Saturday, June 13, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 3


எனது சிந்தனையில் சிக்கிம் - 3


நியூ ஜல்பைங்குரியிலிருந்து கேங்டாக் (Gangtok):

நியூ ஜல்பைங்குரி இரயில்வே நிலைய எல்லை முடிந்தவுடன் 'சிலிகுரி' நகரத்திற்குள் எங்களது கார் பயணித்ததை கவனித்தேன். சிலிகுரி நகரில் இன்றும் சைக்கிள் ரிக்க்ஷா ஓடுவதை பார்த்து அதிசயித்தேன். மேற்கு வங்கமாநிலம் முழுவதும் நாம் இதனைக்காணலாம். ஐந்து வருடங்களுக்கு முன் நான் எனது அலுவல் வேலையாக கொல்கத்தா சென்றிருந்தபோதும் இந்த சைக்கிள் ரிக்க்ஷாவினை பார்த்து வியந்திருக்கின்றேன். தற்போது எங்களது கார் சிலிகுரி வழியாக சிக்கிம் மாநிலத்தலைநகரான கேங்டாக் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. ஏழு கிலோமீட்டர் சென்றிருக்கும், ஒரு இரயில்வே க்ராசிங் கேட் போட்டுவிட்டதால், அங்கு சிறுது நேரம் எங்களது கார் நின்றது. நாங்கள் அனைவரும் தேனீர் அருந்தலாம் என்று காரிலிருந்து இறங்கினோம். ஆனால் தேனீர் கிடைக்காததால் சற்று நேரம் உலாவிவிட்டு மீண்டும் காரில் ஏறி பயணித்தோம்.


அடுத்து எட்டு கிலோமீட்டர் சென்றிருக்கும், மேற்கு வங்க மாநிலம் முடிந்து, சிக்கிம் மாநில எல்லை செக்போஸ்ட்டில் வந்து கார் நின்றது. காரிலிருந்த விளக்கை போட்டுவிட்டு, சென்னையிலிருந்து சுற்றுலாவிற்கு வந்திருப்பதாக, சிக்கிம் மாநில போலிசாரிடம், எங்களது காரோட்டி கூறினார். இரண்டு போலீசார்கள் காரிலிருந்த எங்களை உற்றுப் பார்த்துவிட்டு, மாநிலத்திற்கு உள்ளேச்செல்ல அனுமதித்தனர். அதுவரை சமதளத்தில் பயணித்த எங்களது கார், சிக்கிம் மாநில எல்லையிலிருந்தே மலையில் ஏறத்துவங்கியது. பாதை படுமோசமாக இருந்தது. சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்படித்தான் இருந்தது. சிக்கிம் மாநிலம் தமிழ்நாட்டைப்போல சமதளத்தில்தான் இருக்கும், சில இடங்களில் மட்டும் மலைஏற வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அம்மாநிலம் முழுவதும் மலையில்தான், மலைகளின் கூட்டங்களாக இருப்பதை பின்னர் தெரிந்துக்கொண்டேன். வழியில் டார்ஜ்லிங் மலை எங்களுக்கு எதிர்புறம் காட்சியளித்தது. இரவு நேரத்தில் அந்த டார்ஜிலிங் மலையினை பார்க்கும்போது, அங்கு எரியும் சோடியம் விளச்சமானது, நாங்கள் தூரத்தில் இருந்துப் பார்க்கும்போது, அம்மலை தீப்பிடித்து எரிவது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

கார் அடிக்கு ஆயிரம்முறை வளைந்து வளைந்து மலைகளைச்சுற்றி சுற்றி மேலே ஏறிச்சென்று, கடல் மட்டத்திலிருந்து 5480 அடி உயரத்திலுள்ள கேங்டாக் வந்தடைய இரவு 12.30 மணியாகிவிட்டது. நியூ ஜல்பைங்குரியிலிருந்து 148 கிலோமீட்டரைக் கடந்து, நான்கு மணிநேரப்பயணத்திற்குப் பிறகு கேங்டக் வந்தடைந்தோம். டியோரலி பஜாரில் உள்ள ரதி பில்டிங்கில் வந்து நின்றது எங்களது கார். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் நாங்கள் காரிலிருந்து இறங்கும் முன்னரே, எங்களை எல்லாம் அன்புடன் வரவேற்றார். நானும் முனைவர் .நலங்கிள்ளி மற்றும் திருமதி .சுசீலா அவர்களும் அப்போதுதான் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களை முதன்முதலாகப் பார்க்கின்றோம். நான் காரைவிட்டு இறங்கியவுடன் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டேன். எங்களை இறக்கிவிட்டு, காலை 09.00 மணிக்கு வருவதாகச்சொல்லி, கார் ஓட்டுனர் சென்றுவிட்டார். பிறகு எல்லாப்பைகளையும் எடுத்துக்கொண்டு ரதி பில்டிங்கில் முதல் தளத்தில் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச்சென்று அமர்ந்தோம். சுமார் ஒருமணி நேரம் எங்களுடன் பேசியிருந்துவிட்டு, காலை 09.00 மணிக்கு ரெடியாக இருக்கச்சொல்லிவிட்டு பேராசிரியர் வெற்றிச் செல்வி, அவர் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றுவிட்டார்.

