Monday, April 11, 2016

துன்முகி / வெம்முக வருடம்

ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து



                                துன்முகி / வெம்முக வருடம்

                           இருமுகமும் வெம்முக மாகிக் கலந்து
                           ஒரு முகத்தில் ஒளிர்ந்து - அருவாகும்
                           துன்முகி வருடந் தாங்கி ராமலிங்கமே
                           அன்பு முகமாகி அருள்.
                            (இராமலிங்க அந்தாதி-992)

காலம் என்கிற மாயையை கணக்கிடும்போது, நமக்கு வருடப்பிறப்பு என்கிற கற்பனை நாளும் வருடமும் பிறக்கிறது. ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி "துன்முகி" என்கிற தமிழ் வருடப் பிறப்பு உதயமாகிறது. அந்த காலத்தில் ஒரு நாளின் அளவு 60 நாழிகை என்று இருந்ததால், ஒரு நாளின் நாழிகை அளவை தொடர்ந்து கணித முறை அமைத்திட 60 வருடங்கள் தேர்வு செய்து அவை ஒவ்வொன்றிற்கும் பெயரும் வைத்தனர். இப்படி 60 தமிழ் வருடங்கள் சுற்றிக்கொண்டே இருக்கும். தற்போது மன்மத ஆண்டு முடிந்து துன்முகி ஆண்டு துவங்குகின்றது. 60 தமிழ் மாதத்தில் இது 30-ஆவது தமிழ் மாதமாகும். இந்தியாவை பொறுத்தமட்டில் இரண்டு விதமான மாதங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

சூரியனை வைத்து கணக்கிடப்படும் மாதங்கள் செளரமான மாதங்கள் என்றும் சந்திரனை வைத்து கணக்கிடப்படும் மாதங்கள் சாந்திரமான மாதங்கள் என்றும் இரு முறைகளில் கணக்கிடுவர்.

சூரியனை வைத்து கணக்கிடப்படும் செளமார மாதங்கள் இந்தியாவில் - தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், ஹரியானா, ஒடிசா, வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றன.

சந்திரனை வைத்து கணக்கிடப்படும் சாந்திரமான மாதங்கள் இந்தியாவில் - ஆந்திரா, கர்நாடகா, மகாராஸ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றன.

கேரளாவில் சூரியனை வைத்து கணக்கிடப்படுகின்ற செளரமான மாதங்களையே கடைபிடித்தாலும் சூரியன் சிம்ம ராசிக்கு பிரவேசம் செய்கின்ற முதல் நாளையே வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். கி.பி.824-ஆம் ஆண்டு முதல் கொல்லமாண்டு என்கிற பெயரில் இவை அங்கு கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி ஆவணி மாதம் ஒன்றாந்தேதி புத்தாண்டு பிறக்கிறது.

குஜராத் மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகை முடிந்து வருகின்ற அமாவாசைக்கு மறுதினம் வருகின்ற பிரதமை திதியின் துவக்க நாளை வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

வட இந்தியாவில் பசலி ஆண்டு ஜுலை மாதம் முதல் நாள் வருடப்பிறப்பு கணக்கிடப்படுகின்றது. முகலாய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த பசலி ஆண்டு கொண்டுவரப்பட்டது. அக்பர் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தில் வரவு செலவு கணக்குகளை எழுதி வைப்பதற்காக இவ்வாண்டு துவங்கப்பட்டது. அதன் பிறகு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களும் இதே பசலி ஆண்டினை பின்பற்றத் தொடங்கினர். இன்றும் நமது தமிழகத்தில் வருவாய் துறையினர் தங்களது ஆண்டு கணக்கினை இந்த பசலி ஆண்டு கணக்கிலேயே முடித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி ஆண்டு அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் முதல் வருட கணக்கை கணக்கிட ஆரம்பிப்பார்கள். இந்நாளில்தான் முகமது நபிகள் மெக்காவிலிருந்து மெதினாவிற்கு சென்றார். இந்த நாளே இவர்களுக்கு புத்தாண்டு ஆகும். இதனை இவர்கள் முகரம் பண்டிகை என கொண்டாடுவார்கள்.

கிறுத்துவர்கள் ஜனவர் முதல் நாள் ஆரம்ப நாளாகக் கொண்டு வருட கணக்கை கணக்கிடுவார்கள்.

