Wednesday, June 17, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 14

எனது சிந்தனையில் சிக்கிம் - 14




26. Tiger Hill - Sun Rise:

இன்று 2015, ஏப்ரல் 14-ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை. {எங்களது பயணத்தின் ஒன்பதாவது நாள்}. காலை 03.50 மணிக்கு எழுந்தோம். காலையில் யாரும் குளிக்கவில்லை. உடனே 04.00 மணிக்கெல்லாம் ரெடியாகிவிட்டோம். இன்று டவேரா வண்டி வந்திருந்தது. அதிலேறி 04.30 மணிக்கெல்லாம் டைகர் ஹில் சென்றுவிட்டோம். அந்தக் குன்றில் அமர்ந்து பார்ப்பதற்காக இரண்டு அடுக்குத்தளங்கள் அமைத்திருந்தனர். இங்கு அமர்ந்து பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கவேண்டும். நாங்கள் வருவதற்குள் இரண்டாவது தளத்திற்கான டிக்கெட் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டது. எங்களுக்கு முதல் தளத்தில்தான் டிக்கெட் கிடைத்தது. இதற்கு தலா ரூபாய் 30 கட்டணமாகும். தரைத்தளத்திற்கு 10 ரூபாய் கட்டணம். டிக்கெட் இல்லாமல் அந்தக்குன்றில் நின்றுக்கொண்டும் பார்க்கலாம். நாங்கள் முதல் தளத்தில் சென்று அமர்ந்தோம். கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் பாம் உண்டு, என்று சொல்வார்களே, அது உண்மைதான். யாரோ 'டைகர் பாம்' போட்டுக்கொண்டே இருந்தனர். சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்ததால், தைரியமாக பாம் போட்டுவிட்டனர். நான் மூக்கைப்பிடித்துக் கொண்டேன். வாமிட் வந்துவிடும்போல இருந்தது. தாங்க முடியவில்லை. இன்று அதிகாலையில் இப்படியொரு அனுபவமா எனக்கு.., தேவுடா... தேவுடா..!

அதிகாலை 04.40 மணிக்கெல்லாம் வானில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்துவிட்டது. எல்லோருக்கும் உற்சாகம் மேலோங்கியது. அதற்குள் ஒருவர் வந்து எங்களை அமைதிப்படுத்தினார். பிறகு உரத்தக்குரலில் அப்பகுதிகளையெல்லாம் சுட்டிக்காட்டி, இந்த இடம் நேபாள், இந்த இடம் சைனா, இந்த இடம் திபெத், இந்த இடம் பூட்டான், இது எவரெஸ்ட், இது கஞ்சன்ஜங்கா, இந்த இடத்தில் சூரியன் உதிக்கும் என்றெல்லாம் விளக்கினார். பிறகு சன்ரைஸ் படங்கள், வீடியோக்கள் எல்லாம் விற்பணை செய்தார். அதற்குள் சூரியனும் மேலே எழுந்துவிட்டது. ஆனால் வழக்கம்போல் மேகம் மறைத்துக்கொண்டதால் அதனைப் பார்க்க முடியவில்லை. எனக்கு முன்னரே தெரிந்துவிட்டது, இப்படித்தான் ஆகப்போகின்றது என்று! அந்த இடியட், டைகர் ஹில்லில், டைகர் பாம் போடும்போதே எல்லாம் போச்சு. இருந்தாலும் முடிந்தமட்டில் தெரிந்தக் காட்சிகளை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

டார்ஜிலிங் நகரத்தில் மிக உயர்ந்த இடம் இந்த டைகர் ஹில் ஆகும். இவ்விடம் 8482 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் Ghoom மலையில் அமர்ந்துள்ளது. நாம் இங்கிருந்து (From View Point) 360 டிகிரி கோணத்தில் டார்ஜிலிங் நகரைக் கண்டு களிக்கலாம். இந்த டைகர் ஹில் இடத்தினை கூர்க்கா லேன்ட் அமைப்பு நிர்வகித்து வருகின்றது. அங்கிருந்து காலை 05.50 மணியளவில் வந்த வழியே கீழ் நோக்கித் திரும்பினோம்.

