எனது சிந்தனையில் சிக்கிம் - 7
10. Baba Harbhajan
Singh Temple (Nathula):
இன்று 2015, ஏப்ரல் 10-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை. {எங்களது பயணத்தின் ஐந்தாம் நாள்} காலையில் எழுந்து இன்றைய சுற்றுலா பயணத்திற்கு தயாரானோம். நேற்றய சாதம் அதிக அளவில் மீந்துவிட்டதால், அதனை புளியிட்டு கிண்டி புளிசாதமாகக் காலையில் எல்லோரும் சாப்பிட்டோம். மதிய உணவு போகுமிடத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டோம். அதற்குள் கார் ஓட்டுனரிடமிருந்து நல்லச் செய்தி கிடைத்தது. இன்று நாதுலா செல்ல விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் அனுமதி கிடைத்துவிட்டதாகப் போன் செய்தார். எட்டு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும், இல்லையேல் போகும் வழியில் போக்குவரத்து அதிகரித்துவிடும், என்று துரிதப்படுத்தினார். ஆனாலும் நாங்கள் 08.30 மணிக்குத்தான் கிளம்பினோம். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்களும் எங்களை காரில் அனுப்பிவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டார். நாங்கள் செல்லும் வழியில் ஏதோஓரிடத்தில், நாதுலா செல்லும் அனுமதி சீட்டினை எங்களது கார் ஓட்டுனர் வாங்கிக்கொண்டார். அந்த அனுமதி சீட்டினை அப்படியே எனது கேமராவில் ஒரு க்ளிக்கில் பதிவுச்செய்துக்கொண்டேன். சரியாக 09.15 மணிக்கு நாதுலா செல்லும் மலைப்பாதை தொடக்கத்தில் உள்ள செக்போஸ்ட்டில் எங்களது அனுமதி சீட்டினைக்காட்டி உள்ளே செல்ல அனுமதி வாங்கினார் எங்கள் ஓட்டுனர். இங்கே ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் முன்னர் வாங்கிய அனுமதி சீட்டிற்கு மறைமுகமாக 500 ரூபாய் செலவாகியது. எங்களது கார் செக்போஸ்ட்டைத்தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. அரைமணி நேரம் சென்று நின்றுவிட்டது. எங்களுக்கு முன்னர் சுமார் 60 கார்கள் இடது ஓரத்தில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தது. செல்லும் வழியில் மண் சறிவால் மலைப்பாதை தடைபட்டுள்ளதால், அதனை சரிசெய்வதாகப் பேசிக்கொண்டார்கள். அதற்குள் எங்களுக்கு பின்னாலும் அதிகமான கார்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தன. அந்த மண் சறிவைக் கடப்பதற்கே ஒரு மணிநேரம் தாமதமாகியது.
மனித மனங்களைப் போல, மலைப்பாதை வளைந்தும் நெலிந்தும் இடைவிடாமல் மேலே மேலே சென்றுக் கொண்டே இருந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் எங்களைச் சுற்றிலும் பனிமலைகள் சூழக்கண்டோம். ஆங்காங்கே மலையடிவாரத்தில் தேங்கி நிற்கும் நீர் ஏறிகள் அனைத்தும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தன. வள்ளலாரின் கூற்றுப்படி இங்கே, இயற்கையானது விளக்கமாகவும், இயற்கை என்பது உண்மையாகவும், இயற்கை என்பது இன்பமாகவும் இருந்ததை உள்ளபடியே நான் உணர்ந்தேன். ஏன் பனித்துளிகள் வெள்ளையாக இருக்க வேண்டும்? ஏனென்றால், அதுதானே இயற்கையின் வண்னம். வண்ணம் என்றுகூட சொல்ல முடியாத, ஒன்றுமில்லாத ஒரு நிறம் அது. ஆனால் அது தன்னுள் எல்லா நிறத்தையும் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட உயர்ந்த வெண்மை நிறம் கொண்ட பனித்துளிகளை, இறைவன் இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில்தான் அருளாகப் பொழிகின்றான். வள்ளலாரின் உருவம்கூட, நடமாடும் பனிமலைப்போல வெள்ளை நிறத்தால் அருளப்பட்டிருப்பதை நினைக்கும்போது, இங்குள்ள மலைகளெல்லாம் எனக்கு வள்ளலாரின் உருவத்தையே என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. இறைவன்கூட தான் வணங்குவதற்கு ஒரு உருவத்தை உருவாக்கினான். அந்த உருவம்தான் இப்பனிமலைகள். ஆம்... இது இறைவனின் உருவ வழிபாட்டுத்தலம்.
