Sunday, June 21, 2015

நானும் நீயும்-1

நானும் நீயும்-1
==============
(தி..இராமலிங்கம்)
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqeEs2ZjJvblI1WHM/view?usp=sharing
தம் என்பது என்ன?

மனிதனை சிந்திக்க விடாமல், அவனது சிந்தனையை, நம்பிக்கை என்ற ஒரு கட்டுக்குள் பூட்டி வைத்து, அதற்குள் அவனை ஆட்டி வைக்கும் அமைப்பிற்கு மதம் எனப் பெயர்.

மதம் என்பது உண்மையா?

இவ்வுலகில் மதங்கள் பல. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு இறைவன் உண்டு. இப்படி பல இறைவர்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளனர். அவரவர் மதக்கடவுள்கள் அவரவர்களுக்கு உண்மையாக தோன்றும்படி செய்வதே அவரவர் மதத்தின் முக்கிய வேலையாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு மதமானது, மற்ற மதத்தையும், மற்ற மதக்கடவுள்களையும் பொய் என நிரூபித்துக்கொண்டே இருக்கும். ஆக, ஒரு மதம் மற்ற மதத்தால் பொய் என நிரூபிக்கப்படுவதால் அல்லது நம்பப்படுவதால் இவ்வுலகில் உள்ள எல்லா மதமும் எல்லா மதக்கடவுள்களும் பொய் என தீர்வாகின்றது.

மனிதனுக்கு மதம் தேவைதானா?

தேவையில்லை. மன்னராட்சி இவ்வுலகில் நடைபெற்ற காலத்தில் மக்களை ஆள்வதற்காகவே இந்த மதங்கள் உருவாக்கப்பட்டன. இதனை உருவாக்கியக் கூட்டங்களை மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, மதக் கட்டளைகளை இறைவனே வந்து கூறினான் என்றும், இறைவன் என் மூலம் கூறினான் என்றும் கட்டுக்கதைகளைக் கூறி மக்கள் மீது தினித்து நாளடைவில் பொது மக்களை நம்பவைத்து விட்டார்கள். மன்னராட்சி இருந்தவரை மதப்புத்தகம் தான் அரசியல் சட்டமாக இருந்தது. ஆனால் இன்று உலகில் பல நாடுகளில் குடியரசு ஆட்சி / மக்களாட்சி வந்து விட்டது. ஒவ்வொரு குடியரசிற்கும் தனித்தனி அரசியல் சட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன. எனவே பொது மக்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டங்களே அந்தந்த மக்களை ஆள்வதற்கு ஏற்றதாக இருக்கும்போது மக்கள் இன்னும் ஏன் இந்த மதப்புத்தகத்தை வைத்துக்கொண்டு சண்டை இடுகின்றனர் எனத் தெரியவில்லை.

ஒரு மனிதன் எப்படி சிறப்பாக வாழ்வது என்று மதத்தில்தானே கூறியிருக்கின்றார்கள்?

நான் ஏற்கனவே கூறியது போன்று, மன்னராட்சியில் அந்த ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று, அங்கு ஏற்பட்ட மதமானது தனது புத்தகத்தில் வழிமுறையாக கூறியிருக்கின்றது. தற்காலத்தில் மக்களால் இயற்றப்பட்ட சட்டம்தானே மக்கள் எப்படி வாழவேண்டும் என்று கூறுகின்றது. அச்சட்டத்தை மீறினால் தண்டனையும் வழங்குகின்றது. மதத்தில் வழங்கப்பட்ட நீதியெல்லாம் மக்களாட்சி சட்டத்தில் அநீதியாக பார்க்கப்படுவது உண்மைதானே. பிறகு எப்படி மதப்புத்தகம் மக்களை வழிநடத்தும். அதை விட்டுவிடுங்கள். நாம் எப்படி சிறப்பாக வாழவேண்டும் என நாம் இயற்றிய சட்டம் கூறும்.   

மதம் தேவையில்லை என்றால் கடவுள் என்ன ஆவார்?

