Monday, April 11, 2016

மழை - Rain

ஏப்ரல்-2016- "சன்மார்க்க விவேக விருத்தி"யில் வெளியான தலையங்கம்



மழை

புகையின் மூன்றாவது கலையின் சீதளசக்தியினால் மழையுண்டாகின்றது. இதுபோல் சூரியகிரண உஷ்ண ஆவியாகிய புகை ஓஷதிகளிலும் நீரிலும் பாரிலும் பொருப்பிலுமுள்ள திரவசக்தியைக் கிரகித்து, வாயுமண்டலத்தில் சேர்த்து, மேலுங்கீழும் உஷ்ணம் நிரம்ப, மத்தியிலுள்ள திரவ அணுக்கள் புழுங்கி நீராய், காலபேத வண்ணம் வாயுவால் பிரேரிக்கப்பட்டு அசைக்கும்போது, கீழுமேலுமுள்ள உஷ்ணவாயு தடிப்பு விலகும்போது, மின்னலாகிய பிரகாசமும், நெருங்கி யொன்றுபடும்போது சத்தமாகிய இடியும், அத்தொனியால் படலம்போல மூடியிருந்த காராகிய மேகம் விலகி வாயுவால் கலங்கிய போது மழையும் உண்டாகும். இதன்றி, மேகம் கடல் ஜலத்தை உண்டு மழைபெய்வ தென்பது பொய்.
-    திருவருட்பிரகாச வள்ளலார்


இறைவனின் அற்புத செயல்களில் இப்பூமியில் மழை பெய்வித்தலும் ஒன்று. "மழை எப்படி உருவாகிறது?" என்ற கேள்விக்கு இதுவரை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து பதில் சொல்ல முடியவில்லை. தற்போதுள்ள அறிவியல் விளக்கங்கள் அனுமானங்களால் உருவானவை.

"கருமேகங்களைக் காண்கிறோம், மழை பொழியும் என்று கூறுகிறோம்", "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது" இப்படித்தான் இருக்கிறது இக்கேள்விக்கான விளக்கங்கள்.

"கடல் சூடாகி மேகமாகி குளிர்வதனால் மழை பெய்கிறது" என்றும் "பூமியின் மேற்பரப்பில் உருவாகும் தட்ப வெப்ப வேறுபாடுகளினால் மழை பெய்கிறது" என்றும் "மழை பெய்தால்தான் உயிர்கள் வாழ முடியும், அதனால் மழை பெய்கிறது" என்றும் பல வழிகளை நாம் சொல்கிறோம். மேலும் அறிவியல் முறைப்படியான இதற்கான விளக்கங்கள் பல்வகைப்பட்டது. அதனையும் காண்போம்.


"வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளிலிருந்த நீரானது திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று மேகங்களாக உருமாறுகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீராகி மழையாக பெய்கிறது. அவை மீண்டும் தங்கள் இருப்பிடமான ஆறு, ஏரி, கடல்களில் தஞ்சமடைகின்றன. பிறகு மீண்டும் அங்கிருந்து வெப்பத்தினால் நீராவியாகி மேகமாகி மழையாகின்றன. இப்படி தொடர்ச்சியாக நடைபெறுவதை நீர் சுழற்சி (The Water Cycle) என்கிறோம்." இதனையே இன்னும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்,


"நீராவியானது குளிர்ந்து பனிமூட்டமாக மாறுவதே மேகங்களாகும். மார்கழியில் காலைப்பனி நிலத்தை மூடுவதைப்போல, ஆகாயத்தில் அதே பனிமூட்டம்தான் வெண்மேகமாக நமக்குத்தெரிகிறது. கடல், ஆறு, குளம் ஆகியவற்றிலிருந்து ஆவியாகிக் கிளம்பும் நீராவி மேலே எழும்பி குளிர்வான ஆகாய மேல்புறத்தை அடைந்ததும் வெண்மூட்டமாக படர்ந்துவிடுகிறது. மலை முகடுகளில் குளிர்ச்சியும், காடுகளிலிருந்து புறப்படும் ஈரமும் மேகமாகி கவிந்து மஞ்சு போர்த்திய மலை முகடாகக்காட்சி அளிக்கிறது. வெண்மேகம் மேலும் மேலும் குளிர்ந்துவிட்டால் அதிக அடர்வாகி கருமேகமாக மாறிவிடுகிறது. மேலும் குளிர்வதால் ஆவி நிலையை இழந்து திரவ நிலையை அடைந்து மழையாகப் பொழிகிறது."

