Sunday, June 14, 2015

எனது சிந்தனையில் சிக்கிம் - 10

எனது சிந்தனையில் சிக்கிம் - 10




Pelling:

தெற்கு சிக்கிம்மில், 'பெல்லிங்' என்கின்ற இந்த மலைநகரம் கடல் மட்டத்திலிருந்து 7200 அடிஉயரத்தில் அமைந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில், கேங்டாக்கிற்கு அடுத்தப்படியாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கேங்டாக்கைவிட இந்த பெல்லிங் 1720 அடி உயரத்தில் உள்ளதால், இங்கு காணும் சுற்றுவட்டாரக் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கின்றது. முக்கியமாக கஞ்சன்ஜங்கா சிகரத்தை இம்மலை நகரிலிருந்து இன்னும் அருகில் காணலாம். பமாயாங்ட்ஸே மற்றும் சங்காசோய்லிங் ஆகிய இரு புத்த மடாலயங்கள் இங்குக்கட்டப்பட்டப் பிறகு, காடுகளாகவும் விலங்கினங்கள் அதிகமாகவும் இருந்த இப்பகுதி குடியிருப்புகள் நிறைந்த கிராமங்களாக உருமாறின. இங்கு லிம்பு இன மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். மேலும் காம்நாத், முரிங்லா, டாம்லிங், லிங்டென், பெஹா ஆகியா இனத்தவர்களும் இங்கே வசிக்கின்றனர். விவசாயமே இங்குள்ள மக்களின் பிரதானத்தொழில். ஏலக்காய், சோளம், நெல், கோதுமை மற்றும் பட்வீட் ஆகிய பயிர்கள் இங்கு விளைகின்றன.

இங்கு வருடத்திற்கு ஒரு முறை கஞ்சன்ஜங்கா திருவிழா திபெத்திய நாள்காட்டிப்படி ஏழாவது மாதத்தில் 15-ஆம் நாள் நடைபெறும். ஆங்கில நாட்காட்டிப்படி ஆகஸ்ட் மாதத்தில் இப்பண்டிகை கொண்டாடுவார்கள். அப்போது இந்நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இவ்விழாவின்போது ராங்கிட் என்னுமிடத்தில் ஒயிட் வாட்டர் ராஃப்டிங், கயக் படகு ஓட்டுதல், மலையேற்றத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுக்கள், மலையில் பைக் ஓட்டும் மெளண்டன் பைக் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களும்  நடத்தப்படும். இம்மக்களின் பாரம்பரிய நடனமான உடிங் தி ச்ஹாப்-ரங் (மேளம்) மற்றும் இதர கலாச்சார கலைகளும் மலர் கண்காட்சிகளும், உணவு, அலங்கார கடைகளும் இந்தத் திருவிழாவின்போது கலைகட்டும். எனவே ஆகஸ்ட் மாதத்தில் இவ்விழா நாளில் வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தத்தில் மகிழலாம். இங்கு மேற்சொன்ன புத்த மடாலயங்கள் தவிர சிங்ஷோர் பாலம் மற்றும் கெசுபேரி ஏரி ஆகியவைகளையும் கண்டு களிக்கலாம்.





இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பெல்லிங் நகருக்கு நாங்கள் இரவு 07.15 மணிக்கு வந்துச் சேர்ந்தோம். குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் ஏற்கனவே இங்குள்ள 'சொநம்சென்' (Sonamchen) ஹோட்டலில் நாங்கள் தங்குவதற்கு இரண்டு அறைகள் முன்பதிவு செய்திருந்தார். அது சைவ உணவு மட்டுமே சமைக்கக்கூடிய ஓட்டலும்கூட. அங்குச் சென்றவுடன் எங்களது பைகளையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கினோம். அங்கு வேலைப்பார்க்கும் ஆட்கள் மூலம் எங்களது பைகள் அனைத்தும், நாங்கள் முன்பதிவுச் செய்த அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் அதே ஓட்டலில் சிற்றுண்டி உண்டுவிட்டு உறங்கச் சென்றோம். கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தைப் பார்க்கக்கூடிய வகையில் இந்த ஓட்டல் கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சமாகும். நாம் தங்கியிருக்கும் அறையில் இருந்தே இம்மலை சிகரத்தை நாம் காணலாம். இதற்காகவே இந்த ஓட்டலில் முன்பதிவு செய்துள்ளேன், எனவே காலை 05.30 மணிக்கெல்லாம் எழுந்து இம்மலையைக் காணவேண்டும். நேரமாகிவிட்டால் மேகம் மூடிக்கொள்ளும், என்று பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் எங்களுக்கு அன்புக் கட்டளை இட்டுவிட்டார்கள். பின்னர் இரவு 10.00 மணிக்கெல்லாம் போர்வைக்குள்ளே எங்களைப் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டோம்.

