Saturday, June 13, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 6

எனது சிந்தனையில் சிக்கிம் - 6





6. Chogyal Palden Thondup Namgyal Memorial Park:

சரியாக மதியம் 02.00 மணிக்கெல்லாம் ஒரு பார்க்கில் வந்து எங்களது கார் நின்றது. இந்தப் பூங்காவைப்பார்த்து விட்டு இங்கேயே சாப்பிட்டுவிட்டு வரும்படி கார் ஓட்டுனர் கூறினார். நாங்களும் காரைவிட்டு இறங்கி சாப்பாட்டுப் பையை எடுக்க காரின் பின்கதவைத்திறந்து தேடினோம்... தேடினோம்... கார் முழுவதும் தேடினோம்! அந்தப் பை கிடைக்கவே இல்லை. பிறகுதான் அந்தப்பையை எங்களது அறையிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. நாங்கள் ஐவரும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் முகத்தைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டோம். வேறு என்ன செய்யமுடியும்? ஏன் எடுத்துவரவில்லை? என யாரும் யாரையும் கேட்டுவிட முடியாது. கூடவே பாவம், எங்களது கார் ஓட்டுனர் வேறு, எங்களைப்பார்த்து அவரது முகத்தை சுருக்கிக்கொண்டார். வேறு எங்காவது உணவுக் கிடைக்குமா? எனச் சுற்றி ஒரு நோட்டமிட்டோம். பூங்காவின் எதிர்புறம் சில் உணவகங்கள் இருந்தன. அங்குச் சென்று சாப்பிட ஏதாவது கிடைக்குமா எனப் பார்த்தோம். எல்லா உணவகங்களும் அசைவ உணவகங்களாகவே இருந்தன. எனவே மீண்டும் கார் அருகில் வந்து நின்றுக்கொண்டிருந்தோம். எங்களைப் பார்த்து ஒரு ஓட்டல்காரர் வந்து எங்களது கார் ஓட்டுனரிடம் எங்கள் நிலையினைப்பற்றி விசாரித்தார். உடனே எங்கள் ஓட்டலில் சைவம்தான் வாருங்கள் என அருகில் உள்ள உணவகத்திற்கு எங்களை அழைத்தார். அந்த உணவகத்தைப் பார்த்தபோது அது அசைவம் என்று மிக நன்றாகவே எங்களுக்குத் தெரிந்தது. அவர் பொய்ச் சொல்லி எங்களை அழைப்பதை உணர்ந்து, அவரது அழைப்பை நிராகரித்தோம். இதனை அறிந்த அவர் எங்களை அவரது மொழியில் ஏளனமாகப் பேசிவிட்டுச் சென்றார். இந்த நாட்டில் சைவ சாப்பாட்டிற்கு எப்படியெல்லாம் அலைய வேண்டியிருக்கின்றது, அத்துடன் யார்யாரிடமோ வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருக்கின்றது பாருங்கள். பசி என்னும் ஓர் பெரும் பாவிப்பயலை விரட்ட புசிக்கலாம் என்றால், புலையைப் புசித்து பசியை நீக்கும் கொலையர்களே இவ்வுலகெங்கும் நிறைந்து நீக்கமற இருப்பதை நினைக்கையில், நமக்கெல்லாம் பசி என்ற ஒன்று இல்லாது இருந்தால் இவ்வுயிர்களெல்லாம் இன்புற்று வாழ்ந்திருக்கும் அல்லவா? என்று எண்ணத்தோன்றுகின்றது. பசியினை வள்ளலார் விரட்டுவதைக் காணுங்கள்,

            பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனுமோர்
                  படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
            வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
                  வன்பயலே நீவீரெலாம் என்புடைநில் லாதீர்
            நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
                  நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
            கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
                  கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
                                                     (திருவருட்பா- 4852)

பூங்காவினைச் சுற்றிப் பார்க்கலாம் என பூங்காவிற்குள் நுழைந்தோம். வழியில் பலதரப்பட்ட பழங்களைத் துண்டாக்கி கலந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் ஆளுக்கு ஒரு கப் பழத்துண்டுகளையும், வெள்ளரிப்பிஞ்சுகளையும் வாங்கிக்கொண்டு பூங்காவிற்கு உள்ளேச் சென்று அங்குப்போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். கார் நாங்கள் தங்கியிருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது.

