Monday, April 11, 2016

காதல் என்ன ஜாதி?

ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்தது.



                                 காதல் என்ன ஜாதி?

செய்யும் தொழிலை வைத்து அன்றைய வேதாந்திகளால் உருவாக்கப்பட்டதே சாதி முறைகள். இன்றைக்கு நாம் செய்யும் தொழிலை நமக்கேற்ப மாற்றிக்கொண்டோம். ஆனால் சாதியை மட்டும் மாற்றவோ அழிக்கவோ முடியாமல் அதிலேயே நிலைத்து இருக்கும்படி நமது சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தக்கட்டுகள் தவறு எனத் தெரிந்தும் அதனை அவிழ்த்து விடாமல், இன்னும் இறுக்கப்பிடி என்கிறது நமது சமுதாயம். அதற்கு நாம் நடத்துகிற அரசியலும் மிக முக்கிய காரணமாக அமைகிறது.

சாதியை அழிப்பதற்கு காதல் மணங்கள் துணைபுரிகின்றன என்று சொல்வதும் அபத்தம். ஏனெனில் இரு வேறு சாதிகளில் காதல் மணம் புரிபவர்களில், ஆண் எந்த சாதியோ அந்த சாதியே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இங்கு எங்கே சாதி ஒழிந்தது? வேண்டுமானால் ஒரே குடும்பத்தில் பல சாதிக்கூட்டங்கள் இருக்கும் அவ்வளவுதான். எனவே சாதி ஒழிய கலப்பு மணம் செய்யுங்கள் என்று சொல்வது சரியல்ல.

ஆனால், இரு மனங்கள் இணைந்து அவர்களுக்குள் காதல் மலர எது ஒன்றும் தடையாக இருக்கக்கூடாது. இருந்தால் அது காதல் அல்ல. சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே உள்ள புரிதல் காரணமாக அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. அத்திருமணம் இரு வீட்டாரும் எதிர்த்தாலும், அதனையும் மீறி நடந்தேறுகின்றது. நான் மேல்ஜாதி, நீ கீழ்ஜாதி என்று ஜாதிய போர்வையில் அந்த புனிதமான திருமண உறவை பிரிப்பது தவறு.

மார்ச் 13-ஆம் தேதி, நமது தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு கொலை செய்யும் காட்சி, அதுவும் பட்டப்பகலில் பலர் பார்க்க மூன்று இளைஞர்கள் ஒரு தம்பதியர்களை சூழ்ந்து கத்தியாலே வெட்டிப்போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி செல்லும் காட்சியைக் கண்டு நாம் திகைக்கிறோம்.

22 வயது நிரம்பிய சங்கர் என்பவர், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் எட்டு மாதத்திற்கு முன்பு தன்னைவிட மேல்ஜாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவருடைய மகளான 19 வயது நிரம்பிய கெளசல்யா என்ற பெண்ணை காதலித்து, பெண்ணின் பெற்றோர்களை எதிர்த்து ஆனால் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதியர்களைத்தான் மார்ச்-13-ஆம் தேதி தாக்கி, சங்கர் என்கிறவரை கொலை செய்து போட்டுவிட்டு, கெளசல்யாவையும் தாக்கிவிட்டு தப்பியோடினர். அதற்கு காரணமாக பெண்ணின் தந்தையும், கொலையாளிகளும் தற்போது சிறையில் இருக்கிறார்கள். மனிதரை கொலை செய்யும் மனிதர்கள் இந்த சமூகத்தில் எப்படி மேல்ஜாதியாக இருக்க முடியும் எனத்தெரியவில்லை. ஆனால் இவர்கள் இந்தக் கொலை செய்ததற்காக பெருமை அடைகின்றனர்.

சாதிகளை வெட்டி சாய்க்க வேண்டிய நாம், அந்த சாதிக்காக நமக்கு நாமே வெட்டிக்கொண்டு சாகிறோம். சாதிகளை ஒழிப்போம்! சாதிக்க முயல்வோம்! சங்கர் என்கிற இளைஞரின் கொலைபாதகத்தை இந்த சன்மார்க்க விவேக விருத்தி வன்மையாக கண்டிக்கிறது. அதே நேரத்தில் நமது இளைஞர்கள் படிக்கிற காலத்தில் காதல், பெண் மோகம் என்கிற தவறான இச்சைகளுக்கு இடம் கொடுப்பதும், படிக்கும் போதே திருமணம் செய்துக்கொள்வதும் மிகப்பெரியத் தவறு. உங்களை வளர்த்து படிக்க வைக்கும் பெற்றோர்களின் நிலமையை எண்ணிப்பாருங்கள். அவர்களின் கனவைக் கலைத்து, அவர்களின் சம்மதம் இன்றி காதல் மணம் புரிவதும் மிகப்பெரிய தவறாகும். உங்கள் வாழ்வு பெற்றோர்கள் மெச்சும்படி இருக்கவேண்டுமே அல்லாது இவ்வுலகமே மெச்சினாலும் அவ்வாழ்க்கை வீண். எனவே இந்தத் தம்பதியர்களையும் சன்மார்க்க விவேக விருத்தி வன்மையாகக் கண்டிக்கிறது.            

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.