Saturday, June 13, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 5

எனது சிந்தனையில் சிக்கிம் - 5



1. Directorate of Handicrafts and Handloom Government of Sikkim:

நாங்கள் முதன்முதலில் சென்று    பார்த்த இடம், கேங்டாக்கில் ஜீரோ பாயிண்டில் அமைந்துள்ள 'கைத்தறி மற்றும் கைவினை இயக்குநரகம்' ஆகும். இது சிக்கிம் மாநில அரசால் நடத்தப்படும் விற்பணை மற்றும் கண்காட்சி இடமாகும். உள்ளூர் கலை மற்றும் கைவினை மட்டுமின்றி நேபாளம், திபெத் நாடுகளின் கைவினை பொருட்களையும் இங்கு காணமுடிந்தது. இங்கு நாங்கள் எதுவும் வாங்கவில்லை. சும்மா வெறுமனே பார்த்து இரசித்துவிட்டு, ஒரு மணிநேரத்தில் கிளம்பிவிட்டோம். இதன் நுழைவாயிலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கிளம்பும்போது இந்த இயக்குநரகத்தின் எதிர்புறத்தில் 'ராஜ்பவன்' நுழைவாயிலையும் பார்த்தோம்.

2. Monastery - (Buddha Temple):

அடுத்த அரைமணி நேரத்தில் ஏதோ ஒரு புத்த மடாலயத்திற்கு எங்களது கார் சென்று நின்றது. கார் நிறுத்தத்தின் கீழுள்ள மலைப்பாதைக்கருகில் இராணுவ வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். பார்க்கவே அழகாக இருந்தது. உடனே புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பிறகு அந்த புத்தாலயத்திற்குச் செல்ல சற்று கீழ்நோக்கி அரை கிலோமீட்டர் நடந்துச்சென்றோம்.      அந்த திபெத்திய புத்தாலயத்திற்கு உள்புறம் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளதால், கண்களால் மட்டும் பார்த்துவிட்டு வெளியில் வந்தோம். உள்ளே பெரிய புத்தர் சிலைகள் இருந்தன. புத்தரது வரலாற்று நினைவுகளை மிக அழகாக ஓவியங்களாகத் தீட்டியிருந்தனர். சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு புத்தத்துறவி உள்ளே வருவோரை எல்லாம் கண்காணித்துக்கொண்டிருந்தார். இதன் வெளிப்புறம் நன்கு விசாலமான இடமாக இருந்தது.
அங்கிருந்து சுற்றியுள்ள பசுமையான மலைக்காட்சிகளை பார்த்து இரசிக்க முடிந்தது. நாங்கள் ஐவரும் அங்கு சில இடங்களில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். இந்த புத்தாலயத்தின் பெயர் என்னவென்று எனக்குத்தெரியவில்லை. குறிப்பெடுக்க மறந்துவிட்டேன். இங்கு ஒரு மணிநேரம் செலவு செய்துவிட்டு காரிலேறி கிளம்பினோம்.

3. Sherapa Traditional Dress "Tashi View Point" :

அடுத்த அரைமணித்துளியில் எங்களது கார் 'டாசி வியூ பாயிண்ட்' வந்து நின்றது. இது மலைமீதுள்ள ஒரு சிறிய மலைக்குன்று எனச்சொல்லலாம். அம்மலைக்குன்றுக்குக் கீழே, அதாவது நாங்கள் நிற்கும் பகுதிக்கருகில் தேனீர் விடுதியும் சில அலங்காரப் பொருட்கள் விற்கும் கடையும் இருந்தன. நாங்களனைவரும் அக்குன்றின் மேலே சென்றோம். அக்குன்றின் மேலேயிருந்து கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தை பார்க்கக்கூடிய பார்வையிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அப்பார்வை இடத்தில் நின்றுக்கொண்டு நாங்களனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நாங்கள் எடுத்த புகைப்படத்தைத்தான் பார்க்கமுடிந்ததே அன்றி எங்களால் கஞ்சன்ஜங்கா சிகரத்தைக்காண முடியவில்லை. அம்மலைச்சிகரத்தை, யார் கண்ணும் பட்டுவிடாதப்படி மேகங்கள் மிகப்பத்திரமாக மூடிக்கொண்டிருந்தன. இங்கு இச்சிகரத்தை தரிசிக்க, சரியான நேரம் காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரையும், மாலை 06.30 மணியிலிருந்து 07.30 மணிவரையும் என இயற்கை நமக்கு நேரம் ஒதுக்கியுள்ளது. ஆனால் நாங்கள் அங்குச் செல்லும்போது நேரம் காலை 11.15 ஆகும். எனவே தரிசிக்கமுடியவில்லை.