மேற்காணும் இரண்டு அனுமானங்களிலிருந்து மழை எவ்வாறு பெய்கிறது என்பதை அறிவியல் நமக்கு விளக்கியுள்ளது. தற்போது செயற்கையாகவே மழை பெய்விக்கும் விஞ்ஞானம் வந்துவிட்டது. ஆனால் இது எப்படி என்றால், கருவில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்தில் பிறக்கவைப்பது போன்றதுதான். இது எப்படி என்று பார்ப்போம்.


செயற்கை மழையின் கருவாக்கம் முதன்முதலில் விஞ்ஞானிகளுக்கு 1903-ஆம் ஆண்டு ஏற்பட்டது. எப்படி முட்டி மோதி பார்த்தாலும் அந்தக் கருவை வளரவைக்க முடியவில்லை. பிறகு 1950-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் "மழை உருவாக்கம்" என்ற பெயருடன் ஒரு குழு நியமிக்கப்பட்டு தீவிரமாக இறங்கினார்கள். அதன் விளைவாக 1957-ஆம் ஆண்டு அந்தக்கரு மெல்ல வளரத்தொடங்கியது.  முடிவில் 1960-ஆம் ஆண்டு முதன்முதலில் செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் கனடா விஞ்ஞானிகளே தீவிரமாக இறங்கி இதனை மெய்ப்பித்தார்கள். அதன்பிறகு அதனை நவீனமயமாக்கியது சீன விஞ்ஞானிகள்.

இந்த செயற்கை மழை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுகின்றது.

முதலில், வானில் நகர்ந்துக்கொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். அதற்கு கால்சியம் கார்பைட்,  கால்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை அல்லது அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்களை ஒருங்கிணைப்பார்கள்.


இரண்டாவதாக, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி, கால்சியம் குளோரைடு ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூட்டுவார்கள். இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.

மூன்றாவதாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிர்ச்சியடைகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழையாகக் குறிப்பிட்ட இடத்தில் பெய்கிறது.

இப்படியான செயற்கை மழையினால் பூமிக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஆனால் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்யவேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். கால நிலை மேலும் மோசமடையும். செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்யாது. சில நேரங்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும். செயற்கை மழை பரிசோதனையில் கனடாவில் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சீன நாடுதான் அதிகமாக செயற்கை மழையினை பெய்விக்கின்றது.

இந்த செயற்கை மழையும் தவிர்த்து, "அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில்தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர்கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளரமுடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட உருவாகலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள்.


விஞ்ஞானத்தால் அன்றி மெய்ஞானத்தால் அன்றைய நமது தமிழகத்தில் மாதம் மூன்று முறை மழைபெய்ததாக கூறுவர். அதாவது சிறப்பாக வேதம் ஓதியதற்காக  வேதியர்களுக்காக ஒருநாள் மழையும், சிறப்பாக நீதிதவறாமல் ஆட்சி புரிந்ததால் மன்னருக்காக ஒருநாள் மழையும், சிறப்பாக குடும்பத்தின் கற்பினை காத்து இல்லறம் புரியும் குடும்பத்தலைவிக்காக ஒருநாள் மழையும், ஆக மாதம் மும்மாரி பெய்த காலம் தற்போது இல்லாமல் போய்விட்டது. ஆனால் உங்களைப்போல் "நல்லோர் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"' என்ற வாக்கிற்காக தற்போது தமிழகத்தில் மழை பொழிந்து வருகிறது.

மேலும் நமது தமிழக சித்தர்கள் தங்களது தெய்வீகத் தன்மையால் தாங்கள் விரும்பியபோது மழையினை பெய்வித்தார்கள். நமது வள்ளற்பெருமானும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.