7. Bi-Cabil Jigback Passenger Ropeway System (Gangtok Ropeway):

அடுத்த சில நிமிடத்தில் ரோப்வே செல்ல எங்களை அழைத்துவந்து நிலையத்தில் விட்டுவிட்டு, ஓட்டுனர் சாப்பிட சென்றுவிட்டார். ரோப்வே சென்று வந்தவுடன் போன் செய்தால் வந்து விடுகின்றேன் என்று சொல்லிவிட்டு ஓட்டுனர் மாயமானார். இந்த ரோப்வே, நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு (Near - Butterfly Bridge-Deorali) மிக அருகாமையில் இருப்பதால், முதலில் நாங்கள் எங்களது அறைக்குச் சென்றோம். காலையில் பேக்செய்து வைக்கப்பட்டிருந்த அந்த சாப்பாட்டுப்பை கேட்பாரின்றி அனாதையாக அங்கேயே இருந்தது. சாப்பிட்டுவிட்டு செல்லலாமா என யோசித்தோம். இரவு சாப்பிட்டுக்கொள்ளலாம் என மனதைத் கட்டுப்படுத்திக்கொண்டு, மீண்டும் ரோப்வே செல்ல நிலையத்திற்கு வந்தோம். அந்நிலையமும் ஒரு செங்குத்தான குன்றுதான். அக்குன்றின் முதல் தளத்திற்கு படிக்கட்டு வழியே ஏறிச்சென்றோம். அங்குதான் டிக்கெட் எடுக்க வேண்டும். ஒரு நபருக்கு 50 ரூபாய்க் கட்டணம். டிக்கெட் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்குச் செல்ல மின்தூக்கி (Lift) வசதி உள்ளது. வானிலை சரியில்லை என, டிக்கெட் கொடுக்க சுமார் ஒரு மணிநேரம் தாமதப்படுத்தினார்கள். காற்றும் லேசாக வீசிக்கொண்டிருந்தது. நான் அப்போதுதான் முதன்முதலாக சில்லென்றக் காற்றை அனுபவித்தேன். லேசாக குளிரும் என்னை ஆட்கொண்டதை உணரமுடிந்தது. ஒரு மணிநேரத்திற்குப் பின்பு வானிலை சீரானப்பிறகு டிக்கெட் கொடுத்தார்கள்.


வீடியோ கேமரா இருந்தால் 50 ரூபாய் கட்டணம் தனையாகக் கட்டவேண்டும். எங்களிடம் ஸ்டில் கேமரா இருந்ததால் அதற்குக் கட்டணம் கிடையாது. டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து மூன்றாம் தளத்திற்கு மின்தூக்கியில் சென்றோம். ரோப்கார் எங்களைச் சுமந்துச்செல்ல ரெடியாக இருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று திரும்பும் வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07-ஆம் தேதி, சிக்கிம் முதலமைச்சர் Dr.Pawan Chamling அவர்களால் இந்த ரோப்வே நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தினமும் காலை 08.00 மணியிலிருந்து மாலை 04.30 மணிவரை ரோப்கார் இயக்கப்படுகின்றது. ஒரு ரோப்காரில் அதிகபட்சமாக 24 நபர்கள்வரை அனுமதிக்கின்றனர். காரினுள்ளே அமர்ந்துச் செல்ல முடியாது. ஒருவர் அருகில் ஒருவர் நின்றுக்கொண்டுதான் செல்லவேண்டும். இப்பயணம் 15 நிமிட நேரத்திற்குள் முடிந்துவிடுகின்றது. இப்பயணத்தை நாம் வெவ்வேறு மூன்று இடங்களிலிருந்து பயணிக்க முடியும். Tashiling, Nam-Nang மற்றும் Deorali ஆகிய இடங்களிலிருந்து பயணிக்கலாம். எந்த நிலையத்தில் ஏறினாலும் மற்ற இரண்டு இடங்களுக்கும் சென்று நாம் ஏறிய இடத்தில் வந்து இறங்கிவிட வேண்டும். இந்தக் காரில் செல்லும்போது நாம் கேங்டாக் மார்க்கெட், பள்ளத்தாக்குகள் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை வளாகத்தையும் ஒரு பறவைப் பார்ப்பது போன்று நாம் மேலிருந்து நகர்ந்துக்கொண்டே பார்த்து மகிழலாம்.