இந்தக்குன்றிலுள்ள கஞ்சன்ஜங்கா பார்வை மையத்தைக் கட்டியவர், சிக்கிம் மன்னர் "Tashi Namgyal" ஆவார். எனவே இக்குன்றுக்கு அவரது பெயரையே வைத்துவிட்டனர். Sherpa என்றால், இமாலய பகுதியில் வசிக்கும் மக்களான நேபாள் மற்றும் திபெத் மக்களைக் குறிக்கும். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் கலைப்பொருட்களை குன்றின் மேலேயுள்ள கடைகளிலோ அல்லது கீழேயுள்ள கடைகளிலோ நாம் வாங்கலாம். பெரும்பாலும் நாம்காணும் அந்தந்த பகுதிக்குள்ளே கடைகளிருந்தால் அங்கேயே நாம் வாங்குவதை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேப்பொருளை அப்பகுதியினைவிட்டு ஓரடி தள்ளி இருக்கும் கடைகளில் வாங்கினால்கூட அங்கு விலை அதிகமாக கூறுகின்றார்கள். திருமதி..சுசீலா அவர்கள் இங்கு மிக அழகாக இருந்த சுருக்குப்பைகளை வாங்கினார்கள். பிறகு கீழிறங்கி நடந்து வந்தோம். கீழே உள்ள தேனீர் கடைக்குச் சென்றோம். ஆனால் அங்கு ஒரே நாற்றம். அசைவ சிற்றுண்டி செய்துகொண்டிருந்தார்கள். எனவே நாங்கள் அங்கு தேனீர் அருந்தவில்லை. அச்சமயம் அக்குன்றின் கீழே சில தமிழர்களையும் பார்க்க நேர்ந்தது. அவர்களிடம் பேசியதில், அவர்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். கடந்த இரண்டு நாட்களாக வானிலை சரியில்லாததால் 'நாதுலா' செல்ல சிக்கிம் அரசு அனுமதியளிக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். நாதுலா செல்ல ஒவ்வொருவரும் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே அரசிடம் அனுமதி பெறவேண்டும். நாங்கள் அனைவரும் இன்று காலையே எங்களது புகைப்படங்கள் மற்றும் முகவரிக்காண அடையாள அட்டையின் நகல்களை எங்கள் கார் ஓட்டுனரிடம் கொடுத்து அனுமதிக்காக அரசிடம் கொடுத்தாகிவிட்டது. நாளை அவ்விடம் செல்ல திட்டமிட்டிருக்கின்றோம். அனுமதி கிடைக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம். அந்தத் தமிழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி அடுத்த இடம் நோக்கிச் சென்றோம்.

Ganesh Tok:

அடுத்ததாக நாங்கள் பகல் 12.00 மணியளவில் கணேஷ் டாக் சென்றடைந்தோம். 'டாக்' என்றால் என்ன பொருள் என எங்களது கார் ஓட்டுனரிடம் கேட்டேன். டாக் என்றால் 'இடம்' (Place) எனப்பொருளாகும் என அவர் கூறினார். 'கணேஷ் டாக்' என்றால் கணேஷ் இருக்குமிடம் எனப்பொருள். இந்து மதக்கடவுள் இருக்குமிடத்தை 'டாக்' அல்லது 'மந்திர்' எனவும், புத்த மதக் கடவுள் இருக்குமிடத்தை 'மோனாஸ்ரீ' (திபெத் புத்தா) அல்லது பகோடா (ஜப்பான் புத்தா) எனவும் இம்மாநிலத்தில் அழைக்கின்றனர். நாங்கள் இங்கு இறங்கியவுடன், கார் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள தேனீர் கடைக்குச் சென்று தேனீர் அருந்தினோம். புதினா இலைச்சுவையுடன் தேனீர் மிக அருமையாக இருந்தது. இந்தக்கடையில் பலவகை சுவையுடன் தேனீர் தயாரித்துக் கொடுக்கின்றார்கள்.


கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்தில் இந்த கணேஷ் டாக் குன்று அமைந்துள்ளது. இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கணேஷ் படமானது, தமிழ்நாட்டிலுள்ள விநாயகர் படத்தை ஒத்துள்ளது. மேலேயுள்ள கணேஷ் இருக்குமிடத்தில் ஒரே நேரத்தில் பத்து நபர்களே நின்று வணங்கக்கூடிய வகையில் சிறிய இடமாக உள்ளது. உள்ளே இரண்டு நபர்கள் காவி உடையுடன் அமர்ந்து அக்கோவிலை ஆட்சி செய்துவருகின்றார்கள். அதன் எதிர்புறத்தில் அதே அளவுள்ள Observatory Tower (சுற்றியுள்ள இடங்களை அமர்ந்துப் பார்க்கக்கூடிய சிறிய அறை) இருந்தது. அதில் சென்று சுற்றிலும் உள்ள இடங்களைப் பார்த்தோம். சில இடங்களிலிருந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். இங்கிருந்துப் பார்த்தால் சுற்றிலுமுள்ள மலைவாசஸ்தலங்களைப் பார்க்கலாம். ஒரு மிகநீண்ட டி.வி.டவரும் நமது பார்வைக்குத் தெரிகின்றது. இங்கிருந்து ராஜ்பவனின் சுற்றுச்சுவற்றையும் பார்க்கலாம். வானிலை நன்றாக இருந்தால் கஞ்சன்ஜங்கா சிகரத்தையும் காணமுடியும். ஆனால் எங்களால் பார்க்க முடியவில்லை.

இதற்கு நேர்கீழ்த்தளத்தில் ஒரு கடையும் இருந்தது. அங்கு பலதரப்பட்ட அழகான கலைப்பொருள்களை விற்பணைக்கு வைத்திருந்தனர். கணேஷிடம் ஒருவர்கூட இல்லை. எல்லோரும் இந்தக்கடையையே சூழ்ந்திருந்தார்கள். இது எனக்கு ஒரு கதையை நினைவுப்படுத்தியது, 'ஒரே நாளில் ஒரே ஊரில் ஒரே நேரத்தில் இருவேறு மேடைகளில், ஒரு மேடையில் கடவுள் தோன்றி பேசப்போவதாகவும், மற்றொரு மேடையில் கவர்ச்சி நடிகைவந்து ஆடப்போவதாகவும் மக்களிடம் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த நாளும் வந்தது. அப்போது கடவுள் தனியாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்.' அந்த அளவிற்கு இந்த உலக மாயை மக்களை ஈர்க்கின்றது. எனவேதான் இந்துமதத்தில் கடவுள்களை கவர்ச்சியாகப் படைத்தார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலிலுள்ள கணேஷை தரிசித்தவர்களுக்கு இது புரியும். நாங்களும் அப்படித்தான், எங்களை கவர்ந்த அக்கடையில் சில பொருள்களை வாங்கிக்கொண்டு அக்குன்றை விட்டு கீழிறங்கினோம். அப்போது இலேசான தூரல் மழை எங்களை தொட்டு முத்தமிட்டது. அந்த முத்தச்சத்தம் சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது. இந்த டாக்கிற்கு போகும் நுழைவாயிலில் சிக்கிமிஸ் ஆடைகளை வாடகைக்கு கொடுக்கின்றனர். அதனை நமக்கு அணிவித்து புகைப்படம் எடுக்க, ஒரு புகைப்படப் பிரதிக்கு 50 ரூபாய் கேட்டார்கள். நாங்கள் மற்றவர்கள் அணிந்து புகைப்படம் எடுப்பதை நின்று இரசித்துவிட்டு காரில் ஏறி அடுத்த இடம் நோக்கி கிளம்பினோம்.

5. Hanuman Mandir:

எங்களது வாகனம் கணேஷ் டாக்கைவிட்டுக் கிளம்பி இன்னும் 700 அடி மேலே சென்றுக்கொண்டிருந்தது. மதியம் 12.55 மணிக்கு 7200 அடி உயரத்தில் உள்ள மலைத்தளத்தில் சென்று நின்றது எங்களது கார். 'வால் இருந்தால் வனத்தில் இருந்திருப்பேன்' என்று நமது குணங்களைத் தனதாக்கிக்கொண்டுப் பாடுவார் வள்ளலார். அதுபோல இந்த மலைகளின் வனத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் இந்த ஹனுமன் மந்திர் அமைந்துள்ளது. ஹனுமன், சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துவந்த கதையின் நினைவாக, இக்கோவில் அமைந்திருக்கும் சிறியக் குன்றில் 'சஞ்சீவி மலை' என்றப் பெயரில் பலதரப்பட்ட மூலிகை செடிகள் வளர்த்து வருகின்றார்கள். அந்தந்த மூலிகைச்செடிக்கருகில் அதன் பெயர்களும் அது தீர்க்கும் நோயில் பெயர்களையும் மூன்று மொழிகளில் எழுதி வைத்திருப்பது பாராட்டுக்குறியது. இக்கோவிலையும் இந்தச் செயற்கை சஞ்சீவி மலையினையும் மிகச்சுத்தமாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் பராமரித்து வருகின்றது நமது இந்திய இராணுவத்தின் கருப்புப் பூனைப்பிரிவு (Black Cat Division). இங்கு பணிபுரியும் இராணுவ வீரர்களில் மூன்று வீரர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களிடம் நாங்கள் நலம் விசாரித்துவிட்டு நகர்ந்தோம். இந்திய இராணுவத்தினால் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி அன்று இக்கோவிலை விரிவுபடுத்தி, இராணுவ மேஜர் ஜெனரல் ஆர்.எஸ்.சோப்ரா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றச் செய்தி இங்கு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டின்மூலம் நமக்குத் தெரியவருகின்றது.