நான் ஏற்கனவே கூறியது போன்று, ஒரு மதத்தில் உள்ள கடவுளை மற்ற மதத்தில் உள்ளவர்கள், அக்கடவுள் இருப்பதாக நம்பவில்லை. எனவே மதக்கடவுள் அனைத்தும் பொய்யே. எப்படி மன்னராட்சி முடிந்தவுடன் அரசர்கள் காணாமல் போனார்களோ, அது போல மதங்கள் கூறும் கடவுளும் காணாமல் போய்விடுவார்கள்.

கடவுள் காணாமல் போவது சாத்தியமா?

சாத்தியம்தான். நேற்று வரை நான் ஒரு மதத்தை பின்பற்றி அது சொன்னக் கடவுளை வணங்கி வந்தேன். ஆனால், இன்று நான் மதம் மாறியதால், எனது புதிய மதம் எந்தக் கடவுளை சொல்கின்றதோ அந்த புதியக் கடவுளை வணங்க முற்படுகின்றேன். எனவே எனது நேற்றய கடவுள் இன்றிலிருந்து எனக்கு காணாமல் போய்விட்டார். ஆகையால் மதக் கடவுள்கள் யாவும் மாற்றத்திற்கு உட்பட்டவர்கள். மாற்றத்திற்கு உட்படும் கடவுள் அனைவரும் ஒருநாள் மக்களிடமிருந்து காணாமல் போய்விடுவர்.

மாற்றத்திற்கு உட்படாத கடவுள் என்பவர் உண்டா? உண்டு என்றால் அவர் யார்? அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்?

உண்டு. அவர்தான் "இயற்கை". இந்த இயற்கை விளக்கமாகவும், இந்த இயற்கை உண்மையாகவும், இந்த இயற்கை இன்பமாகவும் மக்களுக்கு என்றும் காட்சி அளித்துக்கொண்டும், காட்சிக்கு அப்பார்பட்டு ஒரு முடிவில்லா இராஜ்ஜியத்தில் நம்மை ஆண்டும் வருகிறார். இந்த இயற்கைக்கு "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்" என வள்ளலார் பெயர் வைத்துள்ளார். இவரை எந்தவொரு மதமும் உருவாக்கவில்லை. மதங்கள் உருவாகும் முன்பும், மதங்கள் அழிந்தப் பின்பும் என்றும் நிலைத்து இருப்பவர் இவரே. அதாவது மனிதர்கள் இந்த பூமியில் தோன்றுவதற்கு முன்பும், மனிதர்கள் இந்த பூமியில் அழிந்ததற்கு பின்பும், ஏன் இந்த பூமி உருவாகும் முன்பும், இந்த பூமி அழிந்ததற்குப் பின்பும் என்றும் நிலைத்து இருப்பவர் இவர் ஒருவரே. எனவே இவர் எந்த மதத்திற்குள்ளும் அகப்படமாட்டார். எனவே இவர் மாற்றத்திற்கு உட்படவும் மாட்டார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

ஏற்றுக்கொள்வார்கள். ஒரு கதை சொல்கின்றேன் கேளும். சொர்க்கத்தில் ஆண்டவன் ஒரு ஊர்வலம் நடத்த விரும்பினான். அதற்காக பூலோகத்தில் உள்ள மக்களை எல்லாம் அங்கு வர அழைப்பு விடுத்தான். இதனை ஏற்று பூலோகத்தில் உள்ள மக்கள் எல்லாம் சொர்க்கத்திற்கு சென்றார்கள். மாநாட்டு ஊர்வலம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. இயேசுவை பின்தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். அல்லாவை பின்தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். சிவனைத் தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். புத்தரைத் தொடர்ந்து பலகோடி மக்கள் திரண்டு சென்றுக்கொண்டிருந்தனர். இப்படியே ஒவ்வொரு கடவுளை தொடர்ந்து மக்கள் கூட்டம் சென்றுக்கொண்டிருந்தது. இறுதியில் ஒருவர் மட்டும் தனியே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற ஒரு தொலைக்காட்சி நிருபர் நீங்கள்

மட்டும் ஏன் தனியாக நடந்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார், நான்தானப்பா உண்மையான கடவுள்.