நாங்கள் செல்லும் வழி எங்கும் ஆங்காங்கே இந்திய இராணுவ வண்டிகளும், இராணுவத்தளங்களும் காணப்பட்டன. இராணுவ வாகனங்களின் சக்கரங்களில் இரும்புச்சங்கிலிகள் பிணைக்கப்பட்டு இருந்தன. இந்தப் பனிச் சாலையில் வழுக்காமல் செல்ல இப்படி சங்கிலியைப் பயன்படுத்துகின்றனர். தற்போது நாங்கள் பார்க்க வேண்டிய சங்கு ஏரி (Tsomgo Lake) எங்கள் கண்முன்னே வந்தது. ஆனால் அங்கு கார் நிற்கவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அதனையும் கடந்து எங்களது கார் உயரேச் சென்றது. (இங்கே நான் குளிரை உணர்ந்ததால், உடனே Jarkin-ஐ எடுத்து அணிந்துக்கொண்டேன்) இவ்வளவு உயரத்திலும் சில மக்கள் குடியிருப்புகளை கண்டோம். மரக்கட்டையாலான வீடுகள் என நினைக்கின்றேன். எல்லா வீட்டின் கூரையிலும் பனிக்கொட்டிக்கிடந்தது. இராணுவ முகாம்களும் அப்படித்தான் இருந்தன. ஓரிடத்தில் சாலைகளில் படர்ந்தப் பனித்துளிகளை வாகனம் மூலம் அகற்றும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மலையடிவாரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாக் எருமைகள் மேய்ந்துக்கொண்டிருந்தன. அவ்வளவு உயரத்திலும் ஒரு தகரக்கொட்டகையில் Bank of India வங்கிக்கிளை ஒன்று செயல்படுவதைக் கண்டேன். இந்த வங்கிச் சேவைகளுக்கு ஒரு எல்லையே இல்லையா? என்று வியந்தேன். ஆங்காங்கு சாலைக்கு வலதுபுறத்தில் 'உங்களை சீன இராணுவத்தினர் கண்கானிக்கின்றனர்' என்ற பொருள் படும்படியான பலகைகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. சரியாக 12.25 மணிக்கு பாபா கோவிலுக்கு வந்தடைந்தோம். கேங்டாக்கிலிருந்து மூன்று மணிநேரத்தில் இந்த பாபா கோவிலுக்கு வந்துவிடலாம். வழியில் சாலைப்பழுதால் நாங்கள் இங்குவர நான்கு மணிநேரம் ஆகியது. இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 12651 அடி உயரத்தில் இருக்கின்றது. இதற்கு முன்னர் இதே பாபா கோவில், இதேப் பகுதியில் சற்றுத்தள்ளி இருந்தது. அதன் முந்தைய வடிவமைப்பினையும் சற்று மாற்றி அமைத்திருக்கின்றார்கள். இதனையும் கடந்துதான் நாம் நாதுலா பாஸ்சுக்கு செல்ல வேண்டும். ஆனால் அங்குச் செல்ல தற்போது யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. எனவே நாம் பாபா கோவிலின் வரலாற்றைப் பார்க்கும் முன்னர் இந்த நாதுலா பாஸ் பற்றி பார்த்துவிடுவோம்.