இன்று 2015, ஏப்ரல் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. {எங்களது பயணத்தின் ஏழாவது நாள்} நான் காலை 05.20 மணிக்கு எழுந்து பால்கனி முற்றத்தில் சென்று கஞ்சன்ஜங்கா சிகரத்தைக்காணத் துவங்கினேன். காலை 07.30 வரை கண்காணித்துக் கொண்டிருந்தேன். புகைப்படமும் எடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் அந்த மலை அதன் பெயருக்குத் தகுந்தவாறு கஞ்சத்தனமாகவே இருந்தது. அந்த வெள்ளைக் காரிக்குத்தான் எவ்வளவு வெக்கம்! தன்னழகை எனக்குக் காட்டுவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, தன்னுடல்மேல் வான்மேகத்தை ஆடையாக உடுத்திக்கொண்டது. ஆடையை விலக்கும்படி ஜாடையாகக் கேட்டும் மறுத்துவிட்டது அந்த மலையரசி. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்தக் கதையாப்போச்சு எங்கள் நிலமை. இருந்தாலும் கலைந்த ஆடைக்குள் தெரிந்த தேகம்போல், கஞ்சன்ஜங்கா எனக்குக் கவர்ச்சியாகவே காட்சி கொடுத்துக்கொண்டிருந்தது. அதனைக்கண்டு இரசித்துவிட்டு, அதனைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளைக் கண்டுணர்ந்து இரசித்தேன். பிற்கு நாங்களனைவரும் சுடுநீரில் குளித்துவிட்டு ஆடை மாற்றிக்கொண்டு மீண்டும் கிளம்பத் தயாரானோம். இதே ஓட்டலில் காலை டிஃபன் சாப்பிட்டோம். எங்களுக்காக சூடாக இட்லியும், தேங்காய்ச் சட்னியும் செய்திருந்தார்கள். மிக அருமையாக இருந்தது. நான் ஏழு இட்லி சாப்பிட்டேன். நாங்கள் அனைவருமே நன்றாக சாப்பிட்டோம். பின்னர் ஓட்டல் கணக்கை முடித்துக்கொண்டு, (கார் ஓட்டுனரும் அதற்குள் சாப்பிட்டுவிட்டு தயாராகிவிட்டார்.) எல்லாப்பைகளையும் எடுத்து காரினுள் வைத்துக்கொண்டு, அந்த ஓட்டலுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டுக் காலை 09.20 மணியளவில் புறப்பட்டோம்.

17. Rimbi Falls:


பெல்லிங்-கிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வருவி உள்ளது. 10.00 மணியளவில் நாங்கள் இங்கு வந்து இறங்கினோம். கஞ்சன்ஜங்கா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் இந்நீர்வீழ்ச்சி கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றது, என்று சொல்லிவிட முடியாது. கர்நாடக சர்க்கார் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடுவது போல, நீர்வரத்து இந்நீர்வீழ்ச்சியில் குறைவாகவே இருந்தது. இந்நீர் வீழ்ச்சியினை பார்க்கவேண்டும் என யாரும் வருவதில்லை. மற்றச் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும்போது இவ்விடம் சாலைமார்க்கத்தில் வலிய வந்து நம்மை அழைக்கின்றது. எனினும் இங்கு சில்லென்ற காற்றையும், ஜில்லென்ற நீரையும், பசுமையான மலைகளையும் உணர்ந்தும் கண்டும் மகிழலாம். வழக்கம்போல இங்கேயும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். திருமதி.ஆர்.இலட்சுமி அவர்கள் இங்கிருந்து சில அழகான கூழாங்கற்களை எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் எங்கெல்லாம் சுற்றுப்பயணம் சென்றாலும் இந்த மாதிரி கூழாங்கற்களை, அந்த இடத்தின் நினைவாக எடுத்துச்சென்று தனது வீட்டில் வைத்து வணங்குவது அவர்களது வழக்கமாம். கூழாங்கற்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானது, வழவழப்பானது. அது இந்த நிலையை அடைய எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கும்! எத்தனை யுகக்காலம் உருண்டு இருக்கும்! எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து தனது சுய முகத்தை எத்தனை முறைகள் இழந்திருக்கும்! இப்படித் தனது வாழ்க்கையில் ஊழ்வினையால் அடிபட்டு அடிபட்டு, அழகாக மாறிய அந்த கற்களில் சில, தாம் செய்த புண்ணியத்தால், திருமதி.ஆர்.இலட்சுமி அவர்களைப்போன்ற சில பேர்களால் வணங்கத்தக்க நிலையை அடைந்துவிடுகின்றன. கூழாங்கற்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. (தற்போது கூழாங்கற்கள் செயற்கையாகவும் செய்யப்படுகின்றது). இந்த ரிம்பி நீர்வீழ்ச்சி இந்தத் தமிபிக்கு இந்தப்பாடத்தை கற்பித்ததற்கு நன்றி சொல்லிக்கொண்டு நான் அடுத்தப்பாடம் கற்க கிளம்புகின்றேன். 10.20 மணியளவில் எங்களது கார் புறப்பட்டது.

