Monday, April 11, 2016

மகாவீரர்

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளிவந்த சமணம்



மகாவீரர்

     புத்த பெருமானின் சமகாலத்தவரும் (கி.மு.599-527) சமண மதத்தின் 24-ஆவது மற்றும் இறுதி தீர்த்தங்கரராகவும் விளங்குபவர் மகாவீரர். இவரை சமண சமயப் புத்தங்களில் வர்த்தமானர், வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்றும் அழைப்பர். இவரின் தந்தை சித்தார்த்தன், தாய் திரிசாலா என்கிற பிரியாகர்ணி. இவரின் பரம்பரை இஷ்வாகு என்பதாகும். வைசாலி அருகே உள்ள குன்டலகிராமா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய சின்னம் சிங்கம். இவர் 72 ஆண்டுகள் வாழ்ந்து பீகாரில் உள்ள 'பாவா' என்னுமிடத்தில் காலமானார்.


     அரச குடும்பத்தில் பிறந்து செல்வாக்காக வாழ்ந்தாலும் சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டார். எனினும் யசோதரை என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டு இல்லறத்திலும் இணைந்தார். ஆனாலும் ஆன்மீக நாட்டம் அவரை அதிகம் இழுக்கவே சமண மதத்தில் ஈடுபாடு கொண்டு தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை விட்டு துறவறம் பூண்டார்.

     அதன் பிறகு 12 ஆண்டுகள் ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டு "சாலா" என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் 'மகாவீரர்' என்று அழைக்கப்பட்டார். தான் உடுத்தியிருந்த துணிகளுக்கு விடுதலை அளித்தார். வெற்று மேனியாக இந்தியா முழுதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு தான் கண்ட உண்மைகளை எடுத்துரைத்தார். அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டு அவரது போதனையை கேட்டு ஏற்றுக்கொண்டனர். அதனால் இந்தியா முழுதும் சமண மதம் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால் சமண குருமார் வரிசையில் இவர் 24-வது தீர்த்தங்கரராக போற்றப்பட்டார்.

ஒவ்வொரு ஆன்மாவும் தங்களது கர்மாவால் இன்பங்களிலும் பொருள் ஈட்டுதலிலும் கவரப்படுகின்றன. இவற்றின் தேடுதலில் அந்த ஆன்மாவிற்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன.

     இவற்றிலிருந்து விடுபட, சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை தேவை என்பதை மகாவீரர் வலியுறுத்துகிறார். இதனை கடைபிடிக்க ஐந்து உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

1. வன்முறை தவிர்த்தல் / அகிம்சை - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது.
2. வாய்மை / சத்தியம் - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்.
3. திருடாமை / அஸ்தேயம் - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக்கொள்ளாது இருத்தல்.
4. பாலுறவு துறவு / பிரமச்சரியம் - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்.
5. உரிமை மறுத்தல் / பற்றற்றிருத்தல் - மக்கள், இடங்கள் மற்றும் பொருளியல் பற்று அற்று இருத்தல்.

     இந்த ஐந்தையும் கடைபிடித்தால்தான் சரியான நம்பிக்கையும், அறிவும், நடத்தையும் வரும் என்கிறார் மகாவீரர். ஆனால் இதனை அனைவராலும் கடைபிடிக்க முடியாது. ஆனால் ஆண் மற்றும் பெண் துறவிகள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும். பிறர் அவர்களால் எவ்வளவு இயலுமோ அந்த அளவிற்கு கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் போதனையாகும்.

     இவர் வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகள உருவாக்கினார். சமுதாயத்தில் கடைநிலையில் இருந்தவர்கள் கூட இதனை பின்பற்றினர். ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்) மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்). இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.

     19-04-2016 - இன்று அக இனத்தின் மகான் மகாவீரரின் அவதாரத் திருநாள் ஆகும். இன்றைய நாளில் சன்மார்க்க விவேக விருத்தி அவரது திருவடிகளை போற்றுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.