நாதுலா பாஸ் (Nathula Pass):
14790 அடி உயரத்தில் கடுங்குளிர் கொண்ட இந்த நாதுலா (நாது லா எனப்பிரித்து எழுதுவதுதான் சரி. நாது என்றால் கேட்கும் செவிகள் எனப்பொருள். லா என்றால் கணவாய். இரண்டு மலையடிவாரத்திற்கு இடையிலுள்ள இயற்கையான ஒற்றையடிப்பாதைப் போன்ற வழி) தற்போது இந்திய சீன எல்லைகளாக உள்ளன. உண்மையில் இது திபெத்தின் எல்லையாகும். சீனா அநியாயமாக திபெத்தை ஆக்ரமிப்பு செய்தப்பிறகு இவ்விடம் நமக்கு சீன எல்லையாக மாறிவிட்டது. 2014-ஆம் ஆண்டு நமது பாரதப்பிரதமரை சந்தித்த சீன அதிபர், இந்த நாதுலா வழியினை இந்திய யாத்ரீகர்களுக்காக திறந்துவிட ஒப்புதலளிக்கப்படும் எனச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முன் பழைய சீன அரசுக்கும் இந்தியாவிற்கும் முக்கிய வழித்தடமாக இது இருந்தது. பல்வேறு ஆபத்துக்களையும் தடைகளையும் கொண்டதாக இந்த மலைப்பாதை இருந்தது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த நாளில் யாக் எருமையின் மீது அமர்ந்துக்கொண்டு மிகச்சிரமப்பட்டு மக்கள் பயணம் செய்துள்ளனர். சீனாவிலிருந்து திபெத்திய கடுங்குளிர் பாலைவனத்தைத் தாண்டி 14790 அடி உயர நாதுலாவைக் கடந்து கொல்கத்தாவைச் சென்றடையும் இந்தப் பாதைக்கு 'ஓல்ட் சில்க் ரூட்' என்று பெயர். இதே வழியாகத்தான் நாமும் சீனாவிற்கு செல்லவேண்டும். புராதனப் பெருமை மட்டுமல்ல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. 1956-ஆம் ஆண்டு தற்போதுள்ள 14-வது தலாய்லாமா இந்தியாவிற்கு இந்த வழியாகத்தான் அடைக்கலம் தேடி தப்பிவந்தார். ஏழாம் அறிவு-நமது தமிழகத்தைச் சேர்ந்த போதி தர்மர்கூட இந்த வழியாகத்தான் சீனா சென்றிருக்கக்கூடும். தற்போது இக்கணவாய் வர்த்தகத்திற்கோ யாத்திரைகளுக்கோ பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் எந்நேரமும் இந்திய-சீன இராணுவத்தினர் காவல் புரிந்து வருகின்றனர். 14700 அடி உயரத்தில், பனியும் குளிரும் சூழ்ந்த இடத்தில், இருநாட்டு இராணுவ வீரர்களையும், இருநாட்டு எல்லையில் சென்று பார்ப்பதுதான் இந்த நாதுலா பாஸ் சுற்றுலாவின் பாக்கியம். புதன், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி பெற்று இங்குச் செல்லமுடியும். எங்களுக்கு இந்த அருமையான வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் வெள்ளிக்கிழமையில் இந்தப்பயணத்தை மேற்கொண்டதால், எங்களால் நாதுலா பாஸ் செல்ல முடியவில்லை. ஏறத்தாழ இதன் அருகில் சென்றும் நாதுலா பாஸ் பார்க்கமுடியாதது உண்மையில் வருத்தமாக உள்ளது. அடுத்து நாங்கள் தரிசித்த பாபா கோவில் பற்றி தற்போது பார்ப்போம்.