27. Dunggon Samten Choling Bhuddhist Monastery (Ghoom Monastery):

டைகர் ஹில் செல்லும்வழியில் இந்த புத்தாலம் உள்ளது. நாம் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வந்தால், இங்கு இளம் புத்தத்துறவிகள் மந்திரங்கள் முழங்க பிரார்த்தனை செய்வதை பார்க்கலாம். நாம் விரும்பினால் இந்த பிரார்த்தனையில் கலந்துக்கொள்ளலாம். இங்கு பழங்காலத்து புத்தமத நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகளெல்லாம் பாதுகாக்கப்படுகின்றது. அதிகாலையில் டைகர் ஹில் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு இங்கே காபி அல்லது டீ மற்றும் சைவ வகை சிற்றுண்டியும் கிடைக்கும். புத்தாலயத்திற்குள் நாம் மிக தாராளமாக புகைப்படம் எடுக்கலாம். உள்ளே பெரிய புத்தர்சிலையுடன் கூடிய பலரது சிலைகள் வரிசையாக உள்ளன. ஒரு சீன வாஸ்து பொம்மையையும் பார்த்தேன். அருகில் ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க புத்தத்துறவியைப் பார்த்தேன். நானும் வேடம் போடாத துறவிதான்., எனவே அவர் பக்கத்திலிருந்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். இந்த புத்தாலயத்திற்கு பக்கத்தில், அனகரிகா கோவிந்தா லாமா (Lama Anagarika Govinda) நினைவாக ஒரு ஸ்தூபாவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் பார்த்துவிட்டு காலை 06.50 மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம்.

28. Gorkha War Memorial - Batasia Loop:

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற பல்வேறு போர்களில் உயிர் நீத்த 75-க்கும் மேற்பட்ட கூர்க்கா இராணுவத்தினருக்காக அமைக்கப்பட்ட நினைவாஞ்சலி இடம்தான் இது. Batasia - என்றால், காற்றோட்டமுள்ள திறந்த வெளி எனப்பொருள். இந்த Batasia இடத்தின் மையத்தில்தான் இராணுவ வீரர்களுக்கான நினைவாஞ்சலி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இம்மேடை 1995-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இந்த மேடையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணில், உயிர்நீத்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அத்தூணின் எதிரில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு இராணுவ வீரரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மேடைக்கருகில் நமது தேசியக்கொடியும் பட்டொளிவீசிப் பறந்துக்கொண்டிருக்கின்றது. நினைவாஞ்சலி மேடையில் ஏறுவதற்கு பயணிகளுக்கு அனுமதியில்லை. இங்கு 50000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் உள்ளது. இப்பூங்காவின் வழியே டார்ஜிலிங் பொம்மை இரயில் இயக்கப்படுகின்றது. நாம் காரைவிட்டிறங்கி இக்குன்றை நோக்கி நடக்கும்போது வழியில் நிறைய பாதையோரக்கடைகளில் சமூசா மற்றும் காய்கறிகளைக்கொண்டு பஜ்ஜி சுட்டுத்தருகின்றனர். இதனை வாங்கிக்கொண்டு மேலே சென்றோம். தலா 15 ரூபாய் நுழைவுக்கட்டணம் கட்டிவிட்டு மேலே நடந்தோம். அங்கு போர் நினைவிடத்தைப் பார்க்கும்போதே நம்மையறியாமல் ஓர் அமைதி சூழ்ந்து விடுகின்றது. அங்கிருந்து கஞ்ஜன்ஜங்கா மலைத்தொடர்கள் மிக அருமையாகத் தென்பட்டன. பின்னர் அங்கு கூர்க்காலேன்ட் மக்கள் உடுத்தும் பாரம்பரிய ஆடைகள் வாடகைக்கு தருகின்றனர். இவ்வாடைகளை அவர்களே நமக்கு உடுத்திவிடுகின்றனர்.

நாங்களும் கட்டணம் செலுத்தி அவ்வாடைகளை உடுத்திக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவ்வாடைகளை உடுத்தியப்பின்பு நாங்களும் கூர்க்கா மக்களில் ஒருவரானோம். கூடைகளை தலையில் மாட்டிக்கொண்டு தேயிலை பறித்தோம், மரக்கத்தியை வைத்துக்கொண்டு சண்டையிட்டோம். இப்படியொரு புதிய பரிமாணத்திற்கு சென்று மீண்டது, ஒரு இனிய அனுபவத்தை எங்களுக்குக் கொடுத்தது. நாம் உடுத்தும் ஆடைகள்தான், நாம் யார்? என்று புற உலகிற்கு காட்டுகின்றது. பிறகு 08.20 மணியளவில் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். நேராக எங்களது ஹோட்டலுக்குச் சென்று, குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு அங்கேயே காலை சிற்றுண்டியாக பூரி, ரொட்டி சாப்பிட்டுவிட்டு மீண்டும் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம்.

