Sunday, June 14, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 11

எனது சிந்தனையில் சிக்கிம் - 11




19. Sangchen Pemayangtse Monastery:


6840 அடி உயரத்தில் இந்த மோனாஸ்ட்ரி அமைந்துள்ளது. சிக்கிம்மில் உள்ள மிகப்பழமையான மோனாஸ்ட்ரிகளில் இதுவும் ஒன்று. இந்த புத்தாலயம் 1650-51 ஆம் ஆண்டு Lhatsun Chhenpo என்பவரால் ஒரு சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் 1705-ஆம் ஆண்டு Pemayangtse Gonpa-வின் தலைமை லாமாவான Chhpgyal Chhagdpr Namgyal மற்றும் Lama Khanchhen Rolpai Dorje அவர்களால் மிகப்பெரியதாக மாற்றி அமைக்கப்பட்டது. இது பலமுறை தீப்பிடித்து எரிந்திருக்கின்றது. எரிந்தப்பிறகு உடனுக்குடன் இதனை புதிப்பித்திருக்கின்றார்கள். திபெத்திய சுத்த துறவிகளுக்காக இது கட்டப்பட்டது. (சுத்த சன்மார்க்கம் போல, இங்கு சுத்தத் துறவி போலும்) Pure Monksta tshang என்றழைக்கப்படும் திபெத்தியத் துறவிகள் இங்கு 100 நபர்கள் பயின்று வருகின்றார்கள். இங்கு 1500 சதுர அடியில் பிரார்த்தனை ஹால் உள்ளது. இங்கு குரு பத்மசம்பவா அவர்களின் சிலை வழிபாட்டில் உள்ளது. இந்த ஹாலில் தினமும் இரண்டு முறை கூட்டு பிரார்த்தனை இந்த சுத்தத் துறவிகளால் (ta-tshang) செய்யப்படுகின்றது. நாங்கள் மதியம் 01.45 மணியளவில் இங்கு வரும்போது, இந்த ஹாலில் பிரார்த்தனை நடந்துக்கொண்டிருந்தது.




எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவயது துறவி முதல் 65 வயது மதிக்கத்தக்க தலைமை லாமா வரை இந்த ஹாலில் வரிசையாக இருபுறமும் அமர்ந்துக்கொண்டு ஏதோ புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு அதனைப்பார்த்து ஓதினார்கள். இதனை இரகசிய உச்சாடனம் என்கின்றனர். ஓதும்போது நடுவில் அவ்வப்போது மேளத்தாளத்துடன், நீண்ட குழல் ஓசையும் எழுப்புகின்றனர். இந்தப் பிரார்த்தனையில் நாங்கள் சிறிது நேரம் கலந்துக்கொண்டுவிட்டு, அங்கிருந்து மேல் தளத்திற்குச் சென்றோம். முதல் தளத்தில் பழங்காலத்து புத்த சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பழங்காலத்து பெயிண்டிங் வகைகளையும் பார்க்கலாம். இரண்டாம் தளத்தில் காலச்சக்ரா என்ற தத்துவத்தை உருவகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். இதனை பார்த்துவிட்டு கீழே இறங்கினோம். இங்கிருந்து பார்த்தால், நாங்கள் அடுத்ததாக பார்க்க இருக்கும் சிதைந்துப் போன அரண்மனைக் கட்டடம் காட்சியளித்தது. அதனையும் பார்த்துவிட்டு அந்த அரண்மனை நோக்கி 02.30 மணியளவில் கிளம்பினோம்.