இந்திய இராணுவத்தினர், ஒரு மதத்தைச் சார்ந்த வழிபாட்டு இடங்களைக் கட்டுவதும், அதனைப் பராமரிப்பதும் எவ்வகையில் ஒரு மதசார்பற்ற அரசு அனுமதிக்கின்றது? என்பது எனக்கு ஏற்பட்ட மிகப்பெரியக்கேள்வியாக உள்ளது. இக்கோவிலில் ஒரு பகுதியில் கஞ்சன்ஜங்கா வியூ பாயிண்ட் அமைத்திருந்தார்கள். அவ்விடத்தில் அதிகாலை நேரத்தில் சூரிய ஒளியில் கஞ்சன்ஜங்கா பொன்னிறமாக மின்னும் படத்தினை மக்கள் பார்வைக்காக வைத்திருந்தனர். அதில் பல்வேறு சிகரங்களின் உயரங்களின் அளவீட்டினையும் எழுதி வைத்திருந்தனர். இங்கிருந்து நாங்கள் பார்க்கும்போது கஞ்சன்ஜங்கா சிகரம் எங்களுக்குத் தோற்றமளிக்கவில்லை. ஆனால் அக்குன்றுக்குக்கீழே எங்களது கார் நிற்குமிடத்தில் நாங்கள் முதன்முதலாக பனிமலைகளைத் தரிசித்தோம். மிக நன்றாகத்தெரிந்தது. நாங்கள் ஐவரும் உணர்ச்சிப்பெருக்கில் சற்று நேரம் அந்தப் பனிபடர்ந்த மலையினை பார்த்துக்கொண்டே நின்றோம். எங்களுடன் வந்திருந்த திருமதி.ஆர்.இலட்சுமி அவர்கள் அம்மலையைப்பார்த்து 'சிவசிவா' என்று உரக்கச்சொல்லி இருகைத்தூக்கி கும்பிடத்தொடங்கிவிட்டார்கள். அந்த அளவிற்கு, வெகு தூரத்தில் தெரிந்த அந்தப் பனிமலை எங்களுக்கு இறை அனுபவத்தைக் கொடுத்தது. அம்மலையினை புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

இங்கிருந்து நாம் கேங்டாக் நகரப்பகுதிகளையும் கண்டு இரசிக்கலாம். இங்கிருந்து இரவு நேரத்தில் கேங்டாக்கைப்பார்க்க, வண்ண விளக்குகளின் அலங்காரங்களை கண்டு இரசிக்கலாம். மேலும் லுக்ஷ்யாமா (Lukshyama) எனப்படும் ராஜ குடும்ப நினைவு வளாகம் போன்றவற்றையும் பார்க்கலாம். லுக்ஷ்யாமா வளாகத்தில், இங்கு தகனம் செய்யப்பட்ட ராஜ குடும்பத்தினர்களின் நினைவாக பல அழகிய ஸ்தூபிகளை (Stupas) நாம் காணலாம். கேங்டாக் நகர் முழுவதிற்கும் தண்ணீர் வழங்குகின்ற Selep Water Works என்கின்ற இடத்தினையும் இந்த ஹனுமன் கோவிலிலிருந்து நாம் கண்டு இரசிக்கலாம். இப்படிப்பட்ட ஹனுமன் மந்திரை இரசித்துவிட்டுத் திரும்பினோம். எங்களது கார் படுவேகமாக கீழ்நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. தற்போது நேரம் மதியம் 01.45 கடந்துக்கொண்டிருந்தது. அடுத்தது ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி சாப்பிட்டாக வேண்டும். கார் ஓட்டுனரும் அதற்கு தக்க இடத்தை தனக்குள் நினைத்துக்கொண்டு தனது வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.


(தொடரும் - 5)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.