இதய மலர்
---------------------------
(தி.ம.இராமலிங்கம்)
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்)
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqdF9PSm9iMmY5WlE/view?usp=sharing
இளவயது இன்பமாகி இளம்வட்ட முகமாகி
என்னிதய மலராகி என்னன்புத் தேனாகி
களவியல் நூலாகி கனிந்த முக்கனியாகி
கனவுக் கன்னியாகி கருத்த மேகமாகி
குளக்கரை அலையாகி குளிர்ந்த நிழலாகி
குருட்டுக் காதலாகி கும்மிருட்டில் மெல்ல
வளர்ந்த ஜோதியாகி விளங்க என்னுள்ளே
வெளிச்சமாகி ஓங்கும் அனையா விளக்கே. 1
கண்கள் நான்கும் காமுற்று காதலன்
கைகள் தழுவ கண்ணிமைகள் மூடி
எண்ணங்கள் பறந்து எதிர்க்க மனமின்றி
இன்ப மடைந்து அதனால் பல
வண்ண மயமாய் மழலைகள் பெற்று
விளையாடி இருக்க என்னை மணம்
பண்ண உனக்கு பயமேனோ இறைவா
பாலோடு நீரும் பருக இனியதே. 2
குயில் அமர்ந்து கூவுமிடம் தெரிந்துமதைக்
காண முடியாது கலங்கினேன் நான்
துயில் கொண்டு தூங்கினும் கனவிலும்
துரையைக் காணும் விழியிலேன் அன்று
மயில் ஆட்டத்தை மகிழ்வுடன் பார்த்து
மழைப் பொழிவில் மனம் நனைந்தென்
உயிர் நின்னோடு உறவாடிக் கலந்து
உறங்கிய உறக்கம் யார் பெறுவரே. 3
இதயமே எனது இன்பமே இமைப்பொழுதும்
இயங்காத எண்ணமே இருமை இல்லா
சதகோடி ஒருமை சூரியனே என்னுள்
சுயமாய் எழுந்து சுகந்தரும் ஓர்நல்ல
பதமே யாரும் பெற்றிடா இனியநற்
புகழை எனக்கே புகட்டிப் புணர்ந்த
விதத்தை என்னென்பேன் விடுக்கும் மூச்சில்
விளங்கும் என் இதய ஜோதியே. 4
தனிமையில் நான் தளர்ந்திருக்க என்னை
தட்டி யழைத்து தழுவிய உன்
இனியக் கரங்களில் அகப்பட்டு நாணத்தோடு
அடங்கி இன்புற்ற அந்தப்
பொழுதும்
கனிந்த அந்தக் கனியும் என்னுடன்
கடல் கடந்து காலங் கடந்து
புனிதனாக்கி மரணமிலா பெரு வாழ்வில்
பாரில் என்றும் பாடி
யிருக்குமே. 5
பொழுதும் போனது பொன்நிலவு பூத்தது
பசலை மேனியில் படர்ந்து செல்ல
தொழுது நின்றே தலைவனைத் தேடியே
துடித்த இமைகள் தடித்து நின்று
அழுகையில் என் அருட்பெருஞ் ஜோதி
அங்கே வந்தெனை அணைக்க நானும்
வழுக்கி விழுந்து விம்மி அழுதுபேச
வார்த்தை களின்றி பேசி னோமே. 6
ராத்திரியில் வருகின்ற ராம லிங்கமே
ராகமிசைத் தாடலாம் நாம் இனிமே
ஆத்திகம் பேசும் என் நாட்டவனே
ஆதி பாடும் ஜோதி பாட்டவனே
சாத்திரம் பேசும் சக சாத்தானே
சாதிகள் இனி சாகப் பார்ப்பேனே
கோத்திர சண்டை யிடும் கோமானே
காயங்க ளனைத்தும் பத்து சாமானே. 7
உன்னை மறக்கும் உறக்கமும் வேண்டாம்
உடலை மறக்கும் உயிரும் வேண்டாம்
தன்னை நினைக்கும் திமிரும் வேண்டாம்
தயவு அல்லாது தெய்வமும் வேண்டாம்
அன்பை உணராத ஆலயம் வேண்டாம்
ஆருயிர்க்கு ஈயா உண்டியல் வேண்டாம்
சன்மார்க் மல்லாது சடங்கும் வேண்டாம்
சத்தியம்
இல்லாத எதுவும் வேண்டாமே. 8
ஓரக் கண்ணால் உன்னைப் பார்த்து
ஓய் வின்றி
போனேன் டா
ஈர மனதில் உன்னை வைத்து
இதயம்
துடித்துப் போனேன் டா
வீர மரணம் வந்தாலும் நான்
வீழ்ந்து போக
மாட்டேன் டா
கார ணமின்றி காதலில் களிக்க
காய கல்பம்
தாயேன் டா. 9
அருட் ஜோதி அன்பனை என
தாருயிர்க் கள்வனை தீந் தமிழ்
அருகனை என் உள் ளொரிர்
அணு வினை அன்றே என்
கருவில் கலந்த கண்ணனை கள்ளக்
காதல் கரும் பனை எனது
மருதூர் இராம லிங்கனை மரணமிலா
மருந்தனை அணைந் திருந் தேனே. 10
முக்காடு மேனியன் முத்தேக மானவன்
மன்மத ரூபமாய் முன்னே வந்து
முக்காலமும் உணர்த்தி முத்தி நலம்
முயங்கி காதலாய் மனதை வருடி
சிக்காத என்னை சிக்கவைத்து என்னுடன்
சிற்சபையில் கூடி சிலிர்த்த சயனத்தை
எக்காலமும் மறவேனே இனி நான்
இறவேனே உத்தம மனித
னானேனே. 11
________+++++++++++________
(30-06-2015)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.