20. Rabdentse Site of Ancient Capitial of Sikkim:


அடுத்த பத்து நிமிடத்தில் 02.40 மணியளவில் Ancient Capitial of Sikkim வந்துச் சேர்ந்தோம். சிக்கிம் மாநிலத்தில் நாங்கள் பார்க்கக்கூடிய இருபதாவது சுற்றுலாத்தலம் இதுவாகும். சிக்கிம் மாநிலத்தில் இறுதியாக நாங்கள் பார்க்கக்கூடிய இடமும் இதுதான். அடுத்ததாக நாங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் நோக்கி பயணப்படப் போகின்றோம்

இந்த இடம் சிக்கிம் வனத்துறையின் கீழுள்ளது. ஆனால் சிதைந்த அரண்மனை இடங்கள் மட்டும் இந்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சிதைந்த அரண்மனையைப்பார்க்க நாம் சுமார் 600 மீட்டர் மேல்நோக்கி மலையில் நடக்க வேண்டும். அதனால் திருமதி.ஆர்.இலட்சுமி அவர்கள் மட்டும் நடந்துச்செல்ல முடியாது என்று காரிலேயே அமர்ந்துக்கொண்டார்கள். நாங்கள் ஐவரும் மேலே ஏறினோம். 200 மீட்டர் தொலைவுக் கடந்திருப்போம், ஒரு பெரிய நீண்ட மரம் பாதையின் குறுக்கே விழுந்திருந்தது. கீழே விழுந்து எத்தனை நாள் ஆனதோ தெரியவில்லை. இன்னும் அம்மரம் உயிரோடுதான் இருந்தது. அம்மரத்தைத் தாண்டிச்சென்றோம். அரண்மனைச் சிதைவுகள் உள்ள இடத்தை அடைந்தோம். அவ்விடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்தோம். அந்த சிதைவுகளுக்கு அருகில் ஒரு குடும்பம் தனியே அங்கு வசித்து வருகின்றது. அக்குடும்பம், அவ்விடத்தை பாதுகாக்கும் பணியில் இருக்கும் குடும்பமாக இருக்க வேண்டும். இந்த 'ராப்டென்செ' என்கின்ற இந்த இடம் 17-ஆம் நூற்றாண்டில் (1670-ஆம் ஆண்டு முதல் 1814-ஆம் ஆண்டு வரை) சிக்கிம் மாநிலத்தின் தலைநகராக இருந்திருக்கின்றது. 1780-ஆம் ஆண்டு நேபாள கூர்க்கா இராணுவத்தால் இந்த அரண்மனை தாக்கப்பட்டது. இப்போது நாம் காணுவது அழிக்கப்பட்ட அரண்மனையின் சிதைவுகளையே. இந்த இடம், அரண்மனை மற்றும் பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அரச வம்சத்தின் நினைவுகளைத் தாங்கி நின்றுக்கொண்டிருக்கின்றது.



சிக்கிம்மின் முதல் தலைநகராக யுக்ஸோமும், இரண்டாம் தலைநகராக இந்த ராப்டெனட்சேயும் இருந்துள்ளன. யுக்சோமில் உள்ள துப்தி மடாலயத்திலிருந்து துவங்கும் பெளத்த மத சுற்றுப் பயணங்களில் வரும் பல்வேறு மடாலயங்களில் ஒன்றாகவும் இந்த ராப்டென்சே சிதைவுகள் உள்ளன. இந்தச் சிதைவுகள் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு பிரிவில் அரச குடும்பத்தினர் வசித்து வந்தனர். அங்கே அரச குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்த இடமான 'டாப்லகாங்' என்ற சிதைவுகளையும் நாம் இங்கு காணமுடியும். இங்கு முன்பு அரசக்குடும்பத்தினரின் வழிபாட்டிலிருந்த புனிதமான மூன்று Chortens அதாவது ஸ்தூபாவையும் நாம் கண்டு வணங்கலாம், மன்னிக்கவும், அதன்மீது ஏறி விளையாடலாம். கோட்டைக்கட்டி ஆண்ட அரசக்குடும்பத்தை எல்லாம் காலச்சக்கரம் அடித்துச் சென்றுவிட்டது. இது நமது தனுஷ்கோடி அழிவுகளை நினைவு கூறுவதாக உள்ளது.


அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்த வழியே கீழ்நோக்கி இறங்கினோம். அதற்குள், நாங்கள் வரும்போது பாதையின் குறுக்கே விழுந்திருந்த அந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்த இரண்டு நபர்கள் கையில் ஆயுதங்களுடன் ஆயுத்தமாக இருந்தனர். அந்த மரம் என்னிடம் ஏதோ சொல்ல விரும்பியது. ஏனோ தெரியவில்லை, அதை நான் நிராகரித்துவிட்டு அதைக்கடந்து வந்துவிட்டேன். மாலை 04.30 மணியளவில் நாங்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து டார்ஜ்ஜிலிங் நோக்கிக் கிளம்பினோம்.

ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு டீ அருந்துவதற்காக சாலை ஓரத்திலுள்ள ஒரு உணவு விடுதியில் கார் நின்றது. நாங்கள் இறங்கி அவ்வுணவு விடுதிக்குள் சென்றோம். அது சைவ உணவு விடுதியாக இருந்ததால், அங்கு சிக்கிம் மாநிலத்தின் முக்கிய சிற்றுண்டியான 'மோமோ' என்கின்ற உணவினை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது. அந்த நேரத்தில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை அங்குள்ளவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் எங்களில் யாரும் அதனை உணரவில்லை. இப்படிப்பட்ட மிகக்குறைந்த அளவில் நிலநடுக்கங்கள் இம்மாநிலம் முழுவதும் ஏற்படுவது சகஜம் என்றனர். நல்லவேலை, இந்நிலநடுக்கம் பெரிய அளவில் வந்திருந்தால் எங்களுடைய நிலமை என்னவாகியிருக்கும்! நினைக்கவே பயமாக உள்ளது. அந்தச் சிறிய அளவு நிலநடுக்கத்தைக்கூட எங்களை உணரவிடாமல் தடுத்த, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணைக்கு நன்றி. (இந்த நன்றி, சுயநல நோக்கத்தில் சொல்லப்பட்ட நன்றி அல்ல, என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்குத் தெரியும்). (இதே மாதம் 25-ம் தேதி சிக்கிம் மாநில எல்லையான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்ததை எண்ணும்போது, இம்மாநிலத்தில் வசிக்கும் ஆறு இலட்சம் பேரும், இயற்கையோடு ஒன்றி, அது தரும் இன்பத் துன்பங்களை ஏற்று வாழ்க்கை நடத்துவது வியப்பாகத்தான் உள்ளது.) தேனீர் அருந்திவிட்டு, மோமோ சாப்பிட்ட மனதிருப்தியுடன் சிறிய இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பயணித்தோம்.




                           SIKKIM FLOWER
எங்களது கார் ஓட்டுனர் ஏதோ ஒரு குறுக்கு வழியில் செல்வதாகக்கூறி தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தார். பாதை கரடுமுரடாக இருந்தது. இந்த வழியில் சென்றால் இரண்டு மணிநேரம் மிச்சமாகும் என்று உற்சாகமாக வண்டியை ஓட்டினார். எங்களது வாகனமோ, நிலநடுக்கத்தில் உள்ளாகும் கட்டடம்போல குலுங்கிக்கொண்டிருந்தது. டார்ஜ்ஜிலிங் மலைச்சிகரத்தை நெருங்க நெருங்க குளிர்க்காற்று எங்களை மெல்லத்தழுவி வரவேற்றது. எப்படியோ நான்கு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு இரவு 08.30 மணியளவில், No.08, M.G ரோட்டிலுள்ள 'ஹோட்டல் ஸ்வீட் ஹோம்' என்ற பயணிகள் விடுதியில் வந்திறங்கினோம். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் முன்னதாகவே இந்த ஹோட்டலில் இரண்டு அறைகள் முன்பதிவு செய்திருந்தார்கள். நாங்கள் வந்திறங்கியவுடன் ஓட்டல் சிப்பந்திகள் வந்து எங்களது காரிலிருந்த பைகளை எல்லாம் எடுத்துச் சென்றனர். நாங்கள் வந்திறங்கிய உடனே மழையும் பெய்ய ஆரம்பித்து விட்டது.