இந்தக் கதை உணர்த்துவது என்ன வென்றால், உண்மை என்றுமே தனியாகத்தான் இருக்கும். அது மக்களை கூட்டி அரசியல் நடத்த தேவையில்லை. அதற்கு என்று புராணங்கள் தேவையில்லை, அதற்கு என்று மதம் தேவையில்லை, அதற்கு என்று மதப்புத்தகம் தேவையில்லை. அதற்கு என்று மக்கள் தேவையில்லை. அதற்கு தேவை என்பதே இல்லை. நமக்குத் தேவை என்றால் நாம் அவனை அணுகுவோம். நமக்கும் தேவையில்லை என்றால் அவனை விட்டுவிடுவோம், ஒன்றும் பாதகம் இல்லை. இயற்கை உண்மை என்றும் அதன் இன்பத்தை எங்கும் விளக்கமாக செய்துக்கொண்டே இருக்கும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விட்டுவிட்டால் நமக்கு ஒன்றும் பாதகம் இல்லை. சரி, அவனை அணுகுவதால் என்ன சாதகம் கிட்டும்?

நாம் பெற்ற இந்த உடம்பை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காது, இயற்கையைப் போன்று மரணமிலா பெருவாழ்வு வாழும் சாதகம் கிட்டும். இச்சாதகத்தைப் பெற்றவர் திருவருட்பிரகாச வள்ளலார். சுத்த சன்மார்க்கம் என்ற ஊடகத்தின் மூலம் இவர் இந்த சாதகத்தைப் பெற்றார்.

சுத்த சன்மார்க்கம் என்பதும் ஒரு மதம் தானே?

இல்லை. நான் ஏற்கனவே கூறியிருக்கின்றேன். மதம் என்பது இயற்கைக்கு கிடையாது. சுத்த சன்மார்க்கம் என்றால் "தூய்மையான சத்துள்ள இடத்திற்கு செல்லும் வழி" எனச்சொல்லலாம்.

சுத்த சன்மார்க்க வழியில் எப்படி செல்வது?

இவ்வழியில் ஜோதி வழிபாடு என்பது அகத்திற்கும், ஜீவகாருண்ய வழிபாடு என்பது புறத்திற்கும் கடவுள் வழிபாடாக இருக்கும்ஆன்ம நேயம், தயவு, கொலை புலை தவிர்த்தல், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், நித்திய கரும விதி, பேருபதேசம், மஹாமந்திரம், தருமச்சாலை, சன்மார்க்க சங்கம், ஞான சபை போன்றவைகளை பின்தொடர்ந்து செல்லக்கூடியதாக இவ்வழி இருக்கும். இவ்வழியின் முடிவில் சித்திவளாகத்தை (மரணமிலா பெருவாழ்வை) நாம் அடையலாம்.

மதத்திற்கும் ஒழுக்கமுடைமைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

மக்கள் சிறப்பாக வாழ மதப்புத்தகத்தை விட்டுவிட்டு சட்டப்புத்தகத்தை பின்தொடர்ந்தாலும், புலால் உண்பதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆகையால் மக்கள் புலால் உண்ணலாமா? என்ற கேள்வி வரும். சட்டப்படி புலால் உண்ணலாம். சில மத ஒழுக்கத்தின் படி புலால் உண்ணுதல் பாவம் என்றும், சில மத ஒழுக்கத்தின் படி புலால் உண்பது பாவமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே இந்த ஒழுக்கங்கள் என்பன மதத்திற்கு மதம் முற்றிலும் மாறுபடுகின்றன. எனவே

