Wednesday, June 17, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 12

எனது சிந்தனையில் சிக்கிம் - 12



டார்ஜிலிங் (Darjeeling):

மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மாவட்டமான இந்த மலை நகரம் கடல் மட்டத்திலிருந்து 7100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலையிலிருந்து கஞ்சன்ஜங்கா மட்டுமின்றி எவெரெஸ்ட் சிகரத்தையும் நாம் காணலாம். இது தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜிலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பழங்காலத்து புகைவண்டி இங்கு இயங்கிவருகின்றது. சிலிகுரியிலிருந்து டார்ஜிலிங் வரையிலான 80 கிலோமீட்டர் தூர்த்திற்கு இந்த மலை இரயில் என்கின்ற பொம்மை இரயில் இயங்குகின்றது. (தற்போது சிலிகுலியிலிருந்து Kurseong என்கின்ற இடம்வரைதான் இந்த பொம்மை இரயில் இயங்குவதாகச் சொல்கின்றனர்.) டார்ஜிலிங் நகரில் பெரும்பாலான பள்ளிகள், பிரிட்டிஷ் முறைக் கல்வியைப் பின்பற்றுவதால், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து படிக்கின்றனர்.

1980-ஆம் ஆண்டிலிருந்து கூர்க்காலேண்ட் என்னும் தனி மாநிலக் கோரிக்கையை அவ்வினத்தினர் கோரிக்கையாக முன்வைத்துப் போராடினர். இங்குள்ள பெரும்பாலானக் கடைகளில் உள்ள முகவரியில் டார்ஜிலிங் என்பதற்குப் பதிலாக கூர்க்காலேண்ட் என்றே குறிப்பிட்டுள்ளனர். 'டார்ஜிலிங் கூர்க்கா மலைக்குழு' (DGHC) என்ற அமைப்பை உருவாக்கி, அவ்வமைப்பிற்கு சில அரசியல் அதிகாரங்களை கொடுத்ததன் மூலம் இந்த பிரிவினைவாதிகள் சற்று தனிந்துள்ளனர்.

இந்த மலை நகரமும் அடிக்கடி நில சரிவிற்கும், நில நடுக்கத்திற்கும் ஆட்படும் இடமாகவே உள்ளது. 1899-ஆம் ஆண்டு இவ்விடம் மிகப்பெரிய நிலச்சரிவால் ஆட்டம் கண்டது. இதனை 'டார்ஜிலிங் அழிவுகள்' என்கின்றார்கள். எனினும் இம்மலையினை மலைகளின் ராணி என்று அழைக்கின்றனர். (வாழ்க்கையில் அழகைக்காட்டி அழிவை ஏற்படுத்துவதுதான் ராணிகளின் வேலை என்பதால் எல்லா அழகான மலைகளுக்கும் ராணி என்றே பெயர்வைத்துள்ளனர். ஒரு மலைக்கேனும் ராஜா என்றப் பெயர் இல்லை.)

இங்கு புகழ்பெற்ற உணவாக மோமோ, சுர்பீ (யாக் மாடுகளின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் கடினமான பாலாடைக்கட்டி) துக்பா என்றழைக்கப்படும் நூடுல்ஸ், உருளைக்கிழங்கில் தயாரிக்கப்படும் ஆலு டம் போன்ற உணவுகள் பிரபலமாகும்.

டார்ஜிலிங் நகரில் ஐந்துவகையானக் காலநிலை நிலவுகின்றது. இளவேனில் காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், குளிர் காலம், மழைக்காலம். மழைக்காலமானது ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழும். இக்காலங்களில் இங்கு அடிக்கடி மலைச்சரிவுகள் ஏற்பட்டு இந்நகரமே துண்டிக்கப்பட்டுவிடும். எனவே நாம் இந்த மழைக்காலத்தைத் தவிர்த்து மற்ற மாதங்களில் சுற்றுலாச் செல்லலாம்.