ஜேலேப்லா பாஸ் மற்றும் நாதுலா பாஸ் ஆகிய இரு மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோவில் உள்ளது. யார் இந்த பாபா? பார்ப்போம் வாருங்கள்.... இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா? இந்தியாவின் பிரமோஸ் ஏவுகனைகளோ, சுகாய் போர் விமானங்களோ அல்ல. சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி. அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் 'பாபா ஹர்பஜன் சிங்'. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். 1968-ஆம் ஆண்டு சிக்கிம்மில் உள்ள நாதுலா எல்லைக்கு மாற்றப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச் சண்டைகள் நடைபெற்றுவந்த நேரம். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது.
அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார். இதனை கனவு கண்ட வீரர் அலட்சியப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதய வழக்கப்படி, இறந்த வீரர்களின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.) கனவில் தெரிவித்த அதே இடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால், பட்டாலியன் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்போது ஹர்பஜன் சிங், வீரர்களின் கனவில் வந்து, 'நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், உங்களுக்காக எல்லையில் காவல் காக்கின்றேன், சீனா - இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சனை எழுப்ப முயன்றாலோ அதனை மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கின்றேன்' என்று கூறிவந்துள்ளார்.
இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.
ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம். (ஹர்பஜன் சிங் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்ய முடியாது. அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடந்தது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்துவிட்டது. இதற்குள்ளாக இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் இவரை பணியிலிருந்து விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் என்பவர் 'பாபா ஹர்பஜன் சிங்' என்று வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பான 'கிரெப்' (GREF) ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு இரண்டு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகின்றார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகின்றது. பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்.
மேற்கண்ட (கற்பனை) நிகழ்வுகளை நாம், கதையாகவும் கொள்ளலாம். உண்மையாகவும் கொள்ளலாம். அது அவரவர் மன நிலையைப்பொறுத்தது. நான் இதனை ஒரு கற்பனை என்றே கருதுகின்றேன். இருந்தாலும் பக்தனுக்கு கடவுள் நம்பிக்கைப் போல, இக்கற்பனைகள் நமது இந்திய இராணுவ வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிப்பதால், இக்கற்பனைகள் என்றும் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், இருக்கும். இவ்வுலகில், கற்பனைக் கடவுள்களுக்கு கோடிக்கணக்கில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கையில், நம்முடன் வாழ்ந்த ஒரு உண்மையான இராணுவ வீரருக்கு கோவில் இருப்பது தவறில்லைதான். அவரது கோவிலில் அவரை நான் வணங்குகின்றேன். எனது பக்கத்தில் முனைவர் அ.நலங்கிள்ளி அவர்கள் கொஞ்சம் ஓவராகப்போய் தனது காலிலுள்ள மிதியடியையும் அகற்றிவிட்டு வெறுங்காலுடன் மரியாதையாக வணங்கினார். அதைப்பார்த்து நானும் எனது மிதியடியைக் கழற்றிவிட்டு நின்றுப் பார்த்தேன். அரை நிமிடம்கூட என்னால் நிற்க முடியவில்லை. அது மரப்பலகையாலானத் தளம். அதிலும் அந்த சில்லுணர்வு மிக அதிகமாக இருந்தது. நெருப்பை மிதித்தது போல் இருந்தது, நான் உடனே எனது காலணியினை போட்டுக்கொண்டேன். அக்கோவிலில் சிங் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு இராணுவ வீரர் அங்கு வரும் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரது பக்கத்தில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இது போல் பல இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