29. Rock Garden:

இந்த மலைப் பூங்காவிற்கு 10.45 மணியளவில் நாங்கள் வந்து சேர்ந்தோம். இதற்குள் செல்ல தலா 10 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு உள்ளே சென்றோம். இந்த Rock Garden, Barbotey Rock Garden என்று அழைக்கப்படுகின்றது. இது பல வெட்டப்பட்ட கற்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் அமர்வதற்கு ஏற்றவாறு தரைத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக் கார்டனில் சும்மு அருவி (Chunnu Summer Falls) மேலே இருந்து கீழ்த்தளம் வரை தவழ்ந்து வருகின்றது. நாம் கீழ்த்தளத்திலிருந்து மேலே படிப்படியாகச் செல்ல பாதகளும் ஆங்காங்கே சிறிய மரப்பாலங்களும் அமைத்துள்ளனர். அதன் வழியேச் சென்று உயரத்திலிருந்து நாம் கீழ்நோக்கி பார்ப்பது மிக அழகாக இருக்கின்றது. மேலும், செல்லும் வழியெங்கும் பாதையின் ஓரத்தில் அழகிய பலவகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

ஒரு மஞ்சள்நிறப் பூவினுள் ஒரு வண்டு தேன் அருந்திக்கொண்டிருந்ததை அப்படியே எனது கேமரா படம்பிடித்துவிட்டது. இந்த மலைப்பூங்காவை கூர்க்கா அமைப்பானது உருவாக்கி நிர்வாகம் செய்துவருகின்றது. இதன் தலைவர் திரு.சுபாஷ் கைசிங் (Mr.Subhash Ghising) என்பவர் திறந்து வைத்தார். இந்த மலைப்பூங்காவின் வெளிப்புறத்தில் பல சிற்றுண்டிக்கடைகள் உள்ளன. அங்கு நமக்குத் தேவையான திண்பண்டங்களை வாங்கி உண்டு மகிழலாம். இங்கிருந்து இன்னும் சற்று கீழ்நோக்கியச் சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்றால் Ganga Maya Park - காணலாம். அங்கு நாங்கள் செல்லவில்லை. இந்த ராக் கார்டன் மட்டும் பார்த்துவிட்டு 12.20 மணியளவில் கிளம்பினோம்.

30. Dhir Dham Temple:

நேபாள் நாட்டிலுள்ள சிவாலயமான பசுபதிநாதர் கோவிலின் மாதிரி வடிவம்தான் இந்த தீர்தாம் டெம்பிள். இந்தக் கோவிலை 'Uka Bahadur Pradhan என்பவர் 1939 ஆம் ஆண்டு கட்டினார். நாங்கள் இக்கோவிலுக்கு 12.45 மணியளவில் சென்றோம். கோவில் கருவறை பூட்டியிருந்தது. எனவே இதன் சுற்றுவளாகத்தை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பினோம். (மார்ச் 25-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பசுபதிநாதர் கோவிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது செய்தி.) இந்தக் கோவில் டார்ஜிலிங் பொம்மை இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இக்கோவிலைவிட்டு வெளியில் வந்து அந்த பொம்மை இரயில் எஞ்சின் அருகில் சென்று அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த பொம்மை இரயிலில் டார்ஜிலிங்கை சுற்றிவர தலா 650 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த இரயில்வே நிலையத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் ஏற்கனவே சாப்பிட்ட லூனார் ஹோட்டலில் சென்று நாங்கள் இறங்கிக்கொண்டோம். இத்தோடு எங்களது சுற்றுலாவையும் முடித்துக்கொண்டோம். எங்களது வாகனத்தையும் கணக்கு முடித்து அனுப்பிவிட்டோம். சரியாக 30 இடங்களை நாங்கள் (சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் சேர்த்து) ஆறு நாட்களில் பார்த்து வியந்தோம். நாளை சென்னைக்கு இரயில் ஏற வேண்டியதுதான். பேராசிரியர் வெற்றிச் செல்வி மட்டும் கேங்டாக் செல்வார். இன்று மதியம் லூனார் ஹோட்டலில் சாப்பிட்டோம்.