18. Khecheodpalri Lake (Kha-Chot-Palri):





காலை 10.50 மணியளவில் நாங்கள் இந்த 'கா சோட் பாரி' என்ற ஏரியினைக்காண வந்திறங்கினோம். "பத்மசம்பவா" அவர்களின் சொர்க்கம் என இவ்வேரி அழைக்கப்படுகின்றது. 6000 அடி உயரத்திலுள்ள இந்த ஏரியை புத்த மற்றும் இந்து மக்களும் புனிதமாகக் கருதுகின்றனர். அதற்குத்தகுந்தார்போல் இவ்வேரியின் வடிவமானது மனித கால்தடத்தினைப் போல (பாதம்) இயற்கையிலேயே அமைந்துள்ளது. பெல்லிங் நகரிலிருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வேரி அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இவ்வேரியினை 'Sho Dzo Sho' என அழைக்கின்றனர். இதற்கு 'Oh Lady, Sit Here' ' பெண்ணே, இங்கே அமரவும்' என்று பொருள். இப்பெயர்க் காரணமாக சில கதைகளும் சில நம்பிக்கைகளும் இம்மக்களிடம் நிலவுகின்றது.

சாலையிலிருந்து இவ்வேரியினைக்காண சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்துச் செல்லவேண்டும். வழியின் நுழைவு வாயிலில் ஒரு புத்தாலயம் அமைந்துள்ளது. அதன் உள்ளே ஒரு பெரிய ப்ரேயர் வீல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றிவிட்டு மீண்டும் உள்ளேச் செல்லும் சாலையில் நடந்துச் சென்றோம். சிறிது தூரத்தில் இடது பக்கத்தில் ஒரு சிறிய ஸ்தூபி இருந்தது. அதனையும் வணங்கிவிட்டு நடையைத் தொடர்ந்தோம். வழி நெடுக்கிலும் வலது புறத்தில் புத்த மந்திரங்கள் எழுதிய கலர் கலரான கொடிகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இடது புறங்களில் சில அழகான பூக்கள் விதவிதமாகப் பூத்து சிரித்தன. வலது புறத்தில் ஆங்காங்கே உள்ளப்பாறைகளில் எங்களுக்குப் புரியாத மொழியில் ஏதேதோ கல்வெட்டுப்போன்று செதுக்கியிருந்தார்கள். இதனையெல்லாம் பார்த்துக்கொண்டே அந்த ஏரி இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தோம்.



இறுதியில் பாதை முடியும் இடத்தில் ஒரு சிறிய புத்த வழிபாட்டுக் குடில் இருந்தது. அதன் உள்ளே வரிசையாக புத்தாலயங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் எதிரில் நிறைய தீபங்கள் ஒளிவீசிக்கொண்டிருந்தன. நாங்களும் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்து தீபத்தினை ஏற்றி வைத்தோம். அதன் பக்கத்தில் ஒரு புத்த பிக்கு அமர்ந்திருந்தார். நாங்கள் அங்குச் செல்லும்போது, உள்ளூரில் வசிக்கும் ஒரு அம்மா, தனது கைக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று, இங்கு உள்ளே அமர்ந்திருந்த அந்த புத்த பிக்குவிடம் தனதுக் குழந்தையைக்காட்டி மந்தரித்து அழைத்துச் சென்றதைப் பார்த்தேன். இங்கு பக்கத்தில் மருத்துவமணை ஏதும் இல்லை போலும். நங்கள் அந்தக்குடிலில் இருந்தபோது திடீரென எங்களை கரும்புகை மூழ்கடித்தது. கண்களெல்லாம் எரிய ஆரம்பித்துவிட்டது. அங்கு வத்தியை நிறையக் கொளுத்தி அதன் மூலம் புகை உருவாக்குவது ஒரு சடங்கு போலும்.

