எனது சிந்தனையில் சிக்கிம் - 4
கஞ்சன்ஜங்கா (Kanchenjunga):
இந்தியாவின் மிகஉயர்ந்த சிகரங்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இந்த இமாலய மலையான கஞ்சன்ஜங்கா சிகரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 28169 அடி உயரத்தில் தனது மூச்சினை சுவாசித்துக்கொண்டிருக்கின்றது. இந்த மலை இந்தியா மற்றும் நேபாள் நாட்டினுள் அமைந்துள்ளது. 1852-ஆம் ஆண்டுவரை இதுதான் உலகிலேயே மிக உயரமான மலையாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றது. 1849-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவின்போதும் மற்றும் பல்வேறு கணக்கீட்டுக்குப் பின்பு எவரெஸ்ட் மலையே (29029 அடி உயரம்) மிக உயர்ந்த மலை என்று கண்டுபிடிக்கப்பட்டது. எவரெஸ்ட் சிகரமானது நேபாள் மற்றும் திபெத் நாட்டினுள் அமைந்துள்ளது. 1856-ஆம் ஆண்டில் கஞ்சன்ஜங்கா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரண்டாவது இடத்தில், பாகிஸ்தான் மற்றும் சீனா நாட்டில் அமைந்துள்ள காரகோரம் மலை (28251 அடி உயரம்) உள்ளது. நமது தமிழகத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமான ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8650 அடி உயரத்தில் உள்ளது.
கஞ்சன்ஜங்கா என்றால் 'பனிமலையின் ஐந்து புதையல்கள்' எனப்பொருள். கஞ்சன்ஜங்கா மலையில் மொத்தம் 12 சிகரங்கள் உள்ளன. இவைகள் சராசரியாக 23000 அடி உயரத்தினைக் கொண்டுள்ளன. இதில் முக்கியமான ஐந்து சிகரங்கள் தங்கம், வெள்ளி, இரத்தினம், தானியம் மற்றும் வேதநூல் ஆகிய ஐந்து முக்கிய பொருட்களைக் குறிக்கின்றன. இந்த முக்கியமான ஐந்து சிகரங்களில் மூன்று சிகரங்கள் இந்தியாவின் வடக்கு சிக்கிம் எல்லையினையும் நேபாளத்தின் தப்லேஜங் மாவட்டத்தையும் தொட்டபடி எழும்பியுள்ளன. மற்ற இரண்டு சிகரங்கள் முழுக்க நேபாள பகுதியில் அமைந்துள்ளன. இருப்பினும் கஞ்சன்ஜங்கா மலைப்பரப்பானது புடான், சீனா, இந்தியா மற்றும் நேபாள் போன்ற நாடுகளால் பகிர்ந்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இங்கு 14 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் 2329 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. இவற்றில் ரோடோடென்ரோன் மரவகைகள் மற்றும் ஆர்க்கிட் மலர்த்தாவரங்களும், அருகிவரும் உயிரினங்களான பனிச்சிருத்தை, ஏசியாட்டிக் கருப்புக்கரடி, ஹிமாலயன் மஸ்தூரி மான், சிவப்பு பாண்டா, ரத்தக்காக்கை மற்றும் செஸ்ட்னெட் பிரெஸ்ட்டட் பாட்ரிட்ஜ் (கெளதாரி) அகியனவும் வசிக்கின்றன. கஞ்சன் ஜங்கா மலையானது ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நிரங்களில் இம்மலை காட்சியளிப்பதாகச் சொல்லப்படுகின்றது. இம்மலையில் மலையேற்றம் செய்வதற்கான அனுமதி சுலபத்தில் கிடைப்பதில்லை. இம்மலையில் அனுமதிக்கப்பட்ட மலையேற்றப்பாதைகளில், கோயேச்சா லா டிரெக் மற்றும் கிரீன் லேக் பேசிக் பாதைகள் பிரசித்திப் பெற்றவை. இம்மலையானது, பல மலையேற்ற வீரர்களை பலிவாங்கியுள்ளது. பலிவாங்கி வருகின்றது. 'வெள்ளிப்பனி மலையின் மீது உலாவுவோம்' என்ற பாரதியின் பாடல் வரியினை உயிர்ப்பிக்க, இந்திய அரசு கஞ்சன்ஜன்கா மலையில் அழகாக தார் ரோடு போட்டுத்தர வேண்டும். மக்கள் வாழ வீடுகள் மற்றும் மின்சார வசத்ஹியினையும் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று நான் இந்நேரத்தில் எனது இந்திய அரசிடம் விண்ணப்பிக்கின்றேன், ஹி...ஹி...! 'அழகு என்றும் ஆபத்தானது'. அந்த அழகினை தூரத்திலிருந்து இரசிப்பதில் தவறில்லை. அந்த அழகினைத் தொடமுயல்வதுதான் ஆபத்து. இந்த எனது தத்துவம் மலைகளுக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 'இந்தியாவின் மிக உயரமான கஞ்சன்ஜங்கா சிகரத்தை, இனி வானில் பறந்தபடி பார்த்து இரசிக்கலாம். இதற்கான ஏற்பாட்டை சிக்கிம் அரசு செய்துள்ளது. சிக்கிம்மின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து, ஹெலிகாப்டர் சேவையை துவங்கியுள்ளது. இதன்மூலம், 15 நிமிட நேரத்திற்கு, கஞ்சன்ஜங்கா அழகினை வானில் பறந்தபடியே சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிக்கலாம்.' இது 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்தித்தாளில் வந்த தகவல். ஆனால் நாங்கள் சென்றபோது அப்படி எந்த வசதியும் கேங்டாக்கில் இல்லை.
