ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த கண்மூடி வழக்கம்
அறியாமையை ஓட்டு
அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது,
அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவரை
நடந்த தேர்தல்போல் அல்லாது நம்மை ஆளத் துடிக்கும் கட்சிகளும், வருங்கால முதலமைச்சர்
என தங்களை அறிவிப்பவர்களும் நம் கண்ணெதிரில் அறிக்கைப் போரினை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களது வாழ்க்கையில் ஒருமுறையேனும் அந்த புனிதத்
தலத்திற்கு சென்று வரவேண்டும் என்பது ஒவ்வொரு மதமும் அம்மத மக்களிடம் அறிவிக்கும் ஒரு
அறிவிப்பாகும். இதனை அம்மத மக்கள் தங்களது வாழ்நாள் கடமையாகவே கருதும்படி, மதங்களால்
மூளைசலவை செய்யப்படுவர். அதுபோல நமது அரசாங்கமும் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறை 'ஓட்டு
போடுவதென்பது மக்களின் கடமை' என்று நம்மை மூளைசலவை செய்துக்கொண்டிருக்கிறது. சற்று
யோசித்துப்பாருங்கள், மக்களாகிய நாம் ஓட்டுப்போடவில்லை எனில் நமது (இவர்களது) ஜனநாயகம்
என்னாவது?, இவர்களின் அதிகார மமதை என்னாவது? என்ற இவர்களது பயத்தால், நாமும் ஓட்டளிப்பது
என்பது நமது புனிதக் கடமையாகவே கருத வேண்டியுள்ளது. அதில் தவறேதுமில்லை.
நமது கடமையானது, அவர்களுக்கு அரசியல் உரிமையினை
வழங்குகிறது. அந்த உரிமையினை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? மதங்களிலும், சாதிகளிலும்
அந்த உரிமையினைப் புகுத்தி மக்களாகிய நம்மிடம் உள்ள நட்புறவினை கேலிக்குறியதாக, கேள்விக்குறியாக
ஆக்குகிறார்கள். படித்து முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து தனியார் நிறுவனத்திற்கு
நேர்காணலுக்கு சென்றால் கூட அங்கு "உனது ஜாதி என்ன?" என்று வெளிப்படையாகக்
கேட்டு, அதற்குத்தக்க வேலை வழங்கும் நிலை வர யார் காரணம்? இதே முறையினைத்தான் நமது
அரசாங்கமும் செய்கிறது. அரசுத் துறைகளில் முக்கியமாக காவல் நிலையங்களில் ஒருவரின் மதமும்,
சாதியும்தான் நீதியினை நிலை நிறுத்துகின்றது. சாதிகளையும் மதங்களையும் ஒழிக்க இதுவரை
எந்த கட்சியும் ஒரு காலவரையிட்டு அதற்குள் அதனை ஒழிக்க முன்வரவில்லை. மனித இனம் இருக்கும்
வரை, மதங்களும் சாதியும் சட்ட ஆவணங்களில் இருந்தே ஆகவேண்டும் என்று நமது அரசாங்கத்தின்
உரிமையினை பெற்றவர்கள் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட உரிமையினை மாற்றும்படி நமது கடமையினை
நாம் இந்தத் தேர்ந்தலில் ஆற்றவேண்டும்.
நம்மிடமிருந்து அரசு உரிமையினை பெற இருப்பவர்கள்,
நம்மைக் கவர்ந்திழுக்க மது, மாமிசம், பணம், பண்டங்கள் இவைகளை லஞ்சமாக கொடுத்து உரிமையினைப்
பெற்ற பின்பு, இலவசத்திட்டத்தின்படி இலவசங்கள் கொடுத்து, நமது நாட்டினையும் மக்களையும்
பிச்சை எடுக்க வைப்பார்கள். இதுவரை நாம் பிச்சை எடுத்தது போதும். இந்தத் தேர்தலில்
இலவசத் திட்டங்கள் அறிவித்து எந்த கட்சியேனும் நம்மிடம் ஓட்டு கேட்டு வந்தால் அதனை
சூடு சுரணையுள்ள தமிழக மக்களாகிய நாம் அக்கட்சியினை ஓட ஓட விரட்டுவோம். ஓட்டுக்கு பணம்
வாங்குவதின் மூலம் நமது தன்மானத்தை அக்கட்சியினரிடம் விற்றுவிட வேண்டாம். பொய், புரட்டு,
கொலை, கொள்ளை, ஊழல், லஞ்சம் இவைகள் எல்லாம், நாம் ஓட்டுக்காக வாங்கும் அந்த பணத்தின்
மூலமே உருவாகின்றது என்பதை மனதில் பதித்து, மதிப்புடன் நமது கடமையை ஆற்றுவோம்.