ஏற்றுமதி தரம் கொண்ட ஆர்க்கிட் மலர்ச்செடிகளுக்கும் டார்ஜிலிங் பிரசித்தி பெற்றது. எனவே நாம் நமது அன்புக்குரிய துணைவிகளுக்கு வண்ணமயமான புத்தம்புதிய மலர்களை பரிசளித்து மகிழ்ச்சியூட்டலாம். இங்குள்ள மால் ரோட் என்னும் சாலையானது நாம் விரும்பக்கூடிய எல்லா சாப்பிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. பேரம் பேசும் திறமை மிக்கவர்கள் அதை இங்கு நிரூபித்துக்காட்டலாம்.

ஆங்கிலேயர் காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதால், இந்த நகரம் முழுவதும் ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களுடன் தோற்றமளிக்கின்றது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகைகள் மற்றும் கட்டடங்கள் யாவும் அப்படியே மெருகுக் குலையாமல் வீற்றிருக்கின்றன.

21. Bengal Natrual History Museum:

காலை 10.20 மணியளவில் நாங்கள் இந்த பெங்கால் இயற்கை வரலாற்று கண்காட்சி வளாகத்துக்கு வந்தோம். 1903-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் பழையப்பெயர் 'Darjeeling Natural History Museum' என்பதாகும். மேற்கு வங்க கவர்னரின் ஆலோசனைப்படி, இங்குவரும் சுற்றுலாப்பயணிகள், டார்ஜிலிங் மலையில் உள்ள வனவிலங்குகள் பற்றியும் ஜல்பைங்குரி, சிக்கிம், திபெத், பூடான், நேபாள் பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் பற்றியும் அறிந்துக்கொள்ளும் நோக்குடன் இது துவங்கப்பட்டது. 4300 வகைகளுக்கும் மேற்பட்ட வன விலங்குகளின் மாதிரிகளை இங்குக் காட்சிக்கு வைத்துள்ளனர். இதில் 210-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் என்னை மிகவும் கவர்ந்தது. இதனைப் பார்த்துவிட்டு 10.35 மணியளவில் அடுத்தவிடம் நோக்கிப் பயணித்தோம். மழை சிறு தூரல்களாக தூரிக்கொண்டே இருந்தது.   

22. Himalayan Mountaineering Institute (Museum):
                     And
   The Padmaja Naidu Zoological Park:

எங்களது வாகனம் 10.50 மணியளவில் இந்த ஹிமாலயன் மலைஏறும் பயிற்சி நிலையத்திற்கு வந்து நின்றது. இதனுள்ளே செல்ல ஒருவருக்கு 40 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தவேண்டும். டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தோம். இதே வளாகத்தில் பத்மஜா நாயுடு உயிரியல் பூங்காவும் உள்ளது. ஹிமாலயன் மலைஏறும் பயிற்சி நிலையத்தை நமது முதல் பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் 1954-ஆம் ஆண்டு, நவம்பர் 04-ஆம் தேதி திறந்துவைத்தார். இதன் (HMI) முதல் கள இயக்குனர் Tenzing Norgay ஆவார். இந்த HMI தனது பயிற்சி நிறுவனத்துடன், மலையேற்றம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியகமும் நடத்துகின்றது. இங்கு மலையேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கருவிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஹிமாலயன் ஹில்சின் மாதிரி வடிவங்களையும் வைத்து, அது இருக்குமிடம், அதன் உயரங்கள் ஆகியவற்றினை விளக்கியுள்ளனர். இந்தியாவில் சில குறிப்பிட்ட இடத்தைத்தவிர வேறு எங்கும் பார்க்கமுடியாத அரிய காட்சியகம் இதுவாகும். இதனைப்பார்த்துவிட்டு ஓரிடத்தில் வந்து நின்றோம். எங்களைப்போன்று ஒரு நாலைந்து பேர் எங்கள் அருகில் வந்தனர். அதில் ஒருவர், என்னைப்பார்த்து, தம்பிக்கு எந்த ஊரு? என்றார். சென்னையிலிருந்து வருகின்றேன் என்றேன். உடனே அவர், நாங்கள் மும்பையிலிருந்து வருகின்றோம், உங்களுக்கு குளிரவில்லையா? வெறும் சட்டையுடன் இருக்கின்றீர்களே! என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நான் உடனே, எனது இல்லாமையை அவரிடம் சொல்லாமல், இது தாங்கக்கூடிய ஒரு நார்மல் குளிர்தான் என்றுச் சொல்லி சமாளித்தேன். இப்படி சொன்ன ஒரே நபர் நீங்கள்தான் என்று நக்கலாக, இல்லை... இல்லை... பாராட்டிவிட்டுச் சென்றார். உண்மையில் இக்குளிரை நாம் தாங்கிக்கொண்டு அனுபவிக்கும் அளவில்தான் உள்ளது. எனது உள்ளங்கை மற்றும் கைவிரல்கள் மட்டும் லேசாக நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவ்வளவுதான். மற்றபடி எந்தப்பிரச்சனையும் இல்லை. பேஸ்மட்டம் ஸ்ட்ராங், பில்டிங்தான் கொஞ்சம் வீக். மழையும் தற்போது ஓய்ந்திருந்தது.

இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் 'சரோஜினி நாயுடு'. இவரது பிறந்த நாளை (13-02-1879, ஹைதராபாத்தில் பிறந்தார்) இந்தியாவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் நைட்டிங் கேல் எனவும் அழைக்கப்படுகின்றார். இவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அதில் பத்மஜா என்ற மகள் மேற்கு வங்கத்தில் ஆளுனராக இருந்தார். தற்போது இவருடைய பெயரிலேயே 'பதமஜா நாயுடு உயிரியல் பூங்கா' என்று மேற்குவங்க அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. புலி, ஓனாய், சிறுத்தை, காட்டுப்பூனை, சிவப்பு பாண்டா, பறவை இனங்கள் போன்றவைகளை நாம் இந்தப் பூங்காவில் காணலாம். இந்த இரண்டு காட்சியகங்களையும் பார்த்துவிட்டு மதியம் 12.55 மணியளவில் அவ்வளாகத்திவிட்டு வெளியில் வந்தோம். இவ்வளாகத்தை ஒட்டி பாதையானது கீழ்நோக்கி வளைந்துச் செல்கின்றது. அப்பாதை ஓரங்களில் நடைபாதைக் கடைகள் இருந்தன. அதனைப் பார்த்துக்கொண்டே மூன்று வளைவுகளை கடந்து கீழே இறங்கிச் சென்றோம். பிறகு அவ்விடத்திற்கு காரை வரச்சொல்லி, அங்கிருந்து அடுத்த இடம் நோக்கிச் சென்றோம்.






23. Darjeeling Rangeet Vally Ropeway:

அடுத்த 15 நிமிடத்தில் ரோப்வே செல்வதற்காக அந்நிலையத்தில் வந்திறங்கினோம். கார் நிற்குமிடத்திலிருந்து ஒரு சிறிய படிக்கெட்வழியே மேலே ஏறிச் சென்றோம். அங்கிருந்து எதிரே தெரிந்த மலைகளின் காட்சி மிகஅற்புதமாக இருந்தது. 'எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்ற பாரதியின் வரிகள், எனக்கு அக்காட்சிகளை பார்க்கும்போது நினைவுக்கு வந்தன. அப்படியொரு ஆனந்தத்தில் மிதந்தேன். எனது புகைப்படக்கருவி சிறிதுகூட ஓயாமல் சுற்றி சுற்றி க்ளிக் செய்துக்கொண்டிருந்தது. பச்சை நிறத்தில் அடர்ந்தக் காடுகள் தேயிலைத்தோட்டங்கள் ஆகியவைக் கலந்த மலைகளும், அம்மலைக்கும் மேலே வெண்ணிறப் பனிகள் மூடிய மலைத்தொடர்களும், இவைகளுக்கிடையில் தவழும் மேகக்கூட்டங்களும், அதனையும் தாண்டி நீல நிறத்தில் தெரிந்த வானத்தின் காட்சியும் நம்மை மெய்மறக்கச்செய்கின்றன. இந்த ரோப்வே நிலையத்திற்கு எதிரில் 'செயின்ட் ஜோசப் பள்ளி' வளாகக்கட்டடமும் பார்க்க அழகாக இருந்தது.