கடந்த ஐந்து நாட்களாக எங்களை (07-ம் தேதி இரவு நியூ ஜல்பைங்குரி இரயில்வே நிலையத்திலிருந்து, 12-ம் தேதியான இன்று இரவு டார்ஜிலிங் வரை) எந்தவிதமான சிறிய இடையூறுகளும் இன்றி மிகப்பத்திரமாக தனது வாகனத்தில் சுற்றிக்காட்டி அழைத்து வந்த எங்களது கார் ஓட்டுனரை நாங்கள் பிரிய நேரிட்டது. இந்த ஐந்து நாட்களில் நான் அவரிடம் ஓரிரு வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். இருப்பினும் அவரைவிட்டு பிரியும்போது எனது மனம் லேசாக வலித்தது. அந்த வலியைத் தாங்கமுடியாமல், எனக்காக அழுதுக்கொண்டிருந்தது  மேல்வானம். மழை பெய்ததால் இறுதியாக அவரிடம் நன்றி கூட சொல்ல முடியவில்லை. பத்து அடி தூரத்தில் நின்றுக்கொண்டு சிரித்துக்கொண்டே கையை அசைத்து டாட்டா காட்டி விடைபெற்றேன். பழகிய ஒருவரை விட்டுப்பிரியும் போது இந்த இடைவெளி இருப்பது நல்லதுதான். அவரும் கையை அசைத்து எங்களுக்கெல்லாம் டாட்டா காட்டிவிட்டு கேங்டாக்கை நோக்கி புறப்பட்டார். சிக்கிம் மாநில வாடகைக்கார்கள், டார்ஜ்ஜிலிங் நகரைச் சுற்றிக்காட்ட மேற்கு வங்க மாநில அரசு தடைவிதித்துள்ளது. அதே போன்று சட்டவிதி சிக்கிம்மிலும் உள்ளது. இவ்விதி மட்டும் இல்லை என்றால் இன்னும் மூன்று நாட்கள் நாங்கள் எங்கள் சிக்கிம் ஓட்டுனரையே பயன்படுத்தி இருப்போம்.

ஸ்வீட் ஹோமில் எங்களுக்காக இரண்டாவது தளத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கி இருந்தனர். அவ்வறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. வாடகையும் அதிகமாகத் தோன்றியது. எனவே நாங்கள் கீழ்த்தளத்தில் உள்ள நல்ல அறைகளை ஒதுக்கும்படிக் கோரினோம். அதற்கு அவர்கள் நாளை காலை ஒதுக்குகின்றோம். என பதிலளித்தனர். நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. வேண்டுமென்றே எங்களுக்கு அந்த அறைகளை ஒதுக்கியதாகத் தோன்றியது. எனவே, அறையை காலி செய்வதாகக் கூறிவிட்டு, எங்களது பைகளை எல்லாம் கீழே எடுத்துவந்து வைத்துவிட்டோம். இதனால் ஓட்டல் மேலாளருக்கும் எங்களுக்கும் பிரச்சனையாகிவிட்டது. தென்னிந்தியர்களே இப்படித்தான் என ஒட்டுமொத்த நமது நான்கு மாநிலங்களையும் போட்டுத்தாக்கினார்கள். நான்கு மாநிலத்தவர்களும் எங்களை மன்னிக்கவும். எங்கள் மீது எந்தத்தவறுமில்லை. தென்னிந்தியர்கள் என்றாலே இந்த ஹோட்டலில் மட்டமான அறைகளைத்தான் ஒதுக்குவார்கள் போலும். எனவே தென்னிந்தியர்கள் யாரும் இந்த ஹோட்டலின் புற அழகைக்கண்டோ, இதன் வெப்சைட்டைக் கொண்டோ ஏமாந்து விடவேண்டாம். நமக்கெல்லாம் இந்த 'ஸ்வீட் ஹோம்' 'பேட் ஹோம்' ஹோட்டல்தான்.