எங்களது கார் பயணிக்கத் துவங்கியது. உள்ளிருந்து நான் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சென்றது மாலை நேரமாகையால் மேகங்கள் ஆங்காங்கே இயற்கைக் காட்சிகளை தன்னுள் அடக்கிக்கொண்டிருந்தது. மேலும் வானிலை சரியில்லாததால் எங்களது கார் மத்திய இடமான Nam-Nang நிலையத்துடன் திரும்பி வந்துவிட்டது. எங்களால் சட்டசபை வளாகத்தையெல்லாம் பார்க்கமுடியாமல் போனது. ரோப்கார் பயணம் முடிந்து கீழிறங்கியவுடன், எங்களது கார் ஓட்டுனருக்கு அழைப்பு விடுத்தோம். அவரும் உடனே வந்து எங்களை ஏற்றிக்கொண்டு அடுத்த இடத்திற்குப் பயணித்தார்.

8. Namgyal Institute of Tibetology:

அடுத்த இரண்டு நிமிடத்தில் ஒரு இறக்கமானப் பாதையில் அழைத்துச் சென்று Tibetology வளாகத்தில் இறக்கிவிட்டார். இவ்வளாகம் 1958-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வளாகத்தை சிக்கிம் மன்னர் Tashi Namgyal அவர்கள் நன்கொடையாக வழங்கினார். இங்குள்ள கட்டடத்தை 1957-ஆம் ஆண்டு 14-ஆம் தலாய்லாமா அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். 1958-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியில் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்த திபெத்திய அருங்காட்சியகம், திபெத்தியக் கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளை ஆதரித்து வளர்த்து வருகின்றது. திபெத்திய மரபு, மதம், மொழி, கலை மற்றும் பண்பாடு தொடர்பான அம்சங்களில் இது கவனம் செலுத்துகின்றது. இந்த மையத்தில் லெப்ச்சா, திபெத்தியன் மற்றும் சமஸ்கிருத நூல்கள், கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 200 பெளத்த நாணயங்களும் இங்கு சேகரித்துவைத்துப் பாதுகாக்கப்படுகின்றது. அரியதான சிக்கிம் பிரதேச புகைப்படங்களையும் தேடித்தொகுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இது தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது. இது பல அழகிய சுவர் சித்திரங்களாலும், பாரம்பரிய திபெத்திய மரபுப்படி கட்டப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்கு அருகில் கடைசி சிக்கிம் மன்னரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவும் உள்ளது. இம்மன்னரின் அற்புதமான வெங்கலச் சிலையும் இப்பூங்காவில் நாம் காணலாம்.