மதங்களில் கூறப்பட்ட ஒழுக்கங்களைப் பின்பற்றினால் இறைவனை அடைய முடியாது. ஏனெனில் அங்கு இறைவனே பொய்யாக சித்தரிக்கப்பட்டிருக்கும்போது பொய்யை அடைய ஒழுக்கம் வேறு தேவையா? அங்கு ஒழுக்கக்கேடுகள்தான் நிறைந்திருக்கும். சில சிறப்பான ஒழுக்கங்கள் தெரிந்தோ தெரியாமலோ சில மதங்களில் கூறப்பட்டுள்ளன. அவை நன்றாக பயனளிக்கக்கூடியதாக இருந்தாலும் அதனுடன் தீயஒழுக்கங்களும் கூடி குலாவுகின்றன. நல்லொழுக்கத்தை மட்டுமே கொண்ட மதம், இந்த மதம் என்று சொல்ல எதுவும் இப்பூமியில் இல்லை. எனவே மதங்களில் பேசப்படும் ஒழுக்கங்கள் நம்மை இறைநிலைக்கு இட்டுச்செல்லாது. அவை ஜோடிக்கப்பட்ட ஒழுக்கங்கள். அந்தந்த வட்டார வழக்கங்களை மறுத்தோ அல்லது ஏற்றோ ஒழுக்கங்களாக சொல்லப்பட்டிருக்குமே அன்றி ஒரு பொது ஒழுக்கத்தை மதங்களில் காணமுடியாது. எனவே மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சம்மந்தம் இல்லை.

இந்த மதங்கள், இந்த மனித இனத்திற்கு செய்துள்ள மிகப்பெரிய நன்மை என்ன? மிகப்பெரிய கேடு என்ன?

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று மக்களுக்கு சொன்னது மிகப்பெரிய நன்மை. அந்த இறைவன் இவன்தான் என்று மக்களை நம்பவைத்தது மிகப்பெரிய கேடு.

எல்லா மதங்களும் அல்லது ஒழுக்கங்களும் ஏன் காமத்திற்கு எதிராக உள்ளன?

மதங்களும் ஒழுக்கங்களும் வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே காட்டில் அலைந்து திரிந்த மனிதன், ஒரு காட்டு விலங்கைப்போலவே பிறந்த மேனியாய் இருந்தான். யார் யாரை வேண்டுமானாலும் காமுறலாம். தன்னுடைய அன்னையையோ அல்லது சகோதரியையோ அல்லது அயல் பெண்ணையோ சேர்ந்தாலும் ஒரே சுகம்தான் இந்த காமம் கொடுக்கும். அப்படித்தான் இவள் நமது அன்னை, இவள் நமது சகோதரி என்று தெரியாமல் எல்லோரிடமும் ஒருவன் காமுறும் ஒரு வாழ்க்கைதான் அன்று அந்தக்காட்டில் நமது இனம் செய்துக்கொண்டிருந்தது. என்று, இவள் என்னைப்பெற்ற அன்னை, இவள் என்னுடன் பிறந்த சகோதரி என்ற எண்ணம் அவர்களுக்குள் வந்ததோ அன்றே இன்பமுறும் உடல் உறுப்புகளை பிறர் காணா வண்ணம் மறைக்கத் தொடங்கினார்கள். அது யாருக்கும் பொதுவான உறுப்பல்ல. சேரும் இருவர் மட்டுமே பார்க்கக்கூடிய உறுப்பு என்று தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டனர். காட்டு விலங்கிலிருந்து மனிதன் உருவாவதற்கு இந்த மறைப்பே முதல் படியாகும். அந்த மறைப்பே இன்று கற்பு என்று பேசப்படுகின்றது. இந்த காமத்தை கட்டுப்படுத்தியதால்தான் காட்டு விலங்கிலிருந்து மனிதன் தனியே இனங்காணப்பட்டான். அவனது சிந்தனைகள் அதிலிருந்துதான் வளரத்தொடங்கியது. முதலில் தாய்வழி சமூகம் உருவாகியது. இச்சமூகத்தில் தனது தந்தை யார் என்பது தனது தாய்க்கே தெரியாது இருந்தது. தனது தாய் மட்டுமே இனங்காட்டப்பட்டாள்.

சமூகத்தில் தனி மனிதனுக்கென சொத்துக்கள் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு அவனுடைய வாரிசு மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை துளிர்த்தது. இதுவரை தாய், சகோதரி தவிர்த்து மற்றவர்களை எல்லாம் காமுற்ற மனிதன் இந்த புதிய சிந்தனையால், தனக்கென்று ஒருவள் மட்டுமே போதும். அவள் மூலம் உருவாகும் குழந்தைகள் எனது வாரிசாக எனது சொத்தை நிர்வகிக்கட்டும் என தீர்மானித்து, தனது காம எண்ணத்தை ஒருவளோடு மட்டும் வைத்துக்கொண்டான். அவள் பெயர் மனைவி என்றாகியது. திருமண பந்தம்

தோன்றியது. இதிலிருந்து தந்தைவழி சமூகம் உருவாகியது. தனக்கு இவன்தான் தந்தை, இவள்தான் தாய் என ஒரு வரையறை ஏற்பட்டது.