அதன் பிறகு அக்குடிலிலிருந்து வெளியில் வந்து அந்த ஏரிகரையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தோம். சில அடி கடந்தப்பிறகு, மரப்பலகையால் செய்யப்பட்ட தரைப்பாலம் போடப்பட்டிருந்தது. அதன் மேலே தகரத்தாலானக் கூரையும், இருபுறமும் ப்ரேயர் வீலும் அமைக்கப்பட்டிருந்தது. இப்பாலத்தினுள் நுழைந்து நாங்கள் அந்த ஏரிக்கரை அருகில் சென்றுப் பார்த்தோம். நிறைய மீன்கள் கரையோரம் கூட்டம் கூட்டமாக சிலர் போடும் தின்பண்டங்களுக்காக வாயைத்திறந்துக்கொண்டு குதித்துக்கொண்டிருந்தன. இந்தப்புனிதமான ஏரியிலுள்ள இந்த மீன்களைப் பிடிக்க பறவைகள்கூட இங்கு வராது என்பது இவ்வேரியின் சிறப்பு.


சில இந்து மக்கள் இந்தக்கரையில் சில சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அங்கெல்லாம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்த வழியே நடந்தோம். பேராசிரியர் வெற்றிச் செல்வி அவர்கள் இந்த நடை பாதையில் பூத்திருந்த சில வகை சிறியப் பூக்களைப் பறித்து அதனை தனது காதுகளில் கம்மல் போன்று அணிந்து அழகுப் பார்த்தது எங்களுக்கு ஒரு புதுமையான அழகாக இருந்தது. மற்றொரு இடத்தில் ஒரு மலரினை அதன் நீண்ட தண்டோடு பறித்து, அந்தத்தண்டினை வைத்து மாலையாகச் செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட விளையாட்டை நானும் சிறுவயதில் அல்லிப்பூத்தண்டை வைத்து செய்திருக்கின்றேன். இந்த ஒரு பூவில் செய்த மாலையை எடுத்துக்கொண்டு அவர்கள் கார் நிற்கும் இடத்திற்கு வந்தார்கள். அங்கிருந்த கார் ஓட்டுனர்களெல்லாம் இந்த மாலையை ஆச்சரியத்துடன் வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஒருவர் அம்மாலையைக் கேட்டு வாங்கிக்கொண்டார். அதனை தனது காரில் சூட்டப்போவதாகச் சொல்லி எடுத்துச் சென்றது, எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.


பின்னர் அங்கிருந்த கடையில் தேனீர் அருந்தும்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு சுற்றுலா வாகனத்தில் "SAY NO TO DURG" என்று எழுதிய ஆங்கில வாசகம் என்னைக்கவர்ந்தது. இந்த அறிவுறைதான் தற்போது நமது தமிழக அரசுக்கும், மக்களுக்கும் தேவைப்படுகின்றது. அந்த வாகனத்தின் சொந்தக்காரருக்கு என்னுடைய வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். இப்படிப்பட்ட விழிப்புணர்வு கொண்ட வாசகங்களை நாமும் நமது வாகனத்தில் எழுதி வைத்து, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மற்றும் அங்குள்ள பெட்டிக்கடையில், சிக்கிம் மாநில முதலமைச்சர் படத்துடன் 'Sikkim First, Sikkimese First' என்ற ஆங்கில வாசகத்திற்குக்கீழே அம்மாநில முதலமைச்சர் பெயரும் எழுதப்பட்ட ஒரு சிறிய துண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இவ்வாசகம் அம்மாநில மக்களை உத்வேகத்துடன் செயல்பட வைக்கின்றது.

நாங்கள் தேனீர் அருந்திவிட்டு 12.40 மணியளவில் அவ்விடத்திலிருந்து அடுத்த இடம் நோக்கிக் கிளம்பினோம்.


(தொடரும் - 10)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.