நான் இன்றைய தமிழகச் செய்தியைப் படிக்க எனது டேப்லெட்டில் நெட்டை ஆன் செய்துவிட்டு, செய்திகளைப் படித்துத் திடுக்கிட்டேன். 'எனக்குத் தமிழ்த் தெரியாது ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும்' என்று சொன்ன திரு.ஜெயகாந்தன் அவர்கள் தனது 81-வது வயதில் காலமானார் என்ற செய்தி எங்களை வருத்தமுறச் செய்தது. மார்க்கியமே அவரது முதல் அறிமுகம். எனினும் தமிழ் அருளாளர்கள் தாயுமானவர், வள்ளலார் மற்றும் பாரதி போற்றிய மெய் ஞானத்தோடு மாட்க்சியத்தை இணைக்க முடியும் என நம்பினார். கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிறந்த ஒரு மேதை, மேகமாகி தமிழ்மழை பெய்து நமது உள்ளங்களிலெல்லாம் என்றும் வற்றாத நீராகக் குடிகொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. இதேபோன்று 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.' என்று பாடிய திரு.நாகூர் ஹனிபா அவர்களும் தனது 96-வது வயதில் இன்று காலமானார், என்ற செய்தியும் என்னை வருத்தமுறச்செய்தது. 'கேட்டதும் நின்னிடத்தே, பெற்றதும் நின்னிடத்தே' என்று இறைவனை நோக்கிப் பாடுவார் வள்ளலார். அவரின் இந்தப்பாடலுக்கு இலக்கணமாக திரு.ஹனிபா அவர்களும், அந்த இறைவனிடமே கையேந்தச் சொல்லிப்பாடினார். இறுதியில் இறைவனே தனது கையில் திரு.ஹனிபாவை ஏந்திக்கொண்டார். தமிழ்நாட்டோடு சேர்ந்து இவ்வுலகமே இன்று (08-04-2015) இரண்டு இனியவர்களை இழந்து சுற்றுகின்றது. அவர்கள் இருவரும் நீண்ட உறக்கத்தில் இருக்க, எங்களையும் தற்காலிக உறக்கம் (அப்படித்தான் நாம் தினமும் நினைக்கின்றோம்) வந்து கண்களை சுற்ற ஆரம்பித்தது. பிறகு நாங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு உறங்க இரவு இரண்டுமணியாகிவிட்டது. எங்களது அறை குளிராக இருந்ததால் நன்றாகப் போர்வையை இழுத்து போத்திக்கொண்டு தூங்கினோம்.

இன்று 2015, ஏப்ரல் 09-ஆம் தேதி - வியாழக்கிழமை. {எங்களது பயணத்தின் நான்காம் நாள்} நாங்கள் காலை 06.00 மணிக்கெல்லாம் எழுந்து கேங்டாக்கை சுற்றிப்பார்க்க ஆயுத்தமானோம். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் 07.00 மணியளவில் எங்களுக்கெல்லாம் தேனீர் தயார் செய்து எடுத்துவந்து கொடுத்தார்கள். பிறகு இன்று நாங்கள் பார்க்கக்கூடிய இடங்களைப்பற்றி சுருக்கமாக விளக்கிவிட்டு, காலை சிற்றுண்டி செய்யக் கிளம்பிவிட்டார். நாங்களும் சிற்றுண்டி வருவதற்குள் சுடுநீரில் குளித்துவிட்டு தயாரானோம். எங்களில் திரு.ஆர்.தண்டபாணி மற்றும் திருமதி.ஆர்.இலட்சுமி ஆகிய இருவர் மட்டும் தங்களது ஆடைகளுக்கு மேல் Sweater அணிந்துக்கொண்டார்கள். அதற்குள் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் ரவா உப்புமா செய்து எடுத்துவந்தார்கள். அதனை சாப்பிட்டும், அதிகமாக மீந்துவிட்டது. மீந்ததை மதியம் சாப்பிடலாம் என பேக்செய்து வைத்தோம். நாங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் காரும் வந்துவிட்டது. எங்கள் ஐவரையும் காரில் ஏற்றிவிட்டு, ஓட்டுனரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். எங்களது கார் 09.15 மணியளவில் புறப்பட்டது. நாங்கள் இன்று மொத்தம் 09 இடங்களை சுற்றிப்பார்த்தோம். அவ்விடங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் முன், சிக்கிம் மாநிலத்தைப்பற்றியும், இம்மாநிலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் உலகின் மூன்றாவது உயரிய சிகரமான கஞ்சன்ஜங்காவைப் பற்றியும், அம்மாநிலத் தலைநகரான கேங்டாக் பற்றியும் மிகச்சுருக்கமாகப் பார்ப்போம்.