உப்பு சத்தியாகிரகத்தில் காந்திஜி அவர்கள், குனிந்து தனது கையாலே ஒரு கைப்பிடி உப்பை எடுத்து, இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டியது போல, நானும் இங்கு ஒரு கைப்பிடி திடப்பனித்துளிகளை குனிந்து எடுத்தேன். இப்படி எடுப்பதும் ஒவ்வொரு இந்தியர்களின் உரிமையல்லவா?! இதற்காகத்தானே பாபா ஹர்பஜன் சிங் போன்றோர் நமது எல்லையைப் பாதுகாக்கின்றனர். இவரது கோவிலுக்கு பக்கத்தில் ஒரு மிகநீண்ட தேசியக்கொடி கம்பீரமாகப் பறந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது நமது மனதிலும் தேசப்பற்று காற்று வீசுவதை உணரலாம். இன்னொரு பக்கத்தில், நம்மிடம் கட்டணம் வாங்கிக்கொண்டு, நாம் இங்கு வந்து சென்றதற்கான சான்றாக, நமது பெயரில் ஒரு சான்றிதழ் கொடுக்கின்றார்கள். இச்சான்றிதழில் இராணுவ கமாண்டரின் கையொப்பம் இருக்கும். நாங்கள் யாரும் இச்சான்றிதழை வாங்கவில்லை. இக்கோவிலுக்கு எதிர்புறத்தில் மிக நீளமான பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இந்தியாவின் தேசிய மிருகம், தேசியப்பாடல், தேசிய கீதம், தேசியப்பறவை, தேசியச்சின்னம், தேசியக்கொடி போன்றவைகளைப்பற்றி சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 'வெள்ளிப்பனி மலையின் மீது உலாவுவோம்' என்ற பாரதியின் பாடல்வரிகளுக்கேற்ப நாங்கள் ஆசைதீர வெள்ளிப்பனி மலையில் உலாவினோம்.
இறைவன் சிவன் உருவம் (Lord Shiva Idol):
பாபா கோவிலுக்கும் சற்றுத் தூரத்தில் சிவபெருமானின் பெரிய அமர்ந்த நிலையில் தியானம் செய்வதைப்போல உள்ள சிலை, வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது. இங்கிருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் அச்சிலை உள்ளது. யாரும் நடந்துச் சென்று பார்த்து வரலாம். ஆனால் நாங்கள் உட்பட யாரும் அதனருகில் செல்லவில்லை. இங்கிருந்தே அச்சிலையை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இந்தியாவிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள சிவனின் சிலை இதுதான். 13000 அடி உயரத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்மலையிலுள்ள தாவரங்களுக்கோ விலங்கினங்களுக்கோ எவ்வித இடையூறுமில்லாத இடத்தைத் தேர்வு செய்து இச்சிலையினை அமைத்துள்ளனர். 12 அடி உயரம் கொண்ட இச்சிலையானது, மிக உயர்ந்த தரத்திலான பைபர் கிளாஸ்சில் (Fibre Glass) செய்யப்பட்டுள்ளது. இது ரிசிகேசில் (Rishikesh) உள்ள சிவன் சிலையின் மாதிரி வடிவமாகும். இச்சிலைக்கருகில் மிக அழகான ஒரு சிறிய அருவியும் (Namnang Chho Water Falls) மேலிருந்து சிவனை நோக்கி வந்து தொப தொப என்று வீழாமல் சிவ சிவ என்று வீழ்ந்துக்கொண்டிருப்பது பார்ப்பதற்கு தெய்வீகமாக உள்ளது. பாவம் சிவபெருமான், இந்தப் பனிப்பொழிவிலும் வெற்று மேனியுடன், சட்டைக்கூடப் போடாமல் கடுந்தவம் புரிந்துவருகின்றார். (இவர் ஏன் தவம் புரிய வேண்டும்?) பேராசிரியர் வெற்றிச் செல்வி எனக்கு Jarkin கொடுத்து உதவியது போல, இந்த சிவபெருமானுக்கும் யாராவது Jerkin கொடுத்து உதவினால் நல்லது. சுமர் ஒரு மணி நேரம் இந்த பாபா கோவிலை பார்த்துவிட்டு, இங்கிருந்துச் செல்ல மனமில்லாமல் வேறு வழியின்றி வந்த வழியே கீழ்நோக்கி பயணித்தோம்.
(தொடரும் - 7)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.