"சித்திரை மாத வெயிலால் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாக்குறையால் துன்புற்றதைத் தெரிந்த வள்ளலார் ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வரச்சொல்லித் தம்காலில் விடச்சொன்னார். சிறிது நேரத்திற்குள் நான்கு செவி மழை பெய்தது."

"இதைக்கேட்ட பண்ணுருட்டிக்கு அடுத்த புதுப்பேட்டை ஊரிலுள்ளார்வந்து வள்ளலாரைத் தம்வூருக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு உள்ள கிணறுகள் இரண்டில் நீர்சுவையும் சுரப்பும் அற்றுப்போயிருத்தலைக் காட்டிக் குறையிரந்தனர். உடனே ஐந்து குடந்தண்ணீர் எடுத்துத் தமது சிரசில்விடக் கட்டளையிட்டனர். உடனே பெருமழை பொழிந்தது. இன்றைக்கும் அக்கிணறுகளில் நீர் சுவையாகவும் மிகவும் மேல் நீராயும் இருக்கிறது."

வ்வாறு வடலூரிலும், புதுப்பேட்டையிலும் மழையை பொழிவித்திருக்கிறார் வள்ளற்பெருமான். ஒரு இல்லறம் நடத்தும் பெண்ணுக்கு மழை பெய்விக்கும் சக்தி இருப்பதாக திருவள்ளுவ பெருமான் கூறுகிறார்.

       "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
      பெய்யெனப் பெய்யும் மழை."       (55)

ஒரு பெண் தன்கணவனின் "துரிய ஆசிரமக் காலத்தில்" அதாவது, சுத்த தவநிலைக்காலத்தில் (இல்லறத் துறவுக்காலத்தில்) அப்பெண் வேறு தெய்வங்களை வணங்காமல், தன் கணவனையே தெய்வமாகக் கொள்வாள். அச்சுத்தத்தன்மையில் அப்பெண் எது கூறினாலும் அது நடக்கும். இதனையே "தெய்வந் தொழாஅள்" என்றகுறள் தெரிவிப்பதாக வள்ளலார் கூறுகின்றார். இல்லறத் துறவுக்காலத்தில்தான் ஒரு கணவன் தனது மனைவிக்குத் தெய்வமாகிறான். அந்நிலையில் அம்மனைவியானவள் சொல்லுக்கு மழை கட்டுப்படும்.

திருவள்ளுவ பெருமான் மழை எவ்வாறு பெய்கிறது? என்பதனை,

      "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
       தான்நல்கா தாகி விடின்." (17)

ஆவியான கடல் நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் என்கிறார். ஆக, கடல் நீரினால் ஆன மேகமே மழையை பொழிவிக்கிறது என்றே திருவள்ளுவரும் உரைக்கிறார்.

நிற்க. நாம் இதுவரை அறிவியல் அனுமானத்தாலும், செயற்கையாலும், பாக்டீரியாவாலும், வேதம் ஓதுததாலும், அரசாட்சியாலும், பெண்ணின் கற்புத் திறத்தினாலும், ஒருவரின் தெய்வீகத் தன்மையாலும், திருவள்ளுவரின் கருத்தின்படியும் எவ்வாறு மழை பெய்கிறது என்பதனை பார்த்தோம். தற்போது வள்ளற்பெருமான் மழை எவ்வாறு பெய்கிறது என்று கூறியதையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

"புகையின் மூன்றாவது கலையின் சீதள சக்தியால் மழை உண்டாகிறது." என்கிறார் வள்ளற்பெருமான். பொதுவாக புகை என்பது எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக ஏற்படுவதாகும். இப்புகை உலகில் மாசினை உண்டாக்கும். எனினும் இப்படிப்பட்ட புகையில் உள்ள குளிர்ச்சி / ஈரத் தன்மையால்தான் மழை பொழிகிறது. (சீதளம்-குளிர்ச்சி / நீர்).


எரியும் பொருளிலிருந்து வருகின்ற புகை மட்டுமல்லாது, சூரியக் கதிரிலிருந்து வெளிப்படும் வெப்பப் புகையானது, மூலிகைச் செடிகள் மரங்களிலிருந்தும் நீரிலிருந்தும் மண்ணிலிருந்தும் (பார்-மண்) மலையிலிருந்தும் (பொருப்பு-மலை) திரவ சக்தியினை உட்கொண்டு, அதனை காற்று மண்டலத்தில் சேர்க்கிறது.  