சிக்கிம் (Sikkim):

லிம்பு மொழியில் 'சு' என்றால் 'புதிய' என்றும் 'கியம்' என்றால் 'இடம்' அல்லது 'வீடு' என்றும் பொருள். 'சுக்கியம்' மருவிச் 'சிக்கிம்' (புதிய வீடு) ஆனது. 1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலையடைந்தபோது தனிநாடாகவே நீடிக்க வேண்டும் என்ற சிக்கிம் மன்னர் தாஷி நாம்கய்லின் கோரிக்கையை ஜவகர்லால் நேருவும் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் வெளியுறவு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1962-ஆம் ஆண்டு நடந்த் இந்திய-சீனப் போரின்போது சிக்கிம் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. எனவே இந்தியாவைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்த நிலையில் 'இந்தியா அரசியல் ரீதியாக அபாயகரமான நாடு' என்று 1966-ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பத்திரிக்கைக்கு அப்போதய மன்னர் 'பால்டன்தொண்ட நாம்கய்ல்' பேட்டியளித்தார். இது பதற்றத்தை ஏற்படுத்தியது. சிக்கிமில் முடியாட்சிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி வெடித்தது. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அப்போதய பிரதமர் இந்திரா காந்தி அமைத்த குழுவின் பரிந்துரையின்படி .நா.பிரதிநிதிகள் முன்னிலையில் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 97.60 சதவிகித மக்கள் இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர். இதன் பேரில் 1975-ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் 22-வது மாநிலமாக சிக்கிம் உதயமானது. 1979-ஆம் ஆண்டு நடந்தப் பொதுத் தேர்தலில் சிக்கிம் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று 'நூர்பகதூர் பண்டாரி' முதல் முதலமைச்சராய் பொறுப்பேற்றார். நேபாளிகள் மிகஅதிகமாக குடியேறியதால் தற்போது இங்கே இந்துக்களே அதிகமாக உள்ளனர். 60 சதவிகதம் இந்து, 28 சதவிகிதம் பெளத்தம், 06.06 சதவிகிதம் கிறிஸ்துவம், மற்றவர்கள் 01.40 சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். சுற்றுலா மூலமே மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கின்றது. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா சிகரம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. 28 மலைச்சிகரங்கள், 227 ஏரிகள், 5 வெப்ப நீரூற்றுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள் என இயற்கை ஆளுகின்ற மாநிலம் இது. பெரும்பாலும் பாறை நிலங்களாய் இருப்பதால் வேளாண்மைக்கு உகந்த மாநிலம் இதுவல்ல. எனினும் அடுக்கு வேளாண்மை முறையில் நெல் பயிரிடப்படுகின்றது. இதனாலேயே திபெத்தியர்களும் பூட்டானியர்களும் சிக்கிம்மை 'அரிசிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கின்றனர். இதுதவிர சோளம், கோதுமை, பார்லி, ஆரஞ்சு, தேயிலை ஆகியவை பயிராகின்றன. ஏலக்காய் உற்பத்தியில் இந்தியாவின் முதல் மாநிலமாக இது திகழ்கின்றது. மேலும் இந்தியாவில், தன் மாநிலத்தைவிட தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதல் இடத்தை சிக்கிம் பெற்றிருக்கின்றது. தோல் பதனிடுதல் இங்கு முக்கியமானத் தொழிலாக உள்ளது. காப்பர், டோலமைட், கிராபைட், நிலக்கரி, துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இருப்பினும் தொழில் வளர்ச்சி இல்லை. சுற்றுலா வருமானமே போதும் என இருக்கின்றார்கள் போலும்.