இக்கட்டடம் விரிவாக்கப்பட்டு, மாநாட்டு மண்டபம், நூலகம், படிக்கும் அறைகள், ஸ்டூடியோக்கள் போன்றவை இதன் பொன்விழா கொண்டாடத்தின் நிகழ்ச்சியாக, 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி சிக்கிம் ஆளுநர் H.E.Shri Balmiki Prasad Singh அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டிலிருந்து Bulletin of Tibetology என்ற மாத இதழினையும் இது வெளியிட்டு வருகின்றது. இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்திற்கு ஆறு நாட்கள் திறந்து இருக்கும். காட்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

இங்குவர நாம் ரோப்கார் நிலையத்திலிருந்து, மைலைப்பாதை வழியாகச் சற்று கீழே இறங்கிச் செல்லவேண்டும். செல்லும் வழியில் நமக்கு இடது புறத்தில் மிக நீண்ட பருமனான மரங்களை நாம் காணலாம். ஓக் (Oak), மங்னோலியா (Magnolia) மற்றும் பிர்ச் (Birch) மரங்களைத்தான் நாம் காண்கின்றோம். இந்த மரங்களின் தடிமனையும், உயரங்களையும் நம்மை வாயைத்திறந்துக்கொண்டு பார்க்கவைக்கின்றது. நமது மனதில் உள்ள 'நான்' என்கின்ற ஆணவம் எல்லாம் இதன் முன்னர் நிச்சயம் சுக்குநூறாகச் சென்றுவிடும். அப்படிப்பட்ட பிரமாண்டமான மரங்களைப் பார்த்துக்கொண்டே Tibetology வந்து இறங்கினோம். இதற்கு நுழைவுக்கட்டணம் 10 ரூபாய் ஆகும். நாங்கள் மாலை 04.15 மணிக்கு வந்ததால், பார்வை நேரம் முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். எனினும் நாங்கள் அந்த கடைசி சிக்கிம் மன்னரின் சிலைக்கு அருகில் நின்றும், அந்த திபெத்திய கட்டடத்திற்கு முன் நின்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நடையைக்கட்டினோம். இங்கு, நேரம் தவறினால் இயற்கையும் தன்னை மூடிக்கொள்கின்றது, மனிதர்களும் காட்சியகங்களை மூடிவிடுகின்றார்கள். என்ன கொடுமையடா இது. அடுத்த சுற்றுலா தலத்திற்குச் செல்ல தயாரானோம்.

9. Do-Drul Chorten (Stupa):

Tibetology வளாகத்திலிருந்து ஐந்து நிமிட நடைப்பயணத்தில் நாம் இந்த ஸ்தூபா இருக்குமிடத்திற்கு வந்துவிடலாம். இந்த குன்றிலேற செங்குத்தான தார்ப்பாதை போடப்பட்டுள்ளது. 200 மீட்டர் உயரம் இருக்கும். பார்வையாளர்கள் நடந்துதான் செல்ல வேண்டும். நாங்கள் ஐவரும் நடந்து மேலேச் சென்றோம். சிக்கிம்மில் உள்ள ஸ்தூபாக்களில் இந்த ஸ்தூபாத்தான் மிகமுக்கியமானது. ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் கெட்ட ஆவிகளால் (பேய்) பாதிக்கப்பட்டப் பகுதியாக இருந்தது. இங்கு வசித்த மக்கள், இவ்விடத்தில் பேய்கள் இருப்பதாக நம்பினர். மக்கள் அனைவரும் அலைந்து திரிந்து துர்மரணம் அடைந்தனர். அந்நேரத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் பிரபலமான, புத்த மதத்தில் நைங்மா (Nyingma Order) பிரிவைச்சார்ந்த தலைமை புத்தத்துறவி Trulshing Rinpoche என்பவர் திபெத்திலிருந்து இங்கு வந்து தன்னந்தனியாகத் தங்கினார். இங்குள்ள பேய்களை விரட்டுவதற்காக இந்தத்துறவியால் 1946-ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான், நாம் பார்க்கும் இந்த ஸ்தூபா. (சாஞ்சியில் நமது அசோக்க சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட 'சாஞ்சி ஸ்தூபி' நினைவுக்கு வருகின்றது.) ஸ்தூபா (Stupa) என்பது ஹிந்தி மொழி. சோர்டன் (Chorten) என்பது திபெத்திய மொழி. இந்த ஸ்தூபாவிற்கு மேலுள்ள இறை சக்தியுள்ள வெங்கலத்தாலான வடிவத்திற்கு 'டோர்ஜி புர்பா' அல்லது 'வஜ்ரா கில்யா' (Dorjee Phurpa or Vajra Kilaya) என்று பெயர்.