சக வருடம் என்பது இந்திய அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற வருடமாகும். இந்த வருடங்களை சாலியவாகன வருடம் என்றும் அழைப்பர். இந்த சக வருடம் ஒவ்வொரு மாதமும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி துவங்கும். லீப் வருடத்தில் இந்த சக ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் தேதியில் துவங்கும்.

சூரியனை மையமாக வைத்து கணிதம்

1. சித்திரை - சூரியன் மேஷ ராசியில் பயணிக்கும்
2. வைகாசி - சூரியன் ரிஷப ராசியில் பயணிக்கும்
3. ஆனி - சூரியன் மிதுன ராசியில் பயணிக்கும்
4. ஆடி - சூரியன் கடக ராசியில் பயணிக்கும்
5. ஆவணி - சூரியன் சிம்ம ராசியில் பயணிக்கும்
6. புரட்டாசி - சூரியன் கன்னி ராசியில் பயணிக்கும்
7. ஐப்பசி - சூரியன் துலாம் ராசியில் பயணிக்கும்
8. கார்த்திகை - சூரியன் விருச்சிக ராசியில் பயணிக்கும்
9. மார்கழி - சூரியன் தனுசு ராசியில் பயணிக்கும்
10. தை - சூரியன் மகர ராசியில் பயணிக்கும்
11. மாசி - சூரியன் கும்ப ராசியில் பயணிக்கும்
12. பங்குனி - சூரியன் மீனம் ராசியில் பயணிக்கும்

இப்படியாக சூரியனை பூமி ஒரு முறை சுற்றும் சுற்றினை 12 ராசிகளாக பிரித்து அதனை 12 மாதங்களாக வழங்குவது தமிழ் மாதமும்.

சந்திரனை மையமாக வைத்து கணிதம்

1. சைத்ரம் - பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு சித்திரை மாத அமாவாசை முடிய
2. வைசாகம் - வைகாசி மாத அமாவாசை முடிய
3. ஜேஷ்டம் - ஆனி மாத அமாவாசை முடிய
4. ஆஷாசம் - ஆடி மாத அமாவாசை முடிய
5. சிராவணம் - ஆவணி மாத அமாவாசை முடிய
6. பாத்ரபதம் - புரட்டாசி மாத அமாவாசை முடிய
7. ஆஸ்வீஜம் - ஐப்பசி மாத அமாவாசை முடிய
8. கார்த்திகம் - கார்த்திகை மாத அமாவாசை முடிய
9. மார்க்கசிரம் - மார்கழி மாத அமாவாசை முடிய
10. புஷ்யம் - தை மாத அமாவாசை முடிய
11. மாகம் - மாசி மாத அமாவாசை முடிய
12. பால்குணம் - பங்குனி மாத அமாவாசை முடிய

இப்படியாக பூமியை சந்திரன் ஒரு முறை சுற்றும் காலம் ஒரு மாதமாக கணக்கிடப்படும்.

தமிழக அரசு 1971-ஆம் ஆண்டுமுதல் திருவள்ளுவர் ஆண்டினை ஏற்று, 1972-ஆம் ஆண்டு முதல் அதனை பின்பற்றுகிறது. ஒவ்வொரு கிரிகோரியன் ஆண்டுடன் 31 ஆண்டுகள் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு துவங்கும். அதன்படி காலம் துவங்கி தற்போது 2047 ஆண்டுகள் ஆகின்றன.

இப்படியாக, சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் வருவிக்கவுற்ற நாளான அக்டோபர் ஐந்தாம் தேதியை வருடப்பிறப்பாக கொண்டாடுவார்கள். இவர்களுக்கு காலம் பிறந்து 192 வருடங்களே ஆகின்றன. 

மாதப்பூச ஜோதி காணும் நன்னாளில் இவ்வருடம் நல்லதாய் பிறந்திருக்கிறது. எனவே, வள்ளற்பெருமானின் அன்பு முகத்தால், வருகின்ற துன்முகி வருடத்தில் அனைவரும் சன்மார்க்கப் பாதைக்கு வரவேண்டி, உங்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு" நல் வாழ்த்துக்களை சன்மார்க்க விவேக விருத்தி தெரிவித்துக்கொள்கிறது.
                       
                                             - தி.ம.இராமலிங்கம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.