இப்படிப்பட்ட பள்ளத்தாக்குகளுக்கு மேலே இரண்டரை கிலோமீட்டர் தூரம் ரோப்வே அமைத்துள்ளனர். சென்றுவர மொத்தம் ஐந்து கிலோமீட்டர் பயணதூரத்திற்கு நம்மிடம் ஒருவருக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். மூன்றிலிருந்து எட்டு வயதுவரை அரை டிக்கெட். ஒரு பெட்டியில் ஆறு நபர்கள் மட்டுமே அமர்ந்துச் செல்ல முடியும். இப்பெட்டியில் நின்றுக்கொண்டு பயணிக்கக்கூடாது. ஒவ்வொரு மாதமும் 19-ஆம் தேதி, பராமரிப்புப் பணிக்காக இந்நிலையத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு டார்ஜிலிங் பதிவுப்பெற்ற வாடகை வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அரசு வாகனங்கள் மற்றும் இராணுவ வாகனங்களுக்கும் சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க அனுமதி இல்லை. (நம்மூர் சுற்றுலாத் தலங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் அரசு வாகனங்களை நாம் கட்டாயம் பார்க்கலாம். இவர்களுக்கு பணி நேரத்தில் இங்கென்ன வேலை? என நாம் கேட்கமாட்டோம். நம்மூர் ஊடகங்களும் கேட்காது.)

இந்த ரோப்வே சிங்கமரி (Singamari) என்ற 7000 அடி உயரத்திலிருந்து கீழ் நோக்கிச் சென்று 800 அடி உயரத்திலுள்ள சிங்கலா பஜார் (Singla Bazar) டுக்வெர் (Tukver) நிறுத்தத்தில் சென்று மீண்டும் 7000 அடியை நோக்கித் திரும்புகின்றது. இந்த ரோப்வே 1968-ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன் முதலாக துவங்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் இது தேயிலைத்தோட்டத் தொழிலாலர்களுக்கு உணவு எடுத்துச் செல்ல ஒரே ஒரு கேபினுடன் ஆரம்பிக்கப்பட்டது. அங்குக்காணப்படும் அத்தனை மலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க சாலை மார்க்கத்தைவிட இந்த ரோப்வே மிகவும் வசதியாக இருந்திருக்கின்றது. 1988-ஆம் ஆண்டு இதனைப் பழுதுபார்த்து சுற்றுலாவிற்காக மேம்படுத்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டு ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டு நான்கு சுற்றுலாப் பயணிகள் இறந்ததையடுத்து, இந்த ரோப்வே செயல்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு மீண்டும் 2012-ஆம் ஆண்டு, பிப்ரவரி 02-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது இங்கு 16 கேபின்களுடன் சுற்றுலா நோக்கத்திற்காக மட்டும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாங்கள் ஆறு பேரும் ஒரே கேபினில் அமர்ந்து அந்தப் பள்ளத்தாக்கின் மீது பறந்துச் சென்றோம். சிறிது நேரம் அந்தக்காட்சிகளை எல்லாம் வீடியோ எடுத்தேன். சிறிது நேரம் ஸ்டில் எடுத்தேன். சிறிது நேரம் பார்வையால் ஸ்கேன் செய்து மூலையில் பதியவைத்துக்கொண்டேன். இப்படியாக 45 நிமிடத்தில் சென்று திரும்பி வந்துவிட்டோம். ஆனால் 7000 அடி உயரத்திலிருந்து 800 அடிக்கு கீழ்நோக்கிச் சென்று வந்ததை எங்களால் உணரமுடியவில்லை. பிறகு 03.20 மணியளவில் காரிலேறி அடுத்த இடம் நோக்கிச் சென்றோம்.


(தொடரும் - 12)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.