மழையும் ஓய்ந்தப்பாடில்லை. அதற்குள் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள், தாம் ஏற்கனவே டார்ஜிலிங் வந்திருந்தபோது தங்கியிருந்த வேறொரு ஹோட்டல் நம்பரை தொடர்புக்கொண்டு அங்கு இரண்டு அறைகள் உடனே புக் செய்துவிட்டார். ஆனால் இந்த ஹோட்டலிலிருந்து அத்தனைப்பைகளையும் எடுத்துக்கொண்டு எப்படி இந்த மழையில் புதிய ஹோட்டலுக்கு செல்வது என்பது பெரும் சவாலாக இருந்தது. பின்னர் நானும் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களும் குடைபிடித்துக்கொண்டு டாக்சியைத் தேடி கிளம்பினோம். தெருவெல்லாம் ஒரே இருட்டு. மழைவேறு விடாமல் பெய்துக்கொண்டிருந்தது. நாங்களிருவரும் டாக்சியைத் தேடிக்கொண்டே புதியதாக புக்செய்திருந்த ஹோட்டலுக்கே சென்றுவிட்டோம். அப்போது அந்த ஹோட்டலை கடந்துச் சென்ற ஒரு காரினை பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் கையைக்காட்டி நிறுத்தினார்கள். நிலமையைச் சொல்லி உதவி கோரினார்கள். அதற்கு இனங்கி அவர் உதவிச் செய்ததால் நாங்கள் அந்த ஸ்வீட் ஹோமைவிட்டுக் கிளம்பி நல்லபடியாக இந்த புதிய ஹோட்டலுக்கு நல்லபடியாக வந்து சேர்ந்தோம். உதவி செய்தவரிடம், எவ்வளவுக் கட்டணம் என்று கேட்டதற்கு, எனக்கு இங்கு நான்கு ஹோட்டல்கள் இருக்கின்றன. நான் அதன் முதலாளி. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். ஒருவேளை நான் சென்னை வந்தால், அங்கு எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உங்களிடம் கேட்கின்றேன். என்று எங்களது தொடர்பு எண்களை மட்டும் பெற்றுக்கொண்டார். 'காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்ற திருக்குறளுக்கு ஒப்ப, எங்களது இக்கட்டான நிலையில், அவர் எங்களுக்குச் செய்த இந்த உதவியானது எங்களுக்கு இவ்வுலகைவிடப் பெரியதாகத் தொன்றியது. அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சார்பில் நான் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தக் கும்மிருட்டில் ருத்ர நடனமிடும் மழையிலும், தனித்து ஒருவரிடம் உதவிக்கேட்டு தனது காரியத்தை கச்சிதமாக முடித்த பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களுக்கும் எங்களது பாராட்டுதல்கள் உரித்தாகுக.

இப்படி ஒரு சோதனை வரும் என நாங்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எப்படியோ மாற்று ஹோட்டலுக்கு வந்து அமர்ந்தாச்சு. இந்த ஹோட்டலின் பெயர், 'Hotel Apsara' என்பதாகும். இது சுத்த சைவ ஹோட்டலும்கூட. ஹோட்டல் அறைக்குச் செல்லும்போது இரவு மணி 10.15 ஆகிவிட்டது. கேங்டாக்கைவிட இங்கு குளிர் அதிகமாகவே இருந்தது. சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு உறங்கினோம்.

இன்று 2015, ஏப்ரல் 13-ஆம் தேதி, திங்கள் கிழமை. (எங்களது பயணத்தின் எட்டாவது நாள்}. காலையில் எழுந்து குளித்துவிட்டு, இந்த அப்சரா ஹோட்டலில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டோம். இங்கு எங்களுக்கு பூரியும், ரொட்டியும் கிடைத்ததில் பிடித்தது. சாப்பிட்டுவிட்டு இந்த ஹோட்டல் மேலாளர் மூலம் ஒரு லோக்கல் டாடா சுமோ ஏற்பாடு செய்துக்கொண்டோம். இந்த அப்சரா ஹோட்டல் அறையிலிருந்தே நாம் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தைக் காணமுடிகின்றது. சுமார் 10.15 மணியளவில் ஊர்சுற்றக் கிளம்பினோம். அதற்குள் நாம் இந்த ஊரைப்பற்றி மிகச்சுருக்கமாகத் தெரிந்துக்கொள்வோம்.


(தொடரும் - 11)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.