சாதம், சாம்பார், தயிர் ஆகியவைகளை தனித்தனியே வாங்கி சாப்பிட்டோம். சாப்பிடும் போது, பேராசிரியர் வெற்றிச் செல்வியிடம், இவ்விடத்தையெல்லாம் எங்களுடனிருந்து சுற்றிக்காட்டியதற்கு மிக்க நன்றி, நீ இல்லையேல் நாங்கள் இங்கு வந்து பார்க்கப்போவதில்லை, என மன நெகிழ்ச்சியுடன் திருமதி.ஆர்.இலட்சுமி அவர்கள் கூறிக்கொண்டே அழுதுவிட்டார்கள். அவரைவிட்டு பிரியப்போகின்றோம் என்ற உணர்வு அச்சமயம் எங்கள் எல்லோரையும் துக்கப்படச்செய்தது. எனினும் சாப்பிட்டுவிட்டு ஒரு மணிநேரம் அங்குள்ள மார்க்கெட் வீதியில் சுற்றினோம். அங்கிருந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம். சிலத் தொழிலாளர்கள், தங்களது முதுகில் மூட்டைகளைச் சுமந்து சென்றதைப் பார்த்தோம். கேஸ் சிலிண்டர் முதற்கொண்டு அனைத்தையும் இவ்வாறே சுமந்து செல்கின்றனர். பொருள்களை எடுத்துச்செல்ல இங்கு சரக்கு வாகனங்களான ஆட்டோ முதற்கொண்டு எதற்கும் அனுமதியில்லை. (இதே நிலமைதான் சிக்கிம் மாநிலத்திலும் நிலவுகின்றது)

இன்னும் சற்று தூரம் நடந்தோம். ஒரு இடத்தில் கண் தெரியாதவர் ஒருவர் சாலையோரத்தில் நின்றுக்கொண்டு தனது உடலை அசைத்துக்கொண்டே சினிமாப்பாடல் பாடிக்கொண்டிருந்தார். இதற்காக இரண்டுபேர் மைக்செட், ஸ்பீக்கர் போன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, பாடுபவர் பக்கத்தில் சேர், டேபிள்களைப் போட்டுக்கொண்டு, நடந்துச்செல்பவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டிருந்தனர். எங்கள் எதிரிலேயே ஒருவர் நூறு ரூபாய் கொடுத்து ரசீது வாங்கியதை பார்த்தேன். இன்னும் சற்று தூரத்தில் ஒரு தாயானவள் தனது குழந்தையை வைத்துக்கொண்டு சாலையோரத்தில் அமர்ந்துக்கொண்டு ஒரு அழுக்குத்துண்டை விரித்துவிட்டு, தான் வைத்திருந்த மேளத்தை வாசித்துக்கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் யாரும் ஒரு நயா பைசாக்கூட இங்கு போடவில்லை. காரணம், இவருக்கு இதேத்தொழிலை சற்று மாற்றிச்செய்து நன்கொடை வசூலிக்கத் தெரியவில்லை.

பின்னர் மாலை 04.00 மணியளவில் நாங்கள் தங்கியிருந்த அப்சரா ஹோட்டல் சென்றடைந்தோம். அங்கு இரவு 07.30 மணிவரை இருந்துவிட்டு, அதே தெருவில் உள்ள வேறொரு சைவ விடுதிக்குச்சென்று தோசை சாப்பிட்டுவிட்டு வந்தோம். நாளை புறப்படுவதற்கு ஏதுவாக அனைத்துப் பொருள்களையும் அந்தந்த பைகளில் வைத்து எங்களை தயார் செய்துக்கொண்டோம். நாளை காலை 07.00 மணிக்கு கேங்டாக் செல்லும் கார் கிளம்பிவிடும். அதில் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் செல்வதற்கு இன்றே டிக்கெட் வாங்கிவிட்டார்கள். நாங்கள் இங்கிருந்து நியூ ஜல்பைங்குரி இரயில்வே நிலையம் செல்ல வேண்டும். அதற்கும் நாளை காலை 09.00 மணிக்கு கார் ஏற்பாடு செய்தாகிவிட்டது. பின்னர் இரவு 11.00 மணியளவில் படுத்துறங்கினோம்.

