Saturday, June 13, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 8

எனது சிந்தனையில் சிக்கிம் - 8




11. Tsomgo / Changu Lake:



அடுத்த 20 நிமிடத்தில் நாங்கள் ஏற்கனவே வரும்போது நிற்காமல் கடந்து வந்த சங்கு ஏரிக்கருகில் வந்து நின்றோம். Tsomgo என்றால் நீரின் ஆதாரம் எனப்பொருள். (Source of the Water) இது 12400 அடி உயரத்தில் உள்ளது. முட்டை வடிவில் உள்ள இந்த ஏரி, ஒரு கிலோ மீட்டர் நீளமும் 50 அடிவரை ஆழமும் உள்ளது. சிக்கிம்மில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் இவ்வேரியே தலைமை அல்லது முதன்மை ஏரியாக உள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்த ஏரி முழுவதும் பனியால் உறைந்துவிடும். நாங்கள் ஏப்ரல் மாதம் சென்றதால் இவ்வேரியில் உள்ள நீர் தனது  நிஜ முகத்தையே எங்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தது. நாங்கள் இங்கே இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எங்களைப் போன்ற சுற்றுலா பயணிகளில் சிலபேர் யாக் எருமை மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த எருமைகள் நகரவே மறுத்தன. எருமை என்றாலே அப்படித்தானே. அதன் உரிமையாளர்கள் அதன் கொம்பைப்பிடித்து இழுத்துச்சென்றனர். நம்மூர் எருமை மாட்டைவிட அழகாக இருந்தது. அதன் உடம்பெல்லாம் இயற்கையாகவே கம்பளியால் மூடப்பட்டிருந்தது. ஏரியின் மறுபுறம் செல்வதற்காகப் பாதைபோடப்பட்டிருந்தது. அரை கிலோமீட்டர் தூரம் அதன் வழியே சென்றால் ஏரியின் மறுபுறம் உள்ள மலையடிவாரத்திற்குச் சென்றுவிடலாம். அங்கு நிரம்பியுள்ள பனித்திவலைகளில் மோதி ஜாலியாக விளையாடி மகிழலாம். சுற்றுலாக்கூட்டமெல்லாம் அங்குதான் இருந்தது. நாங்கள் அவ்விடம் செல்லவில்லை. தூரத்திலிருந்து அவ்வழகை பார்த்துவிட்டு உடனே கிளம்பினோம்.


மாலை 04.15 மணிக்கெல்லாம் கேங்டாக்கில் நாங்கள் தங்கியுள்ள இடத்திற்கு கார் வந்து நின்றுவிட்டது. வழியில் நல்ல சைவ உணவுவிடுதியில் காரை நிறுத்தச்சொன்னோம். ஆனால் கார் ஓட்டுனர் நாங்கள் சொன்னதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. சைவ ஓட்டல் எல்லாம் இங்குக் கிடையாது என்று பொய்ச்சொல்லி, காரை எங்கும் நிறுத்தாமல் செலுத்தினார். கார் செல்லும் வழியில் நாங்கள் ஒரு சைவ ஓட்டலைப் பார்த்தோம். எனினும் கார் ஓட்டுனர் ஒத்துழைப்பு அளிக்காததால் நாங்கள் அமைதியானோம். இன்றைக்கும் மதிய சாப்பாடு கோவிந்தா... கோவிந்தா.... ஓட்டுனர் நாளை காலை 09.00 மணிக்கு வருவதாகக்கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அங்கு அருகிலிருந்த சிற்றுண்டி விடுதிக்குச் சென்று தேனீர் அருந்திவிட்டு சமுசா வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்களது அறைக்கு வந்து ஓய்வெடுத்தோம். மாலை 06.00 மணியளவில் கல்லூரியிலிருந்து பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களும் வந்து எங்களுடன் கலந்துக்கொண்டார். இங்கிருந்து பக்கத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள எம்.ஜி.மார்க் சென்று வரலாம் எனப் பேராசிரியர் திட்டமிட்டார். எனவே நாங்களும் அவருடன் கிளம்பினோம். மழை வருவதுபோல் இருந்ததால் நாங்களனைவரும் எங்களுடன் எடுத்துவந்திருந்த குடைகளை ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டோம்.