அப்படி காற்று மண்டலத்தில் மிதக்கும் அந்த திரவசக்திக்கு மேலும் கீழும் சூரிய வெப்பப் புகையால், வெப்பம் சூழ்ந்திருக்கும். அதாவது சூரிய வெப்பப் புகையின் நடுவில் திரவசக்தியானது இருக்கும். இதுவே மேகமாக நாம் காண்பது. 


இருபுறமும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் நடுவில் உள்ள திரவசக்திக்கு புழுக்கம் ஏற்பட்டு, அப்புழுக்கத்தால் அங்கு நீர் உருவாகும்.

காற்று மண்டலத்திலுள்ள காற்றானது, பருவகால மாற்றத்தினால் அந்த வெப்பப் புகையோடு காரியப்பட்டு அதனை அசைக்கும்போது, இருபுறமும் சூழ்ந்துள்ள வெப்பப் புகையின் தடிப்பு விலகும். அதாவது சூழ்ந்திருக்கும் வெப்பப்புகை காற்றின் சக்தியால் வெடிப்புறும்போது ஒளிக்கீற்றுகள் தோன்றும், அதுவே மின்னல்.

அதே காற்றின் காரியத்தால் விலகிய வெப்பப்புகையானது ஒன்று கூடினால், அப்போது பெருத்த சத்தம் கேட்கும், அதுவே இடி.

இவ்வாறு படலம்போல மூடியிருந்த வெப்பப்புகையாகிய மேகம் வெடிப்புற்று அதனுள் காற்று சென்று கலைத்தால், அப்போது ஏற்கனவே அங்குள்ள புழுக்கத்தால் உருவான நீரானது குடம் உடைந்து நீர் வெளியேறுவதைப்போல, அம்மேகக்கூட்டிலிருந்து மழையாக உருமாறி புவியீர்ப்பு சக்தியால் கீழ்நோக்கிப் பாயும். இதுவே மழை.

இப்படித்தான் மழை பெய்கிறது என்று நமது வள்ளற்பெருமான் கூறுகிறார். இதுவன்றி கடலில் உள்ள நீரினையோ அல்லது மற்ற நீர் நிலைகளில் உள்ள நீரினையோ மேகம் ஈர்த்து, அதனையே திரும்பவும் மழையாக பெய்விக்கிறது என்பது பொய் என்கிறார் வள்ளற்பெருமான்.

வள்ளற்பெருமானின் கூற்றோடு எங்கெங்கெல்லாம் அறிவியலாரின் கூற்று மாறுபடுகிறது என்பதையும் சற்று பார்ப்போம்.

      ts;syhupd; $w;W
      mwptpayhupd; $w;W
சூரியக்கதிரின் வெப்பப் புகையே மேகம்
நீராவியே மேகம்
மேகம் வெப்பத்தால் சூழ்ந்தது
பனி போன்ற குளிர்ச்சியுடையது
புகை, நீர், மரம், மலை, மண் ஆகிய வற்றிலிருக்கும் திரவ ஆவியே மழை
நீரினால் உண்டான ஆவியே மழை
மேகத்திற்குள் உருவாகும் புழுக்கத்தால் நீர் உருவாகிறது
குளிர்ச்சியால் நீர் உருவாகிறது

மின்னல் வேறு இடி வேறு
மின்னலும் இடியும் ஒரே நிகழ்வுதான்
மேக வெடிப்பினால் மின்னல் தோன்றும்
காற்றிலுள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் சத்தத்துடன் கூடிய ஒளித் தோன்றும். அதுவே இடியும் மின்னலும்
மேகவெடிப்பு கூடினால்தான் இடி உருவாகும்
இடியும் மின்னலும் ஒரே நிகழ்வு.



















மழையின் தத்துவம் பற்றி வள்ளற்பெருமான் கூறியதற்கும் அறிவியலார்கள் கூறுவதற்கும் மேற்கண்டவாறு சில வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. எது சரி என்பதனை எதிர்கால விஞ்ஞானம்தான் கூறும்.
                                             - தி.ம.இராமலிங்கம்




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.