Darjeeling To New Jalpaiguri :

இன்று 2015, ஏப்ரல் 15-ம் தேதி, புதன் கிழமை. {எங்களது பயணத்தின் பத்தாவது நாள்}. காலை 06.30 மணிக்கெல்லாம் பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் அவருக்கு பிரியாவிடையளித்தோம். நான் கார்நிறுத்தம்வரை அவருடன் சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன். சரியாகக் காலை 07.00 மணியளவில் அவரது கார் கேங்டாக்கை நோக்கி கிளம்பிவிட்டது. நான் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து குளித்துவிட்டு கிளம்பினேன். 08.00 மணிக்கெல்லாம் அந்த ஹோட்டலில் ரொட்டி, பூரி சாப்பிட்டுவிட்டு, ஹோட்டல் கணக்கை முடித்துக்கொண்டு கிளம்பினோம். நாங்கள் ஏற்பாடு செய்த டவாரே காரும் சரியாக 09.00 மணிக்கு வந்துவிட்டது. அனைத்து லக்கேஜ் வகைகளையும் ஏற்றிக்கொண்டு எங்களது கார் NJP நோக்கி நகர்ந்தது. எங்களுக்கு NJP - யில் மதியம் 02.25 மணிக்கு சென்னை இரயில் கிளம்பும் நேரமாகும்.

டார்ஜிலிங்கிலிருந்து NJP செல்லும் மலைப்பாதை ஓரத்தில் பொம்மை இரயில் பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. வளைந்து வளைந்து செல்லும் பாதை எங்களுக்கு மீண்டும் உற்சாகத்தை ஊட்டியது. நாங்கள் சிலிகுரியில் சென்றுக்கொண்டிருக்கும்போது, கேங்டாக் சென்று சேர்ந்துவிட்டதாக பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களிடமிருந்து வந்தச் செய்தி எங்களுக்கு நிம்மதியை அளித்தது. எங்களது கார் ஓட்டுனரிடம், மதிய உணவிற்கு சிலிகுரியில் உள்ள குறிப்பிட்ட ஹோட்டல் பெயரைச் சொல்லி (அந்த சைவ உணவு விடுதியின் பெயர் மறந்துவிட்டேன்) அங்கு நேராக செல்லச் சொன்னோம். இரயில்வே நிலையத்தில் சைவ உணவு கிடைக்காது என்பதால், நாங்கள் அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இரயில் நிலையம் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த ஓட்டுனர் வேண்டுமென்றே ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லாமல், நாங்கள் சொல்லும்போதெல்லாம் மண்டையை ஆட்டிவிட்டு, நேரே இரயில் நிலையத்திற்கு வந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் அந்த ஓட்டுனர் மீது மிகுந்த கோபம் வந்துவிட்டது. அந்த கோபத்தை ஓரளவிற்கு அவனிடம் காண்பித்துவிட்டு, அவன் கணக்கை முடித்து அனுப்பினோம்.

New Jalpaiguri To Chennai :

வழக்கம்போல் இரண்டு சுமை தூக்கிகள் மூலம் எங்களது பைகளையெல்லாம் திருவனந்தபுரம் செல்லும் இரயில் நிற்கும் நடைபாதையில், .சி.கோச் பி2 நிற்கும் இடத்தின் அருகில் வைக்கச்சொன்னோம். நாங்கள் 12.40 மணிக்கெல்லாம் இரயில்வே நிலையம் வந்தாச்சு. B2 கோச் நிற்கும் இடத்தில் வந்து அமர்ந்தாச்சு. எங்களின் வயிற்றுப்பசி, எதையாவது ருசி என்றது. ஏதேனும் சைவ உணவு கிடைக்காதா? என இரயில்வே நிலையம் முழுதும் தேடினோம். எங்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசு நடத்தும் இரயில்வே ஓட்டலில் சென்று கேட்டால், சைவ உணவும், அசைவ உணவும் தனித்தனியாக இருக்கின்றது. ஆனால் இவை இரண்டிற்கும் ஒரே சமையல் அறைதான் என்று வெறுப்பேத்தினர். அங்கும் நான் எதுவும் வாங்கவில்லை. பின்னர் ஒரு 'ஆப்பி' கூல் டிரிங்ஸ் வாங்கி சாப்பிட்டேன். மற்றும் முனைவர் .நலங்கிள்ளி வாங்கிக்கொடுத்த அன்னாச்சிப்பழம் சிறிது சாப்பிட்டுவிட்டு இன்றைய மதிய உணவை முடித்துக்கொண்டேன்.