12. மகாத்மா காந்தி வீதி (MG Marg - Gangtok):



கேங்டாக் நகரத்தின் மத்தியில் இவ்வீதி உள்ளது. இந்த வீதியினை, திறந்தவெளி மால் ஆகவும், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் உருவாக்கியிருக்கின்றார்கள். சாலைகளின் இரு புறமும் பலதரப்பட்ட உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளன. பார்வையாளர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க சாலைகளின் இருபுறமும் நிரந்தர நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலைகளும் இங்கே இரண்டு இடத்தில் காணப்படுகின்றன. டிசம்பர் மாதம் இந்த வீதியில்தான் கேங்டாக்கின் உணவு மற்றும் கலாச்சார விழா நடைபெறும். இவ்வீதியில் வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ள இந்த வீதி முழுதும் நடந்துதான் செல்லவேண்டும். பொதுவாக கேங்டாக் மற்றும் சிக்கிம் முழுவதுமே வீதியில் குப்பைகளே பார்க்கமுடியாது. முக்கியமாக இந்த மகாத்மா காந்தி வீதியில் குப்பைகளை வீதியில் பார்க்கவே முடியாது. அவ்வளவு சுத்தமாக இருக்கும். இவ்வீதியில் எச்சில் துப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வீதியில் நாம் நுழையும்போதே "Welcome to M.G.Marg, Spit and Litter Free Zone" என்ற வரவேற்புப் பலகையினை நாம் பார்க்கலாம்.

பசுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இவ்வீதியின் இருபுறமும் உள்ள கடைகள் மற்றும் கட்டங்களுக்கு பச்சை நிறத்தில் மட்டுமே வண்ணம் தீட்டவேண்டும் என சிக்கிம் அரசு கட்டளைப் பிறப்பித்திருப்பதால், இவ்வீதியிலுள்ள கட்டடங்கள் எல்லாம் பச்சை நிறத்திலே காட்சியளிக்கின்றன. இவ்வீதியில் ஒற்றுமையின் சின்னம் (Statue of Unity) வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை, அன்பு மற்றும் அமைதியினைக் குறிக்கின்றது. வீதியின் நடுவில் மகாத்மா காந்தி சிலையும் உள்ளது. இவ்வீதியின் நடுவில் விக்டோரியன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டில் இவ்விளக்கு எரியும்போது, இவ்விடம் ஒரு மந்திர லோகத்தில் இருப்பதைப்போன்று நம்மை உணரவைக்கும்.

நாங்கள் எல்லோரும் கிளம்பி லோக்கல் டாக்சியில் எம்.ஜி.மார்க் சென்றடைந்தோம். அவ்வமயம் அங்கு Sikkim Build Expo - 2015 விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவ்விழாவிற்கு நேபாள் நாட்டிலிருந்து ஒரு பிரபல பாடகர் வந்து அங்குள்ள விழா மேடையில் பாடுகின்றார் எனக்கேள்விப்பட்டோம். ஆனால் நாங்கள் செல்லும்போது அம்மேடையில் பாடல்களுடன் கூடிய நடன நிகழ்ச்சி அரங்கேற்றம் கண்டிருந்தது. மக்கள் கூட்டம் அம்மேடைக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்தது. இவ்விழா மேடை அவ்வீதியின் தொடக்கத்திலேயே போடப்பட்டிருந்ததால், அக்கூட்டத்தில் நுழைந்து உள்ளே சென்றோம். அங்கிருந்த சில கடைகளுக்குள்ளே சென்று பார்த்தோம். பிறகு காந்தி சிலைக்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அப்படியே சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்துச் சென்று வந்தோம். இடையில் மழைவேறு பெய்யத்துவங்கி விட்டது. குடை பிடித்துக்கொண்டே சுற்றினோம். பின்னர் ஒரு சைவ ஓட்டலுக்குச் சென்று சிற்றுண்டி (இட்லி, பூரி, தோசை) சாப்பிட்டுவிட்டு அப்படியே கிளம்பி எங்களது அறைக்குத் திரும்பினோம். திரும்பிச் செல்லும்போது நல்ல மழையில் மாட்டிக்கொண்டோம். லோக்கல் டாக்சி பிடிக்க மிகவும் சிரமப்பட்டு, ஒருவழியாக எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம்.

இன்று இரவோடு இவ்விடம் கடைசி. நாளை சிக்கிம்மில் உள்ள வெவ்வேறு இடங்களைப் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு அப்படியே மேற்கு வங்கம் சார்ந்த டார்ஜிலிங் செல்லவேண்டும். எனவே இன்று இரவே நாங்கள் எங்களது பொருட்களை எல்லாம் எங்களது பைகளில் எடுத்து வைத்துவிட்டோம். நாளை எழுந்து குளித்துவிட்டு கிளம்பவேண்டியதுதான். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களும் நாளையிலிருந்து எங்களோடு சேர்ந்துக்கொள்கின்றார். சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு உறங்கினோம்.

