக்கு நிரூபிக்கின்றது. ஆனால் இன்று அதே தருமிகு சென்னையானது "கருமமிகு சென்னை" யாக மாறிவிட்டது உண்மைதானே. காரணம் - நாம் ஏற்படுத்திய மக்களாட்சி என்றால் அது நூறு சதவிகிதம் உண்மை.

நாம் சுத்தமாக இருந்தால்தானே நம்மை ஆள்பவர்கள் சுத்தமாக இருப்பார்கள். நம்மளவில் சுத்தம் இல்லை எனில் நாம் இருக்கும் புறமும் சுத்தம் இல்லாமல்தானே இருக்கும். ஆகையால் நாம் யார்? நம்முடைய தேகம் எப்படிப்பட்டது? நம்மை நாம் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது? என்று முதலில் நாம் நம்மை தூய்மைப்படுத்த முயல வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தூய்மையானால் இந்த சமுதாயமும் தானாக தூய்மை பெறும்.

இதனையே கீழ்காணும் வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

1 கொரிந்தியர் 3:16,17 (1 Corinthians 3:16, 17)

16. நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

கடந்த 2015 ஆண்டுகளாக நாம் இன்னும் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லையா? தேவன் என்கிற இறைவனின் ஆலயமாக இருப்பதுதான் நம்முடைய மனித தேகம். "ஊன் உடம்பு ஆலயம்" என்கிற திருமூலரின் வார்த்தையும் இதனையே எடுத்து இயம்புகிறது. இறைவனின் ஆவி நம் உடம்பில் காரியப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆகையால் இறைவன் இருக்கின்ற நமது தேகத்தையும், உள்ளத்தையும் புனிதமாக வைத்திருப்பது நமது முதல் கடமையல்லவா?

இதோ அடுத்த வசனம் கூறுவதையும் மனதில் நிறுத்துங்கள், 

17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

இங்கே தேவனுடைய ஆலயம் எது? புறத்தில் நாம் கட்டிக்கொண்டிருக்கும் எண்ணற்ற கற்களின் கோட்டைகளா? இல்லை. அது நமது ஒவ்வொருவரின் உடம்புதான். இந்த உடம்பினை நாம் கெடுத்தால், இறைவன் இந்த உடம்பிற்கு மரணம் என்கிற தண்டனையை கொடுத்து கெடுப்பார். இந்த உடம்பினை நாம் எவ்வாறு கெடுக்கிறோம்? எனில், பிற உயிர்களை இரக்கமற்று கொன்று, அப்பிணங்களை உண்ணும்போது இந்த புனிதமான உடம்பு இடுகாடாக மாறுவதை நீங்கள் அறியவில்லையா? பிணத்தை உண்ணும் உடம்பில் எவ்வாறு இறைவன் இருக்க முடியும்? எனவே தேவனுடைய ஆலயத்தை மிகவும் பரிசுத்தமாக வைத்திருங்கள்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். (திருக்குறள்-257) 

நம்மால் பிற உயிர்கள் அழிக்கப்படும்போது, நம்மை இந்த இயற்கை அழிக்க நினைக்கிறது என்பதை உணருங்கள். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களாகிய நாம் மரண பயத்தில் கத்துகிறோமே!! எங்களை யாரும் பார்க்கவில்லை என்று புகார் தெரிவிக்கிறோமே!! நம்மால் கொலையுறும் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன், பறவைகள், ஊர்வனங்கள் எல்லாம் அதே மரண பயத்தில்தான் நம்மை போன்று கத்துவது நமக்கு கேட்கவில்லையா? தேவனுடைய ஆலயத்தை பரிசுத்தமாக வைத்திருங்கள்.... அப்போது நன்றாகவே நமக்கு அந்த அபயக்குரல் கேட்கும்.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.