எங்களது இரயில் (12516 - GHY-TVC Express) சரியாக 02.15 மணியளவில் வந்து சேர்ந்தது. B2 பெட்டியில் 42,43,45,46,48 என்கின்ற ஐந்து எண்கள் கொண்ட படுக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்விருக்கையைத்தேடி அங்கு எங்களது பைகளை எல்லாம் சரியாக அடுக்கி வைத்துவிட்டோம். வரும்போது எங்களுக்கு மூன்று இருக்கைகள் கீழ்த்தளத்தில் கிடைத்தது. ஆனால் தற்போது போகும்போது எங்களுக்கு ஒரு இருக்கைக்கூட கீழ்த்தளத்தில் கிடையாது. எனினும் அமர்ந்துக்கொண்டுச் செல்ல எந்த சிரமும் எங்களுக்கு இல்லை. எங்கள் இரயில் சரியான நேரமான 02.25 மணிக்கு கிளம்பிவிட்டது. மாலை 06.30 மணிக்கு இரயில் மால்டா டவுன் சென்று 15 நிமிடம் நிற்கும். நாங்கள் வரும்போது, இந்த நிலையத்தில்தான் இட்லி விற்றுக்கொண்டிருந்தார்கள். எனவே, அங்கே இரவு டிபனுக்காக இட்லி பார்சல் வாங்கிக்கொள்ளலாம் எனப் பயணித்தோம்.

மாலை 06.35 மணியளவில் அந்த குறிப்பிட்ட மால்டா டவுன் நிலையம் வந்தடைந்தோம். நாங்கள் இங்கே இறங்கி இட்லிக்காக அலைந்தோம். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இங்கு தென்னிந்திய உணவகம் என்றப் பெயரில் அரிசி சாதம் மற்றும் அசைவ உணவு வகைகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அங்கும் எதுவும் வாங்கவில்லை. பின்னர், பூரி மட்டும் விற்கும் நபர்களிடம், பூரி பார்சல் வாங்கிக்கொண்டு இரயில் ஏறினோம். இரவு 08.00 மணியளவில் அதனைச் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டோம்.

நாங்கள் வந்த இரயிலைவிட இந்த இரயில் பெட்டி பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் .சி. காற்று வெளியில் செல்லும் வகையில் ஒருபக்கக் கதவை சரியாக மூடமுடியாமல் திறந்தே இருந்தது. இருப்பினும் இந்தப்பெட்டிக்குள் .சி.யின் குளுமை இருந்தது. எங்களில் திருமதி.ஆர்.இலட்சுமி அவர்கள் மட்டும் மேல் இருக்கையில் ஏறி படுக்க முடியாத நிலமையில் இருந்ததால், எங்களுடன் பயணித்த கேரளக் குடும்பத்தாரிடம் பேசி, அவர்களின் கீழ் இருக்கையினை கேட்டுப் பெற்றோம். அதில் திருமதி.ஆர்.இலட்சுமி அவர்கள் படுத்துக்கொண்டார்.

இன்று 2015, ஏப்ரல் 16-ஆம் தேதி, வியாழக்கிழமை. {எங்களது பயணத்தின் 11-வது நாள்}. காலை 06.30 மணிக்கெல்லாம் எழுந்து இரயிலில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, 07.30 மணியளவில் டீ அருந்தினோம். காலையில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. எல்லாம் அசைவ உணவாகவே விற்பணை செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு காலத்தைக் கழித்தோம். மதியம் இரயிலில் வெறும் சாதம் மட்டும் வாங்கிக்கொண்டோம். (இரயிலிலும் அசைவ உணவு விடுதிதான் இருக்கின்றது. மத்திய அரசு எப்படி இதற்கு அனுமதியளிக்கின்றது எனத் தெரியவில்லை.) நாங்கள் வரும்போது எடுத்துவந்திருந்த புளியோதரைக்குழம்பு மீதம் இருந்தது. அதனைப் போட்டு சாப்பிட்டுவிட்டு ஓரளவிற்கு நிம்மதியடைந்தோம். இரவு சாப்பிட ஏதோ ஒரு நிலையத்தில் விற்ற இட்லியை வாங்கி சாப்பிட்டுவிட்டு இன்றைய நாளையும் இரயிலில் ஓட்டினோம்.