13. திரு கஞ்சனீஸ்வரர் கோவில் (Sri Kancheneshwar Temple):


இன்று 2015, ஏப்ரல் 11-ஆம் தேதி, சனிக்கிழமை. {எங்களது பயணத்தின் ஆறாவது நாள்} காலை 09.00 மணிக்கெல்லாம் பெட்டிப் படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு நாங்கள் ஆறு பேரும் கிளம்பிவிட்டோம். சரியான நேரத்தில் எங்களது காரும் வந்து சேர்ந்தது. எங்களது பெட்டிப் படுக்கையெல்லாம் ஒன்றுவிடாமல் காரில் ஏற்றியாகிவிட்டது. நாங்கள் தங்கியிருந்த அறைக்குக் கட்டணம் செலுத்திவிட்டு கிளம்பினோம். அரைமணி நேரப்பயணம் கடந்து 09.30 மணிக்கு திரு.கஞ்சனீஸ்வரர் கோவில் வந்தடைந்தோம். இந்தக் கோவில், Pakyong Road, Nandok, Ranipool, East Sikkim - என்ற முகவரியில் உள்ளது. நாங்கள் இதுவரை திபெத்தியர் மற்றும் நேபாளி கோவில்களை மட்டுமே பார்த்துவந்தோம். (நாங்கள் இதுவரை பார்த்த அனைத்து புத்தமதக் கோவில்களும் வெளிநாட்டவர்களால் இந்தியாவில் கட்டப்பட்டு வழிபாட்டில் இருக்கும் கோவில்களாகும். ஒரு இந்தியரால் தோற்றுவிக்கப்பட்டது புத்த மதம். ஆனால் இதுவரை நாங்கள் பார்த்த புத்தக்கோவில்களில் இந்தியரால் கட்டப்பட்ட புத்தாலயம் என்று எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

சிக்கிம்மில் ஒரு தமிழகக்கோவிலும் உள்ளதைக் கண்டு உள்ளபடியே மகிழ்ந்தேன். எனக்கு இந்தக் கோவிலில் பிடித்தது என்னவென்றால், இந்தக்கோவிலின் பெயர்ப்பலகையில் இருந்த 'ஓம்' என்ற தமிழ் எழுத்துதான். இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் தமிழ் எழுத்தைப் பார்ப்பதுக் கடினம். இப்பெயர்ப் பலகையில் 'ஓம்' என்பது மட்டும்தான் தமிழ். மற்றவைகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதியிருந்தார்கள். இக்கோவிலை காஞ்சி மடம் நிர்வகிக்கின்றது. காஞ்சிப் பெரியோர்களின் மூன்று படங்களும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரிய மலைச்சிகரம் இம்மாநிலத்தில் இருப்பதால் அம்மலைச்சிகரத்தின் பெயரையே இங்குள்ள லிங்கத்திற்கு வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டு கோவிலைப்போன்றே நவகிரகங்கள், அரச மரத்தடியில் பாம்புக்கல் வழிபாடும் உண்டு. மேலும் இவ்வாளகத்தில் மிக உயரிய ஹனுமன் சிலையும் உண்டு. கோவிலின் பின்னால் உருத்திராட்ச மரமும் வளர்க்கின்றனர். நிறையப் பூச்செடியும் பூத்துக்குலுங்குகின்றது. அதில் ஒரு ரோஜாப்பூவைப் பறித்து திருமதி..சுசீலா அவர்கள் தனது தலையில் வைத்துக்கொண்டார்கள். அதுமட்டுமன்றி அப்பூவின் அழகில் மயங்கிய அவர்கள், அப்பூவோடு இருக்கும் தன்னை ஒரு புகைப்படமும் எடுக்கச்சொன்னார்கள். மலருக்கு மயங்காத மங்கைதான் மாநிலத்தில் உண்டோ?, காசா? பணமா? உடனே ஒரு க்ளிக் எடுத்துவிட்டேன். இக்கோவிலில் நேபாள சிறுவர்கள் சிலர் இங்கேயே தங்கி வேதம் படிக்கின்றனர். புத்தாலயங்களில் உள்ள சிறுவர்கள் போன்று இச்சிறுவர்கள் துறவிகள் கிடையாது.

பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் அடிக்கடி இக்கோவிலுக்கு வருவார்களாம். அதனால் நாங்கள் கேட்காமலேயே இக்கோவில் பூசகர், எங்களை கருவறைக்கருகில் அழைத்துச் சென்று தேங்காய் உடைத்து மந்திரம் ஓதி ஓர் சூப்பர் அர்ச்சனை செய்து முடித்தார். என்னதான் தமிழ்க் கோவிலானாலும், கோவில் பூசகர் தமிழ்க் கடவுளிடம் என்னச் சொல்லி ஓதினார் என்பது எங்களுக்குப் புரியவில்லை. நேபாள மற்றும் திபெத் கோவிலில் என்ன மந்திரம் சொல்கின்றார்கள் என்பது எங்களுக்கு எப்படி புரியவில்லையோ அதே போன்றுதான் இந்தத் தமிழ்க்கோவிலிலும் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்நிலமை தமிழ்நாட்டிலும் நூறு சதவிகிதம் உண்டு. எங்கள் கோவில் கருவறைகளில் என்று செந்தமிழ், முத்தமிழ் ஒலிக்குமோ தெரியவில்லை. தமிழ் மந்திரம் மட்டுமே ஒலிக்கும் கருவறைக்கோவில்களை நாம் இந்தியாவில் மட்டுமல்ல இவ்வுலகில் எங்குமே பார்க்கமுடியாது. இவ்வுலகில் தமிழ் செய்த பாவம்தான் என்ன? வேறொன்றுமில்லை, நம்மவர்களை பெற்றெடுத்ததுதான் தமிழ் செய்தப் பாவம். ஏழுகோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாம். நமது முன்னோர்களால் கட்டப்பட்ட லட்சக்கணக்கான கோவில்களில் என்ன நடந்துக்கொண்டிருக்கின்றது? நமது தலைமுறையில் நாம் கட்டியக் கோவில்களில் கூட நாம், தமிழை மட்டுமே கருவறையில் ஓதக்கூடிய வகையில் உருவாக்கவில்லையே, ஏன்? மானங்கெட்டவர்களே, என்று நான் கேட்கவில்லை, நம்மைப்பார்த்து அயலார்கள் கேட்டால், நாம் என்ன பதில் சொல்லமுடியும்? (வள்ளலார் மட்டுமே, தாம் உருவாக்கிய வழிபாட்டுத்தலத்திலும், சங்கங்களிலும் தமிழை மட்டுமே ஓதக்கூடிய வகையில் உருவாக்கம் செய்துள்ளார்.) தமிழ் வாழ்க! தமிழன் வாழ்க!.. வாழ்க!... இது வெட்டிப்பயலின் வெற்றுக்கூச்சல்! இந்த சலசலப்பிற்கெல்லாம் பனங்காட்டு நரிகள் அஞ்சிவிடாது தம்பி!

அர்ச்சனை முடிந்து, புகைப்படங்களெல்லாம் எடுத்துக்கொண்டு அடுத்த இடத்திற்கு கிளம்புவதற்குள் மணி 10.15 ஆகிவிட்டது. தற்போது எங்களது வாகனம் நம்சி சித்தேஷ்வரா தாம் நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

14. Temi Organic Tea Factory:


இரண்டு மணிநேரப் பயணத்திற்கு பின்பு எங்கள் வாகனம் 12.25 மணியளவில் ஏதோ ஒரு டீ எஸ்டேட்டை கடக்க முயன்றது. அந்த டீ எஸ்டேட் அழகில் மயங்கிய நாங்கள், உடனே ஓட்டுனரிடம் காரை நிறுத்தச் சொன்னோம். காரிலிருந்து அனைவரும் இறங்கி அவ்வழகை இரசித்துவிட்டு, சில இடங்களில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். அந்த டீ தொழிற்சாலையின் பெயர் 'Temi Organic Tea Factory' என்று அங்குள்ள நுழைவு வாயிலில் எழுதப்பட்டிருந்தது. இந்தத் தொழிற்சாலையை ஏற்று நடத்துபவர் யாரோ ஒரு சென்னை வாசி என்று அங்கு பணிபுரியும் ஒருவர் என்னிடம் கூறினார். மேலும் இந்த தொழிற்சாலைக்குள் இலவசமாகச் சென்று பார்க்கலாம். பார்வையாளர்களுக்கு பரிசுப்பொருள்களாக இங்கு உற்பத்தியாகும் டீத்தூள் பாக்கெட்டும் இலவசமாகக் கொடுப்பார்கள், சென்று பாருங்கள் என்று அவர் என்னிடம் ஆசைவார்த்தைகளை கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இலவசம் என்றாலே, அது தமிழர்களைப் பிடித்த பித்தமாச்சே! இலவசத்தில்தானே நமது வெட்கங்கெட்ட அரசியலே நடந்துக்கொண்டிருக்கின்றது. உடனே நான் சென்று பார்க்கலாமா? என்று கேட்டேன். நேரமாகிவிடும், இலக்கை நோக்கிச் செல்லும்போது இலவசமா...? ம்...கிளம்புங்கள் என்றார்கள். பின்னர் இங்கு சாலையோரத்தில் இந்த தொழிற்சாலையே வைத்திருக்கும் டீத்தூள் விற்கும் கடைக்குச் சென்றோம். அங்கு எதைத்தொட்டாலும் விலை அதிகமாக இருந்தது. எனவே எதுவும் வாங்கவில்லை. அங்கிருந்து காரில் ஏறி கிளம்பினோம். எங்களது வாகனம் மீண்டும் வேகமெடுத்தது. நான் காரில் சென்றுக்கொண்டே இந்த டீ தொழிற்சாலைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்கின்றேன், கேளுங்கள்...