இந்த ஸ்தூபாவைச் சுற்றிலும் 'ஓம் மனே பத்மே ஹம்' என்ற திபெத்திய மந்திரம் பொறிக்கப்பட்ட 108 பிரார்த்தனை சக்கரங்களும் உள்ளன. நமது வேண்டுதல்களை நினைத்துக்கொண்டு, இதனை நாம் கடிகாரமுள் சுற்றும் திசையில் சுற்ற வேண்டும். இந்த ஸ்தூபாவிற்கு உள்ளே Kanjur புனித நூல்கள், நினைவுச்சின்னங்கள், முழுமையான மந்திரங்கள் மற்றும் இதர மதத்தின் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இப்பெரிய ஸ்தூபாவைச் சுற்றிலும் சில சிறிய ஸ்தூபாக்களும் உள்ளன. அதில் ஒன்று Trulshing Rinpoche இறந்தவுடன் அவருடைய நினைவிடமாக கட்டப்பட்ட ஒரு ஸ்தூபாவும் அடக்கம். இந்த நினைவிட ஸ்தூபாவின் பெயர் Jhang Chup Chorten என்பதாகும். நாங்கள் சென்றிருந்தபோது இவருடைய நினைவிடத்திற்கு அருகில் நிறைய தீபங்கள் ஏற்றப்பட்டு எரிந்துக்கொண்டிருந்தன. எங்கெல்லாம் தீபங்கள் எரிந்துக்கொண்டிருக்கின்றனவோ, அங்கு அந்தத் தீபத்தினை வணங்கவேண்டும் என்பது, எனக்கு வள்ளலார் கற்றுக்கொடுத்தப் பாடம், ஆகையால் அந்தத் தீபங்களை வணங்கினேன். தீபத்தின் முன்னிலையில்தான் இறைவன் விளங்குவதாக திருவருட்பா கூறும்.

Trulshing Rinpoche அவரின் காலத்திற்குப் பிறகு Dodhrubchen Rinpoche என்ற லாமாவும் இங்குவந்து புத்த தர்மத்தை பரப்பினார். இவருடைய நினைவு ஸ்தூபாவும் இங்கு உள்ளது. இங்கு புத்த துறவிகளின் (Monks) தங்குமிடம் உள்ளது. சுமார் 700 துறவிகள் தங்குமளவிற்கு இங்கு இடமுள்ளது. நாங்கள் போகும்போது சுமார் 30 புத்த பிட்சுக்களை காண நேர்ந்தது. ஓரிருவரைத்தவிர மற்றவர்களெல்லாம் 10-லிருந்து 15-வயதிற்குள் இருக்கும் சிறுவர்கள். இந்த ஸ்தூபா அமைந்திருக்கும் குன்றுக்குக்கீழே, இக்குன்றுக்கு வரும் வழியில் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தின்பண்டங்கள் விற்றுக்கொண்டிருந்தார். அதனை அச்சிறுவர்கள் (புத்தத் துறவிகள்) கூட்டமாகக்கூடி ஆராவாரத்துடன் வாங்கி உண்பதைக் கண்டு பரிதாபப்பட்டேன். இவர்களெல்லாம் திபெத்திய மாணவர்கள். ஏதோ ஒரு காரணத்தால் அவரகளது வீட்டிலிருந்து தனித்து இங்கு வந்திருக்க வேண்டும். ஓடியாடி விளையாடுகின்ற வயதில், தாய் தந்தையரைப் பிரிந்து, கல்வியினைத் துறந்து, தங்கள் தாய் தேசத்தைப் பிரிந்து, கடவுள் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? துறவு என்றால் என்ன? போன்ற எண்ணங்கள் வரும் முன்னரே, இவர்களுக்கு துறவு கோலம் போட்டுவிடப்படுகின்றது. சிக்கிம் முழுவதுமுள்ள் புத்தாலயங்களில் இவர்களைப்போன்ற சிறுவர்களைப் பார்க்க முடிகின்றது. மதத்தின் பெயரால் நடக்கும் ஒரு கொடிய வன்முறை இது. இவர்களைப் பற்றி ஆராய்ந்தால் இதன் கோரமும் நமக்குத் தெரியவரும். ஆராய்வது யார்?