இன்று 2015, ஏப்ரல் 17-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை. {எங்களது பயணத்தின் 12-வது நாள்}. காலை 03.30 மணிக்கெல்லாம் இரயிலில் தூங்கிக்கொண்டிருந்த நாங்கள் எழுந்துவிட்டோம். எங்களது பைகளை எல்லாம் எடுத்து உடனே இறக்குவதற்காக எடுத்து வைத்தாகிவிட்டது. காலை 04.30 மணியளவில் எங்கள் இரயில் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. உடனே எங்களது பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு இறங்கினோம். மீண்டும் இரண்டு சுமைத்தூக்கிகள் உதவியுடன் வெளியில் எடுத்துவந்து வைத்துவிட்டு, ஒரு டாக்சி பிடித்துக்கொண்டு காலை 05.15 மணிக்கெல்லாம் எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்துவிட்டோம். இங்கு எங்களுக்கு காலை 08.15 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் செல்ல திருச்சி விரைவு இரயிலில் (எண்:16853) முன்பதிவு செய்திருந்தோம். இங்கேயும் இரண்டு சுமைதூக்கிகள் மூலம் எங்களது பைகளை எல்லாம் எடுத்து வந்து இந்த இரயில் நிற்கும் இடத்தில் வைத்தாகிவிட்டது. (ஏற்கனவே இந்த இரயில் அந்த நடைபாதையில் நின்றுக்கொண்டிருந்தது) காலை டிபன், எழும்பூர் இரயில்வே நிலையத்திற்கு வெளியில் இருக்கும் வசந்த பவனில் சாப்பிட்டோம்.

Chennai To Cuddalore:

காலை 07.45 மணிக்கெல்லாம், எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை எண்களான 49,50,51,52,53 ஆகிய இடங்களில் அமர்ந்தோம். சரியாக 08.15 மணியளவில் எங்கள் இரயில் கிளம்பியது. விழுப்புரத்தில் வந்து சிறிது நேரம் நின்றது. ஒரு பத்து நாட்கள், வியர்வையே பார்க்காத எங்கள் தேகத்தில் வியர்வை முத்துக்கள் தங்களது முகத்தைக்காட்டத் துவங்கிவிட்டன. வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக மதியம் 12.10 மணியளவில் நாங்கள் நல்லபடியாக திருப்பாதிரிப்புலியூர் நிலையத்திற்கு வந்திறங்கினோம். அங்கிருந்து ஆட்டோ பிடித்து அவரவர்கள் அவரவர் வீட்டிற்கு கிளம்பினோம்.

முடிவுரை:

சிக்கிம் மாநிலம் மற்றும் டார்ஜிலிங் சுற்றுலாவிற்கு என்னையும் தங்களுடன் அழைத்துச் சென்ற முனைவர் .நலங்கிள்ளி மற்றும் திருமதி..சுசீலா அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னுள்ளே அமர்ந்து என்னுடன் சுற்றுலா வந்திருந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் எனது நன்றி. இந்த பன்னிரு நாட்களில் நான்பெற்ற அனுபவத்தை, எனது சிந்தை களித்ததை 'எனது சிந்தனையில் சிக்கிம்' என்றத்தலைப்பில் இங்கு எடுத்து எழுதிவிட்டேன். எனது சிக்கிம் பயண அனுபவ நூல், எதிர்காலத்தில் சிக்கிம் செல்ல இருக்கும் தமிழர்களுக்கும், சிக்கிம் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமுடையவர்களுக்கும், இந்நூல் முழுமையாக உதவாவிட்டாலும், ஓரளவிற்கேனும் அவர்களுக்கு ஒளி கொடுக்கும் என்று நம்புகின்றேன். இந்நூலைப்பற்றிய தங்களுடைய கருத்துக்களை கூற விரும்புவோர்கள் என்னுடைய கைப்பேசிக்கு 9445545475 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அல்லது www.vallalarr.blogspot.in என்ற என்னுடைய வலைப்பூவிலும் பின்னோட்டம் இடலாம். அல்லது tmramalingam@hotmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.facebook.com/ram.lingam.330 என்கின்ற எனது முகநூலில் தொடர்பு கொள்ளலாம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

பழமைத் தெரியாது புதுமை யோடிருக்கும்
அழகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி. (இராமலிங்க அகவல்-1478)

மனிதனுக்கு மரணமில்லை!
அலைகள் ஓய்வதில்லை!
பயணங்கள் முடிவதில்லை!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.