இக்காலகட்டத்தில் உருவாகிய மதங்களும் அம்மதங்களில் கூறப்பட்ட ஒழுக்கங்களும் காமத்தை இன்னும் சற்று உற்று நோக்கியது. இந்த காமத்தை முற்றிலும் ஒடுக்கினால் என்ன? சிலர் ஒடுக்கினார்கள், அதன் விளைவாக மனித இனத்தில் சித்தர்களும் முனிவர்களும் ஏற்பட்டனர். இவர்களுக்கு ஒரு சில சித்துக்களும் இதன் மூலமாக கிடைத்தன. எனவே இறைசக்தி கிடைக்க காமம் தடையாக உள்ளது என ஒருவாறு தெரிந்துக்கொண்டனர். இதிலிருந்து இல்லறம் துறவறம் என்ற பிரிவு ஏற்பட்டது. துறவறத்தார்கள் இல்லறத்தாருக்கு காமம் பற்றிய சில கட்டுப்பாடுகளை ஒழுக்கங்களாக தெரிவித்தனர். ஒருவனுக்கு ஒருத்தி, மாதம் இரண்டு முறை களவின்பம், நாற்பது வயதிற்கு மேல் இல்லறத்தில் துறவறம் மேற்கொள்ளுதல் வேண்டும், பெண்கள் ஆடைகளால் தனது உடலை முழுவதும் மூடியே வெளியில் போகவேண்டும், கணவன் இறந்தால் தீக்குளிக்க வேண்டும், பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது, செய்யலாம், இப்படி காமத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு மதமும் பல கட்டுப்பாடுகளை விதித்தன. இறுதியில் இன்று இக்கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களை அடிமையாக்கின. ஆண் ஆதிக்க சமுதாயம் அனைத்து மதங்களிலும் அறமாக / ஒழுக்கமாக ஏற்கப்பட்டன.

காமத்தை அடிப்படையாகக் கொண்டு சில மதங்களில் கடவுள்கள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சில மத புராணங்களில் வரும் கடவுளர்களே இந்த காமத்தை அடக்க முடியாமல் குற்றம் புரிந்து ஒருவர் மனைவியை மற்றொருவர் பலாத்காரம் செய்வது, ஒருவரின் மனைவி மற்ற ஆடவரை விரும்பிச் சேர்வது இவைப்போன்ற காமக் கதைகள் எல்லாம் சில மத புராணங்களில் நாம் கண்டு களிக்கலாம். காமத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வுருவகக் கடவுளும், காமக் கதைகளும் புராணங்களில் கூறப்பட்டன என்று சொல்வாரும் உளர். எனவே, காமம் என்பது சிற்றின்பம், இறை இன்பமே பேரின்பம் என்று மதங்கள் பேச ஆரம்பித்தன. காமத்திற்கு எதிராக நடைபோட்டதால்தான், காட்டு விலங்கினங்களாக இருந்த நாம் இன்று ஒரு நாட்டு மனித சமூகமாக உலாவர முடிகின்றது, என்றால் அது மிகை இல்லை. எனவே மதங்களும் ஒழுக்கங்களும் காமத்திற்கு எதிராக இருப்பதில் தவறில்லை. அதே நேரம் பெண்களின் சுதந்தரமும் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

சுத்த சன்மார்க்கப் பாதைக்கும் காமம் எதிரியா?

ஆம். எதிரிதான்.