லியோ டால்ஸ்டாய் சொன்ன ஒரு கதையுடன் சேர்ந்து, ஒரு
உண்மை நிகழ்வினையும் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது,
ஆளில்லாத ஒரு வீட்டு சுற்று சுவரைத் தாண்டி குதித்தான்
அந்த திருடன். குதித்து நிமிர்ந்தான், தன் எதிரே நாய் ஒன்று நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான்.
ஆனால், அந்த நாய் குரைக்கவில்லை.
திருடன் முன்னேறினான். வீட்டை சுற்றினான். அப்போதும்,
அந்த நாய் எதுவும் சத்தமிடவில்லை. சரிதான்... இது நல்ல சந்தர்ப்பம் என்று, தான் கையோடு
எடுத்து வந்த, ரொட்டித்துண்டினை நாய்க்கு போட்டான்.
இப்போது அந்த நாய், மிகசத்தமாய்க் குரைத்தது, கடிக்கத்
துரத்தியது. ஆச்சரியப்பட்ட திருடன், நாயிடம் கேட்டான், 'ஏ... நாயே, இவ்வளவு நேரம் சும்மா
இருந்துவிட்டு, இப்போது ஏன் குரைக்கிறாய்' என்று.
அதற்கு நாய் சொன்னது... 'நீ முதலில் வந்தபோது, நான்
சந்தேகப்படவில்லை. நீ நல்லவனா கெட்டவனா, என்பதிலும் குழம்பினேன்.
ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாமல், எப்போது நீ ரொட்டித்துண்டு
போட்டாயோ, அப்போது புரிந்துக்கொண்டேன், நீ திருடன் என்று'. - இது "லியோ"
சொன்ன கதை.
நாம் ரொட்டித்துண்டிற்காக ஆசைபட்டால், நமது நாட்டு
வளங்கள் எல்லாம் கொள்ளை போகும் என்பதை தெளிவுப்படுத்துகிறது இந்தக் கதை.
கிரேட் பிரிட்டனை சார்ந்த பிரபல எழுத்தாளர் ஜான்சன்.
இவர் ஆங்கில 'என்சைக்ளோ பீடியா' கொண்டு வந்தவர். ஜான்சன் எப்போதும் சுயமரியாதைக்காரர்.
தன்மானம் மிக்கவர். எளிமையும் புலமையும் மிகுந்தவர் என்பதால், அவரது வீட்டில் அத்தனை
வறுமை. மிகப்பழமையான கிழிந்த காலணிகளையே அணிந்திருப்பார் இவர்.
இதையறிந்த, அவரது பழைய நண்பர் ஒருவர் வருந்தினார்.
நண்பர் என்றாலும், காலணி வாங்கித்தந்தால் அவர் அணிய மாட்டார். அவரது தன்மானம் தடுக்கும்.
எனவே அந்த நண்பர், புதிய காலணிகளை வாங்கி, அதை ஜான்சனின் காலணி வைத்திருக்கும் இடத்தில்
வைத்துவிட்டு, பழையதை அப்புறப்படுத்தி விட்டார். மறுநாள், ஜான்சனின் வீட்டு முற்றத்தில்
இருந்த மரத்தில், அந்தப் புதிய காலணிகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன.
கூடவே, அதிலொரு வாசகம் தாங்கிய அட்டையும் இருந்தது.
அதிலே, "இந்த காலணிகளை வாங்கித் தந்தவர் யாரென்று தெரிந்தால், அவரை இந்த காலணிகளாலேயே
அடிப்பேன்!" என்றிருந்ததாம்.
ஜான்சன் போன்று ஒரு தன்மான
உணர்வுடன் நாம் இந்தத் தேர்தலை சந்திப்போம். சாதிக்காகவோ, மதத்திற்காகவோ, பணத்திற்காகவோ,
கட்சி அபிமானத்திற்காகவோ நாம் இதுவரை வாக்களித்து வந்தோம். அப்படிப்பட்ட கண்மூடி வழக்கம்
எல்லாம் மண்மூடிப்போகும்படி இந்தத் தேர்தலில் மக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் இருந்து
கடமையை செய்வோம். நமது மதிப்புமிக்க ஓட்டுக்கு எந்த ஒரு வேட்பாளரும் தகுதி அடையவில்லை
என நாம் கருதினால், நமது ஓட்டினை நாம் நோட்டாவிற்கு அளிப்போம். நமது ஓட்டுகளைப் பயன்படுத்தி
ஒரு கொள்ளைக்காரன் கூட ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்போம்.
நமது ஓட்டு, அறியாமையை ஓட்டுவதாக இருக்கட்டும், நமது ஓட்டு மதுவினை ஓட்டுவதாக இருக்கட்டும்,
நமது ஓட்டு லஞ்சம், ஊழலை ஓட்டுவதாக இருக்கட்டும், நமது ஓட்டு சாதி, மதங்களை ஓட்டுவதாக
இருக்கட்டும், நமது ஓட்டு ஒளிமிகுந்த தமிழகத்தை காட்டுவதாக இருக்கட்டும்.
-- தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.