குறிப்பிட்ட நிலத்தில் எவ்வித செயற்கை உரமும் இடாமல், இயற்கை உரங்கள் மட்டுமே இட்டுப் பயிரிடப்படும் தேயிலையிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் இந்த ஆர்கானிக் டீ ஆகும். அதான் எனக்குத் தெரியுமே! என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது. மேலும் இதனைப்பற்றிப் பார்ப்போம். மணமும் குணமும் நிறைந்த, எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த இயற்கையான டீயானது ஏழைகளின் தொண்டையை எட்டியேப் பார்க்காது. அந்த அளவிற்கு இதன் விலை கஞ்சன்ஜங்கா சிகரத்தைப்போன்று இருக்கும். அதான் இப்போ எங்களுக்குத் தெரிஞ்சிப்போச்சே! வேறு ஏதேனும் தெரிஞ்சா சொல்லுமையா, என்ற உங்களின் மனக்குரலும் எனக்குக் கேட்கின்றது. மேலும் பார்ப்போம்.

இந்தத் தொழிற்சாலை, சிக்கிம் அரசால் 1969-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 440 ஏக்கரில் பயிரிடப்படும் இந்தத் தேயிலைத்தோட்டம் நம்சி நகரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குத் தயாரிக்கப்படும் டீ, இந்திய மற்றும் உலக அளவில் பிரசித்திப் பெற்றதாகும். (எனக்குத் தெரிந்ததெல்லாம் ரூபி டீத்தூள், தாஜ்மகால் டீத்தூள், த்ரீரோஸ் டஸ்ட் டீ மட்டுந்தான். இந்த டெமி பற்றி இப்போதுதான் எனக்குத் தெரியும். எனவே நான் இப்போதிலிருந்துதான் இந்தியன்.)இத்தொழிற்சாலையில் 406 வேலையாட்களும் 43 அலுவலர்களும் பணிபுரிகின்றனர். இவர்கள் மூலம் ஒரு வருடத்திற்கு ஒரு இலட்சம் கிலோ டீத்தூள் உற்பத்தி செய்யப்படுகின்றது. உற்பத்தி செய்யப்பட்டதில் 75 சதவிகிதம் கொல்கத்தாவில் உள்ள 'Kolkatta Tea Auction Centre' - இடம் விற்பணை செய்கின்றனர். கொல்கத்தாவில் இதனை வாங்கி அதிக விலைக்கு ஏலம் கேட்கும் ஏற்றுமதியாளர்களுக்கு அதனை மறுவிற்பணை செய்கின்றது. மீதி 25 சதவிகிதம் உள்நாட்டு விற்பணை நடக்கின்றது. உள்நாட்டு விற்பணையில் 'டெமி டீ' என்றப் பெயர் தாங்கி விற்கப்படும் டீத்தூள் முதல் தரமானது. 'சிக்கிம் சோல்ஜா' (Sikkim Solja) மற்றும் 'கஞ்சன்ஜங்கா டீ' போன்றப் பெயர்கள் கொண்டவை அடுத்தடுத்து தரத்தையுடைய டஸ்ட் டீத்தூளாகும். நமக்கெல்லாம் டஸ்ட் டீதான் பெஸ்ட் டீயாகும். என்ன சரிதானே! இதைப்பற்றி உங்களிடம் பேசிக்கொண்டிருந்ததில் ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. மதியம் 01.45 மணிக்கு 'நம்சி' நகருக்கு வந்திறங்கியாச்சு.


(தொடரும் - 8)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.