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளையவர்கள் தனது இல்லறத்தை விட்டு துறவு பூண்டு வள்ளலாரிடமே வந்து பணிசெய்யலாம் என விழைந்தபோது, வள்ளலார், "'உலகம் பிரமிக்கத் துறவு பூண வேணாங்காணும்; அருந்தல், பொருந்தல் முதலிய ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளாகிய இல்லறத்தார் எல்லாம், அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளுக்கு நூற்றுக்கு நூறு பங்கு முழுவதும் உரியவர் ஆவார்கள் இது பொய்யன்று,' என்று கூறியருளிக் குடும்பத்தில் சேர்ந்து வாழவழிகாட்டினார். இதிலிருந்து இல்லறத்தார்கள் அனைத்தையும் விட்டு துறவறம் மேற்கொள்ள வேண்டாம் என்று சுத்த சன்மார்க்கம் போதிக்கின்றது.

மற்றொரு சமயம், "பரம சிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம்." என்று இரத்தின முதலியாருக்கு வள்ளலார் தனது கடித்தத்தில் எழுதி, அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதின்மூலம், வள்ளலார் திருமண பந்தத்திற்கு தடை செய்யவில்லை.

ஆனால், தனது வாழ்க்கையில் தனது திருமணத்தை அவர் வெறுக்கவே செய்தார். இறையருளால் தனக்கு திருமணம் நடைபெற்றாலும், இல்லறத்தில் ஒரு துறவு வாழ்க்கையைத்தான் அவர் மேற்கொண்டார். இதிலிருந்து இறை நிலையடைய காமத்தை எதிர்த்தாக வேண்டும் என்று தெரிகின்றது.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாக வள்ளலார் இந்தக் காமத்தை குறிப்பிடுவதை பாருங்கள், "காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவர்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்" என்று கட்டளை இடுகின்றார். கடவுளைக் காண விரும்பினால் ஆகாரத்தில்கூட இச்சை செல்லக்கூடாது என்று சொல்லும் வள்ளலார் காமத்தை எந்த அளவிற்கு வெறுத்திருப்பார் என்பதை கவனிக்க வேண்டும்.

"சுத்த சன்மார்க்க லட்சிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு கனவில்கூட பெண்ணாசை கூடாது" என்று வேறோரிடத்தில் கூறுகிறார் வள்ளலார்.

"ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக முடையவனுக்குக் கோசத்தடிப்புண்டாகாது" என்றும், அதிதீவிர பக்குவியாய் கடவுளிடத்தில் லட்சியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிகலாபாசம் நேரிடாது, தேகம் நீடிக்கும்" என்றும் காமத்தை உடைத்தெறியச் சொல்கின்றார் வள்ளலார்.

ஆனால் காமத்தை அழிப்பது நமது முயற்சியால் மட்டும் நடைபெறக்கூடிய ஒன்றல்ல. அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளும் கைகூட வேண்டும். சுத்த சன்மார்க்க தீவிரனுக்கு மட்டுமே காமம் எதிராக வேண்டுமே ஒழிய சாதாரண மனிதர்களுக்கு காமம் முறைபடுத்த வேண்டும் என்பதெ சுத்த சன்மார்க்கம் சொல்கின்றது.

நாம் இயல்பாக இருந்துக்கொண்டே மிகச்சுலபமாக மெய்ஞானம் அடைவது சாத்தியமா?

சாத்தியம்தான். யார் ஒருவர் முற்பிறவிகளில் எல்லாம் மிகக் கடினப்பட்டு மெய்ஞானம் அடையும் முயற்சியில் தோல்வியுற்றார்களோ அவர்களுக்கு இப்பிறப்பில் மிகச்சுலபமாக மெய்ஞானம் கிடைத்துவிடும். தாயுமானவர் தனது அடுத்தப் பிறவியில் இவ்வாறுதான் உடனே மெய்ஞானம் கிடைக்கப்பெற்று இரண்டறக் கலப்பார் என்கிறார் வள்ளலார். எனவே நீங்கள் சென்ற பிறவியில் தாயுமானவரைப்போன்று இருந்திருந்தால் இந்தப்பிறவியில் உடனே இயல்பாக இருந்துக்கொண்டே மிகச்சுலபமாக மெய்ஞானம் கிடைக்கப்பெறுவீர்கள்.


(கேள்விகளும் பதில்களும் தொடரும்)

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqeEs2ZjJvblI1WHM/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.