கேங்டாக் (Gangtok'):
கேங்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 5480 அடி உயரத்தில், இமாலயத்தின் கிழக்குப்பகுதி மலைகளான ஷிவாலிக் மலைத்தொடர்களில் இந்நகரம் வீற்றிருக்கின்றது. பெளத்த மடாலயங்களின் நிசப்த அழகினை நாம் இந்நகரின் கண்டு களிக்கலாம். பெளத்தர்களுக்கு இந்நகரம் யாத்ரிக ஸ்தலாக விளங்குகின்றது. 1840-ஆம் ஆண்டு கேங்டாக்கில் கட்டப்பட்ட (1910-ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது) என்ச்சே புத்தாலயம் (Enchey Monastery) பெளத்தர்களுக்கு மிகவும் முக்கியமான மடாலயமாகும். கேங்டாக் மலைநகரத்தின் ஒரு சரிவில் கவர்னர் மாளிகையும் மறுபுற சரிவில் புராதன அரண்மனையும் அமைந்துள்ளன. ரோரோ சு மற்றும் ராணிகோலா என்னும் ஓடைகள் முறையே கிழக்கும் மேற்குமாக கேங்டாக் நகரத்தை சூழ்ந்துள்ளன. நகரத்திற்கு தெற்கே ஓடும் ராணிபால் ஆற்றில் இந்த இரு ஓடைகளும் கலக்கின்றன. கேங்டாக் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் இதர மலைச்சரிவுகள் அடிக்கடி நிலச்சரிவை சந்திக்கின்றன. பிரிகாம்பிரியன் எனப்படும் தகட்டு அடுக்குகளை கொண்ட மெல்லியப் பாறைவகைகளால் இம்மலைகள் உருவாகியிருப்பதே இதற்கு காரணம். சிக்கிம்மில் அமைந்துள்ள, உலகிலேயே மூன்றாவது உயரமான மலைச்சிகரமான கஞ்சன்ஜங்கா சிகரத்தை கேங்டாக் நகரத்தின் மேற்குப்புறத்திலிருந்து பார்த்து இரசிக்கலாம்.
மோமோ என்னும், இப்பகுதி மக்களின் முக்கியமான சிற்றுண்டியினை நாம் இந்த கேங்டாக்கில் சுவைத்து மகிழலாம். இது மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி அல்லது காய்கறிகள் போன்றவைகளை, மைதாமாவினை தட்டையாக உருட்டி அதில் இவைகளை வைத்து சுருட்டி (நம்மூர் கொழுக்கட்டை போன்ற வடிவில்) பாத்திரத்தில் வைத்து நீராவியால் வேகவைத்து எடுத்துத் தருகின்றனர். நம்மைப்போன்ற சைவ உணவாளர்கள் காய்கறிகளில் மட்டுமே செய்யக்கூடிய கடைகளைத் தேடிகண்டுபிடித்து இந்த மோமோவை உண்டு மகிழலாம். இதைப்போன்று வா-வாய் என்னும் நூடுல்ஸ் வகை சிற்றுண்டியும் இங்கு பிரபலமாக உள்ளது. மேலும் துப்கா, செளமேய்ன், தந்துக், பக்து, வாண்டன், கியாதுக் போன்ற இதர நூடுல்ஸ் உணவுகளும் உண்டு. இந்த நூடுல்ஸ் வகைகளெல்லாம் சைவமா? அசைவமா? எனத்தெரியவில்லை. சைவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடைக்காரர்களிடம் கேட்டால், அசைவ உணவினையே சைவம் என்று விற்றுவிடுவார்கள். எங்களுக்கும் அந்த அனுபவம் நேர்ந்தது. ஆனால் தப்பிவிட்டோம். இந்நகரிலுள்ள எம்.ஜி.மார்க் பகுதியில் உள்ள டைட்டானிக் பூங்கா வளாகத்தில், டிசம்பர் மாதத்தில் உணவுத்திருவிழாவும் நடைபெறும். அவ்வமையம் சிக்கிம் மாநிலத்தின் எல்லா பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம் மாநிலத்தின் தலைநகராக கேங்டாக் விளங்குவதால், இந்நகரம் பல்வேறு சுவாரசியமான சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் நாங்கள் பார்த்த சுற்றுலா தலங்களைப்பற்றி இனி பார்ப்போம் வாருங்கள்.
(தொடரும் - 4)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.