இந்த ஸ்தூபாவோடு, மாலை 04.40 மணிக்கெல்லாம் இன்றைய சுற்றை முடித்துக்கொண்டோம். இன்று முழுவதும் ஒன்பது இடங்களை நாங்கள் சுற்றி பார்த்தோம். கார் ஓட்டுனர் எங்களை நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் இறக்கிவிட்டு அவர் புறப்பட்டார். முன்னதாக நாளை நாதுலா செல்ல அரசிடமிருந்து அனுமதிக் கிடைத்துவிட்டால் போன் செய்கின்றேன். காலை 08.00 மணிக்கெல்லாம் கிளம்பி வாருங்கள், என்று சொல்லிவிட்டுப் பறந்துவிட்டார். நாங்களும் அருகில் உள்ள கடைக்குச்சென்று தேனீர் அருந்திவிட்டு எங்களது அறைக்கு 05.00 மணிக்கெல்லாம் சென்றடைந்தோம். சற்று நேரத்தில் கல்லூரியிலிருந்து பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களும் வந்துவிட்டார்கள். இன்றைய எங்களது சுற்றுப் பயணத்தைப்பற்றி கேட்டறிந்தார்கள். இன்று மதியம் யாரும் சாப்பிடவில்லை என்பதையறிந்து இன்று இரவு சாதம், சாம்பார், பொறியல் என சாப்பாடு செய்துவிடலாம், என்று சமையலறைக்குச் சென்றார்கள். அவர்களுடன் திருமதி.ஆர்.இலட்சுமி அவர்களும் திருமதி..சுசீலா அவர்களும் உதவிக்குச் சென்றனர். சற்று நேரத்தில் சாப்பாடு ரெடி. ஐந்து நாட்களுக்குப்பிறகு எங்களுக்குக் கிடைத்த சாப்பாடு இது. நாங்கள் அனைவரும் நன்றாகச் சாப்பிட்டோம்.

நாளை செல்லக்கூடிய இடம் பனிபடர்ந்த மலைப்பிரதேசம். எனவே நாளை எல்லோரும் கால்களுக்கு Shoe, கைவிரல்களுக்கு Gloves மற்றும் Sweater அணிந்து செல்லுங்கள் எனப் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும், என்னிடம் Sweater இல்லை என்பதைத்தெரிந்து, அவர் தன்னிடமிருந்த Jerkin- கொடுத்து, என்னை அணிந்துக்கொண்டுச் செல்லப் பணித்தார். நானும் அதனை வாங்கிக்கொண்டேன். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள், ஏற்கனவே நாதுலா என்ற பனிப்பிரதேசத்திற்கு சென்று வந்தப் புகைப்படங்களை எல்லாம் தனது லேப்டாப்பில் வைத்திருந்தார். அதனை எங்களுக்கு ஒவ்வொன்றாகக் காண்பித்து மகிழ்ந்தார், நாங்களும் வியந்தோம். இப்படியே இரவு மணி 11.00 ஆகிவிட்டது. நாளை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்பதால் எல்லோரும் தூங்குவதற்கு ஆயுத்தமானோம். சிறிது நேரத்தில் எங்களது உடல்களை தடிமனான போர்வைக்குள் கிடத்தினோம். அதன் பிறகு எங்களது கண்களை இமைகள் மூடிக்கொண்டன.


(தொடரும் - 6)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.