2011-ஆம் ஆண்டின் கணக்கின்படி ஆறு லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர். சிக்கிம்மை இணைக்கும் பொது மொழியாக நேபாள மொழி இருக்கின்றது. இதுதவிர டிசோங்கா, க்ரோமா, குருங், லிம்பு, மகர், மஜி, மஜ்வார், ராய், ஷெர்பா, தமங், துலுங், திபெத்தியன் மற்றும் யாகா ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இந்தி, ஆங்கிலமும் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொருவரும் சராசரியாக ஐந்து மொழிகள் வரை பேசுகின்றனர். பூட்டியாக்கள், லெப்சே ஆகியவர்கள் முக்கியமான பழங்குடியினர். பிகாரிகள், வங்காளிகள் மற்றும் மார்வாடிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட இனமக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, தசரா, சங்காராந்தி உள்ளிட்ட அனைத்துப் பண்டிகைகளும் கொண்டாடுகின்றனர். புத்தமதப் பண்டிகையான லோசர் (திபெத் புத்தாண்டு), சாகாத் தாவா, ஹபா துச்சென், டுருப்கா தேசி மற்றும் பும்ச்சு ஆகியவையும் கொண்டாடப்படும். மொகரம் மற்றும் கிறிஸ்துமசும் முக்கியத்துவம் வாய்ந்தவை. லெப்சா இசை, ராக் இசை சிக்கிம்மில் பிரபலம். உலகின் அழகிய இடமாகவும் பனி மூடிய சிகரங்களுடன் வண்ணத்துப் பூச்சிகளின் வசிப்பிடமாகவும் இயற்கையின் வனப்பில் உண்மையாகவே மிக உயர்ந்த இடத்தில், இமாலயத்தின் அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 5500 அடி உயரத்தில் இருக்கின்றது சிக்கிம். 7096 சதுர கிலோமீட்டர் மலைப்பறப்பைக் கொண்டு சிக்கிம் விளங்குகின்றது. காஷ்மீர் போன்று இந்தியாவில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் இங்கு நிலம் வாங்க முடியாது. மேற்கே நேபாளம், வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா மற்றும் திபெத், கிழக்கே பூட்டான், தெற்கே இந்தியாவின் மேற்கு வங்கம் இதன் எல்லைகளாக உள்ளன. தனது மூன்று புறமும் சர்வதேச எல்லைகளைக் கொண்ட மாநிலம் என்பதால் சில விதிகளுக்கு உட்பட்டே சுற்றுலா செல்லமுடியும். நாட்டின் பாதுகாப்புக் கருதி வெளிநாட்டினருக்கு சில இடங்களில் சுற்றிப்பார்க்கத் தடையுள்ளது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் எந்தவொரு மாநிலப் பிரச்சனையிலும் தலையிடாது, ஒரு ஒழுங்குடன் இந்திய இராணுவம் இம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே முகாம்களை அமைத்துக்கொண்டு நம்நாட்டின் எல்லைகளை காத்துவருகின்றது. என்வே இம்மாநிலம் முழுவதும் காவல் துறையினரைக் காணுதல் அரிது. வீதிகள் தோறும் இராணுவ வீரர்களையே காணமுடியும்.
  
வருடம் முழுவதும் சீரான பனிப்பொழிவு பெறும் இந்தியாவின் வெகுசில மாநிலங்களில் சிக்கிமும் ஒன்று. வட பகுதி பனியுறை நிலமாக இருக்கும் அதே சமயம் தென்பகுதி மிதமான வானிலையுடன் விளங்கும். தட்பவெப்ப நிலை 0 டிகிரி வரை செல்லும்போது, வடப்பகுதி உறைந்து உறைநிலமாக நான்கு மாதங்கள் வரை நீடிக்கின்றது. சிக்கிம்மில் நிலவும் மிதமான வானிலைக்கு முக்கியமான காரணம், கோடை காலங்களில் தட்பவெப்பம் 28 டிகிரிக்கு மிகாமலும், குளிர்காலத்தில் 0 டிகிரிக்கு குறையாமலும் இருப்பதுதான். மழைக்காலங்களில் பலமாக மழை பெய்வதால் அடிக்கடி ஆபத்தான மணற்சரிவுகள் ஏற்படுவதுண்டு. இம்மாநிலத்தில் சுற்றுலாச்செல்ல பன்னிரண்டு மாதங்களும் ஏற்றது. எனினும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. சிக்கிம் மாநிலம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முறையே கேங்டாக், கேஜிங், மங்கன், நம்சி ஆகிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்குகின்றன.

தற்போது சிக்கிம்மில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 22 தொகுதிகளை 'சிக்கிம் ஜனநாயக முன்னனி' கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து சிக்கிம் மாநில முதலமைச்சராக தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக 'பவன் குமார் சாம்லிங்' முதல்வராக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். 1994, 1999, 2004, 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் இவர் தொடர்ச்சியாக வென்று நல்லாட்சி செய்து வருகின்றார்.


(தொடரும் - 3)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.